வீட்டிற்கு வந்தவள் உடையை கூட மாற்றாமல் முதலில் கழற்றி எறிந்தது விரலில் அணிந்திருந்த அவன் மோதிரத்தைதான்.
இதற்கு முன் கல்லூரி சார்பாக எத்தனையோ போட்டிகளுக்கு சென்று வெற்றி வாகை சூடி வந்த போதுகூட அவளுக்கு இந்தளவிற்கு வரவேற்போ, பாரட்டுதல்களோ கிடைத்தது இல்லை.
ஆனால் இப்போது கல்லூரியில் அறிந்தவர் அறியாதவர் என்று யார் யாரோ அவளை தேடி வந்து வாழ்த்து சொல்லியவண்ணம் இருக்க, இதழினிக்குதான் அந்த வெற்றியும் பிடிக்கவில்லை அது தரும் பாராட்டுகளும் பிடிக்கவில்லை.
காரணம் அவனால் அவள் அடைந்த சங்கடங்களும், அவமானங்களும் கொஞ்ச நஞ்சம் இல்லையே. அப்படியிருக்க எப்படி அவளால் அவன் கொடுத்த பரிசை மனதார ஏற்றுக்கொள்ள முடியும்…?
முதல் கோணம் முற்றிலும் கோணல் என்பார்களே. அதுதான் அவன் விஷயத்தில் அவளுக்கு நடந்திருந்தது.
முதல் சந்திப்பிலேயே அவனை அவளுக்கு பிடிக்காமல் போக, அதன் பின் நடந்த நிகழ்வுகளோ அவனை வெறுக்கும் அளவிற்கு அவளை கொண்டு தள்ளியிருந்தது. அதிலும் இன்று காலை கண்கூடாக பார்த்ததை வைத்து அவன் ஒரு கே(Gay) என்று முடிவே கட்டிவிட்டாள்.
அவனை பிடிக்காததால்தானே அவன் சம்மந்தபட்ட வெற்றி கூட இப்போது அவளுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது.
அதனால்தான் வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக அந்த மோதிரத்தை அவள் கழற்றி எறிந்தது.
அவள் தூக்கிய எறிந்ததில் அந்த மோதிரம் அவளின் கட்டிலுக்கு கீழ் சென்று தஞ்சம் அடைந்திருக்க, அதை கழற்றியபின் இதழினியின் மனதிற்கு சற்று நிம்மதியாக இருந்தது.
எப்படியோ ஆண்டுவிழா முடிந்துவிட்டது. இந்த ஆண்டுவிழாவிற்காகத்தானே அவன் வாயில் அவள் சென்று மாட்டிகொண்டது. இதற்காகத்தானே அவனின் மரியாதையற்ற வார்த்தைகளையும், அத்துமீறல்களையும் கூட அவள் சகித்துகொண்டது.
இனி அது இல்லை.. அதற்கான அவசியமும் இல்லை என்று நினைக்கும் போதே அவளுக்குள் அப்படியொரு சந்தோஷம்.
அந்த சந்தோஷத்தோடே உடைமாற்றிய கையோடு வீட்டின் பின்கட்டுக்கு சென்று முகம் கழுவி வந்தவள் எப்போதும் போல் தன் அன்றாட வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
எப்போதும் போல் டியூஷனுக்கு மாணவ, மாணவிகள் வந்திருக்க இலக்கியா கொடுத்த தேநீரை அருந்தியபடியே அவர்களை கவனிக்க சென்றாள்.
காலாண்டுதேர்வு நெருங்கி வருவதால் சற்று கூடுதலாகவே அவர்களை கவனித்துகொண்டிருந்தாள் இதழினி.
குடும்ப பிஸ்னஸ் மீடிங் என்று பிளாட்டிற்கு செல்லும் வழியிலேயே கவின் இறங்கிகொள்ள, ரிஷப் மட்டும் தான் பிளாட்டிற்கு சென்றிருந்தான்.
பிளாடிற்கு வந்தவன் எப்படியும் நூறுதடவைக்கு மேலாவது தன் வாட்சில் ரெக்கார்ட் செய்திருந்த அவளின் வயலின் இசையை கேட்டிருப்பான்.
இருந்தும் அவனுக்கு சளிப்பு தட்டவில்லை.
மீண்டும் மீண்டும் கேட்ட வேண்டுமென்ற ஆர்வம் அவனுக்குள் கூடியதே தவிர அதில் துளியளவுகூட குறைந்தபாடில்லை.
உயிரில் உணர்வில் கலப்பது இசையே என்பார்களே அதுபோலத்தான் இருந்தது அவளின் இசையும் அவனுக்கு.
இசையாய் அவன் உயிருக்குள் நுழைந்து.. சிறுக சிறுக அவனின் உணர்வையெல்லாம் அவளுடையதாய் ஆக்கிரமித்து கொண்டிருந்தாள் அவள்.
ஒவ்வொருமுறையும் முதன்முறையாக கேட்பது போன்ற பரவசம்தான் இப்போதுவரையுமே அவனுக்கு.
மிகவும் பிடித்திருந்தது அவனுக்கு அவளையும், அவளின் இசையையும்.
அந்த பாடல் வரிகளை முனுமுனுத்தவாறே பால்கனியில் சென்று நின்றவனுக்கு எப்போதும் பார்க்கும் அந்த அந்தி செவ்வானமும், பரந்துவிரிந்து பேரிரைச்சல் எழுப்பிகொண்டிருந்த கடல் கூட இன்று அவன் கண்களுக்கு அத்தனை அழகாகத்தான் தெரிந்தது.
ஏனோ இன்று அவன் கண்களுக்கு எல்லாமே புதுமையாகத்தான் தெரிந்தது.
முன்னிச்சியை கோதிவிட்டவாறு நின்றுகொண்டிருந்தவனின் முகத்தில் சில்லென்று காற்று மோதிவிட்டு செல்ல, கண்களை மூடிகொண்டவனின் கண்முன்னே வந்து நின்றது என்னவோ அவளின் சிரித்த விழிகள்தான்.
சட்டென்று இமைபிரித்து சிரித்துகொண்டவனுக்கு இப்போது வரையுமே நம்ப முடியவில்லை நானா இப்படியென்று.
காலையில் அவளிடம் காதல், கீதல் என்று ஏக வசனம் பேசிய ரிஷப் நந்தனா..? இப்போது இருக்கும் இந்த ரிஷப்நந்தன் என்று தன்னைத்தானே கேட்டுகொண்டவனுக்கு காலையில் அவளிடம் பேசியதை நினைத்து இப்போது சிரிப்புத்தான் வந்தது.
“ஹே குள்ளச்சி படுத்துறடி” என்று பியர்டை வருடியவாறே சிரித்தவனுக்கு இப்போதே அவளை பார்க்க வேண்டும் போல் இருக்க, சிறிதும் யோசிக்காமல் தன் கைபேசியை எடுத்து அவளுக்கு போன் செய்தான்.
பத்தாம் வகுப்பு மாணவிக்கு தீவிரமாக அவள் கணக்கு பாடம் எடுத்துகொண்டிருக்க, அப்போதுதான் அவளின் செல்போனும் சத்தம் எழுப்பியது.
புது நம்பராக இருப்பதால் அழைப்பை ஏற்காமல் அவள் பாடம் நடத்திகொண்டே இருக்க, அந்த நம்பரிலிருந்து அழைப்பும் தொடர்ந்து வந்த படியாகவே இருந்தது.
பின் யாராக இருக்கும் என்ற யோசனையோடே அழைப்பை ஏற்று காதில் வைத்தவள் “ஹலோ..” என்க,
“ஹே குள்ளச்சி எங்க இருக்க..?” என்று மறுமுனையில் கேட்டவனின் குரலால் அவளுக்குதான் தூக்கி வாரி போட்டது.
“ஐய்யோ இவனா..? இவன் எதுக்கு எனக்கு போன் பண்றான்..?” என்று தன்னையே கேட்டு கொண்டவளுக்கு பயத்தில் தானகவே கை, கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
கையிலிருந்த பாடப்புத்தகத்தை மாணவியிடம் கொடுத்துவிட்டு செல்போனை எடுத்துகொண்டே தோட்டம் பகுதி-க்கு சென்றவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் யாராவது இருக்கிறார்களா என்று.
நல்லவேளை யாரும் இல்லாமல் போகவே, “நா…. நான்.. வீட்ல சார்..” என்றவள் திக்கி திணற,
அவனோ, “என் ஃபளாட்டு-க்கு வா” என்றான் சர்வசாதாரணமாக.
அவன் கூறியதை கேட்ட அதிர்ச்சியில் அவளின் கோலிகுண்டு விழிகள் மேலும் ஒருசுற்று விரிந்துதான் போயின.
“நான் ஏன் இவன் ஃபாளாட்டுக்கு வரணும்..? அதான் ஃபங்கஷ்ன்-லாம் முடிஞ்சிடுச்சே.. அப்புறம் என்னவாம்.. முடியாது என்னால முடியாது. வரமுடியாதுன்னு சொல்லு இதழினி” என்று தைரியமாக தனக்குத்தானே சொல்லிகொண்டவள்,
அந்த தைரியத்துடனே, “என்னால வரமுடியாது சார்” என்றவள், அழைப்பையும் துண்டித்திருக்க,
“வாட்.. முடியாதா..? அதுவும் இந்த ரிஷப் நந்தன் கிட்டயா..?’ என்று தன்னிடமே கேட்டுகொண்டவனின் தலை இடவலமாக அசைந்ததோடு, அவன் இதழ்களும் மந்தகாசமாக புன்னகை புரிந்தன.
ஏதோவொரு தைரியத்தில் முடியாது என்று அழைப்பை துண்டிந்தவளுக்கு இன்னமுமே நடுக்கம் குறைந்தபாடிவில்லை.
நிற்கமுடியாமல் அவள் கால்கள் துவள, பிடிமானமாக மாமரத்தில் சாயந்து நின்றுகொண்டவளின் விழிகள் எங்கே மீண்டும் அழைத்துவிடுவானோ என்ற பயத்தில் செல்போன் திரையையேதான் பார்த்திருந்தது.
ஆனால் அவள் பயந்தது போல் கால் செய்யாமல் அவன் வாட்ஸ்-அப்பில் மெசேஜ் அனுப்பியிருக்க, பயத்துடனே அதை ஓப்பன் செய்து பார்த்தவள் பயத்தில் செல்போனை நெஞ்சோடு இறுகமாக அணைத்துகொண்டாள்.
நெஞ்சோடு அணைத்துகொண்டவளுக்கு பயத்தில் நெஞ்சமெல்லாம் படபடவென அடித்துகொண்டது.
அவளால் இப்போதுவரையுமே நம்பமுடியவில்லை அவள் கண்கள் பார்த்ததை.
உண்மையில் தான் பார்த்தது அதைத்தானா..? அதைத்தான் அவன் தனக்கு அனுப்பியிருந்தானா..? என்ற சந்தேகத்தோடே மீண்டும் ஒருமுறை மனதை திடப்படுத்திகொண்டு அந்த புகைப்படத்தை பார்த்தவளின் கண்களிலிருந்து இப்போது கண்ணீர் துளிகள் உருண்டோடின.
அவர்களின் முதல்சந்திப்பின் போது மேலாடையின்றி அவளோடு அவனாகவே எடுத்துகொண்ட செல்ஃபி புகைப்படத்தைதான் அவன் அவளுக்கு அனுப்பியிருந்தான்.
அத்தோடு இன்னும் அரைமணிநேரத்திற்குள் வரவில்லையென்றால் இந்த புகைப்படம் சமூகவளைதளங்களில் பதிவிடப்படும் என்ற வார்னிங் மெசேஜ்-ம் சேர்த்து அவன் அனுப்பியிருக்க, அவளுக்கோ இதயமே நின்றுவிட்ட உணர்வுதான்.
இந்த புகைப்படம் மட்டும் வெளியில் வந்தால் அதன் பின் அவள் என்ன..? அவள் குடும்பமே வெளியில் தலைகாட்ட தான் முடியுமா..?
ரிஷப்போடு இருக்கும் இந்த பெண் யார்..? இருவருக்குமிடையே என்ன மாதிரியான உறவு…..? என்று ஆளாளுக்கு கேள்வி கேட்பதோடு, இந்த எச்ச மீடியாக்கள் அவள் வீட்டை கண்டுபிடித்து கேமராவையும் மைக்கையும் தூக்கிகொண்டே வருமே..
இதெல்லாம் சினிமா துறையில் இருக்கும் அவனுக்கு வேண்டுமானால் சர்வசாதரணமாக இருக்கலாம்.. ஆனால் மானம் கௌரவம் என்று வாழும் நடுத்திரவர்க்கத்தினரால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியுமா..? இல்லை இலகுவாக கடந்து செல்லத்தான் முடியுமா..? அவர்களுக்கு மானம் தானே உயிர்.
அத்தோடு அடிக்கடி மரகதாம்பாள் சொன்ன அவர்களின் குடும்பசாபமும் அவள் நினைவிற்கு வந்து போக, வழிந்தோடிய கண்ணீரை அழுந்த துடைத்துகொண்டவள் அடுத்து அவனுக்குதான் அழைத்தாள்.
அவனோ அழைப்பை ஏற்காமல் இருக்க, “ஐய்யோ..” என்றவாறே தலையை பிடித்துகொண்டவளுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.. யாரிடம் சென்று தன் பிரச்சனைக்கு தீர்வு கேட்பதென்றும் புரியவில்லை.
சம்மந்தபட்டவனிடமே தன் நிலைமையை சொல்லலாம் என்றாலோ அவன் தான் போனையே எடுக்கமாட்டேன் என்கிறானே…
இதில் அவன் கொடுத்த கால அவகாசத்தில் ஐந்து நிமிடங்கள் கலாவதியாகியிருக்க, வேறு வழியின்றி அவசரமாக மேம் வர சொல்லியிருப்பதாக இலக்கியாவிடம் பொய் சொன்னவள், ஆரண்யாவிடம் பசங்களை பார்த்துகொள்ள சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக வாசலுக்கு வரும் போதுதான்
திருப்பதி சவாரி முடிந்து வீடு திரும்பியிருந்தார் இலக்கியாவின் கணவர் சண்முகம்.
“அய்யோ இப்போ இவர வேற சமாளிக்கணுமே..” என்று கைகளை பிசைந்தவாறே நின்றிருந்தவளை பார்த்து, “இந்நேரத்துல எங்கம்மா..?” என்றார் சண்முகமே.
இலக்கியாவிடம் சொன்ன அதே பொய்யை சண்முகத்திடமும் அவள் ஒப்புவிக்க,
“இந்த நேரத்துல எப்படிம்மா தனியா..” என்று யோசனையோடே சொன்னவர், “நீ வா.. நானே உன்ன கார்-ல கூட்டிட்டுபோறேன்” என்க, அவளோக்கோ பதறிவிட்டது.
“ஐய்யோ அதெல்லாம் வேணாம் சித்தப்பா.. நீங்க ஆல்ரெடி ஒரு வாரம் சவாரி பண்ண டயர்ட்-ல இருப்பீங்க… நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.. நான் பஸ்-ல போய்ட்டு வந்துடறேன்..” என்று சண்முகத்தை சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவதற்குள் இதழினிக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.
காலம் எந்த அளவுக்கு கெட்டுபோய் கிடக்கிறது என்பதை அவரும் நாளும் பார்க்கிறார்தானே.. அத்தோடு தாய் தந்தை இல்லாமல் அவர்கள் பொறுப்பில் இருக்கும் அவளை பார்த்துகொள்ளும் முழு பொறுப்பும் அவர்களுக்குதானே இருக்கிறது.
பேருந்தில் செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பியவள் செல்லும் வழியிலேயே ஆட்டோ-வை பிடித்திருந்தாள்.
ஆட்டோவில் சென்றால்தான் குறைந்தது முப்பத்தைந்து நிமிடத்திலாவது அவன் இருக்கும் இடத்தை அடைய முடியும். இது தெரியாமல் அவன் வேறு அரைமணிநேரத்திற்குள் வர வேண்டும் என்று அனுப்பியிருக்க,
எங்கே சொன்னது போல் செய்துவிடுவானோ என்ற பயத்தில் ஆட்டோவில் ஏறிய கணமே, “ஐம் ஆன் தி வே சார்” என்று அவனுக்கு மெசேஜ் அனுப்பினாள்.
அதை படித்தவன் அவளுக்கு பதில் மெசேஜ் கூட அனுப்பவில்லை.
அதுவே அவளுக்கு இன்னும் பதபதப்பை ஏற்படுத்த, “சீக்கரம் போங்கண்ணா” என்று நொடிக்கொருதரம் ஆட்டோ ஓட்டுநரைதான் அவசரப்படுத்தினாள் இதழினி.
அவன் சொன்ன நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் பிந்திதான் அவன் பிளாட்டை அடைந்திருந்தாள்.
ஓட்டமும் நடையுமாக அவன் பிளாட்டை அடைந்தவள் வந்த கோவத்திற்கு ஓங்கி கதவை தட்ட, “கம் இன்” என்றான் உள்ளிருந்தபடியே அவன்.
அடித்து பிடித்துகொண்டு வந்ததில் மூச்சிவாங்கியபடி அவள் அவன் முன்னால் சென்று நிற்க, அவனோ ஹாயாக சோஃபாவில் சாய்ந்தநிலையில் கார்ட்டூன் பார்த்துகொண்டிருந்தான் அதுவும் சத்தம் போட்டு சிரித்தப்படி.
அவனை அப்படி பார்த்தவளுக்கோ அவன் மீது அப்படியொரு கோவம்.. அந்த கோவத்தோடே, “சார்..” என்று அவனை அவள் கத்தியழைக்க,
“ஹே.. குள்ளச்சி..” என்றவாறே அவள் புறம் திரும்பினான் ரிஷப்.
“என்ன தான் சார் உங்களுக்கு பிரச்சனை..? எதுக்கு சார் என்ன இப்படி டார்ச்சர் பண்றீங்க..?” என்றவள் கோவத்தில் கத்த,
“நீயும் தான் என்ன டார்ச்சர் பண்ற..” என்று அவளுக்கு கேட்டாமல் வாய்க்குள்ளே முனகிக்கொண்டவன், “சிட்” என்றான் இருக்கையை காட்டி.
ஆனால் அவளோ நான் ஒன்றும் இங்கு அமர்ந்து பேசவரவில்லை என்பது போல், “சார்.. மொதல்ல அந்த போட்டோவ டெலீட் பண்ணுங்க சார்… எங்க வீட்டுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனையாகிடும்.” என்றவள் கோவம் நிறைந்த குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே சட்டென்று அவன் இருக்கையிலிருந்து எழ, அவளுக்கோ திக்கென்று விட்டது.
“ஐய்யோ இவன பத்திதெரிஞ்சியிருந்தும் கோவத்துல கத்திட்டோமே.. என்ன பண்ண போறானா..?” என்று பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டவள், மிரண்டு போய் அவனையே பார்த்திருக்க,
அவனோ வேக எட்டுகளுடன் அவளை நெருங்கியிருந்தான்.
அவன் தன்னை நெருங்குவதை சுதாரித்து கொண்டு, பின்னோக்கி இரண்டு எட்டு வைத்தவள் சுவற்றில் மோதி நிற்க, அவனின் வலிய கரமோ அவள் தப்பித்து செல்லாவண்ணம் இருபுறமும் அவளை சிறை செய்திருந்தது.
அவனின் செயலாலும், நெருக்கத்தாலும் அவளுக்குத்தான் பயத்தில் முகம் வெளிறிவிட்டது.
“சார்.. பிளீஸ்..” என்று சொல்ல வாயை திறந்தவளின் வாயிலிருந்து வார்த்தைக்கு பதிலாக காற்றுதான் வெளியில் வந்தது.
அவனின் சூடான மூச்சி காற்று அவள் முகத்தில் படும் அளவிற்கு அவன் அவளை நெருங்கி நிற்க, அவளோ அந்த சுவருக்குள் தன்னை புதைத்துவிடும் அளவிற்கு சுவரோடு சுவராக ஒட்டி நின்றுகொண்டாள்.
அவளை நெருங்கி நின்றவன் அவளிடமிருந்து வந்த நறுமனத்தை கண்கள் மூடி நுகர்ந்தவாறே, “என்ன பர்ஃப்யூம்..?” என்க,
அவளுக்கோ பயத்தில் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது.
இருந்தும் கஷ்டப்பட்டு எச்சிலை கூட்டி விழுங்கியவள், “ப.. ப.. பர்ஃப்யூம் இல்ல சார்.. பவுடர்.. சாண்டில்” என்றாள் திக்கி திணறியபடி.
“ஓ” என்றவாறே இமைகளை திறந்து அவளை பார்த்தவன், “எங்க போச்சி..?” என்று புருவமத்தியை உயர்த்தி கேட்க,
அவளுக்கோ அவன் எதை குறித்து கேட்கிறான் என்றே தெரியவில்லை.
இருந்தும் “எ.. எது சார்..?” என்றாள் கஷ்டப்பட்டு.
குறுநகை புரிந்தவாறே ஆள்காட்டி விரலால் அவள் முகத்திற்கு முன் வட்ட மிட்டு காட்டியவன்,
“அதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த முகம் முழுக்க இருந்த கோவம்.. இப்போ எங்க போச்சி..?” என்று கையை விரித்து கேட்க,
“அட மலமாடே அத இப்படி பக்கத்துல வந்துதான் கேட்பியா..?” என்று உள்ளுக்குள் அவனை திட்டிக்கொண்டவள், எதுவும் சொல்லாமல் மலங்க மலங்க விழித்தபடி அவனையே பார்த்திருக்க,
அவளை இப்படி பார்க்க அவனுக்கும் பாவமாகத்தான் இருந்தது.
ஆனால் என்ன செய்ய நினைத்த நேரத்திற்கு சென்று அவளை பார்க்கும் அளவிற்கு அவன் ஒன்றும் சாமனியன் இல்லையே.. ஒரு ஹோட்டலுக்கு சென்று அவன் சாப்பிட்டாலே அரைமணிநேரத்திற்குள் எப்படியோ அவன் புகைப்படம் இணையத்தில் வந்துவிடும்.
இதில் எப்படி அவனால் நினைத்த நேரத்திற்கு அவளை சென்று பார்க்க முடியும்..
அப்படியே பார்க்க செல்வதை யாராவது பார்த்து புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் விட்டு விட்டால் அது இன்னும் அவளுக்குதானே பிரச்சனை..
அதனால் தான் அவன் இப்படி ஒரு பிளான் செய்து அவளை இங்கு வரவழைத்தது கூட.




