அத்தியாயம் - 2
கிச்சனை சுத்தம் செய்து தேநீர் மற்றும் அனைவருக்கும்காலை உணவை அவள் தயார் செய்து முடிக்கவும் டியூஷனுக்காக மாண, மாணவிகள் வரவும் சரியாக இருந்தது.
இரண்டு மணிநேரம் அவர்களுக்கு டியூஷன் எடுத்து முடித்தவள் அதன் பின்னே கல்லூரிக்கு கிளம்ப ஆயத்தமானாள்.
அதற்குள் இலக்கியா மதிய உணவு தயார் செய்து அவளுக்கு லஞ்ச்கட்டிவைக்க, அதை எடுத்துகொண்டுவேக எட்டுகளுடன் அவள்பேருந்து நிறுத்ததை அடையவும் அவளின் கல்லூரி பேருந்து வரவும் சரியாக இருந்தது.
அவள் பயிலும் இசை கல்லூரி ஆரம்பித்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்திருக்க அதை சிறப்பாககொண்டாடுவதென்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்திருந்தது.
கிட்டதட்ட மூன்றுமாதகாலமாகவே அதற்கான வேலைதான் அவள்கல்லூரியில் ஓடிக்கொண்டிருந்தது.
காரணம் சிட்டியிலேயே பிரபலமான கல்லூரி என்பதாலும், இந்த ஆண்டுவிழா கல்லூரியின் பெயரை மேலும் பிரபலப்படுத்தும் என்பதாலும் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துகொண்டிருந்தது கல்லூரி நிர்வாகம்.
ஆண்டுவிழாவை முன்னின்று நடத்தும் பொறுப்பை கல்லூரி நிர்வாகம் மூன்றாமாண்டு மாணவிகளிடம் ஒப்படைத்திருந்ததோடு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கமிட்டியைஒதுக்கியிருக்க, அதில் இதழினிக்கு ஒதுக்க பட்டது என்னவோ கல்சுரல்கமிட்டி தான்.
ஆண்டுவிழா-வில் யார் பாடுவதாக இருந்தாலும் சரி ஆடுவதாக இருந்தாலும் சரி அதற்கான பாடல், நடனம் ஏன் அவர்கள் அணியும் உடை முதல்சிகை அலங்காரம் வரை அனைத்தையும் இதழினிதான் முடிவு செய்ய வேண்டும்.
முன்னமே ஆர்டர் கொடுத்திருந்த ஆடைகள் எல்லாம் வந்து சேர்ந்திருக்க, அதையெல்லாம் அவள் சரி பார்த்து கொண்டிருக்கும் போதுதான், பின்னால் இருந்து யாரோ அவள் இடையை வளைத்து அணைக்க,திடீரென்ற தொடுகையாலும் அணைப்பாலும்மிரண்டுதான் போனாள் இதழினி.
“ஐய்யோ.. பெருமாளே” என்று சத்தம் போட்டு கத்தியவாறே, திமிறிக்கொண்டுஅவள் விலகி நிற்க, அவள் நின்ற நிலையை பார்த்த தாரிகாவோ சத்தபோட்டே சிரித்துவிட்டாள்.
தாரிகா வேறு யாரும் இல்லை. அவளின் வகுப்பு மாணவி. ஏன் அந்த கல்லூரியில் இதழினிக்கென்று இருக்கும் ஒரே ஒரு தோழி என்று கூட சொல்லலாம்.
சத்தம் போட்டு சிரித்த தாரிகாவோ,“ஏண்டி… இப்படி பயப்படுற..?” என்று கேட்டுவிட்டு மீண்டும் சிரிக்க, இதழினிக்கோ அவள் மீது இப்போது கோவம்தான் வந்தது. தன்னை பயமுறுத்தியதோடு நில்லாமல் அவள் கேலி செய்வதையும்பார்த்து.
அந்த கோவத்தின் வெளிப்பாடாய் “உனக்கு எத்தனை தடவ சொல்லியிருக்கேன் தாரிகா.... என் கிட்ட இந்த மாதிரி நடந்துகாதன்னு” என்றவள், அவள் தோளிலும் சுள்ளென்று ஒன்று வைக்க,
“ஆ… வலிக்குதுடி” என்றவாறே அவள் அடித்த இடத்தை தேய்த்துவிட்டு கொண்டவள், “என்னா அடி…. சரி… கல்யாணம் ஆனதுக்கப்புறம் உன் புருஷன் கட்டிபுடிச்சாலும் இப்படித்தான் அடிப்பியாடி..?” என்று மேலும் அவளை அவள் சீண்ட,
“தாரிகா” என்று பற்களை கடித்தாள் இதழினி.
“ம்ம்…. அதுசரி.. நீதான் இந்த விஷயத்துக்குலாம் செட் ஆகமாட்டியே..” என்று சிரிப்பை விழுங்கிகொண்டே சொன்னவள்,
“நீ இப்படியே இருந்த.. கல்யாணம் ஆன அன்னைக்கே எழுதுவச்சிட்டு ஓடிப்போய்டுவான் பழைய பஞ்சாங்கத்து கூடலா என்னால வாழமுடியாதுன்னு” என்று எப்போதும் போல் அவள் அவளைவார ஆரம்பிக்க,
“நான் ஒன்னும் பழைய பஞ்சாங்கம் இல்லை” என்றாள்சற்றே கோவமாய் இதழினி.
“தோடா… பஞ்சாங்கத்துக்கு புதுசா கோவம்-லா வருது..” என்று மீண்டும் தாரிகா அவளை கேலி செய்ய,
“இப்ப என்ன தாண்டி உனக்கு பிரச்சனை” என்றாள் இதழினி.
வலக்கரத்தை அவள் முன்னால் நீட்டிய தாரிகாவோ, “நீ தான் பிரச்சனை” என்க,
“நானா….?” என்றாள் தன்னையே மேலும் கீழுமாய் பார்த்தவாறு.
“ஆமாம்” என்று பதிலுக்கு சொன்னவள், “அவ அவ ஷால்-லே போடாம காலேஜ்-க்கு வந்துட்டு இருக்காளுக.. நீ என்னடான்னா ஷால் போட்டதோட இல்லாம அத மடிச்சி பின் வேற பண்ணிட்டு வந்திருக்க. இந்த காலேஜ்-ல நீ எவ்வளோ கூட்டத்துக்கு மத்தியில இருந்தாலும் உன்ன ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்.. எப்படி தெரியுமா..?’ என்று கேட்டவளை பார்த்து,
இதழினி “எப்படி..?” என்க,
“ம்…. ஏன்னா.. உன்ன தவிர இங்க எல்லாருமே ஃபிரீஹேர்தான்.. நீ ஒரு ஆளுதான் நல்லா எண்ணெய் வச்சி பின்னல் போட்டுட்டு வர” என்றுஅவள் இடை தாண்டியிருந்த நீண்ட பின்னலை சுட்டி காட்டி சொன்னவள்,
“அட்லீஸ்ட் அத கொஞ்சம் கட் பண்ணியாச்சம் விடேன்டி” என்க, இதழினியோ “ம்ஹீம்.. பாட்டி கட் பண்ண கூடாதுன்னு சொல்லியிருக்காங்க” என்றாள் தன் பின்னலை வருடிவிட்டவாறே.
“அவங்கதான் இப்போ இல்லையே..”என்று தாரிகா முடிக்கும் முன்பே
“ஆனா.. நான் கட் பண்ண மாட்டன்னு பாட்டிக்கு பிராமிஸ் பண்ணி கொடுத்திருக்கேனே” என்க,
அவள் பதிலால், “கஷ்டம்” என்று வாய்க்குள் முனுமுனுத்து கொண்டவள்,
“கொஞ்சமாவது உன்ன சுத்தி உன் பாட்டி போட்டு இருக்கற வட்டத்த விட்டு வெளியில வந்து உலகத்தை பாரு இதழினி. ஃபேஷியல், மெனிக்கியூர், பெடிக்கியூர்-ன்னு பொண்ணுங்க தன்னைதானே செதுக்கி அழகுபடுத்திகிட்டு இருக்காங்க.. ஏன் இந்த காலத்து பசங்களுக்கு கூட மார்டன்-ஆ இருக்கற பொண்ணுங்களதான் புடிக்குது.” என்றவள் நிதர்சனத்தை சொல்ல,
“ஸோ… மத்தவங்களுக்காக நான் என்ன மாத்திக்கணுமா தாரிகா..?” என்றாள் இதழினியும் கையிலிருந்த புடவையை விரித்துபார்த்தபடியே.
“ஐய்யோ இதழினி நான் அந்த பாய்ண்ட் ஆஃப் யூ மட்டும் சொல்லல… உன்ன கல்யாணம் பண்ணிக போறவரோட எதிர்ப்பார்ப்பு கூட இப்படி இருக்கலாம் இல்லையா..?” என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்தவள்,
“தாரிகா.. நான் இப்படிதான் பொறந்தேன்.. கடைசிவரைக்கும் இப்படியேதான் இருப்பேன்.நான் இப்படி இருக்கறதுதான் எனக்கு கம்ஃபோர்ட்டபுள்-ஆ இருக்கு. தென்.. நான் ஏன் என்ன மாத்திக்கணும்..?” என்று கேட்டவளின் அருகில் வந்து நின்ற தாரிகா,
“சரிடி… உன்ன நீ முழுசா மாத்திக்க வேணாம்.. அட்லீஸ்ட்” என்றவாறே அவள் கரத்தை பற்றி இழுத்தவள் அவளின் கை மற்றும் விரல் பகுதியில் இருந்த முடிகற்றைகளை சுட்டிகாட்டி, “இத வேக்ஸ்-ஆவது பண்ணலாம்இல்லையா..? பசங்க கூட இப்பலாம் வேக்ஸ் பண்ணறாங்கடி” என்றவள், அத்தோடு நில்லாமல், அவள் விரலிலிருந்த முடியை கொத்தகாக பற்றி இழுக்க,இதழினியோ வலி தாங்க முடியாமல் “ஆ” என்று கத்திவிட்டாள்.
பிடிவாதமாக தாரிகாவின் பிடியிலிருந்து தன் கரத்தை விலக்கிகொண்டவள், “இதெல்லாம் பண்ணிதான் ஒருத்தவங்களுக்கு என்ன பிடிக்கணும்னா… என்ன யாருக்கும் பிடிக்க வேண்டாம் தாரிகா.. என்ன யாருக்காகவும் நான் மாத்திக்க மாட்டேன்” என்று பிடிவாதமான குரலில் சொன்னவள்,
“என்ன யாரு இப்படியே ஏத்துகிறாங்களோ அவங்கள நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லையா.. கடைசி வரைக்கும் இப்படியே இருந்துட்டு போயிடறேன். போதுமா..?” என்று பொட்டில் அறைந்தாற்போல இதழினி சொல்லிவிட, மேற்கொண்டு இது குறித்து பேசுவது வீண் என்றுதான் தாரிகாவிற்கும் தோன்றியது.
கடந்த இரண்டாண்டு காலத்தில் தாரிகாவும் அவளை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டாள்தான்.
ஏன் ஒரு முறை தனக்காக என்று பொய்சொல்லி அவளை தனக்கு நன்கு தெரிந்த பார்லருக்கு அழைத்து சென்றதோடு, பிடிவாதமாக அவளுக்கு ஐ-ப்ரோ டிரிம் செய்யபோய், அவள் கத்திய கத்தில், அதன் பின் தாரிகா கூட அந்த பார்லர் பக்கம் செல்வது இல்லை.
தாரிகாவும் ஒன்றும் மார்டன் என்ற பெயரில் கிழித்துவிட்டுகொண்டு தலைவிரிகோலமாக எல்லாம் அவளை திரிய சொல்லவில்லை, ஏதோ இந்த கால கட்டத்திற்கு ஏற்ப அவள்தன்னை கொஞ்சமாவது மாற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். அவ்வளவே
இருவரிடமே சில கணங்கள் அமைதி நிலவ, அப்போதுதான் தாரிகாவின் அலைபேசி சிணுங்கியது.
அழைப்பை ஏற்று பேசிவிட்டு வைத்தவள், “இதழினி” என்றவாறே சந்தோஷத்தில் அவளை கட்டியணைத்துகொண்டு குதிக்க, இதழினிக்கோ மீண்டும் அவள் செயல் எரிச்சலைதான் ஏற்படுத்தியது.
அதன் விளைவாய் “தாரி..” என்று பற்களை கடித்தவாறே அவள் விலக முயற்சிக்க, அவள் இருந்த சந்தோஷத்தில் இதழினியின் வார்த்தைகள் எதுவும் அவள் காதில் விழவே இல்லை.
தன் சந்தோஷம் தீர குதித்து முடித்தவள், அதன் பின்னே அவளை விட்டு விலகி நின்றதோடு, “ஹே இதழினி… நாளைக்கு மார்னிங் ரிஷப்நந்தன்-அ பார்க்க அப்பாயிண்மெண்ட் கிடைச்சிருச்சிடி” என்று குதூகல குரலில் சொல்ல, அதுக்கு என்னவாம் இப்போ…? என்ற நிலைதான் இதழினிக்கு.
ஆண்டுவிழாவிற்குசீஃப் கெஸ்டாக யாரை அழைப்பதென்ற தீவிர கலந்தாய்விற்கு பின் மாணவிகளின் விருப்பத்திற்கு இணங்க.. இளம்வயதிலேயே தன் இசையால் பலரின் உள்ளங்களை கவர்ந்திழுத்தஇசை ஜாம்பவான், பாடகர், லிரிக்கிஸ்ட் என்று பன்முக திறமை கொண்ட ரிஷப் நந்தனைத்தான் கல்லூரி நிர்வாகம் தேர்வு செய்தது.
அவர்கள் அவனை தேர்வு செய்தால் போதுமா.. அவன் அதற்கு ஒப்புதல் வழங்கவேண்டுமல்லவா.
அவனின் சம்மதத்திற்காகத்தானே கல்லூரிநிர்வாகமும் இதுநாள் வரை ஆண்டுவிழாவிற்கான நாளை தேர்வு செய்யாமல் காத்திருப்பது கூட.
காலேஜ்-ன் ஸ்டூடண்ட் சேர் பர்சன் என்ற முறையில் அவனிடம் அனுமதி வாங்க வேண்டிய பொறுப்பு ஒப்படைக்க பட்டது என்னவோ தாரிகாவிடம்தான்.
அவளும் கிட்டத்தட்ட இரண்டு மாதகாலமாகவே அவன் அவலுவலுக்கு நடையாய் நடந்து கொண்டிருக்கிறாள் தான்அவனின் அப்பாயிமெண்டிற்காக.
கதைகளை கருத்தில் வைத்து அதற்கேற்றார்போல்பாடல்களுக்கு டியூன் அமைப்பது,படத்திற்கு பின்னிசை அமைப்பது,ரெக்கார்டிங், மியூசிக் கான்செர்ட்என்று எந்நேரமும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு சுற்றிகொண்டிருப்பவனை பார்க்க அவ்வளவு எளிதில் அப்பாயின்மென்ட் கிடைத்துவிடுமா என்ன..?
எப்படியோ தாரிகா அலைந்த அலைச்சல் வீண்போகாமல் நாளை தான் அவனை சந்திக்க அவளுக்கு அப்பாயின்மென்ட் கிடைத்திருக்கிறது.
அந்த சந்தோஷத்தில்தான் அவள் இப்போது துள்ளி குதித்து கொண்டிருப்பது கூட.
“இதழினி நாளைக்கு நீயும் என் கூட வரியாடி.... அவர் கூட சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கலாம்..” என்று விழிகளில் சந்தோஷத்துடன் தாரிகாசொன்னபோது,
இதழினியோ தலையை மறுப்பாய் அசைத்ததோடு “நான் வரலடி” என்றாள்.
“ஏய் அவர இப்படி நேர்ல மீட் பண்ணிபக்கத்துலஉட்கார்ந்து பேசுற வாய்ப்புலாம் எல்லாருக்கும் கிடைச்சிடாதுடி. ஏன் நம்ம காலேஜ் ஃபங்க்ஷன்-க்கு வந்தா கூட நம்மலாள அவர்கிட்ட நெருங்கமுடியுமான்னுதெரியல..”என்றவள்,
“பிரின்சிகிட்ட உனக்கும் சேர்த்து நான் பர்மிஷன் வாங்கறேன்டி. நானே நாளைக்கு உன் வீட்டுக்கு வந்து உன்ன பிக் கூட பண்ணிக்கிறேன். நீ கிளம்பி மட்டும் இருந்தா போதும்” என்று சொல்லிகொண்டே சென்றவளை,
“தாரிகா..” என்று தடுத்து நிறுத்தியவள்,
“உனக்கு பிடிச்சியிருக்குனா நீ போடி.. ஏன் தேவையில்லாம என்ன கம்பல் பண்ற…?” என்றாள் தனக்கு அவனை பார்க்க விருப்பம் இல்லை என்பது போல்.
அவளின் வார்த்தைகளால் புருவம் சுருக்கி அவளை பார்த்த தாரிகா, “ஏன் உனக்கு அவர்-அ விருப்பமில்லையா..?” என்று கேட்டவள்,
பின் “விருப்பமில்லாமதான் அவர் சாங் டியூன் எல்லாத்தையும் வயலின் நுனியில் வச்சியிருக்கியாக்கும்” என்று தன் கேள்விக்கு தானே பதிலும் சொல்லி கொள்ள, இதழினிக்குதான் எங்கு சென்று முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை.
பாடலை இரசித்தால் அந்த பாடலுக்கு சொந்தகாரனையும் இரசித்து தான் ஆகவேண்டுமா என்ன..? என்றுதான் தோன்றியது அவளுக்கு.
இருந்தும் அதை அவளுக்கு புரியவைக்கும் பொருட்டு, “பஞ்ச பூதங்கள் எப்படி எல்லாருக்கும் பொதுவானதோ.. அப்படிதான் இசையும் எல்லாருக்கும் பொதுவானது தாரிகா.. ஒரு நல்ல இசை-அ யார் வேணும்னாலும் கொண்டாடலாம்… இரசிக்கலாம்..அதுக்காக அந்த இசைக்கு சொந்தமானவங்களையும் பிடிக்கணும், இரசிக்கணும்-னு அவசியம் இல்ல.” என்றவள் சொல்ல,
“சரிடி இசைக்காக இரசிக்க வேண்டாம்.. அவனோட ஸ்டைலிஷ் லுக், ஷார்ப் ஐ, ஹேண்ட்சம், ஜிம் பாடிக்காகவாவது இரசிக்கலாம் இல்லையா..?” என்று கேட்டவள்அவளை பார்த்து கண்ணடிக்கவும் செய்ய, இதழினிக்கோ “அட ராமா..” என்ற உணர்வுதான்.
“நிஜமாலுமே அவன் பயங்கர ஹாட்-டி.எனக்கு தெரிஞ்சி அவன் இசை-அ இரசிக்கிறவங்கள விட அவன்-அ இரசிக்கிறவங்கதான்அதிகமா இருப்பாங்க.. ஏன் அந்த லிஸ்ட்-ல நான் கூட உண்டு இதழினி.” என்று சொல்லிவிட்டு சிரித்தவள்,
தன் செல்போன் ஸ்கிரீனில் ஸ்கிரீன் சேவர்-ஆக வைத்திருந்த அவன் புகைப்படத்தை காட்டி,
“அழகா இருக்கான் இல்ல” என்றதோடு, அவன் புகைப்படத்திற்கு முத்தமிடவும்செய்ய,
“ஏய்..” என்றவாறே அவள் கையிலிருந்த போனை பிடுங்கினாள் இதழினி.
“என்னடி பண்ற..? யார்னே தெரியாவனுக்கு போய் முத்தம் கொடுக்கற..?” என்று அஷ்டகோனலாய் முகத்தை வைத்துகொண்டு கேட்டவளை பார்த்து,
“ரிஷப் நந்தன்-டி” என்றாள் தாரிகா என்னவோஅவளுக்கு அவன் நன்குபரிட்ச்சியம் என்பதுபோல்.
அவளின் பதிலை கேட்டு “கஷ்டம்” என்று வாய்க்குள் முனுமுனுத்தவள், போனை அவள் கையில் கொடுத்துவிட்டு,
“அழகு-ன்னு நீ எத மீன் பண்ற..?” என்றாள் கேள்வியாய் அவளை பார்த்து.
அவளின் கேள்விக்கு “அழகுனா..” என்று இழுத்த தாரிகாவோ, மீண்டும் அவன் தோற்றத்தை வருணனைசெய்ய ஆரம்பிக்க, அதெல்லாம் அழகு இல்லை என்பது போல் தலையை அசைத்தவள்,
“ஒருத்தவங்களோட இன்னர் லுக் அதாவது கேரக்டர் அண்ட் மனச பொறுத்துதான் அவங்க அழகா இல்லையான்னு டிசைட் பண்ணனுமே தவிர, அவங்களோட அவுட் லுக் பார்த்து இல்ல தாரிகா. ஏன்னா ஒவ்வொரு ஸ்டேஜ்-லயும் அவுட் லுக் மாறிக்கிட்டே இருக்கும்.. ஆனா குணாதிசியம்-ன்றது மாறவே மாறாது. அது டீஃபால்ட்.” என்றவள் அழகிற்கு விளக்கம் கொடுக்க,
“இன்னர் லுக்-அ லாம் இப்போ யாருடி பார்க்கறா…?” என்றாள் சலிப்புடன் தாரிகா.
“நீ பார்க்கலன்னு சொல்லு” என்று நிறுத்தியவள், “நீ பலாபழத்த கவனிச்சியிருக்கியா..?” என்றவளின் கேள்விக்கு ஆமாம் என்பது போல் தலையை அசைத்தவள்,
“ம்… மேல முள்ளு முள்ளா இருக்கும்.. ஆனா உள்ள உள்ள சுளை ரொம்ப டேஸ்ட்-ஆ இருக்கும்.. இல்லையா…?” என்று விழிகள் விரித்து தாரிகா கேட்க.
“ஜஸ்ட் நவ் நீ சொன்ன மாதிரி அந்த பலாபழத்தோட அவுட்டர் லுக்-அ மட்டும் வச்சி அத நாம ஒதுக்கியிருந்தோம்-னா.. அதோட சுவை நமக்கு தெரிஞ்சியிருக்குமா..? இல்ல பலாபழம் முக்கனில ஒன்னா இடம்தான் பிடிச்சியிருக்குமா..?” என்றவளின் கேள்விகளிலிருந்தஅர்த்தம்தாரிகாவிற்கும் புரியவே செய்தது.
“அப்போ… கேரக்டர்-அ பொருத்துதான் உனக்கு ஒருத்தவங்கள பிடிக்கறதும் பிடிக்காதது இல்லையா..?” என்றவளின் கேள்விக்கு இதழினி சர்வநிச்சயமாய்ஆமாம் என்பது போல தலையை அசைக்க,
“ரிஷப் நந்தன் கேரக்டர் எப்படின்னு நமக்கு தெரியாது… ஆனா. உனக்கு வரப்போற ஃபியான்சி கேரக்டர் பத்தி நீ அல்ரெடி யோசிச்சி வச்சியிருப்ப இல்லையா..?” என்றவளின் கேள்வியால் இப்போதுஇதழினிக்குதான் மூச்சி முட்டியது.
தாரிகாவின் கேள்விக்கு சட்டென்று அவளால் பதில் சொல்லமுடியாவிட்டாலும் அவள் முகத்தில் அரும்பியிருந்த நாணம் கலந்த புன்னகையே இதழினியின் மனதிலிருப்பதைதாரிகாவிற்கு படம் பிடித்து காட்டியது.
“என்ன வெட்கம்-லா பலமா இருக்க… சும்மா சொல்லுடி” என்றவள் இப்போது இதழினியின் தோளை இடிக்க,
“ஏய்… சும்மா இரு தாரிகா..” என்று வெட்கத்தோடே சொன்னவள், “எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கற மாதிரிதான் எனக்கும்” என்றாள் பட்டும் படாமல்.
“எல்லா பொண்ணுங்களுக்கும்னா……” என்று கடைவிழிபார்வையால் அவளை பார்த்தவாறே இழுத்தவள், “மோஸ்ட் ஆஃப் த பொண்ணுங்களோட எக்பெடேஷன் வரபோறவனுக்கு ஜிம்பாடி, சிக்ஸ் பேக், டிரிம் பியர்ட்…. சிக்ஸ் டிஜிட் சேலரி…” என்றவள் அடுக்கிகொண்டே போக,
அவள் கூறியதை கேட்டு “ச்சீ.. சீ..” என்று முகம் சுளித்த இதழினியோ, “ஐய்யோ.. பெருமாளே… இதெல்லாம் ஒரு எதிர்பார்ப்பா..?” என்றாள் தாரிகாவை பார்த்து.
“இதுக்கு மேல ஒரு பொண்ணுக்கு வேற என்ன எதிர்ப்பார்ப்பு இருக்கணும்டி..?” என்று தாரிகாவும் விடமால் கேட்க,
“ஆனா ஒரு பொண்ணா என்னோட எதிர்ப்பார்ப்பு என்ன தெரியுமா..?” என்று கேட்ட இதழினி, ஒருவாறு தன்னுடைய எதிர்பார்ப்பு குறித்து சொல்லவும் ஆரம்பித்தாள்.
“எனக்கு அழகா இருக்கறது முக்கியம் இல்ல தாரிகா.. படிச்சியிருக்கணும்.. திருடாம பொய்சொல்லாம ஒரு முப்பதாயிரம் சம்பளம் வாங்கினா கூட போதும். அப்புறம்…டிரிங்க், ஸ்மோக்-னு எந்த கெட்ட பழக்கமும் இருக்க கூடாது. குறிப்பா பொய் சொல்லவே கூடாது.. எல்லார்கிட்டயும் மரியாதையா பேசணும் மரியாதையா பழகணும். மனைவி-அ தவிர்த்து வேற எந்த பொண்ணையும் வேறொரு கண்ணோட்டத்துல பார்க்கவே கூடாது. முக்கியமா லைஃப் பார்ட்னருக்கு லாயல்-ஆ இருக்கணும்.” என்றுதன்னுடைய எதிர்ப்பார்ப்பை அவள் சொல்ல,
“ம்க்கும்” என்று சலித்துகொண்ட தாரிகாவோ, “நீ எதிர்பார்க்கற இந்த குவாலிட்டிஸ் உள்ள ஆண்கள்-லாம் ஆதிவாசி காலத்துலே அழிஞ்சி போய்ட்டாங்க. டிரிங்க்ஸ், ஸ்மோக் எல்லாம் இப்போ சகஜம்டி..பொண்ணுங்களே இப்படி பட்டவணுங்கதான் லைக் பண்றாங்க” என்றவளைஇதழினி இப்போது முறைத்து பார்க்க,
“நீ எதிர்பார்க்குற குவாலிட்டிஸ் உள்ளவனதான் கல்யாணம் பண்ணிப்பண்ணு பிடிவாதமா இருந்த…மாயாவதி படத்துல வரற மாதிரி கடைசிவரைக்கும் கல்யாண கோலத்துலஇரண்டு கையிலயும் குத்துவிளக்க புடிச்சிக்கிட்டுதான் நீஉட்கார்ந்து இருக்கணும்” என்று தாரிகாமேலும் அவளை கேலி செய்ய,
“அதெல்லாம் வருவாங்க” என்றாள் நம்பிக்கை மிகுந்த குரலில் இதழினி.
“ஆ… வருவாங்க.. வருவாங்க.. நீ கும்புடுற பெருமாள்தான் மறுபடியும்ஸ்ரீராமர்-அ பொறந்து வரணும்” என்க,
“வரட்டுமே.. மீரா-க்காக வந்த கிருஷ்ணன் போல” என்று சொல்லும் போதே அவளையும் அறியாமல் அவள்முகத்தில் நாணம் எட்டி பார்க்கவே செய்தது.
தன் குடும்ப நலனுக்காகவும், தன் மனதிற்கு பிடித்தாற்போல் தான் எதிர்பார்க்கும் குணாதியசம் உள்ள ஒருவனோடு தன் திருமணம் நடக்க வேண்டும் என்றுதானே இத்தனை வருடகாலமாக அவளும் விடாமல் பிரம்மமுகூர்த்ததில் விளக்கேற்றி வருகிறாள்.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்பும் போது கூட மீண்டும் ஒரு முறை தாரிகாஅவளிடம் கேட்டுபார்த்துவிட்டாள்.ஆனால் அவள்தான் ரிஷப்நந்தனை பார்க்க வரப்போவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்துவிட்டாள்.
அவனை சந்திக்க போவதில்லை என்பதில்பிடிவாதமாய் இருந்தவள் அந்நேரம் அறிந்திருக்கவில்லை நாளை காலை அவளே அவனை தேடிகொண்டு செல்லபோவதை.
தொடரும்...