Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)

அத்தியாயம் - 1

January 02, 2026
சந்தோஷ் குணா
5.0(2 reviews)
9 min read
அத்தியாயம் - 1
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

மணி நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்த தருணம் அது.

சென்னையின் பிரதான சாலையில் காற்றை கிழித்து கொண்டு சென்று கொண்டிருந்தது அந்த சொகுசு கார்.

காரை ஓட்டிகொண்டிருந்த பிரதிக்ஷா-வின் விரல்களோ காருக்குள் ஒலித்துகொண்டிருந்த பாடலுக்கு ஏற்றவாறு ஸ்டியரிங்கில் தாளமிட்டபடியே காரை ஓட்டிக்கொண்டிருந்தது.

எப்போதும் பரபரப்பாக ஜனரஞ்சமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள் இப்போது ஆள் அரவம் இல்லாமல் வெறிச்சோடிப்போய் இருக்க, அதுதான் அவளுக்கும் பிடித்திருந்தது.

எப்படியும் இந்தநேரத்தில் படுக்கையில் ஆழந்த உறங்கத்தில் இருப்பாள் என்று அவள் குடும்பத்தார் நினைத்திருக்கையில், அவளோ இந்த நள்ளிரவு வேளையில் ஹைவேயில் தன்னந்தனியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தாள்.

இம்போர்ட் மற்றும் எக்ஸ்போர்ட் பிஸ்னசில் கொடிக்கட்டி பறந்துகொண்டிருக்கும் ராஜவர்மனின் ஒரே தங்கை தான் பிரதிக்ஷா.

இருபத்தைந்து வயதை நெருங்கிகொண்டிருக்கும் அவள் ஒரு கைம்பெண்ணும் கூட.

அது அவள் வாங்கிவந்த சாபமோ..? இல்லை அவளின் பதினாறாம் அகவையின் போது இரு குடும்பத்தார் செய்த முட்டாள்தனமோ..?

ஆனால் இப்போது அதிகம் பாதிக்கப்பட்டு நிற்பது என்னவோ பிரதிக்ஷா-வின் வாழ்க்கைதான்.

மூன்று தலைமுறைகளாக பார்த்து வந்த பிஸ்னசை திறம்பட நடத்தி வருவதோடு,  இந்தியா முழுமையும் அதன் கிளைகளை விசாலபடுத்திய பெருமையெல்லாம் இராஜவர்மனைத்தான் சேரும்.

அவனின் கண் அசைவு இல்லாமல் இங்கு எதுவும் ஏற்றுமதியும் ஆகாது.. இறக்குமதியும் ஆகாது. அந்த அளவிற்கு சென்னையில் தனக்கென ஒரு தனி சாம்ராஜத்தையே உருவாக்கி வைத்திருந்தான் ராஜவர்மன்.

ராஜவர்மன் பெயருக்கேற்றார் போல் ஆளுமையோடும் அதிகார தோரணையோடும் இருப்பவன். தான் நினைத்ததை முடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் அவனுக்கு எதிரிகளுக்கும் பஞ்சமில்லை என்பதால் அவனும், அவன் குடும்பத்தாரும் எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் தான் இருப்பர்.

அப்படிப்பட்ட பலத்த பாதுகாப்புகளை தாண்டி வெளியில் செல்வதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றென்றாலும், அதையும் சாத்தியபடுத்தியிருந்தாள் பிரதிக்ஷா.

எப்போதும் அவளுடனே ஒட்டிதிரியும் அவளுக்கென்று நியமிக்கபட்டிருக்கும் பணிப்பெண் வள்ளியம்மைக்கு, பாலில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, அவளை உறங்க வைக்க வேண்டும்.

பின் அனைவரும் உறங்கும் வரை காத்திருந்து பால்கனி வழியாக கீழே இறங்கி, ஆங்காங்கே கண்காணித்து கொண்டிருக்கும் கேமரா கண்களிலெல்லாம் சிக்காமல், பரந்து விரிந்திருக்கும் தோட்டம் பகுதிக்கு சென்று, அங்கு அடர்ந்திருந்த மரங்களின் உதவியோடு காம்பவுண்டில் ஏறி மறுபுறம் குதிப்பதற்குள் ஒவ்வொரு கணமும் அவளுக்கு செத்து செத்து பிழைக்கும் நிலைதான்.

ஆனால் தன்னுடைய சுதந்திரத்திற்காக அவள் இந்த அளவிற்காவது ரிஸ்க் எடுத்துதானே ஆகவேண்டும்.

என்னதான் அவள் சில்வர் ஸ்பூனோடு பிறந்திருந்தாலும் சிறு வயது முதலே இந்த ஆடம்பரங்கள் மீதெல்லாம் அவளுக்கு பெரிதாக ஈடுபாடுகள் இருந்தது கிடையாது.

எங்கு ஆடம்பரங்கள் இருக்கிறதோ அங்குதானே கட்டுபாடுகளும் அதிகம்.

அந்த கட்டுப்பாடுகளால்தான் அவளுக்கு இந்த ஆடம்பரங்கள் மீதெல்லாம் பிடித்தமில்லாமல் போனது கூட.

பேசுவதாக இருந்தாலும் சரி, நட்பு வைத்து கொள்வதாக இருந்தாலும் சரி அவர்கள் தகுதிகேற்றார் போன்றோர் உடன்தான் பழக வேண்டும் என்பது அவள் குடும்பத்தில் எழுதப்படாத சட்டம்.

யாருடன் பேசவேண்டும்..? எப்படி பேச வேண்டும்…? எங்கு செல்ல வேண்டும்..? பொது இடங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்..? எத்தனை மணிக்கு எழ வேண்டும்..? என்ன சாப்பட வேண்டும்..? அதையும் எப்படி சாப்பிட வேண்டும்..? கையெழுத்து எப்படி இருக்க வேண்டும்..? எத்தனை மணிக்கு உறங்க வேண்டும்..? என்று காலை எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை டைம்பேபிள் போட்டு வாழும் அந்த வாழ்க்கை முறை அவளுக்கு ஒரு சிறைச்சாலை போல்தான் இருந்தது.

இதுவே சிறைச்சாலை என்றால் மும்பை அவளுக்கு அதீத கெடுபிடிகள் நிறைந்த திகார் ஜெயில் என்றுதான் சொல்ல வேண்டும்.

இத்தனைக்கும் இங்காவது பரவாயில்லை..

எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றால் அவளின் அண்ணி சுபத்திரா ராஜவர்மனிடம் எப்படியாவது பேசி சம்மதம் வாங்கி அனுப்பி வைத்து விடுவாள். அதுவும் செக்யூரிட்டி காட்ஸ்களுடன் தான்.

ஆனால் மும்பையிலோ அந்த வீட்டினர் அனைவரின் கேள்விக்கும் அவள் பதில் சொல்லி, அந்த பதில் அவர்களுக்கு திருப்தி அளித்தால் மட்டும் தான் அவள் வெளி உலகை எட்டிபார்க்க கூட முடியும்.

அதனாலே அவள் அங்கு உண்பதை தவிர்த்து வேறு எதற்கும் வாயை திறப்பதே கிடையாது.

ஏதோ வருடத்திற்கு ஒரு முறை ஒரு மாதம் மட்டும் சென்னை சென்று தங்குவதற்கு அவளுக்கு அனுமதி வழங்கபட்டிருக்க,

அந்த ஒரு மாதகாலம் எப்போது வரும் என்ற ஏக்கத்தோடே மீதமுள்ள பதினோரு மாதங்களை கஷ்டப்பட்டு நகர்த்துவாள்.

இத்தனைக்கும் நேற்றுதான்  வள்ளியம்மையோடு சென்னை வந்து சேர்ந்தவள்,

வந்த அடுத்தநாளே யாருக்கும் தெரியாமல் தன்னுடைய திருட்டுதனத்தையும் ஆரம்பித்திருந்தாள்.

அவளின் இந்த திருட்டுதனத்திற்கு உதவியாக இருப்பது அவளின் பள்ளி தோழி பார்த்திமாதான்.

என்னதான் வசதி வாய்ப்பிலும், ஆடம்பரத்திலும் அவர்கள் குடும்பத்திற்கு இணையாகவே பார்த்திமாவின் குடும்பம் இருந்தாலும், அவளின் மதத்தை காரணம் காட்டி அந்த நட்பையும் பிரதிக்ஷாவிடமிருந்து பிரித்தது அவள் குடும்பம்.

இரண்டு வருடங்களுக்கு முன் அவள் சென்னை வந்த போது எதேச்சையாக ஷாப்பிங் மாலில்தான் அவள் பார்த்திமா-வை சந்தித்தது.

அதுவும் பாத்திமாதான் அவளை அடையாளம் கண்டு அவளிடம் வந்து பேசியது கூட.

மனதிற்கு மிக நெருக்கமானவர்களை பார்த்துவிட்டால், மனதில் இருப்பதையெல்லாம் கொட்டி தீர்த்து விடுவோமல்லவா.. 

அப்படித்தான் பிரதிக்ஷா-வும் கிடைத்த அந்த ஐந்து நிமிடத்தில் தனக்குள் இருந்த மொத்த ஆதங்கத்தையும் அவளிடம் கொட்டிதீர்த்து விட, பார்த்திமா கொடுத்த ஐடியாதான் இது கூட.

ஏன் இப்போது அவள் ஓட்டிக்கொண்டிருக்கும் கார் கூட பார்த்திமா அவளின் பிறந்த நாளுக்கு பரிசாக கொடுத்த கார் தான்.

என்னதான் நேரிலோ, போனிலோ அவர்களால் பேசமுடியாவிட்டாலும் அவர்கள் இருவரும் பேசிக்கொள்வது என்னவோ சுபத்திராவின் மகள் அனன்யா மூலமாக தான்.

அனன்யா-வின் கிளாஸ் மிஸ் பார்த்திமா-வின் தங்கை என்பதால் அவர்கள் இருவர் மூலமாகத்தான் இவர்கள் இருவரும் தங்கள் கருத்துக்களை பறிமாறிக்கொள்வது கூட.

அனன்யா விபரம் அறியாத சிறு பெண் என்பதால் அவளிடமிருந்து விவரங்களை சேகரிப்பது ஒன்றும் பாத்திமா-வின் தங்கைக்கு பெரிய வேலையெல்லாம் இல்லை.

அதன் பின் எப்போதெல்லாம் அவள் சென்னை வருகிறாளோ அப்போதெல்லாம் பார்த்திமா அவளுக்காக காரோடு வந்து அவள் வீட்டு காம்பவுண்டின் பின்புறம் காத்திருப்பாள்.

பகல் வேளைகளில் நிச்சயம் தன்னால் வெளியில் செல்ல முடியாது என்பதால் தான் அவள் தன் சுதந்திரத்திற்காக இரவை தேர்ந்தெடுத்தது.

ஒன்று விடியற்காலை நான்கு மணி வரை இருவரும் சிரித்து பேசிய படி காரிலேயே வலம் வருவர்.. இல்லை பாத்திமா அவளை தன் வீட்டிற்கு அழைத்து செல்வாள்.

அப்படி பிரதிக்ஷா-வை பார்க்க வரும் போதெல்லாம் அவளுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து எடுத்துவருவதையும் பார்த்திமா வழமையாகவே கொண்டிருந்தாள்.

அதனாலே எப்போது சென்னை செல்வோம் என்ற ஏக்கம் அவளுக்குள் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இம்முறை பார்த்திமா-வின் கணவர் வெளிநாட்டிலிருந்து வந்திருக்க, பார்த்திமா டிரைவரை அனுப்பியிருந்தாள் அவளை  தங்கள் வீட்டிற்கு அழைத்து வரும் பொருட்டு.

ஆனால் அவர்கள் இருவருக்கும் பிரைவசி கொடுக்க நினைத்தவள், அவள் வீட்டிற்கு செல்லாமல், டிரைவரிடமிருந்து காரை மட்டும் வாங்கி கொண்டு தனியாக தன் பயணத்தை தொடர்ந்தாள்.

இந்த இரண்டு ஆண்டுகளில் இன்றுதான் அவள் தன்னந்தனியாக இப்படி காரை ஓட்டிகொண்டு செல்வது கூட.

செக்யூரிட்டி கார்ட்ஸி-ன் தொந்தரவு, பின் தொடரும் குடும்ப அடையாளம் என்று எதுவும் இல்லாமல் தனக்கான உலகில் முழு சிறகையும் விரித்து பறப்பது போல் இருந்தது இந்த இரவு நேர பயணம் அவளுக்கு.

“அதென்னமோ தெரியலம்மா உங்க வீட்டுக்கு வந்தா மட்டும் அடிச்சி போட்டா மாதிரி அப்படியொரு தூக்கம் வருது எனக்கு” என்று தினமும் காலையில் வள்ளியம்மை தன்னிடம் புலம்புவதை நினைத்து இப்போது கூட அவள் இதழ்களில் குறுநகை மின்னவே செய்தது.

இந்த சந்தோஷமெல்லாம் இன்னும் ஒரு மாத காலம் தான். அதன் பின் மும்பை சென்றுவிட்டால் அவள் உலகமே அந்த நான்கு சுவருக்குள் அடைந்துவிடும்.

வள்ளியம்மையை விட்டால் அவளுக்கென்று பேச்சு துணைக்கு கூட அங்கு யாரும் கிடையாது.

உணவில் கூட உணர்ச்சிகளை தூண்டும் உப்பு, காரம் இல்லாத உணவு தான் அவளுக்கு.

பார்க், பீச், தியேட்டர், மால் என்று சுற்றிதிரிய வேண்டிய வயதில் அவள் அதிகம் செல்வது என்னவோ கோவிலுக்குதான். அதுவும் அவர்களின் கட்டாயத்தின் பேரில்தான்.

அதுமட்டுமா…? காலையும் மாலையும் பகவத்கீதை படித்தாக வேண்டும், தினமும் ஆன்மீக சொற்பொழி கேட்கவேண்டும், தியானம் யோகா செய்ய வேண்டும், ஒவ்வொருமாதமும் ஏதாவது ஒரு யாத்திரைக்கு சென்றாக வேண்டும். முக்கியமாக வெளி நபர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி யாருடனும் அவள் பேச கூடாது.

அதுமட்டுமா என்ன உடை அணிந்தாலும் அது தூய வெள்ளை நிறத்தில் மட்டும் தான் அவள் அணிய வேண்டும். ஏன் அவள் அறையில் இருக்கும் சோஃபா, கட்டில், திரைச்சீலைகள் கூட வெண்மை நிறத்தில்தான் இருக்கும்.

சத்யன் இறப்பதற்கு முன்னால் வரை அவளும் மற்றவர்களை போல்தான் அந்த வீட்டில் இருந்தாள்.

எப்போது சத்யன் இறந்தானோ அன்று முதல் அவள் வாழ்க்கையே தலைகீழாக மாறி போயிருந்தது.

இத்தனைக்கும் ஒரு மனைவியாக சத்தியனோடு அவள் தன் வாழ்க்கையை வாழ கூட ஆரம்பிக்கவில்லை. ஏன் அவனிடம் அவள் பேசியது கூட இல்லை.

அன்று மட்டும் அவளின் தாத்தா-விற்கு அட்டாக் வரவில்லையென்றால் விதி அவள் வாழ்க்கையில் இப்படியெல்லாம் விளையாடி இருக்காது.

சத்தியனின் கொள்ளுதாத்தாவும், அவளின் கொள்ளு தாத்தாவும் பள்ளி வயது முதலே நெருங்கிய நண்பர்கள்.

தங்கள் நட்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல ஆசைப்பட்ட இருவருக்குமே சொல்லிவைத்தாற் போல் மகன் பிறக்க, அடுத்ததலைமுறையிலாவது தங்கள் ஆசைநிறைவேறாதா என்ற ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு அந்த தலைமுறையும் ஏமாற்றத்தை தான் தந்தது.

அதற்கடுத்த தலைமுறையும் ஏமாற்றத்தை தர, பிரதிக்ஷா-வின் பிறப்புதான் இரு குடும்பத்தாரையும் சந்தோஷ கடலில் மூழ்க வைத்தது கூட.

என்ன தான் இரண்டுதலைமுறைகளாக இரு குடும்பமும் ஒன்றாக சென்னையில் இருந்தாலும்,

தங்கநகை பிஸ்னனை மேம்படுத்தும் பொருட்டு சத்தியனின் குடும்பத்தார் மும்பை-க்கு சென்று விட, இவள் குடும்பத்தார் மட்டும் சென்னையிலேயே இருந்துவிட்டனர்.

மூன்று தலைமுறைகளாக நட்பாக மட்டுமே இருந்த இரு குடும்பமும் சத்யன் மற்றும் பிரதிக்ஷாவி-ன் திருமணத்தால் ஒரே குடும்பமாகபோகும் நாளை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில்தான் எதிர்பாராதவிதமாக பிரதிக்ஷாவின் தாத்தா-விற்கு அட்டாக் வந்தது.

மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர் தன் கடைசி ஆசையாக இருவரின் திருமணத்தையும் இப்போதே பார்க்க வேண்டும் என்று சொன்னபோது இரு குடும்பமுமே அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அப்போது அவள் பத்தாம் வகுப்புதான் படித்துகொண்டிருந்தாள். பள்ளி முடித்து அதீத சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்தவள் அதன் பின் சிரிக்கவே இல்லை.

இருவருமே அப்போதைக்கு மைனர் என்பதால் அவர் முன்னிலையில் இருவரும் மோதிரத்தை மட்டும் மாற்றிகொள்ள, அதை பார்த்த சந்தோஷத்திலேயே அவரின் ஆன்மாவும் இளைப்பாறியது.

அவரின் காரியங்கள் அனைத்தும் முடிந்தபின் அவர்களுடன் மும்பை சென்றவள் அங்கேயேதான் தன் பள்ளிபடிப்பு மற்றும் கல்லூரியையும் முடித்தாள்.

அதன் பின் நடந்த நிகழ்வுகள் அவள் வாழ்க்கையையே அடியோடு புரட்டி போட்டன.

சத்யனின் இறப்பிற்கு பின் தனக்கு ஏன் இத்தனை கட்டுபாடுகள் என்று அவள்  யோசிக்காத நாட்களே இல்லை.

இத்தனை காலங்களில் அவர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டுமே பதில் சொல்லி பழக்கபட்டவளால் எங்கிருந்து தன் மனதில் இருக்கும் கேள்விகளை வெளிப்படையாக அவர்களிடம் கேட்க முடியும்.

அதற்கான தைரியம் அவளுக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவர்கள் சொல்லாவிட்டாலும் அதற்கான காரணம் என்னவென்று சுபத்திரா சொன்னபோது அதை கேட்டு பிரதிக்ஷாவின் இதயம் நொறுங்கிதான் போனது.

என்னதான் அவள் விதவை என்றாலும் அவள் இப்போது வரை அவர்கள் வீட்டு மருமகளாயிற்றே.

வயதுகோளாரில் அவள் ஏதாவது செய்யபோய் அது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டால்….

அந்த ஒரு காரணத்திற்காகத்தான் தனக்கு இத்தனை கட்டுப்பாடுகள் என்று தெரிந்த போது, இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு இறப்பதே மேல் என்றுதான் தோன்றியது பிரதிக்ஷாவிற்கு.

தனக்கு நடக்கும் அநியாயத்தை எதிர்த்து கேட்டவே தைரியமில்லாதவளுக்கு வாழக்கையை முடித்துகொள்ள மட்டும் எங்கிருந்து தைரியம் வரும்.

அதனாலே, “அண்ணா.. நான் இங்கயே இருந்துடறேனே..” என்று ராஜவர்மனிடம் அவள் கேட்ட போது.

அவனோ “நீ அங்க இருக்கறதுதான் உனக்கும் மரியாதை.. அவங்க குடும்பத்துக்கும் மரியாதை” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட, அவளோ மொத்தமாக உடைந்துதான் போனாள்.

“ஏன் அப்படி சொல்கிறாய்..?” என்று பதிலுக்கு அவன் கேட்டிருந்தால் கூட அவளுக்கு கொஞ்சம் மனநிம்மதியாக இருந்திருக்கும்.

இரு குடும்பத்திலுமே தனக்கான அங்கீகாரமோ.. தன் மீதான அக்கறையோ கொஞ்சம் கூட இல்லை என்பது அன்று தான் அவளுக்கு தெளிவாக புரிந்தது.

அந்த மாதிரியான சூழ்நிலையில்தான் அவள் பார்த்திமா-வை சந்தித்தது. அவள் சந்தோஷத்தை பற்றி யாருமே இங்கு கவலை படாத போது அவள் மட்டும் ஏன் தன் சந்தோஷங்களை அவர்களுக்காக தியாகம் செய்ய வேண்டும்..?

அதனால் தான் பார்த்திமா இப்படியொரு யோசனை சொன்னபோது அவள் மறுக்கவில்லை.

இப்போது எதற்காக கண்டதையும் நினைத்து கையிலிருக்கும் சந்தோஷத்தை வீணடிக்க வேண்டும் என்று நினைத்தவள், துளிர்த்த கண்ணீரை துடைத்துவிட்டபடியே மீண்டும் தன் கவனத்தை சாலைபுறம் திருப்பினாள்.

அவள் கார் செங்கல்பட்டை நெருங்கியிருக்க, அவளுக்கே இப்போது ஆச்சரியம் தான் இவ்வளவு தூரம் தான் வந்திருப்பதை நினைத்து.

காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிக்கலாம் என்று நினைத்தவளின் பார்வையில் அந்த திருமண மண்டபத்தின் முன் இருந்த குல்ஃபி வண்டி பட, அவளுக்கும் இப்போது குல்ஃபி சாப்பிட வேண்டும் போல் இருந்தது.

குல்பியை வாங்கிகொண்டு காரை வளைத்து ஒரு ஓரமாக நிறுத்தியவள், பின் அதை நிதானமாக சுவைக்கவும் ஆரம்பித்திருந்தாள்.

குல்பியை சுவைத்து உண்டுகொண்டிருந்தவளின் பார்வையில் ஏதேச்சையாகத்தான் பட்டது அந்த திருமண மண்டபத்திற்கு முன்னால் வரிசையாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள்.

ஜொலித்து கொண்டிருந்த அந்த திருமண மண்டபத்தின் அலங்காரத்தை வைத்தே அது வசதி படைத்தவர்களின் திருமணம் என்று யூகித்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது அது அமைச்சர் இல்ல திருமணம் என்று.

‘நாளைய பிரதமரே.. எங்கள் பாகுபலியே’ என்று அமைச்சரை புகழ்கிறேன் என்ற பெயரில் அமைச்சரின் தொண்டர்கள் வைத்திருந்த பேனர்களை பார்த்தவளுக்கு தன்னையும் மீறிகொண்டு சிரிப்புதான் வந்தது.

சிரிப்பை விழுங்கிகொண்டு அடுத்தடுத்த பேனர்களை பார்த்துகொண்டிருந்தவளின் பார்வையில் அப்போதுதான் பட்டது நாளை திருமண பந்ததில் இணையபோகும் அந்த ஜோடியின் புகைப்படம்.

“மீராநந்தன் வெட்ஸ் காயத்ரி” என்று எழுதப்பட்டிருக்க,

மீராநந்தன் என்ற பெயரே அவளுக்கு புதிதாக இருக்க, ஒருவித ஆர்வத்தோடே அந்த பெயருக்கு சொந்தமானவனின் புகைப்படத்தை பார்த்தாள்.

இதயத்திலிருந்து சிரிப்பது போல் அத்தனை அழகாய் உயிரோட்டமாய் இருந்தது அந்த மீராநந்தனின் புன்னகை. அவன் விழிகளில் கூட ஒரு உயிரோட்டம் ஏதோ சொல்வது வருவது போல் இருந்தது அவளுக்கு.

அடர்த்தியான புருவம் என்றாலும் அழகாய் வளைந்திருந்தது. நேர்த்தியான நாசி.. டிரிம் செய்யப்பட்ட பியர்ட் என்று அனைத்துமே அவனுக்கு கண கச்சிதமாய் பொருந்தியிருக்க, அவளுக்கே இப்போது சந்தேகம் தான் நானா ஒரு ஆண்மகனை இந்த அளவிற்கு பார்த்து கொண்டிருக்கிறேன் என்று.

அதுவே அவள் மனதிற்கு சற்று உறுத்தலாய் இருக்க, கஷ்டப்பட்டு அவன் மீதிருந்த பார்வையை விலக்கியவளின் விழிகள் அடுத்து அந்த மணபெண்ணின் மீதுதான் தாவியது.

என்னவோ தெரியவில்லை அந்த மீராநந்தனுக்கு அந்த பெண் சற்றும் பொருத்தம் இல்லாதது போல் தோன்றியது அவளுக்கு.

கண்களில் ஒரு ஜீவனே இல்லை, இதழ்களில் கூட போலியான ஒரு புன்னகை. என்னவோ தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லை என்பது போல் இருந்தது அந்த பெண்ணின் முகத்தோற்றம் அவளுக்கு.

குல்பியை உண்டபடி அந்த பேனரையே அவள் பார்த்துகொண்டிருந்த தருணத்தில்தான், காரின் கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்க, திடுக்குற்று திருப்பி பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் ஒரு சுற்று விரிந்துதான் போயின, அவள் கார்கதவை திறந்து கொண்டு இருக்கையில் வந்தமர்ந்த அந்த மீராநந்தனை பார்த்து.

ஆம் யாரை சற்றுமுன் பேனரில் பார்த்தாளோ அதே மீராநந்தன் தான் இப்போது அவள் காரில் அவளுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பது.

இதெல்லாம் கனவா இல்லை நிஜமா என்று புரியாமல் அவள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க,

அவனோ, அமர்ந்த வேகத்திலேயே “சீக்கரம் வண்டி-அ எடு..” என்றான் பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடியே.

அவன் சொல்லியும் அவள் காரை ஸ்டார்ட் செய்யாமல் அவனை அதிர்ந்து பார்த்த வண்ணமாகவே இருக்க,

“சொன்னது உன் காதுல விழலையா..? செவிடா நீ..? சீக்கரம்..” என்று எரிந்துவிழுந்தவன் பார்வையோ திரும்பி திரும்பி மண்டப வாசலை பார்த்தபடியேதான் இருந்தது.

அப்போதும் அவள் காரை ஸ்டார்ட் செய்யாமல் இருக்க, “யூ இடியட்…” என்றவாறே அவள் புறம் திரும்பியவனின் பார்வையில் அப்போதுதான் அவள் கையில் இருந்த குல்ஃபி பட,

“இது இப்ப ரொம்ப முக்கியமாடி..” என்று தனக்கு என்னவோ அவள் நன்கு பரிட்சயபட்டவள் போல் அவளை அவன் “டீ” போட்டதோடு நில்லாமல், அவள் கையிலிருந்த குல்ஃபி-யையும் பிடுங்கி தூர ஏறிய,

அவனின் வார்த்தைகளாலும், செயலாலும் அதீத அதிர்ச்சிக்கு சென்றவள், “ஹே…” என்றாள் புருவ மத்தியை சுருக்கி.

9 minreading time
2comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels