அதீத கோவத்தோடே காரில் பரஞ்சோதி ஏற, “என்ன சார் சொல்றானுங்க..? ஒத்துக்கிட்டானுங்களா..? என்றான் காரில் அவனுக்காக காத்திருந்த அவனின் மேனேஜர் செல்வா.
விழிகள் நிறைய கோவத்துடன் ஒத்துக்கொள்ளவில்லை என்பது போல் தலையை இடவலமாக அசைத்த பரஞ்சோதி,
“ரொம்ப பேசிட்டானுங்க செல்வா.. நான் யாருன்னு அவனுங்களுக்கு காட்டியே ஆகணும்.. தூக்கி விட்ட அவனுங்கள நானே என் கையால இருந்த தடம் தெரியாத அளவுக்கு அழிக்கணும்.” என்றான் பற்களை கடித்தபடியே,
“இந்த ஒரு வார்த்தைகாகத்தான் சார் நானும் காத்துட்டு இருந்தேன். என் கிட்ட சொல்லிடீங்க இல்ல சார் இனி நான் பார்த்துகறேன்” என்று செல்வா சொன்ன போது கூட பரஞ்சோதியால் அமைதி கொள்ள முடியவில்லை.
காரணம் ரிஷப்நந்தனின் மரியாதையற்ற வார்த்தைகள் இன்னும் அவன் காதுக்குள் கேட்டுகொண்டே தான் இருந்தது.
அவனின் தரம் குறைந்த வார்த்தைகள் ஒருபக்கம் என்றால்.. தான் தூக்கிவிட்ட ஒருவன் தன்னையே எதிர்த்து நிற்பதைதான் பரஞ்சோதியால் ஜீரணித்துகொள்ளவே முடியவில்லை.
அதனாலே எல்லா மீட்டிங்கையும் கேன்சல் செய்ய சொன்னவன், நேராக காரை வீட்டிற்கு விட சொல்ல, வீட்டிற்கு வநத பரஞ்சோதியை வீட்டு வாசலிலேயே கைது செய்திருந்தது காவல்துறை.
தங்களை சுற்றி என்ன நடக்கிறது..? ஏன் இந்த அரெஸ்ட் என்று இருவருக்குமே விளங்கவில்லை.
பின் விஷயம் கேள்விபட்டு காவல் நிலையத்திற்கு வந்த பரஞ்சோதியின் வக்கீல் சொல்லிதான் தெரியும்
சற்றுமுன் ரிஷப்நந்தனிடம் பரஞ்சோதி பேசிய அனைத்தும் இணையத்தில் வெளியாகி இருப்பது.
ஆம்.. இந்த மாதிரியான ஒரு ஆதரத்திற்காகத்தானே ரிஷப் நந்தன் இத்தனை நாட்கள் காத்து கொண்டிருந்தது.
எப்போது கவின் அவனுக்கு எதிரில் சென்று அமர்ந்தானோ, அப்போதே ரிஷப் முன்பே சொல்லியிருந்தது போல் தன் போனிலிருந்த கேமராவை ஆன் செய்துவிட்டுதான் கவின் பேசவே ஆரம்பித்தான்.
சம்மந்தபட்ட பரஞ்சோதி தங்களை தேடி வர வேண்டும் என்பதற்காகதான் அன்று செல்வா-வை ரிஷப் நந்தன் விரட்டியடித்தது கூட.
அவர்கள் நினைத்தது போலவே பரஞ்சோதியும் அவர்களை தேடிகொண்டு வந்ததோடு தன் வாயாலே அனைத்து உண்மைகளையும் சொல்ல, அனைத்தையும் கவினும் ரெக்கார்ட் செய்திருந்தான்.
கையிலிருக்கும் ஆதாரத்தை எங்கே காவல்துறையிடம் கொடுத்தால் நிச்சயம் சட்டத்தில் இருக்கும் ஓட்டையையும், தன் பண பலத்தையும் வைத்து அவனும், அவன் சம்மந்தபட்டவர்களும் வெளிவந்துவிடுவார்கள் என்று நினைத்த ரிஷப், அதை மக்கள் பார்வைக்கு கொண்டு செல்லும் பொருட்டே அந்த வீடியோவை இணையத்தில் பதிவிட்டான்.
அவர்கள் நினைத்தது போலவே அந்த வீடியோ மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பரஞ்சோதியின் உண்மை முகமும் வெளிச்சத்திற்கு வர, அதன் பின் காவல்துறையே முன் வந்து கேஸ் ஃபைல் செய்ததோடு அவனையும், அவனுக்கு துணை நின்றவர்களையும் கைது செய்தது.
ஒரே நாளில் தன் ஒட்டு மொத்த சாம்ராஜத்தையும் அழித்த அந்த இருவர் மீதும் பரஞ்சோதி கொலைவெறி தாக்கதலோடு இருக்க, அவன் கைதை நியூஸ்-ல் பார்த்த கவினோ சந்தோஷத்தில் ரிஷப் நந்தனை கட்டிகொண்டான்.
அத்தோடு பரஞ்சோதியின் வசம் இருந்த அனாதை குழந்தைகள் அனைவரை பாதுக்காப்பாக அரசு காப்பத்தில் ஒப்படைக்கபட, அதையெல்லாம் நியூஸ் வாயிலாக பார்த்து கொண்டிருந்த இருவருமே அறியவில்லை இந்த அத்தியாயம் இத்தோடு முடியபோவதில்லை என்று.
இதில் பரஞ்சோதியின் உண்மை முகத்தை வெளிஉலகத்துக்கு கொண்டு வந்த இருவரையும் அவர்கள் இரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட, பொதுமக்களும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இதில் திரைப்பிரபலங்கள் பலர் போன் செய்தே அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க, சமூக ஊடகங்கள் முழுமையும் அவர்கள் இருவர் பற்றிய செய்திதான் தீயாய் பரவிகொண்டிருந்தது.
“இப்போ சிஸ்டர்-க்கு உன் மேல நல்ல அபிப்ராயம் வந்திருக்கும் இல்ல டார்லிங்..?” என்று கேட்ட கவினை பார்த்து,
“வந்து இருக்கும்னு நினைக்கிற…?” என்று பதில் கேள்வி கேட்ட ரிஷப், “ம்… அதையும் செக் பண்ணி பார்த்துடுவோம்..” என்றவாறே அவளுக்கு அழைப்பதற்காக போனை கையில் எடுத்தான்.
அவன் கையிலிருந்த போனை சட்டென்று பிடுங்கி கொண்ட கவினோ, “நீ போன் பண்ணாத டார்லிங்..?” என்க, அவனோ ஏன் என்பது போல் அவனை பார்த்தான்.
“என் மேல இப்போ உனக்கு நல்ல அபிப்ராயம் வந்துடுச்சான்னு நீயே கேட்டகூடாது டார்லிங்.. அவங்களா சொல்லணும்” என்றவனை புருவம் சுருக்கி பார்த்தவன்,
“இன்கேஸ் அவளுக்கு விஷயம் தெரியாம கூட இருக்கலாம் இல்லையா..?” என்றான்.
“ஐய்யோ டார்லிங்… இன்னைக்கு ட்ரெண்டிங்கே நாம தான்.. என் கணிப்பு படி பார்த்தா இந்நேரம் இந்த விஷயம் சிஸ்டர் காதுக்கும் போய் சேர்ந்திருக்கும். ஸோ.. இந்த நியூஸ் கேள்விபட்டு சிஸ்டருக்கு உன் மேல நல்ல அபிப்பிராயம் வந்திருந்தா கண்டிப்பா அவங்களே போன் பண்ணி உனக்கு விஷ் பண்ணுவாங்க.” என்று கவின் சொல்ல,
“யாரு அவளா.. அவ ஒரு மடுமுழுங்கி டா… சொல்லாம கூட இருப்பா..” என்றான் என்னவோ அவளை நன்கு அறிந்தவன் போல.
ஆனால் கவினோ “டார்லிங்.. உனக்கு பொண்ணுங்க சைக்காலஜியே தெரியமாட்டிங்குது. பொண்ணுங்க எப்பவுமே ஒரு எமோஷ்னல் பேக்கேஜ். ஸோ கோவம், அழுகை, காதல், பிடித்தம் எதுவா இருந்தாலும் அத சம்மந்தபட்டவங்க கிட்ட வெளிப்படையா காட்டியே தீருவாங்க” என்று பெண்ணியத்தில் முதுகலை பட்டம் பெற்றவன் போல் கவின் சொல்ல,
“ஓ..” என்று புருவமத்தியை உயர்த்திய ரிஷப்,
“ஸோ அவளே போன் பண்ணுவான்னு சொல்ற..?” என்று கவினை பார்த்து கேட்க, அவனோ ஆமாம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டிவைத்தான்.
பின் கீழ் அதரங்களை கடித்தப்படி சில கணங்கள் அமைதிகாத்த ரிஷப், “இன்கேஸ் அவ போன் பண்ணவே இல்லனா..?” என்றவன் இப்போது கேள்வியாய் கவினை பார்க்க,
கவினோ இடவலமாக தலையை அசைத்தபடி “உன் நிலமை ரொம்ப கஷ்டம்” என்றதோடு உதட்டையும் பிதுக்க, அதன் பின் ஏன் ரிஷப் நந்தனுக்கு வேலை ஓடப்போகிறது.
அவள் போன் செய்வாளா..? மாட்டாளா..? என்று நொடிக்கொருதரம் போனையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு மதிய உணவு கூட உள்ளே இறங்கவில்லை.
யார் அழைத்தாலும் அவள் தான் அழைக்கிறாளோ என்று ஓடிச்சென்று அவன் எடுக்க, கவினுக்கோ அவனை இப்படி பார்க்க ஒரு பக்கம் பாவமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சிரிப்பாகவும் இருந்தது.
“ஏய் இதழினி அன்னைக்கு எங்க தாதா-வ பத்தி நீ என்னலாம் சொன்ன.. இன்னைக்கு எங்க தாதா பண்ணியிருக்கற வேலை-அ பார்த்தியா.... இது தாண்டி எங்க தாதா மனசு…. குழந்தைங்களுக்காக யோசிக்கற குழந்தை மனசு..” என்று சொல்லியவாறே தன் செல்போனில் அவர்கள் குறித்த செய்தியை இதழினியிடம் காட்டினாள் தாரிகா..
“இப்போ புரிஞ்சிகிட்டியா.. எங்க தாதா-வ பத்தி.. ? அடுத்தவங்களுக்கு நல்லது பண்றதுல எங்க தாதா அன்னை தெரசாவுக்கே டஃப் கொடுப்பாபுல..” என்று தாரிகா வேறு அவனை தலையில் தூக்கி வைத்து ஆட,
விருப்பமே இல்லமால் அந்த செய்தியை பார்த்தவள் மூளையில் ஏதோ ஒரு மின்னல் வெட்ட, ரெஸ்ட் ரூம் செல்வதாக தாரிகாவிடம் பொய் சொல்லிவிட்டு யாரும் அற்ற இடத்திற்கு சென்று அவனுக்குதான் போன் செய்தாள் அவள்.
வெகுநேரமாகவே அவள் அழைப்பை எதிர்பார்த்திருந்தவனுக்கு, திரையில் அவள் பெயரை பார்த்தமாத்திரத்திலேயே உள்ளுக்குள் அப்படியொரு சந்தோஷம்.
“டார்லிங் இதழ்..” என்று சந்தோஷத்தில் கவினை கட்டிக்கொண்டு குதித்தவன், அதன் பின்னே அவள் அழைப்பை ஏற்று,
“சொல்லு இதழ்” என்றான் சந்தோஷம் மிகுந்த குரலில்.
அவனின் இதழ் என்ற அழைப்பை கேட்டமாத்திரத்திலேயே இதழினியின் முகம் மாறித்தான் போனது.
“இவன் வேற இதழ் இதழ்.. உயிர வாங்குறான்..” என்று உள்ளுக்குள் அவனை கடிந்து கொண்டவள்,
“சார்… இப்பதான் உங்கள பத்தி நியூஸ் பார்த்தேன்..” என்றவள் அவன் குறித்து சொல்ல ஆரம்பித்த உடனே போனை ஸ்பீக்கரில் போட்டான் கவினுக்கும் கேட்கும் படி.
“செம்ம சார்… தெரிஞ்சவங்களுக்கு உதவி பண்ணவே யோசிக்கற காலத்துல.. முன்ன பின்ன தெரியாத அந்த குழந்தைங்களுக்காக எவ்வளோ பெரிய உதவி பண்ணியிருக்கீங்க… அப்படியே எனக்கு மெய் சிலிர்த்துடுச்சி சார்.” என்று அவனை அவள் புகழ புகழ ரிஷப் நந்தனுக்குதான் கால்கள் தரையில் நிற்கவே இல்லை.
“இப்ப உள்ள யங்கஸ்டர்-ஸ் எல்லாருக்குமே நீங்க ஒரு ரோல் மாடல் சார். உங்க சேவை இந்த சமுதாயத்துக்கு ரொம்ப தேவை சார்” என்று இன்னும் அவனை அவள் ஏற்றி சொல்ல, ரிஷப் நந்தன்னுகோ வாயெல்லாம் பல்தான்.
இதில் கவின் வேறு இரு கட்டைவிரலையும் காட்டி அவனுக்கு வாழ்த்து சொல்ல, ரிஷப் தான் சந்தோஷத்தில் திக்கு முக்காடி போனான்.
“அப்புறம் சார்..” என்று இழுத்தவள், “நீங்க இந்த குழந்தைங்களுக்கு உதவி பண்ண மாதிரியே இன்னும் ஒரு பத்து குழந்தைங்களுக்கு உதவி பண்ணனும்.” என்றவள் நிறுத்த,
“அதென்ன பத்து குழந்தைங்க..?” என்று திருப்பி அவளையே கேட்டவன், பின் “ஓ உனக்கு தெரிஞ்ச குழந்தைங்களா இதழ்..? என்ன பிரச்சனைன்னு சொல்லு.. கண்டிப்பா நான் ஹெல்ப் பண்றேன்” என்றான் பெருமிதத்தோடு.
பதிலுக்கு “நீ தாண்டா பிரச்சனையே” என்று சொல்ல துடித்த நாவை சிரமப்பட்டு அடக்கிகொண்டவள்,
“ஆக்ச்சுவலி சார்… அவங்க இருபது பேரும் என்கிட்ட ஆன்லைன்-ல பரதம் கத்துக்கிறவங்கதான் சார்.” என்க, மறுமுனையிலிருந்தவனோ
“அதுல என்ன ப்ராப்ளம்..?” என்றான் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு.
“அந்த ஆன்லைன் கிளாஸ்தான் சார் பிராப்ளம். மொபைல் இல்லாம என்னால எப்படி சார் அவங்களுக்கு கிளாஸ் எடுக்க முடியும்..? நெக்ஸ்ட் மந்த் அவங்களுக்கு அரங்கேற்றம் வேற இருக்கு சார். இந்தமாதிரியான நேரத்துல கிளாஸ் கட் ஆனா அது அந்த குழந்தைகளுதன ரொம்ப கஷ்டமாகிடும்..” என்று ஒரு வழியாக தான் சொல்லவந்ததை அவள் சொல்லி முடிக்க, இருவருக்குமே அப்போதுதான் புரிந்தது அவளின் திடீர் புகழ்ச்சிக்கு பின்னால் இருந்த காரணம் என்ன வென்று.
தாரிகா காட்டிய செய்தியை படித்தவளுக்கு அவன் மீது நல்ல அபிப்பிராயம் வந்ததோ இல்லையோ.. தன் போனை அவனிடமிருந்து வாங்குவதற்கான யோசனைதான் வந்தது.
குழந்தைகளுக்காக உதவி செய்திருப்பவனிடம் அந்த குழந்தைங்களையே காரணம் காட்டி எப்படியாவது தன் போனை வாங்கிவிடலாம் என்று எண்ணிதான் அவள் அவனுக்கு அழைத்ததே தவிர அவன் செய்த செயலுக்கு தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதற்கு அல்ல.
அவளின் தந்திரத்தை எண்ணி, “குள்ளச்சி” என்று சத்தமில்லாமல் வாய்க்குள் ரிஷப் நந்தன் முனுமுனுத்துகொள்ள,
அவனின் நிலமையை பார்த்த கவினோ சத்தம்போட்டே சிரித்துவிட்டான்.
“சிரிச்ச சாவடிச்சிடுவேன்” என்று ஆள்காட்டி விரலை நீட்டி ரிஷப் அவனை எச்சரித்த போது கூட கவினால் தன் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை.
எதுவும் பேசாமல் அவன் அமைதியாகவே இருக்க இதழினி தான் “சார்… சார்..” என்றாள்.
இதற்குமேல் அவள் பேசுவதை கவின் கேட்டால் அவ்வளவுதான் என்று நினைத்தவன், ஸ்பீக்கரை ஆஃப் செய்து காதில் வைத்து “ம்.. சொல்லு..” என்றான் இஷ்டமே இல்லாத குரலில்.
“சார்… நான் சொன்னதெல்லாம் உங்களுக்கு கேட்டுச்சா சார்..?” என்றவளிடம்,
“ஆ… கேட்டுச்சி.. கேட்டுச்சி.. நீ என்ன கேட்க வரன்னும் தெளிவா கேட்டுச்சி” என்றான் ரிஷப்.
அவன் புரிந்துகொண்டதை நினைத்து “அப்பாடா..” என்று நெஞ்சில் கை வைத்து நிம்மதி பெருமூச்சி விட்டவளுக்கு எப்படியும் தன் மொபைல்-ஐ கொடுத்துவிடுவான் என்றுதான் தோன்றியது.
“அதேதான் சார்…” என்று சந்தோஷமிகுதியில் சொன்னவள், “நிஜமாலுமே நீங்க பயங்கர ஷார்ப் சார்…” என்று மீண்டும் ஒரு பிட் போட,
“ஆஹான்… “ என்றான் அவன்.
“நீங்க எதுக்கும் வொரி பண்ணாதீங்க சார்… உங்க போன்-அ கண்டுபிடிச்சி கொடுக்கவேண்டியது என்னோட பொறுப்பு சார்.” என்று நம்பிக்கை மிகுந்த குரலில் அவள் சொல்ல,
அவனோ தன் கையிலிருந்த தன்னுடைய போனை பார்த்து மெலிதாக சிரித்துகொண்டான் ‘என் கிட்ட இருக்கற போன்-அ நீ எங்க போய் கண்டுபிடிப்ப’ என்பது போல்.
“சார்… அப்போ நான் எப்போ வந்து என் போன்-அ வாங்கிகட்டும்..?” என்றாள் இப்போது பவ்யமான குரலில் இதழினி.
“அவ்வளோ அவசரம்..” உள்ளுக்குள் சொல்லிக்கொண்டவன்,
“எத்தனை மணிக்கு ஆன்லைன் கிளாஸ் இதழ்…?” என்க,
அவளோ “நைட் எயிட் டூ நயன் சார்” என்றாள்.
அவள் கூறியதை கேட்டு “ஓ…” என்று இழுத்தவன், “அந்த டைம்ல நான் ஸ்டுடியோலதான் இருப்பேன்.. லொக்கேஷன் செண்ட் பண்றேன்… கிளாஸ்-அ நீ இங்க வந்தே எடு. எனக்கு நோ பிராப்ளம்” என்றவன் கூலாக சொல்ல,
அவளோ “சார்…” என்றாள் அதிர்ச்சியாய்.
அவனிடம் இப்படி ஒரு பதிலை அவள் சற்றும் எதிர்ப்பார்க்க வில்லை.
“ஐய்யோ சார்.. நான் எப்படி அங்க..? அதுவும் நைட் டைம்-ல… வீட்ல விடமாட்டாங்க சார்..” என்றவள் பதற்றத்துடனே சொல்ல, அவனுக்கோ அவளின் பதற்றத்தை பார்த்து சிரிப்புதான் வந்தது.
இருந்தும் அதை மறைத்து கொண்டு, “குழந்தைகளோட அரங்கேற்றம்தான் நமக்கு முக்கியம் இதழ்..” என்று அவள் வார்த்தையே அவளுக்கு திருப்பி கொடுக்க அவளுக்குதான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“ஸோ… லேட் பண்ணாம வந்துடு இதழ்” என்றவன் அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் போனையும் கட் செய்திருக்க,
பாவம் இதழினிதான் செய்வதறியாது விழிபிதுங்கி போய் நின்றாள்.
தாரிகா காட்டிய செய்தியை படித்தவள் இதை ஒரு சாக்காக வைத்து அவனை புகழ்ந்து பேசி எப்படியாவது அவனிடம் இருக்கும் தன் போனை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்தாள்.
ஆனால் அவனோ சற்றும் அவள் எதிர்பார்க்காவண்ணம் அவள் முகத்தில் நாமபட்டையை சாற்றியிருந்தான்.
“ச்சீ.. இப்படியும் ஒரு மனஷன் இருப்பானா..? பசங்களுக்கு கிளாஸ் எடுக்கணும்னு சொல்றேன்.. அங்க வந்து எடுன்னு கூலா சொல்றான்.. நான் எப்படி அந்த நேரத்துல அங்க போய் எடுக்கறது..? என்னன்னு வீட்ல சொல்லிட்டு கிளம்புவேன்..?” என்று தலையை பிய்த்துகொண்டவளுக்கு மொத்த கோவமும் இப்போது அவன் புறம் தான் திரும்பியிருந்தது.
“டேய் காட்டு பயலே.. என்னைக்கு உன்ன பார்த்தேனோ அன்னைக்கு புடிச்சிது எனக்கு பீடை.. அவன் மூஞ்சயும் முகறகட்டையையும் பாரு.. “ என்று மனதிற்குள் அவனை திட்டிகொண்டே தன் இருக்கையில் சென்று அவள் அமர,
தாரிகாவோ மீண்டும் அவன் புகழை அவளிடம் பாட ஆரம்பித்திருந்தாள்.
ஆனால் அதையெல்லாம் கேட்கும் மனநிலையில்தான் இதழினி இல்லை.
ஏனெனில் உள்ளுக்குள் அவன் மீது அவளுக்குள் அப்படியொரு கோவம்.
ஒரு கட்டத்தில் அவளின் பொறுமையும் காலாவதியாகி விட,
“கொஞ்சம் நிறுத்துறீயா..? என்ன பெரிய தாதா தாதா-ன்னு… தலையில் தூக்கி வச்சி கொண்டாடிட்டு இருக்க..? அவன் சுயரூபம் தெரியாம பேசிட்டு இருக்காத.. பத்து குழந்தைங்களுக்கு ஹெல்ப் பண்ண மனசு இல்லாதவன் இத்தனை குழந்தங்களுக்கு ஹெல்ப் பண்ணியிருப்பான்னு நினைக்கிறீயா..? இதெல்லாம் காசு கொடுத்து அவனுக்கு அவனே பண்ணியிருக்கற மாட்க்கெட்டிங் ஆட்.. புரியுதா..?” என்றவள் விழிகளை உருட்டி கோவமாய் கேட்க,
தாரிகாவிற்கோ அவளை இப்படி பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
புரிந்தது என்பது போல் தலையை மட்டும் ஆட்டியவள், பின் தயக்கத்துடனே “யார் அந்த பத்து குழந்தைங்க இதழினி.?” என்றாள் கேள்வியாய் அவளை பார்த்து.
அவள் அப்படி கேட்டபின் தான் இதழினிக்கே புரிந்தது கோவத்தில் தன்னையும் மீறிகொண்டு தான் உளறியிருப்பது.
“ஐய்யோ.. இதழினி முதல்ல உன் வாய்க்கு கேட்-அ போடு… ஏற்கனவே ஒரு தடவ இப்படி உளறி நீ அவன்கிட்ட வாங்கிகட்டிகிட்டது போதாதா..?” என்று தனக்குத்தானே சொல்லிகொண்டவள்,
“என்ன பத்து குழந்தைங்க..?” என்று ஒன்றும் தெரியாததுபோல் திருப்பி அவளையே கேட்டவள்,
“உனக்கென்ன காதும் போச்சா…? வீட்டுக்கு போனதும் நல்ல டாக்டர்-அ போய் பாரு.. நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வர்றேன்” என்று மேற்கொண்டு அவள் கேள்வி கேட்கா வண்ணம் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
“என்ன எனக்கு காது போச்சா..? இவ சொல்லிதன நான் கேட்டேன்…” என்று தனக்குத்தானே கேட்டுகொண்ட தாரிகாவிற்கு விளங்கவில்லை அவள் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்று.
அத்தோடு “ஆமா.. இப்பதன இவ ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தா..? அதுக்குள்ள மறுபடியுமா..?” என்று நினைத்தவள், “ஏய் இதழினி..” என்று சத்தம் போட்டு அழைத்த போதும் இதழினி அவளை திருப்பி பார்க்காமல் ஓடி மறைந்திருந்தாள்.
சொன்னது போலவே லொக்கேஷனை அவளுக்கு வாட்ஸ்அப்-பில் அனுப்பியவன், நேராக கவினிடம் சென்று அவன் தலையில் நறுக்கென்று ஒன்று வைக்க,
“ஆ…. வொய் டார்லிங்..?” என்றான் தலையை தடவிகொடுத்தபடியே கவின்.
“என்னடா சொன்ன..? பொண்ணுங்க எதுவா இருந்தாலும் சம்மந்தபட்டவங்க கிட்ட வெளிப்படையா காட்டுவாங்களா..?” என்று அவன் சொன்னதையே திருப்பி அவனிடம் கேட்டவன்,
“அவ புகழறன்ற பேர்ல என்கிட்ட இருக்கற அவ போன்-அ வாங்க பார்க்குறா.. இன்னொரு தடவ ஏதாவது சொல்றன்னு வாய தொறந்த உன் வாய்லே மிதிப்பேன்” என்று அவள் மீது காட்ட முடியாத கோவத்தையும் சேர்த்து கவின் மீது காட்டியவன்,
முன்னுச்சியை கோதிவிட்டவாறே, “என்ன பொண்ணுடா இவ..? எனக்கே டஃப் கொடுக்கறா..” என்று புலம்பியவனுக்கு மணி எப்போது எட்டாகும் என்றிருந்தது.
நொடிக்கொருதரம் செல்போனில் நேரத்தை பார்த்து கொண்டிருந்தவள், அன்று டியூஷனை கூட சரியாக கவனிக்கவில்லை.
ஏதாவது ஒரு மேஜிக் நடந்துவிடாதா என்று அவள் இருக்க நேரமும் ஏழரையை நெருங்கி கொண்டிருக்க, அவளுக்கோ உள்ளுக்குள் ஒருவித படபடப்பு.
கண்களை மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சி எடுத்துகொண்டவள் பின் ஒரு முடிவெடுத்தவளாய் டியூஷனுக்கு வந்திருந்த பசங்களை கிளம்ப சொல்லிவிட்டு, அவளும் உடையை மாற்றிகொண்டு தன் பேக்-கோடு வெளியில் வந்தாள்.




