அத்தியாயம் – 1
அதிகாலை நான்கு மணிக்கு வைத்த அலாரம் அடிக்கும் முன்பே கண்விழித்திருந்தாள் இதழினி.
அனுதினமும் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பழக்கபட்டதாலோ என்னவோ அலாரம் அடிப்பதற்கு முன்னே அவளுக்கு விழிப்பு தட்டியிருந்தது.
கண்விழித்தவளின் விழிகள் எப்போதும் போல் முதலில் பார்த்தது என்னவோ அவள் போன் ஸ்கிரீனில் ஸ்ரீராமரும் சீதையும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தைதான்.
கண்களை மூடி அடி மனதிலிருந்து, “பெருமாளே” என்று சொல்லும் போதே அவளுக்குள் ஒருவிதமான புத்துணர்வு பாயத்தான் செய்தது.
பக்கத்திலேயே அவளின் சித்தி மகள் ஆரண்யா அவளை கட்டியணைத்தபடி படுத்திருக்க,
“ஹே ஆரண்யா… ஆரண்யா…” என்று சத்தமில்லாமல் அவளை எழுப்ப முயன்றவள், பின் அவளை தன்னை விட்டு தள்ளி படுக்கவைத்தோடு,
“எழுந்திருடி.. மணி நாலு.. எக்ஸாம்-க்கு ரிவிஷன் பண்ணனும் சொன்னியே” என்று உலுக்கியபோதும் ஆரண்யா எழுந்திரிக்கவே இல்லை.
இத்தனைக்கும் நானும் உன்னுடன் சேர்ந்து பூஜை செய்கிறேன் என்ற பேரில் தினமும் நான்கு மணிக்கு அலாரம் வைப்பதே ஆரண்யாதான். இது தினமும் நடக்கும் நிகழ்வுதான் என்பதால் இதழினி மேற்கொண்டு அவளை எழுப்பவில்லை.
“உன்னோட தினமும் இம்சைதாண்டி” என்று முனுமுனுத்தவாறே அடித்துகொண்டிருந்த அலாரத்தை ஆஃப்செய்தவள் பின் வாசல் கதவை திறந்து கொண்டு குளியலறைக்கு சென்றாள்.
ஹால் பகுதியில் அவளின் சித்தி, சித்தப்பா மற்றும் ஹரண் படுத்திருக்க, குளித்து முடித்து ஈரத்தலையுடன் வெளியில் வந்தவள் அவர்களின் உறக்கம் கலையா வண்ணம் மெல்ல வாயிற்கதவை திறந்தாள்.
எப்போதும் போல் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து அரிசிமாவால் கோலம் போட்டவள், வீட்டின் முன் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த துளசி மாடத்தையும் கழுவி மஞ்சள் குங்குமம் வைத்த கையோடு மாடத்தின் முன்பு கோலம் போட்டவள், ஒரு டம்ளர் பாலை காய்ச்சி வந்து மாடத்தின் முன்பு வைத்துவிட்டு, அதன் பின்னே பயபக்தியுடன் மாடத்திலிருந்த விளக்கை ஏற்றினாள்.
ஏற்றிய விளக்கை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டவள், மூன்று முறை துளசி மாடத்தை வலம் வரவும் செய்தாள்.
“இப்படி அதிகாலை பிரம்ம முகூர்தத்துல துளசி மாடத்துல விளக்கேற்றி மூன்று முறை வலம் வந்து வணங்கினால் அந்த ஸ்ரீராமசந்திரனே உனக்கு புருஷனா வருவான்” என்று அவளின் பாட்டி மரகதாம்பாள் சொன்னது இப்போது கூட அவள் நினைவிற்கு வந்து போக தவறவில்லை.
ஆம்..! அவள் இப்படியெல்லாம் செய்ய காரணம் அவளின் பாட்டி மரகதாம்பாள் தான்.
மரகதாம்பாள் மற்றும் கனேசன் தம்பதியினருக்கு மூன்று பெண்பிள்ளைகள். அதில் மூத்தவர் சித்தாராதான் இதழினியின் தாயார்.
விவசாயம் கைவிட்ட நிலையில் சென்னைக்கு பிழைப்பு தேடி வந்தவர்களை கனேசனின் படிப்பு கைவிடவில்லை. சிறிய கம்பனியில் அக்கவுண்டட்-ஆக வேலைக்கு சேர்ந்தவர், அதில் வரும் வருமானத்தை வைத்தே நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
சித்தாராவிற்கும் படிப்பிற்கும் ஏகபொருத்தம் என்பதால் அவர் தாயாருக்கு துணையாக வீட்டிலேயே இருந்து விட்டாள்.
அடுத்தவள் இலக்கியாவும், சுபத்திராவும் பள்ளியில் படித்துகொண்டிருக்க, பெரிதாக ஆடம்பரம் இல்லையென்றாலும் கிடைப்பதை வைத்து அவர்கள் வாழ்வும் சந்தோஷமாகத்தான் சென்று கொண்டிருந்தது.
ஊரில் இருக்கும் விவசாயநிலத்தை விற்று வைத்திருந்த பணத்தையும், சிறுக சிறுக சேமித்த பணத்தையும் வைத்து சென்னையில் சிறிய அளவில் இடம் வாங்கி, வீடு கட்டி குடிநுழைந்த ஒரு மாதத்திலேயே திடீரென்று கனேசன் இதய அடைப்பால் இறந்துவிட, மொத்த குடும்பமும் உடைந்துதான் போனது.
கையில் இருந்த சேமிப்புகள் அனைத்தையும் வீட்டில் போட்டு விட்டதால், மூன்று பெண்பிள்ளைகளையும் கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு மொத்தமும் மரகதாம்பாள் தலையில் விழ, கணவரின் இறப்பை எண்ணி வருத்தப்பட கூட நேரமில்லாமல் தன் மகள்களுக்காக ஓட ஆரம்பித்தார்.
வீடுவீடாக சென்று பாத்திரம் கழுவுவது, சிறு சிறு ஹோட்டல்களில் சமைத்து கொடுப்பது என்று கிடைக்கும் எல்லா வேலைகளையும் செய்தார்.
காரணம் மூன்று பெண்களை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பும் பயமும் அவருக்கு இருக்கிறதே..
அதனாலே மூச்சிவிட கூட நேரமில்லாமல் மரகதாம்பாள் ஓடிக்கொண்டிருக்க,, அவருக்கு உதவியாக சித்தாராவும் மளிகை கடையில் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
அப்படி வேலைக்கு சேர்ந்த இடத்தில் தான் சித்தாரா மாணிக்கத்தை பார்த்தது.
அவ்வப்போது பொருட்கள் வாங்க வந்து சென்று கொண்டிருந்த மாணிக்கத்திடம் இயல்பாக ஆரம்பித்த பழக்கம் நாளடைவில் காதலாக உருமாறியது.
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆம்.. அது சித்தாரா விஷயத்தில் உண்மையாகவே இருந்தது.
காதலிப்பதாக மாணிக்கம் சொன்னபோது மறுக்காமல் ஏற்றுகொண்ட சித்தாரா அவன் பின் புலம் பற்றி அறியவும் இல்லை.. அறிய முற்படவும் இல்லை.
பீச், பார்க், தியேட்டர் என்று இருவரும் சுற்றி திரிய விஷயம் மெல்ல மரகதாம்பாள் காதிற்கும் சென்றது.
மகளை கண்டித்து வேலையை விட்டு நிறுத்தியவர், அவளுக்கு மாப்பிளை பார்க்க ஆரம்பிக்க, சித்தாராவோ மாணிக்கத்துடன் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார்.
சித்தாராவின் இந்த செயலால் மரகதாம்பாள் மொத்தமாகவே உடைந்து விட்டார் தான்.
ஆனால் தன்னை நம்பி இருக்கும் இரண்டு பெண்பிள்ளைகளை நினைத்து மீண்டும் ஓட ஆரம்பித்தார்.
எங்கே மூத்தவள் போல் அடுத்தவளும் இருந்துவிடுவாளோ என்ற பயத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த இலக்கியாவின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி அவளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார்.
ஆனால் கடைக்குட்டி சுபத்திரா இன்னும் பள்ளி சென்றுகொண்டிருப்பதால், அவள் எப்போது பள்ளி படிப்பை முடிப்பாள் என்று அனுதினமும் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருந்தார் மரகதாம்பாள்.
பள்ளி படிப்பை முடித்த கையோடு அவளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டுமென்று மரகதாம்பாள் நினைத்திருக்க, சுபத்திராவோ மேற்கொண்டு கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தாள்.
பின் இலக்கியாதான், “ம்மா.. எதாவது வேலைக்கு போகணும்னா கூட ஒரு டிகிரியாவது கேட்குறாங்கம்மா… நான் மட்டும் டிகிரி முடிச்சியிருந்தன்னா அவர மட்டுமே நம்பியிருக்காம வேலைக்கு போய் நானும் நாலு காசு சம்பாதிச்சி இருக்கலாம்” என்றவள் வருத்தத்தோடு சொல்ல, பின் மரகதாம்பாளும் சுபத்ரா கல்லூரிக்கு செல்ல சம்மதித்தாள்.
சுபத்ரா படிப்பில் கெட்டிகாரி. அதனால் அவள் எடுத்த மார்க்கிற்கு பக்கத்தில் உள்ள அரசு கல்லூரியிலேயே ஃப்ரீயாகவே சீட் கிடைத்திருந்தது.
காலையில் கல்லூரிக்கு செல்வது, மாலையில் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைங்களுக்கு டியூஷன் எடுப்பது என்று அவளின் பொழுதுகள் அழகாகவே செல்ல, மகளின் திறமையை பார்த்து பூரித்து போனார் மரகதாம்பாள்.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் அவரின் தலையில் இடியை இறக்குவது போல் ஐந்து வயது இதழினியை கையில் பிடித்தபடி அவர் முன் வந்து நின்றார் சித்தாரா.
காதலை நம்பி மாணிக்கத்துடன் சென்ற சித்தாராவிற்கு ஆறுமாதங்கள் கழித்துதான் மாணிக்கத்தின் சுயரூபம் என்னெவென்று தெரிய வந்தது.
தினமும் குடிப்பதும். குடித்துவிட்டு வந்து சித்தாராவை அடிப்பதும், ஆபாச வார்த்தைகளால் திட்டுவதுமாக இருக்க, இதில் மாணிக்கத்தின் பெற்றோர் வேறு தங்கள் பங்கிற்கு கர்ப்பினியாக இருக்கும் அவளை வரதட்சனை வாங்கி வரச்சொல்லி தினமும் அடித்து துன்புறுத்த, சித்தாராவிற்கு வாழ்க்கையே வெறுத்து போன நிலைதான்.
என்னசெய்ய காதல் என்ற பெயரில் அவளாகவே தலையில் மண்ணை அள்ளி போட்டு கொண்டுவிட்டாள்.
சில நேரங்களில் உயிரை மாய்த்துவிடலாம் என்று கூட அவள் நினைத்தது உண்டு.. பின் தன்னை நம்பி கருவில் இருக்கும் ஜீவனுக்காக அந்த முடிவையும் மாற்றிகொண்டாள்.
எப்படியும் குழந்தை பிறந்தால் மாணிக்கம் திருந்துவான் என்ற நம்பிக்கையில் அவள் இருக்க, பிறந்தது பெண்பிள்ளை என்பதால் அதுவரையும் சித்தாரா மீது மாணிகத்திற்கு இருந்த கொஞ்ச நஞ்ச காதலும் நீர்த்து போன நிலைதான்.
ஆண்பிள்ளை பெற்றுதரவில்லை என்ற கோவத்தில் அனுதினமும் அவளை அடித்து உதைத்தான்.
அவனின் இந்த மிருகத்தனமான செயலால் அவளின் வயிற்றில் இருந்த கரு கூட இரண்டு முறை கலைந்து போனது.
இருந்தும் தன் விதியை நொந்தவாறு சித்தாரா அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில்தான் மாணிக்கம் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வீட்டிற்குகூட்டி வர, அவன் செயலால் சித்தாரா அதிர்ந்து தான் போனாள்.
ஏதோ இதழினிக்காகத்தான் அவள் இத்தனை ஆண்டுகள் அந்த வீட்டில் பல்லை கடித்து கொண்டு வாழ்ந்தது கூட.
மகனின் செயலை கண்டிக்க வேண்டிய அவன் பெற்றோர் கூட அவளுக்கு ஆதரவாக இல்லாமல் புது மருமகளை ஆலம் எடுத்து வரவேற்க, இனியும் இங்கிருப்பது சரியன்று என்று நினைத்தவள் இதழினியை அழைத்துகொண்டு நேராக மரகதாம்பாள் முன் தான் சென்று நின்றாள்.
என்னதான் அவள் மீது மரகதாம்பாளுக்கு கோவம் இருந்தாலும், கண்ணை கசக்கிகொண்டு, மகளோடு வந்திருக்கும் அவளை அவரால் மறுக்க முடியவில்லை.
அதிலும் சித்தாராவிற்கு பின்னால் நின்றுகொண்டு திருதிருவென தன்னையே பார்த்துகொண்டிருந்த இதழினியை பார்த்த மாத்திரத்திலேயே அவருக்கு பிடித்துவிட, அவரின் கோவமெல்லாம் எங்கு சென்றதென்றே தெரியவில்லை.
கட்டியவன் கைவிட்ட நிலையில் புகலிடமாக தன்னை தேடி வந்திருப்பவளை தானும் தன் பங்கிற்கு கஷ்டப்படுத்த விரும்பாதவர், பேத்திக்காக மகளை ஏற்றுகொண்டார்.
புது இடம் புது மனிதர்கள் என்று ஆரம்பத்தில் தயங்கிய இதழினி மரகதாம்பாளின் கள்ளம் கபடமில்லாத அன்பை கண்டு அவரிடம் நன்றாகவே ஒட்டிகொண்டதோடு, “சித்தி சித்தி..” என்று சுபத்ராவையும் சுற்றி சுற்றி வந்தாள்.
கல்லூரி படிப்பை முடித்த சுபத்திராவிற்கு கை நிறைய சம்பாத்தியத்தில் ஒரு கம்பெனியில் வேலையும் கிடைக்க, இனி தங்கள் குடும்பத்திற்கு நல்ல காலம் தான்என்று மரகதாம்பாள் நினைத்திருந்த தருணத்தில் தான்,
தன்னுடன் பணிபுரியும் ஒருவரை காதலிப்பதாக சுபத்ரா சொன்னபோது மரகதாம்பாள் பயந்துதான் போனார் எங்கே மூத்தவள் வாழ்க்கைபோல் இவள் வாழ்க்கையும் தடம் மாறிவிடுமோ என்று.
“ஏற்கனவே அவ ஒருத்தி என்ன கஷ்டப்படுத்துனது போதாதுன்னு இப்போ நீயும் அதே வேலை-அ செஞ்சிட்டு வந்திருக்கியா..? பெத்து வளர்த்து படிக்க வச்சி எனக்கு தெரியாதா உங்களுக்கு கல்யாணம் பண்ணிவைக்க..? இதுக்குதான் படிக்கணும்னு ஒத்த கால்-ல நின்னுயா..?” என்று அடித்து கொண்டு அவர் அழ,
சுபத்ரா அடுத்தநாளே தான் காதலிப்பவனை வீட்டிற்கு அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகபடுத்தினாள்.
அவனின் பேச்சி, நடவடிக்கை எல்லாமே மரகதாம்பாளின் மனதை திருப்தி படுத்த, அவரும் அவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் இம்முறை விதி வேறுவிதமாக அவர்கள் குடும்பத்தில் விளையாட ஆரம்பித்திருந்தது.
என்னதான் மரகதாம்பாள் அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும். பையன் வீட்டில் அவர்கள் குடும்பம் வசதிவாய்ப்பில்பின்தங்கியிருப்பதை காரணம் காட்டிதிருமணத்திற்கு மறுத்ததோடு, வேறு இடத்தில் பெண் பார்த்து விரைவாக திருமணத்தையும் முடிக்க, மொத்தமாய் கலங்கி போய் நின்றது என்னவோ சுபத்ராதான்.
மனதார காதலித்தவனின் கையாளாகாதனத்தால் அவள் தான் வேரற்று வீழ்ந்து போனாள்.
அவ்வளவு எளிதில் அவளால் எதையும் மறக்கவும் முடியவில்லை.. மனதிலிருப்பதை அழிக்கவும் முடியவில்லை. அவள் தான் அவனை உண்மையாக நேசித்துவிட்டாளே..
மனதில் இருக்கும் வலிகளை அடுத்தவரிடம் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளே புழுங்கினாள்.. வெளியில் சிரித்தாலும் உள்ளுக்குள் ஒன்று சேர்க்க முடியாத அளவிற்கு உடைந்து போயிருந்தாள்….
துள்ளி திரிந்த மகள் இப்போது எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை பார்த்து பெற்றவளின் மனமும் இரணப்பட்டுதான் போனது.
திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவாள் என்று அக்கம் பக்கத்தினர் சொல்ல, அவரும் அவளுக்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்.
ஆனால் அவளோ தனக்கு திருமணமே வேண்டாம் என்று தீர்க்கமாக சொல்லி விட மரகதாம்பாளுக்குதான் அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
இன்னும் கொஞ்சம் நாட்கள் சென்றால் அவள் சரியாகிவிடுவாள் என்று அவர் நினைத்தார்.. ஆனால் சுபத்ரா தன் பிடியிலிருந்து மாறவே இல்லை.
ஆம்.. இந்த காதலை பொறுத்தமட்டில் உண்மையாக நேசித்தவர் யாரோ அவர் இறுதிவரை விட்டு சென்ற இடத்தில்தானேஇருப்பர்.
சித்தாராவும் அவன் விடுச்சென்ற இடத்திலேயேதான் இருந்தாள். அது அவனின் வருகைக்காக அல்ல. அவள் காதல் உண்மை என்பதால்.
மீளாதுயரிலிருந்து மீள முடியாமல் போராடியவள் ஒருகட்டத்தில் தன் உயிரை மாய்த்துவிட, அவள் குடும்பம் மொத்தமாக உடைந்து போனது.
ஏற்கனவே காதல் என்ற பெயரில் தன் வாழ்க்கை சீரழிந்ததை நினைத்து நாளும் வருத்தப்பட்டு கொண்டிருந்த சித்தாரா.. தங்கையின் மரணத்திற்கு பின் மனநோய்க்கு ஆட்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டாள்.
மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கியபோதும் சித்ராவின் உடல் நிலையிலும் சரி மனநிலையிலும் சரி எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இப்படியே இருந்து அவளும் காலனுக்கு இரையாகி விட, காலம் போன வயதில்இதழினியை வளர்க்க வேண்டிய பொறுப்பு என்னவோ மரகதாம்பாள் தலையில் தான் விழுந்தது.
இத்தனை ஆண்டுகள் மகளுக்காக ஓடியவர், அடுத்து பேத்திக்காக ஓட ஆரம்பித்தார்.
தன் வாழ்க்கைதான் இப்படி ஆனது என்றால் பெற்ற பிள்ளைகளின் வாழ்வும் இப்படி முடிந்திருக்க, மரகதாம்பாளுக்கு தெரியவில்லை இது அவர்கள் குடும்பம் வாங்கி வந்த சாபமா.? இல்லை அவர்களின் தலையெழுத்தா என்று.
குடும்பத்தில் மூன்று பெண்களின் நிலை இப்படியாகி இருக்க, இலக்கியா-வின் வாழ்க்கையும் ஒன்றும் சொல்லிகொள்ளும்அளவிற்கு நன்றாக அமைந்துவிட வில்லை.
யார் கையிலாவது பிடித்துகொடுக்க வேண்டும் என்று மட்டுமே நினைத்த மரகதாம்பாள் மாப்பிளையின் வேலையை பற்றியெல்லாம் அதிகம் விசாரிக்கவில்லை.
கார் ஓட்டுனராக இருந்த சண்முகத்திற்கு இலக்கியாவை திருமணம் செய்துவைத்தார்.
ஆனால் அவர் ஆக்டிங் டிரைவர் என்பதால் யாராவது கார் ஓட்ட அழைத்தால் தான் வருமானம். அப்படி வரும் வருவாயும் உடம்பிற்கு எதாவது வந்துமருத்துவத்திற்கு செலவாகி போக, இதில் எங்கிருந்து அவர்கள் குடும்பத்தை நடத்துவது.
இதில் ஆரண்யா பிறந்தபின் குடும்பம் நடந்துவதே பெரிய சவாலாகதான்இருந்தது. பின் மரகதாம்பாள்தான் அவ்வப்போது தன்னால் முடிந்த பண உதவியை அவர்களுக்கு செய்து வந்தார்.
மூன்று மகள்களின் வாழ்க்கையும் இப்படியிருக்க, எதற்காக தன் குடும்ப பெண்களுக்கு இப்படியொரு நிலை என்று மரகதாம்பாள் யோசிக்காத நாட்களே இல்லை.
இந்த நிலமையை எப்படி சரிசெய்வதென்றும் அவருக்கு தெரியவில்லை. எல்லாம் கைவிட்ட நிலையில் அவர் சென்று நின்றது அவர்கள் குலதெய்வத்தின் முன்புதான்.
அங்கு சென்று குறிகேட்டபோதுதான்.. அவர்கள் மூதாதையர்களின் செய்த பாவத்தால்அவர்கள் குடும்பத்திற்கு பெண்சாபம் இருப்பதாகவும்.. அதுதலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சொல்ல, மரகதாம்பாள்அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.
அத்தோடு அந்த சாபத்தின் விளைவால்அவர்கள்வம்சாவளியில் பிறக்கும் பெண்களின் வாழ்வு அதீத கஷ்டங்கள் நிறைந்ததாகவும்… அவமானம், அசிங்கம் ஏற்பட்டு தன்னுயிரையும் விட்டுவிடுவர்என்றும் சொல்ல, இதையெல்லாம் நம்புவதா என்று அவருக்கு தெரியவில்லை. ஆனால் நம்புவதற்கான சாத்தியகூறுகள்தான் அவரிடம் அதிகம் இருந்தன.
காரணம் அவருக்கு தெரிந்து அவர் கணவர் உடன் பிறந்த பெண்கள் வாழ்வு கூட அந்த அளவிற்கு சொல்லும் படியாக இல்லை.
இருவர் இப்போது உயிரோடு இல்லை.. மீதமிருக்கும் இருவரில் ஒருத்தி நோயோடும்.. இன்னொருத்தி வறுமையோடும் போராடிக்கொண்டிருக்கிறாள்.
அத்தோடு அவர்களின் குடும்பசூழ்நிலையும் இப்படி இருக்க, அவரால் எப்படி இதையெல்லாம் நம்பாமல் இருக்க முடியும்.
அனைத்திற்கும் மேல் இப்போது அவருக்கு இருக்ககூடிய மிகப்பெரிய கவலையே அடுத்த தலைமுறைகளான இதழினி மற்றும் ஆரண்யா-வின் வாழ்வு எப்படி இருக்கும் என்பதுதான்
அதிலும் தாய் தந்தையர் இல்லாமல் இருக்கும் இதழினியை நினைத்துதான் அவருக்கு அதிக கவலை.
எப்படி இந்த சாபத்திலிருந்து அவர்கள் வாழ்வை காப்பது என்று கோவிலில் கதறி அழுத மரகதாம்பாளுக்கு ஒரு வயதான பெண்மணி சொன்ன பரிகாரம்தான் இது.
அதாவது பிரம்ம முகூர்தத்தில் துளசிமாடத்தில் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்திற்கு மட்டுமல்ல குடும்ப பெண்களுக்கும் நல்லது என்றும் அந்தஸ்ரீராமனே கணவராக வருவார் என்றும் சொல்ல, அன்றுமுதல் மரகதாம்பாளின் அறிவுறுத்தலின் பேரில் இதழினியும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வருகிறாள்.
அத்தோடு தன் மகள்கள் போல் எங்கே இதழினியும் காதல் கீதல் என்று பாதை மாறி போய்விடுவாளோ என்று பயந்தவர்அக்கம் பக்கத்தினரிடம் கூட அவளை பேச அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக ஆண்களுடன் சுத்தமாகவே பேசகூடாது. அதனாலே அவளை பெண்கள் மட்டுமே பயிலும்பள்ளியில் சேர்த்தார்.
சேர்த்ததோடு மட்டுமல்லாது பள்ளி வீட்டைதவிர்த்து வேறு எங்கு செல்ல கூடாது, உடன் படிக்கும் சிநேகிதிகளை வீட்டிற்கு அழைத்துவரகூடாது.. அவளும் அவர்கள் வீட்டிற்கு செல்ல கூடாது என்று அதீத கட்டுபாடுகளுடன் அவளை அவர் வளர்க்க, அவளும் அவர் நினைத்தது போலவே வளர்ந்து வந்தாள்.
மரகதாம்பாளின் கட்டுபாடுகள் எதுவும் பெரிதாக இதழினியைபாதித்து விடவில்லை. சொல்லபோனால் இந்த கட்டுபாடுகள் எல்லாம் அவளுக்கு ஒருவிதத்தில் பிடித்தமாகவேதான் இருந்தது.
காரணம் ஐந்தாண்டு காலங்கள் அவள் தந்தை வீட்டில் அவள் அனுபவித்த கஷ்டங்கள் அப்படி. பெண்பிள்ளையாக பிறந்ததால் அனுதினமும் அவளுக்கு கிடைத்ததது என்னவோ ஏச்சுகளும் பேச்சிகளும், அடியும், உதையும்தான்.
அன்பு பாசம் என்றால் என்ன என்று அவள் உணர்ந்தது கூட இங்கு வந்த பின் தான்.
தான் அனுபவித்த வேதனை ஒருபக்கம் என்றால், தன் கண்முன்னே தன் தாயும், சித்தியும் அடைந்த துயரங்களை பார்த்து வளர்ந்தவளுக்கு ஆண்கள் என்றாலே ஒருவித எரிச்சல் கலந்த வெறுப்புதான்.
அதனாலே அவளின் சித்தப்பா சண்முகத்திடன் கூட அவள் இதுநாள் வரை இரண்டு நிமிடங்களுக்கு மேல் நின்று பேசியது கிடையாது.
மார்டன் நிறைந்த டூ.கே உலகில் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் என்று இதழினி தணித்திருந்தாள்.
அதேசமயம் சித்தி மற்றும் தாயாரின் இழப்பால் உடைந்து போயிருந்தவளை மெல்ல மெல்ல ஒன்று சேர்த்தது என்னவோ இசைதான். அந்த இசைமீதான ஆர்வத்தில் பரதமும் கற்றுகொண்டாள்.
அவளின் ஆசைகள் எதற்குமே மரகதாம்பாள் இதுநாள் வரை தடை போட்டதுகிடையாது.. தன் மகள்களை கவனிக்க தவறியதிற்கும் சேர்த்து இப்போது இதழினிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.
பள்ளி படிப்பை முடித்தவள், அடுத்து இசை மீதான ஆர்வத்தில் சென்னையிலேயே பெண்கள் மட்டும் பயிலும் இசைகல்லூரியில்வயலின் பிரிவில் சேர்ந்திருந்தாள்.
கல்லூரி நேரம் போக மீத நேரங்களில் அக்கம் பக்கம் உள்ள குழந்தைங்களுக்கு டியூசன் எடுப்பதும் ஆன்லைனில் பரதம் கற்றுகொடுப்பது என்று தன் படிப்பிற்கான செலவை கூட தானே பார்த்து கொண்டாள் இதழினி.
எல்லாம் நன்றாக போய்கொண்டிருந்த சமயத்தில்தான் வயது மூப்பு காரணமாக மரகதாம்பாள் இறந்து விட, இதழினிக்கு துணையாக இலக்கியா குடும்பம் அவளுடனே தங்கிவிட்டது.
மரகதாம்பாள் அருகில் இல்லையென்றாலும் அவர் சொல்லிசென்றது போலதான் அவளின் ஒவ்வொருநாட்களும் புலர்ந்தன.
ஆனால் ஆரண்யா அவளுக்கு அப்படியே எதிர்பதம்.
ஆரண்யாவிற்கும் அவளுக்கும்மூன்று வயதுதான் வித்தியாசம். அவள் இப்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறாள். அவளின் தம்பி ஹரண்-னோஎட்டாம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறான்.
காயத்ரி மந்திரத்தை சொல்லியவாறே மாடத்தை மூன்றுமுறை வலம் வந்து அதன் முன் மண்டியிட்டு வணங்கி துளசி தீர்த்தத்தை குடித்தவள் அதன் பின்னே தன் அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.




