காரை ஓட்டியவாறே அவனை பார்த்தாள். வார்த்தைக்கு வார்த்தை சிரித்து பேசிகொண்டிருந்தவன் இப்போது சாலையை வெறித்து பார்த்தவண்ணம் அமைதியாய் அமர்ந்திருக்க, அவனின் அமைதி அவளைத்தான் அதிகம் பாதித்தது.
அது ஏன் என்றுதான் அவளுக்கு தெரியவில்லை. மனதை உறுத்தியது என்னவோ தெரிந்தே அவன் மனதை நோகடித்து விட்டது போல்.
அதனால் இம்முறை அவளே பேச்சை ஆரம்பித்தாள் அவனை சகஜநிலைக்கு கொண்டு வரும் பொருட்டு.
“இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்லன்னா… முதல்லே சொல்லி தடுத்திருக்கலாமே.. இப்டி எல்லா ஏற்பாடும் பண்ணதுக்கப்புறம் வேண்டாம்னு போறது தப்பில்லையா..? அந்த பொண்ணு பாவம் இல்லையா..?” என்றாள்.
அவளின் கேள்வியால் அவள் புறம் திரும்பியவன், “யாரு அவ பாவமா..?” என்று கேட்டு மெலிதாய் சிரித்தவன், “ஒன் செகண்ட்ங்க..” என்று சொல்லிவிட்டு, தன் செல்போனை எடுத்து யாருக்கோ அழைத்தான்.
எங்கே தான் செய்த வேலைக்கு இனி தன்னிடம் பேசவே மாட்டானோ என்று உள்ளுக்குள் வருந்திகொண்டிருந்தவளுக்கு அவன் மீண்டும் சகஜமாக பேசியதே மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
முதல் ரிங்கிலேயே மறுமுனையில் அவன் அழைப்பு ஏற்க பட்டிருந்ததோடு, “அண்ணா.. ரொம்ப தேங்க்ஸ்-ண்ணா… சொன்ன மாதிரியே நீங்க எங்கள சேர்த்து வச்சிட்டீங்க.. அப்பா என் மாமாவயே கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிட்டாரு. ரொம்ப தேங்கஸ்-ண்ணா.. எனக்காக ரொம்ப ரிஸ்க் எடுத்து ஹெல்ப் பண்ணியிருக்கீங்க..” என்று அந்த மணப்பெண் காயத்ரியே சொல்ல, அதை காதில் வாங்கியவளுக்கு அப்போதுதான் புரிந்தது அவன் திருமணம் பிடிக்காமல் ஊரை விட்டு போகவில்லை. அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் ஊரை விட்டு போகிறான் என்று.
தொழில்துறை அமைச்சரான அதியமான் தன் ஒரே மகளுக்கு சோமசுந்தரம் மற்றும் மீனாட்சி தம்பதியினரின் ஒரே மகனான மீராநந்தனைதான் திருமணத்திற்கு பேசி முடித்திருந்தார்.
சோமசுந்தரம் பிஸ்னஸ் உலகில் கொடிகட்டி பறந்துகொண்டிருப்பவர்.
சாதரண டெக்டைல்ஸ் பிஸ்னஸ் என்று ஆரம்பித்து, இன்று நூற்றுக்கணக்கான பிஸ்னஸ்களை திறம்பட நடத்துகிறார் என்றால் அதற்கு காரணம் அவரின் சாணக்கிய மூளையும் கடின உழைப்பும் தான்.
அதனாலே பிஸ்னஸ் உலகில் சாணக்கியன் என்ற பெயரையும் அவர் பெற்றிருந்தார்.
அத்தோடு அவரின் பிஸ்னஸ் தமிழ்நாட்டிற்கும் பல வகையில் இலாபம் ஈட்டிதர, அரசியல் வட்டாரத்திலும் சோமசுந்தரத்திற்கு அதீத செல்வாக்கு உண்டு.
அதனால் தானே தொழில்துறை அமைச்சராக இருக்கும் அதியமானே அவரை நேரில் சந்தித்து தன் மகளுக்கு அவர் மகனை கேட்டது.
ஆனால் இந்த திருமணத்தில் மீராநந்தனுக்குதான் சற்றும் விருப்பமில்லை.
ஏதோ பெற்றோரின் வற்புறுத்தலுக்காக மட்டும்தான் அன்று அதியமான் வீட்டிற்கு அவர்களுடன் அவன் சென்றது.
அதுவும் தனக்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று சம்மந்தபட்ட பெண்ணிடமே சொல்லிவிட வேண்டுமென்ற முடிவோடு தான் சென்றான்.
ஆனால் தனக்கு இந்த திருமணத்தில் முழுசம்மதம் என்று அவன் சொன்னபோது அவன் பெற்றோர்கள் தான் அதிகம் அதிர்ந்து போயினர்.
மகனுக்கு ஒரு திருமணத்தை செய்து பார்க்க ஆசைப்பட்ட மீனாட்சிக்கு அவன் சம்மதம் அதீத சந்தோஷத்தை தர, சோமசுந்தரத்திற்குதான் அவனின் இந்த திடீர் சம்மதத்தை ஏற்றுகொள்ளவே முடியவில்லை.
காரணம் அவர்தானே அதையும் இதையும் சொல்லி அவனை கட்டாயபடுத்தி அங்கு அழைத்து சென்றது.
அதனால் அது குறித்து அவனிடமே அவர் கேட்டபோதுதான் அவன் சம்மதத்திற்கான காரணம் என்னவென்று புரிந்தது.
பேசி ஒருவரையொருவர் புரிந்து கொள்ளட்டும் என்று இருவரையும் தனியாக பேச அனுப்பிய போதுதான், அமைச்சரின் மகள் தன் முறை மாமனை காதலிப்பதாகவும், அவர்கள் வசதிவாய்ப்பில் பின் தங்கியிருப்பதால் திருமணம் செய்துவைக்க அமைச்சர் ஒத்துகொள்ளவில்லையென்றும் சொன்னவள், அவனிடம் உதவி வேண்டியும் நிற்க, மீராநந்தனால் மறுக்க முடியவில்லை.
அதனாலே அவன் இந்த திருமணத்திற்கு சம்மதித்தது கூட.
அவன் மூலமாக அனைத்தையும் அறிந்த சோமசுந்தரத்திற்கோ அதிர்ச்சியில் ஒரு கணம் இதயம் நின்று துடிக்கவே செய்தது.
“நந்தன் .. நீ நினைக்கிற மாதிரி அதியமான் லேசு பட்டவன் இல்ல. அவன்-அ எதிர்த்து எலக்ஷ்ன்ல நின்னவனையே கண்டம் துண்டமா வெட்டிபோட்டவன். இதெல்லாம் அவனுக்கு தெரிஞ்சிது பை ஒன் கெட் ஒன் ஆஃபர் மாதிரி உன்னையும் என்னையும் போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருப்பான்” என்றவர் பயந்த குரலில் சொன்னபோது,
“டேட்… இப்படி நீங்க பயப்படுறத பார்த்தா.. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு டேட்.” என்று முகத்தை அஷ்டகோணலாய் வைத்துகொண்டு சொன்னவன்,
“உங்க பவர் என்னன்னு உங்களுக்கே தெரியல டேட். நீங்க தமிழ்நாட்டுக்கு எவ்வளோ முக்கியம்.. உங்களால எவ்வளோ பிராஃபிட் வருது. இது எல்லாம் தெரிஞ்சி கணக்கு போட்டுதான் அந்த அதியமான் உங்ககிட்ட சம்மந்தம் பேசுனதே. ஸோ.. அவனால உங்க மேல கை வைக்க முடியுமா..? இல்ல வச்சவன நம்ம கவர்மண்ட் வேடிக்கை பார்த்துகிட்டுதான் இருக்குமா..?” என்றவனின் கேள்வியும் அவருக்கு நியாயமாகத்தான் பட்டது.
இருந்தும் அந்த பெண்ணின் காதலை சேர்த்து வைக்க போய் இவன் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்வானோ என்ற பயம் தான் இப்போது அவருக்கு.
என்ன இருந்தாலும் அவனுக்கு அவர் தந்தையாயிற்றே. என்னதான் தானே அனைத்தையும் பார்த்துகொள்கிறேன் என்று அவன் சொன்னாலும் ஒரு தந்தையாக அவரால் அமைதிகொள்ள முடியவில்லை.
“நான் வேணும்னா அதியமான் கிட்ட பேசி பார்க்கவாடா..?” என்றவர் கேட்டபோது,
“டேட்… அந்த மாதிரிலாம் எதுவும் பண்ணிடாதீங்க.. நீங்க எதாவது பேச போய் அவன் அலார்ட் ஆகிட போறான். கல்யாண நாள் வர்ற வரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க” என்றவன் எச்சரிக்கும் குரலில் சொன்னபோது சரி என்பது போல் தலையை அசைத்தவர் பின் என்ன நினைத்தாரோ,
“சரிடா.. அதியமான் கிட்ட சொல்ல வேண்டாம். ஆனா உன் அம்மா கிட்ட சொல்லணும் இல்லையா.. அவ வேற மைக், மோளம் இல்லாம ஊருக்கே தண்டோரா போட்டுகிட்டு இருக்கா. அவகிட்ட இந்த கல்யாணம் நடக்காதுன்னு இப்பவே சொல்லிடறதுதான் பெட்டர்” என்றவர் சொல்லி முடித்ததுதான் தாமதம்,
“சரியாபோச்சி டேட். அம்மா கூட இத்தனை வருஷம் வாழ்ந்து இருக்கீங்களே தவிர நீங்க அம்மா-வ புரிஞ்சிக்கவே இல்ல” என்று கிடைத்த கேப்பில் அவன் சோமசுந்தரத்தை வார,
“டேய்.. நான் புரிஞ்சிகலையா..?” என்றவரின் வார்த்தைகளில் லேசாக கோவமும் எட்டிபார்க்கவே செய்தது.
“பின்ன என்ன டேட்.. அரிச்சந்திரனுக்கு அக்கா பொண்ணு மாதிரி அம்மா எல்லாத்தையும் அந்த அதியமான் கிட்ட போய் சொல்லவா..?” என்றவனின் கேள்வியும் அவருக்கு சரியென்றுதான் பட்டது.
காரணம் அவன் சொல்வது போல் தான் மீனாட்சியும் உண்மையை சொல்கிறேன் என்ற பெயரில் யாரிடம் சொல்கிறோம்.. என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் உளறிகொட்டிவிடுவார்.
பின் அவரின் இந்த செயலால் சோமசுந்தரம் தான் சம்மந்தபட்டவர்கள் முன்னிலையில் சமாளிக்க முடியாமல் திண்டாடுவார்.
ஆனால் அதற்காக மட்டும் பெற்றவளிடம் மறைப்பது சரியன்று தோன்ற,
“பாவம் நந்தன் அவ” என்றார் இப்போது சற்றே இரக்கம் தொணித்த குரலில்.
“டேட்.. அம்மா-வ விட இப்போ அந்த பசங்கதான் ரொம்ப பாவம். நாம தான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணியாகணும். ஏன்னா அதியமான்-அ நம்மள விட யாராலையும் எதிர்க்க முடியாது. நான் அவங்களுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கேன் டேட்.” என்று அவனும் அவர்களுக்கு உதவிதான் ஆவேன் என்பதில் பிடிவாதமாய் இருக்க அவரும் அவனை மேற்கொண்டு வற்புறுத்தவில்லை.
காரணம் அவனின் பிடிவாதத்தை பற்றி அவர் நன்கு அறிவார்.
பொதுவாகவே ஆண்குழந்தைகள் அம்மாவோடுதான் இணக்கம் என்பார்கள். ஆனால் மீராநந்தனோ சோமசுந்தரத்தோடுதான் அதிகம் இணக்கம்.
மகன் தந்தை என்ற உறவு முறையைதாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்கள் போலதான் பேசிக்கொள்வார்கள்.
அவரின் பிஸ்னசிற்கு நிறைய ஆலோசனைகள் கொடுப்பான். ஏன் அவனை பக்கத்தில் வைத்துகொண்டுதான் பிஸ்னஸ்பற்றிய முக்கிய முடிவுகளை சோமசுந்தரம் எடுப்பது கூட.
“மொத்த பிஸ்னசையும் நீயே பார்த்துகொள்” என்று அவரும் அவனிடம் எத்தனையோ முறை சொல்லிபார்த்துவிட்டார்தான்.
ஆனால் அவன்தான் முடியவே முடியாது என்று மறுத்ததோடு,
“டேட் என்னால இந்த பிரஷர்-அ லாம் தலையில தூக்கிகிட்டு சுத்த முடியாது. நான் இன்னும் கொஞ்ச நாள் லைஃப்-அ எஞ்சாய் பண்ணனும் ஆசைப்படுறேன்.” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவான்.
அதற்காக அப்பாவின் பெயரை சொல்லிகொண்டு, அவரின் காசில் ஊதாரித்தனமாக ஊர் சுற்றுபவனும் இல்லை அவன்.
ஏன் மேற்படிப்பை ஃபாரின் சென்று படிக்கபோனவன், தன் படிப்பு செலவிற்காக சோமசுந்தரத்திடமிருந்து ஒரு ரூபாய் கூட வாங்காமல் தனக்கான செலவுகள் அனைத்தையும் தானேதான் பார்த்துகொண்டான்.
பிஸ்னஸ் மேக்னட் சோமசுந்தரத்தின் மகன் என்ற அடையாளத்தை துறந்து அங்கு பார்ட்டைம் ஆக ஹோட்டலில் பணிபுரிந்தான், ஸ்டால் வைத்தான், பப்பில் டிர்ங்ஸ் சப்ளை செய்தான். இப்படியெல்லாம் வேலைசெய்து அதில் வரும் பணத்தை வைத்துதான் அவன் தன் மேற்படிப்பை முடித்தது கூட.
ஏன் அவன் சென்னை வந்தாலும் சரி.. அணிவகுத்து நிற்கும் ஆடம்பர கார்களை விடுத்து பஸ்-சில்தான் செல்வான். அது தான் அவனுக்கு பிடித்திருந்தது. சகமனிதர்களோடு சகமனிதனாக வாழ்வதைதான் அவன் விரும்பினான்.
பாகுபாடு இன்றி அனைவரிடமும் இயல்பாக பேசுவான். அவர்களையும் பேச வைத்துவிடுவான் என்பதாலே அவனுக்கு நட்பு பட்டாளம் அதிகம்.
அதிலும் உதவி என்று யாராவது அவன் முன் சென்று நின்றுவிட்டால் அவர்களின் தேவையை பூர்த்திசெய்யும் வரை ஓயவே மாட்டான்.
அவனுக்கு பிடித்தது போல் வாழ்வதை அவன் பெற்றோர்களும் இதுநாள் வரை தடுத்தது இல்லை.
அவன் ஒரு செல்வந்தனின் மகனாக வாழ்வதை விட ஒரு நல்ல மனிதாக அவன் வாழ்வதைத்தான் அவர்களும் விரும்பினர்.
பிரம்மமூகூர்த்தத்தில் திருமணம் என்பதால், திருமணம் நடக்க இரண்டு மணிநேரத்திற்கு முன்பாக, தான் மண்டபத்தை விட்டு கிளம்பி ஏர்போர்ட் சென்றுவிடுவதாக சொன்னவன், மேற்கொண்டு மொத்த பிளானையும் சொல்ல,
அதையெல்லாம் கேட்டு முடித்த சோமசுந்தரத்திற்கு சில இடங்களில் இடிக்கவே செய்தது.
“எல்லாம் ஓகேதான் நந்தன்… நீ அங்க இருந்து கிளம்புனதுக்கப்புறம். அதியமான் தன்னோட தங்கச்சி பையனுக்கு கல்யாணம் பண்ணிகொடுக்காம கல்யாணத்தையே நிறுத்திட்டா..” என்றவரின் கேள்விக்கு அப்படி நடக்க வாய்ப்பில்லை என்பதுபோல் சர்வ நிச்சயமாய் தலையை அசைத்தவன்,
“டேட் நான் அங்க இருந்து கிளம்புன ஒரு மணிநேரத்துலே அதியமான் சொந்தகாரங்க, அரசியல்வாதிங்க, சிம்.எம்-னு எல்லாரும் கல்யாணத்துக்கு வர ஆரம்பிச்சிடுவாங்க. அவங்கமுன்னாடி கண்டிப்பா அவன் கல்யாணத்த நிறுத்தமாட்டான். ஏன்னா நான் அதியமான்-அ அனலைஸ் பண்ணவரைக்கும் அவனுக்கு மானம், ரோஷம் அதிகம். ஸோ அத ஸ்பாயில் பண்றமாதிரி அவன் கல்யாணத்தலாம் நிறுத்தமாட்டான். முடிஞ்ச அளவு என்ன தேடுவான். முடியாத பட்சத்துல கண்டிப்பா வேற மாப்பிளை-அ அரேஞ்ச் பண்ணுவான்.” என்றான் அதியமானை நன்கு கணித்தவன் போல.
“சரி… நீ சொல்றமாதிரி நிறுத்தமாட்டான்னு வச்சிக்கோ.. ஒருவேளை வேற யாரையாவது அவன் மாப்பிளையா செலக்ட் பண்ணிட்டா..?” என்ற சோமசுந்தரத்தை பார்த்து ஒரு மார்க்கமாய் சிரித்தவன்,
“இவ்வளோ யோசிச்ச நான் இதுக்கும் யோசிச்சி இருக்கமாட்டனா டேட்..” என்று கேட்டு புருவ மத்தியை உயர்த்த, சோமசுந்தரமோ அப்படி என்ன செய்யபோகிறான் என்று ஆர்வமாக அவனை பார்த்தார்.
“டேட் நான் அங்க இருந்து கிளம்புன பத்துநிமிஷத்துலே காயத்ரி கை-அ கட் பண்ணிப்பா..” என்க,
“டேய்..” என்று அதிர்ந்தார் சோமசுந்தரம்.
“சில் டாட்… எல்லாம் ஆக்டிங்தான்.” என்று கூலாக சொன்னவன்,
“அவ கை-அ கட் பண்ணத பார்த்து கண்டிப்பா அதியமான் ஷாக் ஆகுவாரு. இந்த டைம்-ல தான் “அப்பா…. உங்களோட சந்தோஷத்துக்காகதன சின்னவயசுலேந்து மனசார காதலிச்ச மாமா-வ தூக்கிபோட்டுட்டு நீங்க காட்டுன பையன்-அ கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன். இப்போ பாருங்க மண்டபம் வரைக்கும் வந்து என் கல்யாணம் நின்னுடுச்சி.. இனி நான் எப்படி மத்தவங்க முகத்துல விழிப்பேன். நான் யாருக்காக இனி வாழணும். நான் சாகறதுதான் எல்லாருக்கும் நல்லது” என்று அந்த பெண்போலவே அழுகுரலில் அவன் பேசிகாட்ட, சோமசுந்தரமோ அவன் பர்ஃபார்மென்சை பார்த்து வாயில் கைவைத்து கொண்டார்.
“பெத்த பொண்ணு இரத்த வெள்ளத்துல சாகறன்னு சொல்லும் போது அதியமானுக்கு இருக்கற ஒரே ஆப்ஷன் என்ன டேட்…? பொண்ணு ஆசைபட்டவனோட அவள கல்யாணம் பண்ணிவைக்கறதுதன.” என்றவன் முடிக்க, அவனின் மொத்த பிளானையும் கேட்டு மலைத்துதான் போனார் சோமசுந்தரம்.
“ஒருவேளை காயம் பொய்யின்னு அதியமான் கண்டுபிடிச்சிட்டா..?” என்று மீண்டும் சோமசுந்தரம் கிடுக்கிபிடி கேள்வி கேட்க,
“அதெல்லாம் காயத்திரியோட டாக்டர் ஃப்ரண்ட் தீபன் பார்த்துப்பான் டேட்.. ஆம்புலன்ஸ் கூட ரெடி பண்ணிட்டோம்.” என்றவன் கூலாக சொல்ல
அவரோ “ஆம்புலன்ஸ் எதுக்குடா..?” என்றார் அதிர்ச்சியோடே.
“உங்களுக்கு அட்டாக் வந்த உடனே ஹாஸ்பிட்டல்-க்கு கூட்டிட்டு போக வேண்டாமா..?” என்றவனின் பதில் கேள்வி அவரை மேலும் குழப்பமடையதான் வைத்தது.
“எனக்கு ஏண்டா அட்டாக் வரபோகுது..?” என்று அவரும் சீரியசாக முகத்தை வைத்துகொண்டு கேட்க,
“என்ன கேள்வி டேட் இது…?” என்று கை நீட்டி அவரை பார்த்து கேட்டவன்,
“இரண்டு மணிநேரத்துல கல்யாணத்த வச்சிக்கிட்டு பையன் மண்டபத்தவிட்டு ஓடிப்போறான்.. நியாயமா பார்த்தா அந்த அதிர்ச்சியில பையனோட அப்பாவுக்கு அட்டாக் தன வரணும்.” என்று அவரை பார்த்து சிரித்துகொண்டே புருவமத்தியை உயர்த்தி கேட்டவன்,
“வந்துடும் தன..?” என்று சிரித்துகொண்டே கேட்க,
அவனின் டிராமாவில் தன்னையும் அவன் சேர்த்திருப்பது சோமசுந்தரத்திற்கு அப்போதுதான் விளங்கியது.
“டேய்.. நந்தன்… என்னையுமாடா..?” என்று விழிகள் விரிய ஆச்சரியத்தோடு அவர் கேட்டபோது,
“நீங்க இல்லாம எப்படி டேட்..” என்று கைகளை விரித்து சொன்னவன், “நான் பிளைட் ஏறி ஃபாரின் போய்டுவனாம். நீங்க இரண்டு பேரும் சமத்தா ஆம்புலன்ஸ்-ல ஏறி வீட்டுக்கு போய்டுவீங்களாம்” என்று அவன் சொன்ன தோணியில் அவருக்குமே சிரிப்பு வந்து விட்டது.
அவரின் சிரிப்பில் அவனும் இணைந்துகொள்ள, “என்ன சிரிப்பு சத்தமெல்லாம் ரொம்ப அதிகமா இருக்கு..?” என்று கேட்டவாறே இரண்டு ஷர்வானிகளோடு மீரா நந்தன் முன்னால் வந்து நின்றார் மீனாட்சி.
“இந்த இரண்டு ஷர்வானில உனக்கு எதுடா புடிச்சியிருக்கு..?” என்று முகம் நிறைய சந்தோஷத்தோடு கேட்டவர்,
“எனக்கு இந்த லைட் புளூதான் ரொம்ப புடிச்சியிருக்கு நந்தன். உனக்கும் இதுதான் ரொம்ப அழகா இருக்கும்” என்று தன்னுடைய அபிப்ராயத்தையும் சொல்ல,
இரண்டு ஷர்வானிகளையும் சிலகணங்கள் மாறி மாறி பார்த்திருந்தவனோ வெள்ளை நிற ஷர்வானியை எடுத்தான்.
“ஏண்டா எப்பப்பாரு வொயிட் கலர்ரையே சூஸ் பண்ற..?” என்று கோவமாக கேட்டவர்,
“டேய்… டேய்… இந்த கலர் உனக்கு ரொம்ப நல்லா இருக்கும் டா… போட்டோஸ்கு-கூட சூப்பரா இருக்கும்” என்று அவர் என்ன சொன்னபோதும் அவன் தன் முடிவை மாற்றிகொள்ளவே இல்லை.
“மாம் இது என்னோட மேரேஜ்.. எனக்கு பிடிச்சமாதிரிதான் எல்லாமே இருக்கணும்” என்று பிடிவாதமாய் அவன் சொல்லி விட அதற்கு மேல் அவரும் அவனை கட்டாயபடுத்தவில்லை.
“ம்.. பார்க்குறேன் டா… இந்த பிடிவாதம்-லாம் எத்தனை நாளைக்குன்னு.. இந்த கல்யாணம் மட்டும் நல்லா படியா முடிஞ்சி என் மருமக வீட்டுக்கு வரட்டும்.. அப்போ கவனிச்சிகிறேன் உன்ன” என்று விழிகளை உருட்டி சொல்லிவிட்டு மீனாட்சி அங்கிருந்து செல்ல,
அவர் சென்று மறையும் வரை காத்திருந்த இருவருமே நடக்காத திருமணம் பற்றி அவர் பேசிவிட்டு செல்வதை நினைத்து சத்தம் போட்டே சிரித்துவிட்டனர்.
“பாவம் டா உன் அம்மா..” என்று மீனாட்சி குறித்து வருத்தபட்டவரால் இப்போதுமே சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“நீ நாளைக்கு ஈவ்னிங் ஃப்ரீயா நந்தன்..?” என்றவரின் கேள்விக்கு, “ஏன் டேட்..?” என்று பதிலுக்கு அவன் கேள்வியெழுப்ப,
தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்ட சோமசுந்தரமோ, “நம்ம ஹை-கோர்ட் ஜட்ஜ் தாமதோரன் இருக்கான் இல்ல… அவன் நம்ம பேம்லி-அ நாளைக்கு டின்னர்க்கு இன்வைட் பண்ணியிருக்கான். அதான் போய்ட்டு வரலாமேன்னு கேட்டேன்.” என்றவர் இழுக்க,
“டேட்… எனக்கு அங்கிளோட பெண்ண-அ புடிக்கல” என்றான் அவர் இதற்காகதான் தன்னை அங்கு அழைக்கிறார் என்பதை கணித்து.
அவனின் பதிலால் அதிர்ந்து போனவர், “டேய் அதெப்படிடா.. பார்க்காமலே புடிக்கலன்னு சொல்லுவ..?” என்று கேட்டவர்,
“ஏண்டா நீ யாரையாவது லவ்-கீ பண்றியா..?” என்று அவனிடம் நேரிடையாகவே கேட்டுவிட,
அவரின் கேள்விக்கு சிரித்துகொண்டே இல்லை என்பது போல் தலையை அசைத்தவன், “இன்கேஸ் நான் லவ் பண்ணா அத முதல்ல உங்ககிட்டதான் சொல்வேன். ஓகே” என்று கட்டை விரலை உயர்த்திகாட்ட, அவனுக்கு தன் மீது இருக்கும் நம்பிக்கையை நினைத்து பூரித்துதான் போனார் சோமசுந்தரம்.
இருந்தும் “சேர்த்து வச்சிடுவன்னு அவ்வளோ நம்பிக்கையா… என் மேல..?” என்று கேட்டவர், வேண்டுமென்றே “ஒரு வேளை நானே உன் காதலுக்கு வில்லனா இருந்துட்டா..” என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டிகொண்டு தோரணையாக அவனை பார்த்து கேட்க, மீரா நந்தனோ சத்தம் போட்டே சிரித்துவிட்டான்.
அவன் சிரிப்பதை பார்த்தவருக்கோ ஒன்றுமே விளங்கவில்லை.
“டேய் இப்போ எதுக்குடா சிரிக்கிற..?” என்றவரை பார்த்தவனுக்கோ இப்போதும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
இருந்தும் ஒருவாறு கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியவன், “யாரு..? நீங்க வில்லனா..?” என்று கேட்டு மீண்டும் அவன் வெடித்து சிரிக்க, சோமசுந்தரத்திற்கோ அவன் சிரிப்பிற்கான காரணம் என்னவென்று இப்போதுதான் புரிந்தது.
சிரித்து சிரித்து அவன் கண்களில் கண்ணீர் வர, அதை துடைத்துவிட்டபடியே அவர் அருகில் சென்றவன், “டேட் உங்களுக்கு கில்லி முத்துபாண்டியன் கெட்டப்லாம் சுத்தமா செட் ஆகாது.. எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு பாடுற விஜயகாந்த் கேரக்டர்தான் செட் ஆகும். ஸோ காமெடி பண்ணாம போய் கல்யாண வேலை-அ பாருங்க” என்றவன் தன்னை முறைத்து பார்த்துகொண்டிருந்தவரின் கன்னத்தில் தட்டிகொடுத்துவிட்டும் செல்ல,
“இவனுக்கு நான் அப்பனா… இல்ல இவன் எனக்கு அப்பனா..?” என்றுதான் தோன்றியது சோமசுந்தரத்திற்கு.
என்ன தான் அவன் எந்த பிரச்சனையும் வராது என்று சொல்லியிருந்தாலும் திருமண நாள் நெருங்க நெருங்க சோமசுந்தரத்திற்குதான் ஒவ்வொருகணமும் நெருப்பின் மேல் நிற்பது போல் இருந்தது.
இதில் அந்த அதியமான் வேறு வார்த்தைக்கு வார்த்தை சம்மந்தி சம்மந்தி என்று அழைக்க, திருமணம் நின்றபின் சம்மந்தி என்று அழைத்த அதே வாயால் என்னவெல்லாம் சொல்லபோகிறானோ..? என்ற பயம் வேறு அவருக்கு.
ஆனால் சம்மந்தபட்டவனோ எந்தவித பயமும் பதற்றமும் இல்லாமல் திருமண வேலைகளை எஞ்சாய் செய்து கொண்டிருந்தான்.
அவன் எதிர்பார்த்து காத்திருந்த திருமண நாளும் வந்து சேர, இதில் சோமசுந்தரத்திற்குதான் வயிற்றில் புளியை கரைத்து கொண்டிருந்தது.
எல்லாமே சொன்னபடி சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் மாதேஷின் தாயார் பாத்ரூமில் வழுக்கி விழுந்திருக்க, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயத்தால், மீராநந்தனை அழைத்து செல்வதற்காக வேறொரு காரை அனுப்பியவன், அதை மீராநந்தனிடமும் தெரிவித்திருந்தான்.
சொன்ன நேரத்திற்கு மண்டபத்திலிருந்து மீராநந்தனும் வெளியேறி இருந்தான்.
எந்த இடத்தில் காரோடு அவன் காத்திருக்க சொல்லியிருந்தானோ அதே இடத்தில் அவள் காரை நிறுத்தியிருக்க, மாதேஷ்தான் தனக்காக கார் அனுப்பியிருக்கிறான் என்று நினைத்தவன், அவளிடம் எதுவும் கேட்காமல் காருக்குள் ஏறியிருந்தான்.
இதில் அவன் மண்டபத்திலிருந்து வெளியேறி காரில் ஏறுவதை அமைச்சரின் ஆட்கள் சிலர் கவனித்திருக்க, அதனால் தான் மீராநந்தன் காரை எடுக்கசொல்லி அவளை அவசரபடுத்தியதோடு, அவளிடம் கோவமாக நடந்து கொண்டது கூட.
அவர்கள் பிளான் படி மணப்பெண்ணும் கை நரம்பை வெட்டிகொண்டது போல் நடிக்க, மகளை அப்படி பார்த்த அதியமானால் மேற்கொண்டு இந்த திருமணத்தில் பிடிவாதம் பிடிக்க முடியவில்லை.
அத்தோடு திருமணத்திற்காக சொந்தபந்தங்கள், அரசியல் பிரபலங்கள் என்று அனைவரும் வந்த வண்ணம் இருக்க, அவர்கள் முன்னிலையில் அதியமானுக்கும் வேறு வழி இல்லாமல் போனது.
மீராநந்தன் கிடைக்கவில்லை என்று அவன் ஆட்கள் போனில் சொன்னபோது, அதியமானோ அடக்கமட்டாத கோவத்துடன் சோமசுந்தரம் முன்னால் தான் சென்று நின்றார்.
“என்ன சம்மந்தி இதெல்லாம்..?” என்று ஆக்ரோஷமாக கேட்டு அவர் முடிக்கவில்லை, அதற்குள் மகன் முன்னமே சொல்லியிருந்தது போல் நெஞ்சை பிடித்துகொண்டு சோமசுந்தரம் மயங்கி சரிய,
“ஐய்யோ.. என்னாச்சிங்க..?” என்று பதறித்தான் போனார் மீனாட்சி.
அந்த காட்சியை பார்த்த அதியமானால் தன் கோவத்தை கூட அவர்கள் மீது காட்ட முடியவில்லை.
அத்தோடு அரசியல் செல்வாக்கில் உயர்ந்து இருக்கும் அவர்கள் மீது கைவைத்தால் அது தன் பதவிக்குதான் ஆபத்து என்று அதியமானும் தெரிந்துதான் வைத்திருந்தார்.
அதனாலே ஆம்புலன்ஸி-ல் இருவரையும் அனுப்பிவைத்த அதியமானின் மொத்த கோவமும் இப்போது அந்த மீராநந்தன் புறம்தான் திரும்பியிருந்தது.
அந்த மணப்பெண் பேசியதை கேட்டபின் தான் அவளுக்குமே உண்மைநிலை என்னவென்று புரிந்தது
“சாரி நான் உங்கள தப்பா நினைச்சிட்டேன்..” என்றாள் இப்போது தயங்கிய குரலில்.
“நமக்குள்ள என்னங்க சாரி-லாம். நீங்க மட்டும் அங்க வரலன்னா.. எங்க மொத்த பிளானும் டிராப்-அவுட் ஆகியிருக்கும்” என்று விழிகளை விரித்து சொன்னவன்,
“நல்லவேளை கரெக்ட்டான நேரத்துக்கு தேவதை மாதிரி வந்து இந்த கல்யாணத்துலேந்து என்ன காப்பாத்திட்டீங்க..” என்றான் இப்போது நிம்மதி பெருமூச்சியுடன்.
நினைத்ததை முடித்துவிட்ட திருப்தி அவன் முகம் முழுகையும் பரவியிருக்க, அதை அவளும் கவனிக்கவே செய்தாள்.
எத்தனை பேருக்கு இப்படி அடுத்தவருக்கு உதவும் குணம் வரும்.
அவன் நினைத்திருந்தால் யார் எப்படி போனால் எனக்கென்ன என்று ஒதுங்கியிருக்கலாம் தான்.. ஆனால் தன்னை பற்றி கவலைப்படாமல் இந்த அளவிற்கு ரிஸ்க் எடுத்து உதவுவதற்கெல்லாம் ஒரு மனம் வேண்டுமல்லவா.
அவனின் இந்த உதவும் குணம் அவளுக்கும் பிடித்திருந்தது. அத்தோடு அவன் மீது ஒரு நன்மதிப்பையும் அவளுக்குள் ஏற்படுத்தவே செய்தது.
இந்த அனுபவமும், அவனை சந்தித்த நிகழ்வும் அவளுக்கு புதுமையாக இருந்ததோடு, ஏதோ ஆகஷன் எமோஷனல் கலந்த படம் பார்த்துவிட்டு வந்த திருப்தியைதான் அவளுக்குள் கொடுத்திருந்தது.
“ஏங்க..” என்றவனின் அழைப்பால் அவள் அவனை பார்க்க, அவனோ அழகாய் சிரித்துகொண்டே “ஐ அம் மீராநந்தன்” என்றவாறே நட்பு ரீதியாக தன் வலக்கையை அவள் முன் நீட்டியிருந்தான்.
அவனின் சிரித்த முகத்தையும் நீட்டியிருந்த அவன் கரத்தையும் மாறி மாறி பார்த்திருந்தவள், பின் காரை ஒரு ஓராமாக நிறுத்திவிட்டு
“ஏர்போர்ட் வந்துடுச்சி” என்றாள் என்னை பற்றி நீங்கள் எதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதுபோல்.
அவளின் வார்த்தைகளால் திரும்பி ஏர்போர்ட்டை பார்த்தவன், “யா ஏர்போர்ட்..” என்றாவாறே அதுவரையும் நீட்டியிருந்த கரத்தால் முன்னுச்சியை கோதிவிட்டவாறே, இறங்க மனமில்லாமல் காரிலிருந்து இறங்கினான்.
அவளை விட்டு செல்ல அவனுக்கு துளியும் மனம் வரவில்லை. அத்தோடு மேற்கொண்டு எப்படி அவள் பற்றி தெரிந்துகொள்வதென்றும் அவனுக்கு தெரியவில்லை.
பெயரை கூட சொல்ல மறுக்கும் அவளிடமிருந்து அவள் பற்றிய விவரங்களை கேட்பது அவனுக்கும் பெரிய சவாலாகத்தான் இருந்தது.
இருகைகளாலும் முன்னுச்சியை கோதிவிட்டவன், பின் ஏதோ நினைவுவந்தவனாய், “ஏங்க ஒரு நிமிஷம்” என்று சொல்லிவிட்டு எங்கோ செல்ல, அவளின் கண்களோ பதற்றத்துடன் அந்த டிஜிட்டல் கிளாக்கைத்தான் பார்த்தது.
இன்னும் அரைமணிநேரத்திற்குள் அவள் வீட்டில் இருந்தாக வேண்டும் என்று அவள் மூளை வேறு அவளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்திருந்தது.
அதிகம் அவளை காக்கவைக்காமல் அவனுக்கே உரித்தான புன்னகையுடன் அவள் முன் வந்து நின்றவன், அவளுக்காக வாங்கி வந்திருந்த குல்பியை அவள் முன் நீட்டியிருக்க, அவளோ இதை அவனிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அதை வாங்காமல் தயக்கத்துடனே அவள் பார்த்திருக்க, “வாங்கிக்கோங்க..” என்றவனின் விழிகளும் அவளை வாங்கிகொள்ள சொல்ல, அதன் பின் அவளும் மறுக்காமல் வாங்கிகொண்டாள்.
வாங்கிகொண்டவள் விழிகளாலே அவனிடம் விடைபெற்றுவிட்டு அங்கிருந்து கிளம்ப, தன் கையிலிருந்த குல்பியை ருசித்து உண்டு கொண்டிருந்தவனின் விழிகளோ அவள் கார் நம்பர்பிளேட்டைதான் படம் பிடித்து கொண்டிருந்தது.




