அதன் பின் வந்த நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் அவனும் அவளிடம் முன்போல் வம்பிழுக்கவில்லை. அதுவே அவளுக்கு சற்று மனநிம்மதியாக இருந்தது.
இதற்கிடையில் அவளின் கல்லூரி படிப்பும் முடிந்திருந்தது.
பல்கலைகழகத்திலேயே அவள் முதல் மதிப்பெண் பெற்றிருக்க, இரு வீட்டாருமே அவளை தலையில் தூக்கி வைத்துதான் கொண்டாடினர்.
சுதாகரன் அவளுக்கு விலை உயர்ந்த வயலினை பரிசாக கொடுக்க, சுமதியோ வைரநெக்லசை பரிசாக கொடுத்திருந்தார், ஆனால் அவளுக்குதான் அதையெல்லாம் வாங்கிகொள்ள சங்கடமாக இருந்தது.
அதனாலே அவனை மட்டும் அல்ல அனைவரையும் விட்டு விலகுவது என்று முடிவு செய்தவள் மேற்படிப்பை மும்பை மியூசிக் கல்லூரியில் படிப்பதென்று முடிவு செய்தாள்.
அவள் எடுத்த மதிப்பெண்ணிற்கு அங்கு மெரிட்டிலேயே சீட் கிடைத்திருக்க, ஆரம்பத்தில் அவ்வளவு தூரம் சென்று படிப்பதற்கு இரு குடும்பத்தாருமே ஒத்துக்கொள்ளவில்லைதான்.
பின் ரிஷப் தான் அனைவரிடமும் பேசி சம்மதிக்க வைத்தான். அத்தோடு அங்கு சென்று படிக்க அவளுக்கும் சில கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தான் ரிஷப்.
கல்லூரி விடுதியில் தங்காமல் அங்கு அவன் வாங்கியிருக்கும் வீட்டில் தான் தங்க வேண்டும் என்று சொன்னபோது, முதலில் தயங்கியவள் பின்னர் சரியென்று ஒத்துக்கொண்டாள் அதுவும் தன்னை அவன் தொடர்புகொள்ள கூடாது, தன்னை தேடி கொண்டு அவன் அங்கு வரக்கூடாது என்ற நிபந்தனையோடே.
மும்பை செல்வதற்காக அவள் சந்தோஷமாக ஆயத்தமாகிக்கொண்டிருக்க, அவன் தான் அவளை பிரிய போவதை எண்ணி உள்ளுக்குள் நாளும் வருந்திகொண்டிருந்தான்.
அவனால் எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை. அதுவும் வாழ்க்கை துணை பற்றிய அவளின் எதிர்பார்ப்பை அவள் வாயாலே கேட்ட பின் அவள் விஷயத்தில் அவன் அதிகம் குழம்பிதான் போயிருந்தான்.
அவளின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்வது போல் முழுவதுமாக தன்னை மாற்றிகொள்வதா..? அப்படி மாற்றிக்கொண்டால் அது அவனின் நிஜம் அல்லவே.
நிறைகளை ஏற்றுகொள்வது போல் குறைகளையும் ஏற்றுகொள்வது தானே ஒரு ஆரோக்கியமான உறவுக்கு அழகு.
அதனாலே தன்னையும் தன் காதலையும் புரிந்துகொள்ளும் வரை காத்திருப்பது என்று முடிவுசெய்திருந்தான் ரிஷப்.
இப்போது கூட அவள் மேற்படிப்பை காரணம் காட்டி மும்பை செல்வது தன்னிடம் இருந்து விலகுவதற்காகதான் என்பதை அவனும் அறிவான் தான்.
இருந்தும் இருகுடும்பத்தாரிடமும் பேசி அவளுக்கான அனுமதியை வாங்கி கொடுத்திருந்தான் அவளுக்காக.
அன்று சான்றிதழ்கள் வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றுவிட்டு திரும்பியவளுக்கு வாசலில் கிடந்த இரண்டு ஜோடி செருப்புகளை பார்த்ததும் இதழ்களில் தானாகவே புன்னகை அரும்பியது.
ஆம் ஆரண்யாவும், ஹரணும் தான் அங்கு வந்திருந்தனர்.
உடன் பணிபுரியும் மருத்துவர் இல்ல விழாவிற்கு சென்றுவிட்டு அவர்கள் வீடு வழியாக திரும்பிய சுமதிதான் அவர்கள் இருவரையும் தன்னுடன் இங்கு அழைத்து வந்திருந்தது.
“ஹரண்… ஆரண்யா..” என்று சந்தோஷ குரலில் அவர்களை அழைத்தவாறே அவள் உள்ளே நுழைய, அவளை எதிர்கொண்டு வந்த செல்வியோ, ஹரண் ரிஷப் அறையிலும் ஆரண்யா கவின் அறையில் இருப்பதாக சொல்ல, அதைகேட்ட இதழினிக்கோ உள்ளுக்குள் தூக்கிவாரித்தான் போட்டது.
“அத்த எங்க..?” என்றவளின் கேள்விக்கு, அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தவர் எமெர்ஜென்சி கேஸ் என்பதால் மருத்துவமனை சென்றிருப்பதாக செல்வி சொல்ல, அவளோ விழுந்தடித்துகொண்டு மாடிப்படியேறி இருந்தாள்.
“ஐய்யோ இப்போ நான் என்ன பண்ணுவேன்.. யார்-அ முதல்ல காப்பாத்துவேன்..? அவன் ஒரு பொம்பள பொறுக்கி-னா இவன் இரு ஆம்பள பொறுக்கியாச்சே..” என்று கைகளை உதறியவாறே உள்ளுக்குள் பதறியவள், முதலில் கவின் அறைகதவைத்தான் தட்டினாள் “ஆராண்யா..” என்று சத்தம் போட்டு அழைத்தவாறே.
அவள் சத்தம் கேட்டு அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த ஆரண்யாவோ, அவளை பார்த்த சந்தோஷத்தில் “அக்கா..” என்று அவளை கட்டிக்கொள்ள,
அருகாலில் சாய்ந்து நின்றுகொண்டிருந்த கவினை முறைத்தவாறே, தன்னிடமிருந்து அவளை விலக்கி நிறுத்தியவள், “நீ கீழ போ” என்க, அவளும் மாடிப்படி இறங்கி கீழே சென்றாள்.
அடுத்து அவர்களின் அறைக்கதவை அவசரமாக திறந்தவள் அதிர்ந்துதான் போனாள் பின்னால் இருந்து ஹரணை அனைத்தப்படி நின்றிருந்த ரிஷப் நந்தனை பார்த்து.
அந்த காட்சியை பார்த்தவளின் விழிகள் ஒரு சுற்று அதிர்ச்சியில் விரிந்துதான் போயின.
தன்னையும் மீறிக்கொண்டு “ஹரண்” என்றவள் போட்ட சத்தத்தில், ரிஷப் நந்தன் திரும்பியபோதுதான், ஹரண் கைகளிலிருந்த வயலின் இதழினியின் பார்வைக்கு பட்டது.
ஆம் ஹரண் கேட்டு கொண்டதற்கிணங்க ரிஷப் அவனுக்கு வயலின் வாசிக்க கற்றுகொடுத்து கொண்டிருந்தான்.
ரிஷப் நந்தனை முறைத்தவாறே, “இங்க வாடா..” என்று ஹரணை தன்புறம் வேகமாக இழுத்தவள், “கீழ போ..” என்க, அவனும் இருவரையும் திரும்பி திரும்பி பார்த்தபடியே கீழே சென்றான்.
அவன் கீழே செல்லும் வரை காத்திருந்தவள் அறைக்கதவை சாற்றியவிட்டே அவன் புறம் திரும்பினாள்.
இப்ப என்ன..? என்பது போல் அவன் அவளையே பார்த்திருக்க,
“அன்னைக்கு ஹரண் ரொம்ப கியூட்-னு நீங்க சொல்லும் போதே நான் நினைச்சேன்.” என்று அன்று சுமதியிடம் அவன் சொன்னதை அடிக்கோட்டிட்டு அவள் சொல்ல, அன்று ஏன் அப்படி சொன்னோம் என்றாகி விட்டது அவனுக்கு.
முன்னுச்சியை கோதிவிட்டபடி, அவன் அவளையே பார்த்திருக்க, “அவன் ஒன்னும் உங்க டைப் இல்ல… அவன் சின்ன பையன்” என்றாள் இப்போது அவன் கே என்பதை மனதில் வைத்து.
நிச்சயம் அவள் தன்னை தவறாகதான் யூகித்திருப்பாள் என்பதை அவனும் அறிந்துதான் வைத்திருந்தான். அதற்காக அவள் சொல்வதையெல்லாம் அவனாலும் கேட்டுகொண்டு இருக்க முடியாதே,
அதனாலே “டீ… அவன் வயலின் வாசிக்க சொல்லிகொடுக்க சொன்னான்.. நான் சொல்லிகொடுத்தேன்” என்று பொறுமையாக அவளுக்கு அவன் உண்மையை புரியவைக்க முயல,
அவளோ அவனை நம்பமாட்டாமல் “இதெல்லாம் உங்களுக்கு ஒரு சாக்குதன..” என்று கேட்டு அவனை முறைத்தவாறே, “ஏன் கவின் உங்களுக்கு பத்தலையா..?” என்று வேறு கேட்டு விட, அவனுக்குதான் பொறுமை எல்லையை கடந்திருந்தது.
“ஏய் மயிரு… சொன்னா புரிஞ்சக்க மாட்ட..?” என்றவன் கத்திய கத்தில் அவளுக்கே ஒரு கணம் உடல் தூக்கிவாரித்தான் போட்டது.
“நீ நினைக்கிறமாதிரி நான் முதல்ல கே-வே இல்ல..” என்று அவள் முன் ஆள்காட்டி விரல் நீட்டி ஆணித்தனமாக சொன்னவனை அவள் அதிர்ந்து போய் பார்த்திருக்க,
“இதுல செய்யாத தப்பு எல்லாத்தையும் குப்பை மாதிரி என் தலையிலே கொட்டிகிட்டு இருக்க..?” என்றான் கோவம் நிறைந்த குரலில்.
அந்த கோவத்துடனே மேலும் அவளை அவன் நெருங்கி நிற்க, அவளுக்கோ உள்ளுக்குள் அதீத பதற்றம் தான் அவன் கோவத்தை பார்த்து.
“நீ நினைக்கிற மாதிரி நான் கே-இல்ல ஆம்பள-ன்னு நிரூபிக்க எனக்கு ஒரு செகெண்ட் போதும்டி..” என்று அவள் விழிகளை கூர்ந்து பார்த்து அவன் சொடுக்கிட்டவாறே சொல்ல, சிவந்துபோயிருந்த அவன் விழிகளிலிருந்த கோவமும், வார்த்தைகளிலிருந்த அணலும் அவளை மேலும் பயம் கொள்ளவே செய்தது.
செய்யாத ஒரு தப்பை அவனும் எத்தனை காலம்தான் தோளில் சுமந்துகொண்டு திரிவான்..? அதானாலே இன்று அவன் வெடித்து சிதறிவிட்டான்.
எங்கே கோவத்தில் சொன்னதுபோல் எதுவும் செய்துவிடுவானோ என்ற பயத்தில் அவளையும் மீறிகொண்டு அவள் கண்களிலிருந்து கண்ணீர் திவலைகள் உருண்டோடின.
அவள் விழிநீரையும், அவள் விழிகளிலிருந்த பயத்தையும் பார்த்தவனால் மேற்கொண்டு அவளிடம் கடுமை காட்ட முடியவில்லை.
அதனாலே பின்னங்கழுத்தை வருடிவிட்டவாறே அவளிடமிருந்து விலகி நின்றுகொண்டவன், இருந்த கோவத்திற்கு சிகரெட்டை பற்ற வைத்து இரண்டு மூன்று பஃப் இழுக்க, அவளும் விழிகளில் ஒருவித கலக்கத்துடன் அவனையேதான் பார்த்து கொண்டிருந்தாள்.
இரண்டு மூன்று பஃப் இழுத்தபின் தான் அவனின் கோவமும் கொஞ்சம் கட்டுக்குள் வந்திருந்தது.
சிகரெட் நுனியில் இருந்த சாம்பலை விரலால் தட்டிவிட்டபடியே,
“சீ இதழ்..” என்க, அவளும் கலங்கிய விழிகளுடனே அவனை ஏறிட்டு பார்த்தாள்.
“நீ அன்னைக்கு என்ன கே-ன்னு சொல்லும் போது நான் அமைதியா இருந்ததுக்கு ரீசன்.. எங்கே நான் கே இல்லன்னு தெரிஞ்சா நீ என்ன பார்க்க பிளாட்-க்கு வரமாட்டியோன்னுதான்.” என்று அன்று சொல்லாத உண்மையை இன்று அவளிடம் சொன்னவன்,
“நான் என் லைஃப்-ல பண்ண ஒரே தப்புனா… அது உன் விருப்பம் இல்லாம உன் கழுத்துல தாலி கட்டுனது மட்டும் தான். யெஸ் நான் ஒத்துக்கறேன் நான் பண்ணது தப்புதான். உன்ன ரொம்ப புடிச்சியிருந்தது.. காதலிச்சேன்.. அந்த நேரத்துல எனக்கு வேற ஆப்ஷன் இல்ல அதனாலதான் தாலிகட்டினேன். அதுக்காக ஐம் ரியலி சாரி” என்று இருகரம் கூப்பி சொன்னவனை பயத்தில் எச்சிலை கூட்டிவிழுங்கியபடி பார்த்தாள் அவள்.
“என்ன காதலிக்கிறன்னு சொல்றீங்க அப்புறம் ஏன் கவின்-னு உடனே அவன் கிட்ட போகாத.. யெஸ்… நான் அன்னைக்கு சொன்னததான் இப்பவும் சொல்றேன். கவின் தான் எனக்கு எல்லாமே.” என்று சொன்னவனை விழிகளில் ஒரு வித அருவெறுப்போடு பார்த்தாள் அவள்.
“அது ஏன்..? எதுக்கு-ன்னு..? என்னால உனக்கு எக்ஸ்பிளைன் பண்ணிட்டுலாம் இருக்க முடியாது. அவன் எந்த அளவுக்கு எனக்கு முக்கியமோ அதே அளவுக்கு நீயும் எனக்கு முக்கியம். அதனாலதான் இப்பவரைக்கும் உன் பின்னாடியே நான் சுத்தி சுத்தி வர்றது” என்று நிறுத்தியவன்,
ஆஸ்டிரேயில் சிகரெட்டை முழுவதுமாக அணைத்துவிட்டே மீண்டும் அவள் புறம் திரும்பினான்.
“யெஸ்… நீ எதிர்பார்க்கற ஸ்ரீராமசந்திரன் மாதிரி-லா நான் இல்லதான். பிக்காஸ் நான் தண்ணி அடிப்பேன்.. தம் அடிப்பேன்.. ஏன்னா என்னோட ஸ்ரெஸ் பர்ஸ்டர் அதுதான். ஒத்துக்கறேன்.” என்று தன் மார்பில் கை வைத்துசொன்னவன்,
“அட் த சேம் காஸ்ட்.. நான் உன்ன காதலிக்கறது எந்த அளவுக்கு உண்மையோ.. அதே அளவுக்கு உண்மை என் மூச்சிகாத்துகூட உன்னதவிர இன்னொரு பொண்ணுமேல பட்டது இல்ல-ன்றது. உனக்கு முன்னாடியும் என் லைஃப்-ல எந்த பொண்ணும் இருந்தது இல்ல.. உனக்கு அப்புறமும் யாரும் இருக்க போறது இல்ல. ஏன்னா எனக்கு தெரிஞ்ச ஒரே காதல் நீ மட்டும்தான்.” என்று அவள் விழிகளை பார்த்து அழுத்தம் திருத்தமாக.
“டீ.. உன்ன லவ் பண்றன்றதுக்காக உனக்காக நான் என்ன மாத்திப்பன்னுலா நினைக்காத..” என்றவனை, “உன்ன யாரு இப்போ மாற சொன்னா..?” என்பது போல் புருவம் சுருக்கி பார்த்தாள் இதழினி.
“இன்கேஸ்.. நான் அப்படி என்ன மாத்திகிட்டா… உன்கிட்ட நான் நடிக்கிறதாதான் அர்த்தம். ஏன்னா இங்க எவனாலயும் தன்ன மாத்திக்கவே முடியாது. மாத்திக்கிட்டதா வேணும்னா நடிக்கலாம். ஸோ ஒரு பொய்யான ஹோப்-அ நான் என்னைக்குமே உனக்கு தரப்போறது இல்ல.” என்று முடிவாக.
“இதுக்குமேல என்ன நீ நம்புறதும்.. நம்பாததும் உன் இஷ்டம்…” என்றவன்
மீண்டும் அவளை நெருங்கி நிற்க, அவளுக்கோ இதயம் அதீத வேகத்தில் துடித்தது..
அவளை நெருங்கி நின்றவனின் விழிகளோ மேலிருந்து கீழாக அவளை அளப்பது போல் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இந்த சுடி-ல நீ செம்ம ஹாட் அண்ட் செக்ஸியாவே இருக்க.. ஸோ இப்போ நான் இங்க இருந்து கிளம்புறதுதான் நம்ம இரண்டுபேருக்குமே நல்லது” என்று கண்களில் குறும்புமின்ன சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து கிளம்ப,
அவளுக்கோ “ஆ..” என்று கத்திவிடலாம் போல் இருந்தது.
அவளால் அவனை புரிந்துகொள்ளவே முடியவில்லை. கோவத்தில் இருந்துகொண்டு அவனால் எப்படி இப்படியெல்லாம் பேச முடிகிறது என்று தான் தெரியவில்லை.
தன் அறைக்கு சென்று தான் அணிந்திருந்த ரோஸ்பிங் கலர் சல்வாரை கழற்றி எறிந்தபின்தான் இதழினிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
மும்பைக்கு அவள் கிளம்பவேண்டிய நாளும் வந்து சேர்ந்தது.
இருவீட்டாருமே அவளுடன் மும்பை செல்ல அவனும், கவினும் மட்டும் இங்கேயே இருந்துவிட்டனர்.
அவளுக்காக சகல வசதிகளுடன் அவன் வாங்கியிருந்த பங்களாவை பார்த்து அவளை தவிர அனைவருமே வாயை பிளந்துதான் போயினர்.
சமையல் முதல் கார் டிரைவர் வரை அனைத்திற்கும் வேலையாட்களை நியமித்திருந்தான் அவன்.
இன்னும் அவளுக்கு கல்லூரி திறக்க ஒருவார காலம் இருக்க, குடும்பத்தாருடன் மும்பையை சுற்றி பார்ப்பது, ஆரண்யா ஹரண் உடன் அரட்டை அடிப்பதுதென்று அவள் நாட்கள் சந்தோஷமாக சென்றன.
இதில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுமதி, இலக்கியாவோடு சேர்ந்து தனக்கு ஏற்றார்போல் வீட்டில் சில மாற்றங்களையும் செய்தாள்.
அன்றும் பெண்கள் மூவரும் சேர்ந்து கிச்சனை சரிசெய்து கொண்டிருக்கும் போதுதான் ரிஷப் நந்தனின் சிறு வயது குறித்து சுமதி சொல்லிக்கொண்டிருக்க, இதழினியோ அதையெல்லாம் காதில் வாங்காமல் நேற்று வாங்கி வந்த பொருட்களையெல்லாம் பிரித்து அடுக்கி கொண்டிருந்தாள்.
அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதான், “மாப்பிள தம்பி அப்பா-க்கிட்ட பேசமாட்டாரோ..?” என்று நீண்டநாட்களாக தன் மனதில் இருந்ததை இலக்கியா சுமதியிடமே கேட்டபோது, இதழினியுமே இப்போது சுமதியைதான் பார்த்தாள்.
அவளுக்குள்ளும் நீண்டகாலமாகவே இந்த கேள்வி இருக்கத்தான் செய்தது.
அவளும் அவன் வீட்டுக்கு வந்த நாள் முதல் பார்த்துகொண்டுதானே இருக்கிறாள்.
அவர் கேட்கும் கேள்விகளுக்கு அவன் பதில் சொல்வதில்லை. சுமதியிடம் நெருக்கம் காட்டுபவன், சுதாகரன் இருக்கும் பக்கம் கூட வருவதில்லை.
ஏன் அன்று அவளுக்கு வயலினை பரிசாக கொடுத்த சுதாகரன் அவனுக்கும் பரிசு கொடுத்தபோது அவன் அதை வாங்கவே இல்லை.
அன்று சுதாகரன் முகம் மாறிப்போனதை அவளும் கவனிக்கதான் செய்தாள்.
அவரின் கேள்வியால் சுமதியின் முகம் மாற, அதை கவனித்த இலக்கியாவோ “நான் எதும் தப்பா கேட்டுட்டானா ம்மா..” என்றாள் சற்று பதற்றத்தோடே.
இல்லை என்பது போல் மறுப்பாய் தலையை அசைத்தவர், “அவங்க இரண்டு பேரும் பேசியே பத்துவருஷம் ஆகுது” என்று வருத்தம் தொணித்த குரலில் சொன்னபோது பெண்கள் இருவருமே அதிர்ந்துதான் போயினர்.
அன்று அவனுக்கு பதினாறாவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுமதி பார்த்துகொண்டிருக்க, ரிஷப் நந்தனோ சுதாகரன் வரவை வழிமேல் விழி வைத்து காத்துகொண்டிருந்தான்.
காரணம் இந்த முறை தன் பிறந்தநாள் பரிசாக அவன் சுதாகரனிடம் கேட்டிருப்பது பியானம்.
அதற்காகத்தான் அவர் எப்போது வருவார் என்று அவன் வாயிலையே பார்த்து கொண்டிருப்பது கூட.
அவனை அதிகம் காக்கவைக்காமல், சுதாகரனும் அவன் கேட்ட பியானத்தோடு அவன் முன் வந்து நின்ற போது, அவரை கட்டிகொண்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான் ரிஷப்.
ஏன் அதீத சந்தோஷத்தில் அன்று இரவு கூட அவனுக்கு உறக்கம் வரவில்லை.
அடுத்தநாள் பள்ளியில் தன்னுடைய தந்தை பிறந்தநாள் பரிசாக கொடுத்த பியானம் பற்றி தன் நண்பர்களுடன் அவன் சொல்லிகொண்டிருக்கும் போதுதான்,
“டேய் ரிஷப்.. உன் பர்த்டே-க்கு உன் அப்பா பியானம் தன கிஃப்ட் பண்ணாரு..?” என்று கேட்டபடி அவனுடம் படிக்கும் சக மாணவன் அவன் அருகில் வந்து அமர,
ரிஷப் நந்தனுக்குமே ஆச்சரியம் தான் அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் என்று.
“உனக்கு எப்படி டா தெரியும்…?” என்று கேட்டவனை பார்த்து நக்கலாய் ஒரு சிரிப்பு சிரித்தவன்,
“உன் அப்பா பியானம் வாங்குனது என் மாமா கடையிலதான்.. அதுவும் பணமே இல்லாமா.. லஞ்சமா..” என்று சொல்ல ரிஷப் நந்தனின் முகமே மாறி போனது.
இருந்தும் “இல்ல நீ பொய் சொல்ற.. என் அப்பா அப்படிலாம் பண்ணமாட்டாரு. அவர் காசு கொடுத்துதான் வாங்குனாரு” என்றான் தன் தந்தையை விட்டு கொடுக்காமல் ரிஷப்.
அவன் கூறியதை கேட்டு கலகலவென சிரித்த அந்த மாணவனோ, “போன வாரம் எங்க மாமா-வுக்கும் பக்கத்துல கடை வச்சியிருக்கறவருக்கும் பிரச்சனையாகிடுச்சி. அந்த ஆளு என் மாமா மேல போலீஸ்-ல கம்பிளைண்ட் கொடுத்துட்டான். கம்பிளைண்ட் எடுக்காம இருக்க உன் அப்பா லஞ்சமா எங்க மாமா கிட்ட பியானம் வாங்குனாரு. அப்போ நானும் என் மாமா கடையில தான் இருந்தேன்” என்றவன் அருதியிட்டு சொல்ல, ரிஷப் நந்தனால் எதையுமே நம்ப முடியவில்லை.
“அவன் சொல்வது போல் தன் தந்தையா அப்படி..?” என்று நினைக்கும் போதே அவனுக்கு கண்கள் கலங்கிவிட்டன.
எந்த மகனுக்குமே வரக்கூடாத சூழ்நிலைதான்.
“டேய் அப்போ உங்க வீட்ல உள்ள பொருள் எல்லாமே உங்க அப்பா லஞ்சமா வாங்குனதுதானா..? நீங்க காசு கொடுத்து எதுவுமே வாங்க மாட்டீங்களா..?” என்று இன்னொருவன் கேட்டதில், அவனை சுற்றிநின்ற அவன் நண்பர்கள் அனைவருமே சிரித்துவிட ரிஷப் நந்தனுக்கோ அவமானமாகி விட்டது.
இத்தனை ஆண்டுகள் எந்த பள்ளியில் படிப்பிலும், இசையிலும் யாருமே தொடமுடியாத உயரத்திற்கு உயர்ந்து நின்றிருந்தானோ.. இன்று அதே பள்ளியில் சக மாணவர்கள் முன்னிலையில் கூனி குறுகி போய் நின்றான்.
தன்னுடன் பேசுவதற்கும், நட்பு வைத்துகொள்வதற்கும் போட்டி போட்டவர்கள் எல்லாம் இன்று தன்னை கேலி செய்வதையும், தன்னை பார்த்து நகைப்பதையும் ரிஷப் நந்தனால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
எந்த பதிலும் சொல்ல முடியாமல் விழிகள் கலங்கியபடி அவன் அமைதியாக நின்றிருக்க, அதை தனக்கு சாதகாமக்கிகொண்ட மாணவர்களோ மேலும் அவனை கேலி செய்தனர்.
ஒருகட்டத்தில் பொறுமை இழந்து போனவன் அந்த மாணவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட, அந்த இடமே இரணகளமாகித்தான் போனது.
விஷயம் கேள்விபட்டு அங்கு வந்த ஆசிரியர்கள் தான் அவர்கள் இருவரையும் தடுத்த நிறுத்தியதோடு, பள்ளி முதல்வர் அறைக்கும் அவர்களை அழைத்து சென்றனர்.
இருவரும் இருந்த கோலத்தை பார்த்த முதல்வர், அவன் ஸ்கூல் டாப்பர் என்பதால் இருவரையும் வார்ன் செய்து மட்டும் அனுப்பியிருந்தார்.
அதற்குள் விஷயம் கிளாசில் இருந்த மற்ற மாணவர்களுக்கு தீயாய் பரவியிருந்தது.
இத்தனை ஆண்டுகாலமாக அவனுடம் சேர்ந்து அமர்ந்திருந்த நண்பர்கள் அவனை விட்டு வேறு பெஞ்சில் சென்று அமர்ந்துகொள்ள, ரிஷப் நந்தனுக்கோ உள்ளுக்குள் அப்படியொரு வலி.
அத்தோடு அவனை பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசி சிரித்துகொள்ள அதையும் ரிஷப் நந்தன் கவனிக்கவே செய்தான்.
ஒரேநாளில் அவனை விட்டு எல்லாமே போனது போல் இருந்தது. அவமானமாக இருந்தது. அசிங்கமாக இருந்தது.
அழுதான்.. அவனையும் மீறிகொண்டு அவன் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது. அதன் பின் நடந்த இரண்டு வகுப்புகளை கூட அவன் கவனிக்கவே இல்லை.
அவனையே பார்த்துகொண்டிருந்த கவினுக்கோ அவன் கண்களிலிருந்த வலி புரியவே செய்தது. அப்படியே அவன் தந்தை லஞ்சம் வாங்கியிருந்தாலும் அதற்கு அவன் என்ன செய்வான் என்பதுதான் கவினின் வாதம்.
அருகில் சென்று பேசலாம் என்றாலோ கவினுக்குமே பயம் தான்.. அவன் எப்படி எடுத்துகொள்வான் என்று.
அதனால் தூரத்திலிருந்தபடி அவனையே பார்த்திருந்த கவினுமே இரண்டு வகுப்புகளையும் கவனிக்கவில்லை.




