ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம் கேட்டு பார்த்துவிட்டார். ஆனால் அவன் தான் எதற்கும் வாயை திறக்கவே இல்லை.
விழிகள் நிறைய கோவத்துடன் வீட்டிற்குள்ளே செல்லாமல் வாசலிலேயே அவன் அமர்ந்துவிட, பின் சுமதிதான் விஷயத்தை சுதகாரனுக்கு தெரியப்படுத்தினார்.
விஷயம் கேள்விபட்டுவந்த சுதாகரன், “என்னாச்சி என் தங்க புள்ளைக்கு..?” என்று கேட்டவாறே அனுசரனையாக அவன் தோளை தொட,
வேகமாக அவர் கையை தட்டிவிட்டவனோ, “பியாணம் எங்க வாங்குனீங்க..?” என்று கேட்ட போது, அவருக்கோ புரியவில்லை இப்போது எதற்கு இந்த பேச்சு என்று.
இருந்தும், “எதாவது சாப்டியாப்பா..?” என்று அவன் தலையை கோதிவிட்டவாறு அனுசரனையாக அவர் கேட்க,
அவனோ, “இந்த பியானம் எங்க வாங்குனீங்க..?” என்று மீண்டும் அதே கேள்வியைதான் அழுத்தம் திருத்தமாக அவரிடம் கேட்டான்.
அவனுக்கு என்னாச்சி..? என்பது போல் சுதாகரன் இப்போது சுமதியை பார்க்க, அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்பது போல் உதட்டை பிதுக்கினார்.
அவனையே சிலகணங்கள் பார்த்திருந்தவர் கடையின் பெயரை சொல்ல, “வாங்குன பில் எங்க..?” என்றவன் கேட்ட கேள்வியில் சுதாகரன் கொஞ்சம் அதிர்ந்துதான் போனார்.
“டேய்… இப்போ பில்-அ பார்த்து நீ என்ன பண்ண போற..?” என்ற சுமதியின் கேள்வியையெல்லாம் காதில் வாங்காமல் என் கேள்விக்கு பதில் வேண்டும் என்பது போல் அவன் சுதாகரனையே பார்த்திருக்க,
“பில் ஸ்டேஷன்-ல இருக்கு பா..” என்றவர் முடிக்கும் முன்பே,
“ஸ்டேஷன்-ல இருக்கா..? இல்ல பில்-னு ஒன்னு வாங்கவே இல்லையா..?” என்றவனின் கேள்வியில், சுதாகரனின் முகமுமே மாறித்தான் போனது.
அவரின் முகமாற்றாமே அவனுக்குள் இருந்த கேள்விகளுக்கு பதில் தந்திருக்க, அதுவரையும் அவன் இழுத்துபிடித்திருந்த பொறுமையெல்லாம் காற்றோடு கரைந்துதான் போனது.
“இப்படி லஞ்சமா பியானம் வாங்கிதர சொல்லி நான் உங்ககிட்ட கேட்டனா..?” என்றவனின் வார்த்தை கசையடி போலதான் சுதாகரன் மீது விழுந்தது.
இவனுக்கு எப்படி தெரியும் என்பது போல் விழிகளில் அதிர்ச்சியோடு சுதாகரன் அவனை பார்க்க,
“ஏன் இப்படி பண்ணீங்க..? நான் உங்கமேல எவ்வளோ நம்பிக்கை வச்சியிருந்தேன்.. இந்த உலகத்துலே என் அப்பாதான் பெஸ்ட்-னு இருந்தேன். ஆனா அது எவ்வளோ பெரிய தப்புன்னு இன்னைக்குதான் எனக்கு புரிஞ்சிது” என்று வார்த்தைகளில் வலிகளோடு அவன் சொல்ல,
“ரிஷப்.. அவர் லஞ்சமாதான் அந்த பியானம் வாங்குனாருன்னு உனக்கு எப்படிடா தெரியும்..?” என்று சுமதி வினவியபோதுதான்,
பள்ளியில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான் ரிஷப்.
அவன் கூறியதை கேட்டு சுமதியும் இப்போது உண்மையா என்பது போல் சுதாகரனை பார்க்க, பாவம் அவரால் தான் சுமதியின் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.
“ரிஷப் நான் லஞ்சமா கேட்கலப்பா.. அவங்கதான் ஆக்ஷன் எடுக்காம இருக்கறதுக்காக ஃபோர்ஸ் பண்ணி கொடுத்தாங்க.. அப்பா-வ நம்புப்பா..” என்றவரின் வார்த்தைகள் எதையும் அவன் காதில் வாங்கவே இல்லை.
“அவங்களா கொடுத்திருந்தாலும்.. நீங்களா கேட்டு வாங்கியிருந்தாலும் லஞ்சம் லஞ்சம் தானே..?” என்றவனின் கேள்விக்கு பாவம் அவரால் எந்த பதிலுமே சொல்ல முடியவில்லை.
“இத்தனை வருஷ காலமா என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்-ஆ இருந்தவன் கேட்குறான். உங்க வீட்ல உள்ள எல்லா பொருளுமே இப்படி லஞ்சமாதான் வாங்குனீங்களான்னு. அவன் அப்படி கேட்கும் போது எனக்கு எப்படி இருந்துச்சி தெரியுமா..?” என்று கேட்கும்போதே அவன் கண்களிலிருந்து கண்ணீர் திவலைகள் உருண்டோட,
“டேய் தங்கம் பிளீஸ் அழாத..” என்றவாறே அவர் அவனை தொட முற்பட, அவனோ அவர் தன்னை தொடாவண்ணம் பின்னோக்கி நகர்ந்துகொண்டான்.
அதுவே அவருக்குள் அதிகம் வலித்தது.
“நான் வேணும்னா இப்பவே போய் அந்த பியானத்துக்கான அமவுண்ட்-அ கட்டிட்டு வந்துடறேன்.” என்றவர் சொன்னபோது,
“நீங்க அமவுண்ட் பே பண்ணிட்டா மட்டும்... நான் பட்ட அவமானமும், அசிங்கமும் இல்லன்னு ஆகிடுமா..?” என்றவனின் கேள்விக்கு அவரிடமும் பதில் இல்லைதான்.
என்னசெய்ய அவரும் வேண்டுமென்று அப்படி செய்யவில்லையே.. வேலைக்கு சேர்ந்த இத்தனை வருட காலத்தில் குடிக்கும் டீ-க்கு கூட அவர் பணம் கொடுக்காமல் இருந்ததில்லை.
அப்படிப்பட்டவருக்கு போறாத காலமோ…? என்னவோ..?
மாத கடைசி வேறு.. பிறந்தநாளுக்கு மகன் ஆசைப்பட்டு கேட்டதை வாங்கி கொடுத்தாக வேண்டுமென்ற கட்டாயத்தில் தான் அவர்களாக கொடுத்தபோது சுதாகரனும் மறுக்காமல் வாங்கி கொண்டார்.
ஆனால் இப்படி பின்னாலேயே ஒரு பூகம்பம் வரும் என்று சற்றும் அவர் எதிர்பார்க்கவில்லை.
எந்த ஒரு தந்தைக்குமே வரக்கூடாத சூழ்நிலைதான்.
கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரை புறங்கையால் அழுந்த துடைத்து கொண்டவன், “அப்போ… அவங்க எல்லாரும் சொல்றமாதிரி இந்த வீட்ல உள்ள எல்லா பொருளையும் நீங்க லஞ்சமாதான் வாங்குனீங்களா..?” என்று கேட்டவன், “இந்த பொழப்புக்கு நீங்க பிச்சை எடுத்திருக்கலாம்” என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்,
அவன் கன்னத்திலேயே ஓங்கி ஒன்று வைத்திருந்தார் சுமதி.
சுமதியிடமிருந்து இப்படியொரு செயலை அவனும் எதிர்பார்க்கவில்லை.
“யார பார்த்து என்ன வார்த்தைடா சொன்ன..? அவர் இதுவரைக்கு யார்கிட்டயும் ஒரு ரூபா கூட கை நீட்டி வாங்குனது இல்ல. இன்னைக்கு வாங்கியிருக்காருன்னா அதுக்கு காரணம் நீ. பியானம் தான் வேணும்னு நீ புடிச்ச அடம்.” என்று சுமதியும் கோவத்தில் கத்த, விழிகள் நிறைய கண்ணீரோடு இருவரையும் மாறி மாறி பார்த்தவன், தன் அறைக்கு விரைந்து சென்றான்.
“நீ ஏன் சுமதி.. அவசரப்பட்ட..? அவன் கோவம் நியாயமானதுதானே…?” என்று சுதாகரன் வருத்தப்பட்டபோதுதான் சுமதிக்கும் தான் அவசரபட்டுவிட்டோம் என்பது புரிந்தது
அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டவன்தான். அதன் பின் இருவரும் எவ்வளவு தட்டியும் அறைக்கதவை அவன் திறக்கவே இல்லை.
அடுத்த நாள் காலையில் கூட உண்ணாமலேயே பள்ளிக்கு அவன் கிளம்பி செல்ல அவனை பெற்றவர்களின் மனம் துடித்துதான் போனது.
அவர்களுக்கென்று இருக்கும் ஒரே மகன் அவன் தானே.. அவனும் இப்படி விலகிபோனால் அவர்களுக்குள்ளும் வலிக்கத்தானே செய்யும்.
பள்ளிக்கு சென்றவனுக்கு அங்கும் நிம்மதி கிடைக்கவில்லை. சக மாணவர்கள் ஜாடை மாடையாக அவனை கிண்டல் செய்வதும், லஞ்சம் வாங்குவது போல் அவன் முன் நடித்துகாட்டுவதுமாக இருக்க, ரிஷப்நந்தனுக்கோ வாழ்க்கையே வெறுத்துவிட்ட உணர்வுதான்.
இத்தனை ஆண்டுகாலமாக தன்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடியவர்கள் இப்போது குப்பையை பார்ப்பதுபோல் கேவலமாக பார்ப்பதை அவனால் ஜீரணித்துகொள்ள முடியவில்லை.
வீட்டிலும் அவனுக்கு நிம்மதி இல்லை… இங்கும் அனைவரும் அவனை ஒதுக்கிவிட்டிருக்க, தன் வாழ்கையை முடித்துகொள்வதென்ற முடிவுக்கே வந்துவிட்டான் அவன்.
அழுதுகொண்டே கையில் பிளேட்டுடன் ரெஸ்ரூம் நோக்கி சென்றவனை, பின் தொடர்ந்து சென்ற கவின் தான் விபரீதமாக எந்த ஒரு முடிவையும் அவனை எடுக்கவிடாமல் தடுத்தது.
அனைவரும் ஒதுக்கிய நிலையில் கவின் காட்டிய அன்பும் அக்கறையும்தான் உடைந்து போயிருந்த அவன் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது. அவனை தேற்றவும் செய்தது.
நேற்று மதியம் முதல் உண்ணாமல் இருந்தவனை கவின் தான் வற்புறுத்தி உண்ண வைத்தான்.
காலை முதல் வேலையாக சுதாகரனும் பியானத்திற்காக மொத்த பணத்தையும் கட்டி அதற்கான பில்லையும் வாங்கி இருந்தார்.
மாலை வீட்டிற்கு வந்தவனிடம் சுமதி பில் கட்டிய இரசீதை காட்டியபோது, அவனோ தன் உடமைகளை எல்லாம் எடுத்துகொண்டு வீட்டிலிருந்து வெளியேறி இருந்தான்.
ஒருவேளை வீட்டிற்கு சென்று அவன் ஏதாவது விபரீதமாக முடிவெடுத்துவிடுவானோ என்று பயந்த கவின், அவனை தேடிகொண்டு அவன் வீட்டிற்கு சென்ற போதுதான், சுமதி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரிஷப் நந்தன் வீட்டை விட்டு வெளியேறி இருக்க,
பின் கவின் தான் , “நான் என் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ஆண்டி” என்று அவரை சமாதனப்படுத்திவிட்டு, அவனை வற்புறுத்தி தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்.
அங்கிருந்துதான் அவர்களின் நட்பு பயணம் ஆரம்பமானது. அன்று முதல் ரிஷப்நந்தனுக்கு எல்லாமே கவின் தான்.
சுதாகரனும், சுமதியும் கூட கவின் வீட்டிற்கு சென்று அவனை அழைத்துபார்த்தார்கள். ஆனால் அவன் வரமாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருக்க பின் கவினின் தாத்தா-தான் அவர்களை சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தார்.
அதன் பின் கவின் மூலமாகதான் தன் மகனை பற்றி சுமதி தெரிந்துகொள்வது.
அன்பு மகனின் பிரிவால் சுதாகரனும் பிடித்து சேர்ந்த போலீஸ் வேலையை விட்டுவிட்டு, பிஸ்னஸ் செய்ய ஆரம்பித்தார்.
ஆனால் அவர்கள் என்ன செய்த போதும் ரிஷப் அவரை மன்னிக்கவும் இல்லை, நடந்த எதையும் மறக்கவும் இல்லை.
சுமதி மூலம் அனைத்தையும் அறிந்த இதழினிக்குமே அவன் நிலையை எண்ணி கஷ்டமாகத்தான் இருந்தது.
அந்த வயதில் அவன் பட்ட அவமானங்களும், காயங்களும் எந்த அளவிற்கு அவன் மனதை பாதித்திருக்கும் என்று அவளுக்கும் இப்போது புரிந்தது.
அத்தோடு அன்று கவின் தனக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்று அவன் சொன்னதற்கான காரணம் இப்போது அவளுக்கு தெளிவாக விளங்கியிருந்தது.
உண்மையில் அவர்களுக்குள் இருந்த பாசப்பிணைப்பு அவளையும் நெகிழவே வைத்தது.
உடன் பிறந்தவர்களே உதவ முன்வராத இந்தகாலத்தில், கவினி-ன் இந்த செயல் பாராட்டுக்குரியதுதான்.
என்னதான் சுமதி சொல்வதுபோல் இருவருக்குள்ளும் இருப்பது ஆத்மார்த்தமான நட்பு மட்டுமே என்றால்.. அன்று தான் கல்லூரியில் பார்த்தது..? என்ற கேள்வி அவன் விஷயத்தில் அவளை மேலும் குழப்பமடையவே செய்தது.
“எங்க இப்படியே கடைசி வரைக்கும் எங்க கூட அவன் ஒட்டாமலேயே இருந்துடுவானோன்னு பயந்துட்டு இருந்தேன்..” என்றவர் இப்போது இதழினியின் மோவாயை பிடித்து,
“ஆனா… என் மருமக அந்த பயத்தை வேரோட பிடுங்கி எறிஞ்சிட்டா..” என்று கண்கள் மின்ன சொன்னபோது, இதழினிக்குமே ஒருமாதிரியாகிதான் போனது.
“இன்னைக்கு வீட்டுக்கு வந்தவன், கூடிய சீக்கரத்துல அவன் அப்பாவையும் ஏத்துப்பாண்ணுதான் தோணுது. அதுவும் உன் கையிலதான் இருக்கு இதழினி” என்று அவள் கைகளை பற்றி சொல்லும் போதே சுமதியின் கண்கள் கலங்க, அவளுக்குதான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ரிஷப் என் பையன்றதுக்காக சொல்லல இதழினி. நிஜமாலுமே என் பையன் கிடைக்க நீ கொடுத்துவச்சியிருக்கணும்.” என்று வேறு அவர் சொல்ல, அவள் தான் பேச்சற்று போனாள்.
இங்கு வந்தது முதல் எப்போதும் படுத்த உடனே உறங்கிவிடுபவளுக்கு ஏனோ இன்று உறக்கம் வரவே இல்லை.
கண்களை மூடினாலே சுமதி சொன்ன நிகழ்வே கண்முன்னால் வந்து நிற்க படுக்கையிலிருந்தே எழுந்துவிட்டிருந்தாள் இதழினி.
ஏதோ தண்ணி, தம் என்று ஜாலியாக வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்றுதான் இத்தனை நாட்கள் அவள் நினைத்திருந்தாளே தவிர, அவனுக்குள் இப்படியொரு வலி இருக்கும் என்று சற்றும் அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
யாரும் தன்னை ஒரு வார்த்தை கேட்பதற்கு முன்னே அவமானத்திற்கு அஞ்சி உயிரை விட முனைந்தவள் அவள்.
ஆனால் அவனோ அந்த வயதில் அவ்வளவு பெரிய அவமானத்தையும், அசிங்கத்தையும் சுமந்திருப்பது அவளுக்குள் ஆச்சரியத்தையும் அவன் மீது ஒரு வித அனுதாபத்தையும் ஏற்படுத்தவே செய்தது.
அர்த்த இராத்திரியில் இப்படி தனக்கு பிடித்தமே இல்லாத ஒருவனை பற்றி இந்த அளவிற்கு யோசித்துகொண்டிருப்பது அவளுக்குமே ஆச்சரியம்தான்.
“இந்த நாவல்-லலாம் விருப்பமே இல்லாம ஆண்டிஹீரோ-வ கல்யாணம் பண்ணிக்கற ஹீரோயின் எல்லாம் இந்த மாதிரி ஒரு மொக்க சோக கதைய கேட்டு உருகற மாதிரி நீயும் உருகாத இதழினி. அவனால நீ பட்ட கஷ்டத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமே இல்ல…” என்று என்னதான் தன்னைத்தானே அவள் சமாதானப்படுத்திகொண்டாலும் அடிக்கடி அவன் நினைவுகள் அவளை தொந்தரவு செய்யவே செய்தன.
அவளுக்கான அரேஜ்மெண்ட்ஸ் அனைத்தையும் செய்து கொடுத்துவிட்டு இருவீட்டாரும் கிளம்பியிருக்க, அவளும் அன்றுதான் முதல் நாள் கல்லூரிக்கு சென்றாள்.
புது இடம், புது மனிதர்கள், புது பாஷை என்று அனைத்தும் புதுமையாக இருக்க அதெல்லாம் அவளுக்குள் ஒருவித உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்ததோடு பிடித்தும் இருந்தது.
தனக்கான சுதந்திரவானில் தன் முழுசிறகையும் விரித்து பறப்பது போல் இருந்தது அவளுக்கு.
அவளுக்கு அப்படியென்றால் ரிஷப் நந்தனுக்கு அவளை பார்க்காமல் இரவும், பகலும் ஒரே மாதிரியாகவே இருந்தது.
அவளாக சென்று யாரிடமும் பேசாவிட்டாலும் அவளின் இசைத்திறமை மற்றவர்களை அவளை தேடிவந்து பேச வைத்தது.
போன ஒரு மாதத்திலே தன் இசையால் பிரபலமாகி போனாள் இதழினி.
அவளை போலவே அதே கல்லூரியில் அமுதன் என்ற மாணவனின் புல்லாங்குழல் இசையும் அனைவரின் மனதையும் கவர்ந்திழுக்கவே செய்தது.
ஏன் அவள் கூட அவன் இசையை மெய்மறந்து கேட்டிருக்கிறாள்தான்.
என்னதான் கல்லூரி, வீடு என்று அவள் பிஸியாக இருந்தாலும், ரிஷப்நந்தனின் நினைவுகள் அவளுக்குள் அவ்வப்போது எட்டிபார்க்கவே செய்தன.
அதற்கு காரணம் அவள் கல்லூரி செல்லும் வழியில் மிகப்பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த அவனின் ஆடை விளம்பர புகைப்படம் தான்.
முதலில் பிடித்தம் இல்லாமல் தான் அவன் புகைப்படத்தை பார்த்தாள். ஆனால் பார்க்க பார்க்க அவளையும் மீறிகொண்டு அவளுக்குள் என்னவோ செய்தது.
அதிலும் அவளை பார்க்கும் போது அவன் விழிகள் முழுவதும் நிரம்பியிருக்கும் காதல், அப்படியே அந்த புகைப்படத்திலிருந்த அவன் விழிகளிலும் நிரம்பியிருந்தது.
என்னவோ சொல்வது போல் இருந்தன அவன் விழிகள் அவளுக்கு.
சிவந்த அவன் அதரங்களில் அடக்கப்பட்டிருந்த அந்த புன்னகையும் அவள் விழிகளை கொள்ளையடிக்கவே செய்தன.
முதலில் பிடித்தமில்லாமல் பார்த்தவளின் விழிகள் அதன் பின் வாடிக்கையாவே அவனின் ஆளுயர புகைப்படத்தை பார்க்க ஆரம்பித்திருந்தது.
அன்று எப்பவும் போல் கல்லூரி முடிந்து அவள் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் போதுதான், எதேச்சையாக அந்த நிகழ்வு அவள் கண்களில் பட்டது.
சிக்னலில் அவள் கார் நின்றுகொண்டிருந்தது.
மறுபுறம் இருந்த சாலையில், ஸ்கூட்டி டயரில் முந்தானை சிக்கியதில், புடவையை மொத்தமாக இழந்த அந்த பெண் மார்பின் குறுக்கே கைகளை கட்டியப்படி சங்கடமாக நின்றுகொண்டிருக்க, அங்கிருந்த அத்தனை ஆண்கள் மத்தியில் கொஞ்சமும் யோசிக்காமல் அமுதன் தன் ஷர்ட்டை கழற்றி அந்த பெண்ணிற்கு கொடுத்திருக்க, அந்த காட்சியைதான் காருக்குள் இருந்தபடி பார்த்து கொண்டிருந்தாள் இதழினி.
அவனின் புல்லாங்குழல் இசையை மட்டுமே இரசித்திருந்தவளுக்கு அவனின் இந்த செயல் அவன் மீது மிகப்பெரிய நன் மதிப்பைதான் ஏற்படுத்தி இருந்தது.
அவளும் அவனை கல்லூரியில் பார்த்து கொண்டுதானே இருக்கிறாள்.
அவன் இசையை தாண்டி பல பெண்கள் அவன் மீது பைத்தியமாக இருந்தபோதும், எந்த பெண்களிடமும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நின்று அவன் பேசியது கிடையாது.
ஒரு ஆண் எப்படி இருக்கவேண்டும் என்றவளின் எதிர்ப்பார்ப்பின் பூர்த்தியாக அவன் இருக்க நாளுக்குநாள் அவன் மீது அவளுக்கு மரியாதை கூடிகொண்டே தான் போனது.
அவள் வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு ஆடவனின் மீது மரியாதையும் நம்பிக்கையும் அவளுக்கு வந்திருந்தது.
இந்திய அளவிலான இசைப்போட்டியில் இருவரில் யார் போட்டியில் கலந்து கொள்வதென்று கல்லூரி நிர்வாகம் மண்டையை உடைத்துகொண்டிருந்தபோது, அமுதன் தானாக முன் வந்து இதழினி பெயரை சொன்னபோது அவன் மேல் இன்னும் அவளுக்கு மரியாதை கூடித்தான் போனது.
அதனாலே அவனாகவே வந்து அவளிடம் நட்பு வைத்துகொள்ளலாமா..? என்று கேட்டபோது இதழினியாலும் அதை மறுக்க முடியவில்லை.
ஆரம்பத்தில் பார்த்து சிரித்துகொள்வதோடு இருந்தவர்களின் நட்பு நாளாக நாளாக பேச்சுகளாகவும் விரிவடைந்த நிலையில், நாளடைவில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகவும் ஆகிபோயினர்.
போட்டிக்கு தயாராகிகொண்டிருந்தவளுக்கு அவன் சில திருத்தங்களை சொன்னபோது அவளும் மறுக்காமல் அதை ஏற்றுக்கொள்ளவே செய்தாள்.
வீட்டிற்கு வந்து போனிலும் அவனிடம் பேசினாள்.
அவனுடன் பேசவும், பழகவும் அவளுக்கு பிடித்திருந்தது. அதற்கு காரணம் அவளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அவனிடம் இருப்பதாலே
அதேசமயம் அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவை நட்பு என்ற எல்லைக்கோட்டுக்குள் மட்டும் தான் வைத்திருந்தாள் இதழினி.
என்னதான் அமுதனோடு அவள் நாட்கள் அழகாக சென்றாலும், ஏதாவது ஒன்று ரிஷப் நந்தனையும் அவளுக்கு நினைவு படுத்தவே செய்தது.
அன்று கேண்டினில் அமுதனோடு அவள் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், ஒரு மாணவன் சிகரெட் புகைத்துகொண்டிருக்க அதைப்பார்த்தவளுக்கோ சட்டென்று ரிஷப் நந்தனின் நினைவுதான் வந்துபோனது.
ஆனால் அமுதனோ, “ஹலோ லேடிஸ் இருக்கற இடத்துல ஸ்மோக் பண்ணாதீங்க..” என்று அவனை அங்கிருந்து அப்புறப்படுத்த, மீண்டும் அவன் மீது அவளுக்கு நன்மதிப்புதான் கூடியது.




