Back to All Novels
கவிதைகள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 2

January 17, 2026
சந்தோஷ் குணா
0
10 min read
அத்தியாயம் - 2
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

நிச்சயமாக அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை, இவன் எதற்காக இப்போது காருக்குள் ஏறினான்..? ஏறியதோடு நில்லாமல் எதற்காக காரை எடுக்க சொல்லி அவசரபடுத்துகிறான்..? என்று.

சம்மந்தபட்டவனிடமே கேட்டுவிடலாம் என்றாலோ… அவன் தான் வார்த்தைக்கு வார்த்தை எரிந்து விழுகிறானே..

அதனாலே சற்று முன் தான் பேனரில் பார்த்த சிரித்த முகம் இவனுடையது தானா என்ற சந்தேகம் கூட அவளுக்கு இப்போது.

தன் குடும்பத்தாரிடம் சாதாரணமாக பேசவேண்டுமென்றாலே அவளுக்கு வார்த்தைக்கு பஞ்சமாகிவிடும். இதில் இப்படி வார்த்தைக்கு வார்த்தை எரிந்துவிழுபவனிடம் போய் அவளால் என்ன கேட்க முடியும்…? கேட்கும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இல்லை என்பதுதான் நிஜம்.

“ஏய் வந்துட்டாணுங்கடி… இப்போ நீ மட்டும் வண்டி-அ எடுக்கல.... நானே உன்ன கொன்னுடுவேன்” என்று பற்களை கடித்துகொண்டு அவன் கத்திய கத்தில், அவள் கரங்கள் தன்னையும் மீறி கொண்டு காரை ஸ்டார் செய்திருந்தது.

அவன் சொன்னது போலவே ஜீப்பில் சிலர் அவர்கள் காரை பின் தொடரவும் ஆரம்பித்திருந்தனர்.

பின்னால் திரும்பி திரும்பி பார்த்தபடியே இருந்த மீராநந்தனோ, “இன்னும் வேகமா போ..” என்று சொல்ல அவளும் காரை அதீத வேகத்தில் செலுத்தினாள்.

துரத்திகொண்டு வருபவர்களிடமிருந்து தப்பிக்கும் விதமாக அவன் சொல்வது போலெல்லாம் காரை வளைத்து வளைத்து ஓட்டிக்கொண்டிருந்தவளுக்கு பார்த்திமா வீட்டிற்கு செல்லாமல் தனியா காரை எடுத்துகொண்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது புரிந்தது.

இப்போது புரிந்து என்ன பயம்..? எங்கே இவன் பிரச்சனையில் தானும் சேர்ந்து மாட்டிக்கொள்வோமே என்று உள்ளுக்குள் பதறித்தான் போனது பெண்ணவள் மனம்.

இதில் பின்னால் வருபவர்களும் அவர்களை விடாமல் துரத்திகொண்டே இருக்க பிரதிக்ஷாவிற்கு பயத்தில் உடம்பே நடுங்க ஆரம்பித்துவிட்டது.

விடாமல் துரத்தி கொண்டிருப்பவர்களிடமிருந்து எப்படி தப்பிப்பதென்று தீவிரமாக யோசித்தவனின் பார்வையில் அந்த சாலையின் பக்கவாட்டில் வளைந்து செல்லும் சாலை கண்ணில் பட,

“ரைட்-ல கட் பண்ணு” என்றவன் சொன்னது போலவே அவளும் கட் செய்தாள். அது ஏதோ ஒரு குடியிருப்பு பகுதிபோல் இருந்தது.

அவன் சொன்னது போல் அந்த குடியிருப்பு பகுதியையே அவள் சுற்றி சுற்றி வந்த வண்ணம் இருக்க, ஜீப்பில் வந்தவர்களும் அவர்களை விடாமல் துரத்திகொண்டேதான் இருந்தனர்.

பின் அவன் சொன்னது போல் ஓரிடத்தில் ஏற்கனவே நிறுத்தபட்டிருந்த இரு கார்களுக்கும் இடையில் காரை நிறுத்தி விளக்கை அணைத்தவளுக்கு உள்ளுக்குள் அப்படியொரு பயம் எங்கே தங்களை கண்டுபிடித்துவார்களோ என்று.

ஆனால் அவர்களை பின் தொடர்ந்து வந்த ஜீப்-கள் அவர்கள் காரை கடந்து நேராக சென்று விட பிரதிக்ஷா-விற்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.

அந்த ஜீப்-கள் சென்று கிட்டதட்ட பதினைந்து நிமிடங்கள் கழித்த பின்னே அவன் காரை கிளப்ப சொல்ல, அவளும் சங்கடத்துடனே காரை கிளப்பினாள்.

“சீக்கரம் ஏர்போர்ட் போ..” என்று மீண்டும் அவளை அவன் அவசரபடுத்த, இதற்கு மேலும் அமைதிகாப்பது சரியன்றுதான் தோன்றியது பிரதிக்ஷாவிற்கு.

அதனாலே தைரியத்தை வரவழைத்து கொண்டு “நீங்க..?” என்றவள் சொல்லவந்ததை சொல்லி முடிக்கவில்லை அதற்குள் “என்னோட பாஸ்போட் அண்ட் விசா எங்க..?” என்றவனின் கேள்வியால் அவள்தான் மேலும் விழிபிதுங்கி போனவள், புருவமத்தியை சுருக்கி அவனை பார்த்தாள்.

“என்னவோ கொடுத்து வச்சமாதிரி என்கிட்ட ஏண்டா கேட்குற..?” என்று உள்ளுக்குள் தான் அவளால் கேட்க முடிந்ததே தவிர, சம்மந்தபட்டவனிடம் நேராக கேட்க முடியவில்லை.

கேட்கும் அளவிற்கு அவளுக்கு தைரியம் இல்லையென்றுதான் சொல்ல வேண்டும்.

அவளே தன் வீட்டினருக்கு தெரியாமல்தான் இரவில் இப்படி சுற்றிகொண்டு திரிகிறாள்… இதில் யாரென்றே தெரியா இவன் வேறு தன் பிரச்சனையில் அவளையும் சேர்த்து இழுத்து மாட்டிவிட்டால் யாருக்குதான் பயம் வராது.

அவளுக்கும் இப்போது பயம்தான் எங்கே இவனின் பிரச்சனையால் தன் குட்டு தன் இரு குடும்பத்தாருக்கும் தெரிந்துவிடுமோ என்று.

அப்படி தெரிந்துவிட்டால் அதன் பின் தனக்கு என்ன நடக்கும் என்பதை அவளால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை.

அதை நினைக்கும் போதே பயத்தில் அவளுக்கு இதயமே நின்றுவிடுவது போல் இருந்தது.

அவளின் முகக்குறிப்பை பார்த்து, “பச்” என்று சலித்துகொண்டவன், இப்போது தன் ஷர்வானியின் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து யாருக்கோ அழைக்க, “இப்ப யாருக்கு போன் பண்றான்..?” என்று உள்ளுக்குள் நினைத்துகொண்டவள், அவனையும் சாலையையும் மாறி மாறி பார்த்தவாறே காரை மிதமான வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தாள்.

இரண்டும் மூன்று அழைப்பிற்கு பின்னே மறுமுனையில் அவன் அழைப்பு ஏற்கபட்டிருக்க, “யூ ஹெல் என்னோட பாஸ்போர்ட், விசா எங்கடா..?” என்று எடுத்த எடுப்பிலேயே எரிந்து விழுந்தவனின் முகம் அடுத்த கணமே மாறித்தான் போனது எதிர்முனையில் அவன் நண்பன் மாதேஷ் சொன்ன விஷயத்தை கேட்டு.

அவன் சொன்னதை கேட்டு “யூ” என்று ஆத்திரத்தோடு பற்களை கடித்து கொண்டு கத்தியவன், அத்தோடு நிறுத்தாமல் வந்த கோவத்திற்கு இரண்டு மூன்று ஆங்கில கெட்ட வார்த்தைகளையும் கோர்வையாக சொல்ல, அந்த வார்த்தைகளை காதில் வாங்கியவளின் கால்களோ தன்னையும் அறியாமல் அதிர்ச்சியில் பிரேக்கை மிதித்திருந்தது.

எதிர்பாராமல் அவள் பிரேக் போட்டதில் சீட் பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்த மீராநந்தன் முன்னால் சென்று முட்டி மோதிக்கொள்ள, அவளோ இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் மோதிகொண்டதில் காரிலிருந்த குளவ்பாக்ஸ் திறந்துகொண்டதோடு அதிலிருந்த அனைத்தும் கீழே விழுந்து சிதறியது.

எல்லாமே சில கணங்கள் தான். அவன் நிலையை பார்த்து, “அச்சச்சோ…” என்றவாறே வாயில் அவள் கைவைத்துகொள்ள, அவனோ அடிப்பட்ட நெற்றி பகுதியை தேய்த்துவிட்டவாறே அவளை இப்போது முறைத்து பார்த்தான்.

எங்கே கோவத்தில் தன்னையும் அந்த மாதிரியான ஆங்கில கெட்ட வார்த்தைகளால் திட்டிவிடுவானோ என்று பயந்துபோனவள், “சாரி சாரி….. தெரியாம பிரேக் போட்டுட்டேன்…” என்றாள் முந்தி கொண்டு.

பதிலுக்கு அவளை முறைத்தவாறே “மயிரு…” என்றவன் பற்களை கடிக்க, அது அவள் காதிற்கும் நன்றாக விழவே செய்தது.

அவனின் வார்த்தையால் “வாட்..” என்று உள்ளுக்குள் அதிர்ந்தவள்  இப்போது அவனை முறைத்து பார்த்தாள்.

முறைத்து பார்த்தவளின் பார்வையில் அப்போதுதான் பட்டது மோதி கொண்டதில் அவனுக்கு புரும மத்தியில் அடிப்பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை.

அதை பார்த்து “ஐய்யோ இரத்தம்..” என்று பதறிபோனவள், அடுத்து காருக்குள் இருந்த முதல் உதவி பெட்டியைதான் தேடினாள் அவன் காயத்திற்கு மருந்து இடும் பொருட்டு..

குளோவ் பாக்ஸ் திறந்துகொண்டதில் அதிலிருந்த முதலுதவி பெட்டியும் கீழே விழுந்திருந்தது.

அவனின் காயத்திற்கு மருந்து போடும் அவசரத்தில் அதை எடுப்பதற்காக அவள் குனியவும், மோதிகொண்டதில் கையிலிருந்து கீழே விழுந்த போனை எடுக்கும் பொருட்டு அவன் குனியவும் சரியாக இருந்தது.

இருவரும் ஒரே நேரத்தில் குனிந்ததில் இருவர் தலையும் ஒன்றோடொன்று மோதிக்கொள்ள, ஏற்கனவே முட்டி மோதிகொண்டவனுக்கு இப்போது தலையே அதிர்வது போலதான் இருந்தது.

வலிபொறுக்க முடியாமல் “அடியேய்..” என்று மீண்டும் நெற்றியை பிடித்தபடி அவன் எரிந்து விழ, “ஐய்யோ… சாரி.. சாரி..” என்று கையை உதறியவள்,

குனிந்து அந்த முதலுதவி பெட்டியை எடுக்க, அதன் பின்னே குனிந்து தன் போனை எடுத்தவனின் பார்வையில் அப்போதுதான் பட்டது பென்சிலால் வரையப்பட்டிருந்த அந்த குழந்தை படம்.

அதை பார்த்த மாத்திரத்திலேயே கையில் எடுத்தவனால் அந்த பென்சில் டிராயிங்கிலிருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.

காரணம் அந்தளவிற்கு தத்ரூபமாகவும், உயிரூட்டமாகவும் இருந்தது அந்த பென்சில் டிராயிங்.

அத்தோடு அதை உற்றுபார்த்தவனுக்கு அப்போதுதான் அந்த குழந்தையின் உருவம் முழுமையும் ‘நிஷா’ என்ற பெயராலே வரையப்பட்டிருக்க, அதைபார்த்து விழிகள் விரித்தவனின் விழிகள், அவசரஅவசரமாக அந்த டிராயிங்கிற்கு கீழே ஆர்ட் பை என்று போடப்பட்டிருந்த கையெழுத்தைதான் பார்த்தது.  

ஆர்ட் சிக்னேச்சர் போன்று பெண் முக சாயலோடு சேர்த்து ஏதோ கையெழுத்து போன்று சுழிக்கப்பட்டிருப்பதை பார்த்தவன்,

“இது யார் டிரா பண்ணது..?” என்றான் தன் கையிலிருந்த டிராயிங்கை அவளிடம் சுட்டிகாட்டி.

காட்டனில் டின்சரை நனைத்தபடியே அவள், “நான் தான்..” என்க,

விழிகளில் ஒருவித ஆர்வத்துடனே “இந்த சைன்..?” என்றவன் முடிக்கும் முன்பே, “என்னோடதான் சைன்” என்றவள் காட்டன் கொண்டு அவன் காயத்தை சுத்தப்படுத்த, அதுவரையும் அவன் இருந்த மனநிலையும், அவன் முகத்தோற்றமும் மொத்தமாக மாறித்தான் போனது அவளின் பதிலால்.

மாறியதோடு அவன் இதழ்களிலும் லேசாக குறுநகை மின்ன, அந்த குறுநகையோடே இப்போது அவளை பார்த்தான் மீராநந்தன்.

ஆனால் அவளோ அவன் காயத்திற்கு முதலுதவி சிகிச்சை கொடுத்து கொண்டிருக்க, அவன் பார்வை என்னவோ அவள் மீதேதான் இருந்தது.

அவள் முகத்தில் எந்த வித ஒப்பனைகளும் இல்லை. புருவத்தில் கூட திருத்தங்கள் இல்லை. அவள் முகம் முழுக்க ஒருவித பயம், பதற்றம் பரவியிருக்க அவள் விழிகளிலோ அப்பாவித்தனம்தான் நிறைந்திருந்தது.

நெற்றியில் பொட்டில்லை. அவள் காது, கழுத்து, கைகள் கூட ஏதும் இல்லாமல் வெற்றிடமாகத்தான் இருந்தது.

அள்ளி முடிந்திருந்த அவள் கூந்தலிலிருந்து பிரிந்த ஒற்றை முடிக்கற்றை மட்டும் அவள் காதோரத்தில் அழகாய் படர்ந்திருந்தது.  

எதுவுமே அணியாமல் இருப்பது அவளுக்கு ஒரு குறையாக இல்லாமல் அவளை மேலும் அழகுபடுத்தும் நிறைகளாகத்தான் அவன் கண்களுக்கு தெரிந்தது.

எந்தவித அலங்காரமும் இல்லாத பௌர்ணமி நிலவிற்கு எப்படி வெண்மை அழகோ, அவளுக்கும் அப்படித்தான் இருந்தது அவள் அணிந்திருந்த அந்த தூய வெண்மை நிற சல்வார்.

அவளை பார்த்த மாத்திரத்திலேயே அவனுக்கு பிடித்துவிட, இத்தனை நெருக்கத்தில் இப்படியே அவளை பார்த்து கொண்டு இருக்க வேண்டும் போல இருந்தது அவனுக்கு.

அவள் யார்..? என்ன வென்று தெரியாமலே அவளை காதலிக்கவும் ஆரம்பித்திருந்தது அவன் மனம்.

இதழ்களில் குறுநகையுடன் விழிகளில் காதலோடு அவன் அவளையே பார்த்திருக்க,

அவன் காயத்தை சுத்தம் செய்து, அந்த காயத்தின் மீது களிம்பை தடவும் போது அவன் பார்வை தன் மீது இருப்பதையே கவனித்தாள் பிரதிக்ஷா.

அவன் பார்வையும் அவன் புன்னகையும் அவளுக்கு புதிதாக இருந்தது.

சற்று முன் வார்த்தைக்கு வார்த்தை எரிந்துவிழுந்தவனின் திடீர் முகமாற்றத்திற்கு காரணம் என்னவென்று அவளுக்கு விளங்கவில்லை.

அதனாலே அவனிடமிருந்து சற்று விலகி அமர்ந்தவள், பெயருக்கென்று “வலிக்குதா..?” என்றாள் அவனை பார்த்து.

அவளின் கேள்விக்கு இல்லை என்பது போல் வெண்பற்களை காட்டி புன்னகைத்தபடியே அவன் தலையை அசைக்க, “இவன் என்ன லூசா..? இப்ப எதுக்கு தேவையில்லாம சிரிக்கிறான்..? தலையில அடிப்பட்டதுல எதாவது ஆகிடுச்சா..?” என்று தன்னைத்தானே கேட்டுகொண்டவளுக்கு அடுத்து என்ன கேட்பதென்றும் தெரியவில்லை.

மீண்டும் அவனை பார்த்தாள். அவனோ இப்போதும் வெண்பற்கள் காட்டி சிரித்த வண்ணமாகவேதான் இருந்தான்.

சற்றுமுன் பேனரில் பார்த்த அதே சிரிப்பு. அவளையும் அறியாமல் அவள் கண்களை கொள்ளை கொண்ட அதே சிரிப்பு. எங்கே மீண்டும் தன் கண்கள் அவனை இரசிக்க ஆரம்பித்துவிடுமோ என்றெண்ணி சட்டென்று பார்வையை தாழ்த்திகொண்டாள்.

பார்வையை தாழ்த்திகொண்டவளின் முகத்தையே பார்த்திருந்தவனுக்கு என்ன தோன்றியதோ, “ஏய்… இந்த நிஷா..” என்று ஆரம்பித்தவன், பின் “சாரி… இந்த நிஷா உங்க குழந்தையா..?” என்று மரியாதையோடு கேட்க, அவளுக்கோ ஆச்சரியம்தான் இவனா மரியாதை கொடுத்து பேசுவது என்று.

அந்த அதிர்ச்சியோடே இல்லை என்பது போல் மறுப்பாய் தலையை அசைத்தவள், “என் ஃப்ரண்டோட குழந்தை.. நாளைக்கு அவளுக்கு பர்த்டே அதான் கிஃப்ட் பண்ணலாம்னு டிரா பண்ணியிருக்கேன்” என்றவள் அதுவரை அவள் கையிலிருந்த டிராயிங்கை வாங்கி ரோல் செய்து குளேவ் பாக்சில் வைத்தாள்.

இதழ்களில் மென்சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தவன் “கிஃப்ட்-னு சொல்றீங்க..? கவர் பண்ணலையா..?” என்றவனின் கேள்விக்கு கஷ்டப்பட்டு புன்னகைத்தவளுக்கு தானே தெரியும், அந்த டிராயிங்-ஐ கூட யாருக்கும் தெரியாமல் அவள் பாத்ரூமிற்குள் இருந்து வரைந்தாள் என்று.

பின்  பேச்சை மாற்றும் விதமாகவும் மேற்கொண்டு அவன் கேள்வி கேட்கா வண்ணம், “ஐம் சாரி.. நான் வேணும்னு பிரேக் போடல.. நீங்க சொன்ன அந்த பேட்வோர்ஸ்-ஆலதான்..” என்றவள் மேற்கொண்டு சொல்ல முடியாமல் இழுக்க, அவனுக்கும் அவன் நிலை புரியவே செய்தது.

அத்தோடு அவள் முன்னிலையில் தான் அப்படி பேசியதை நினைத்து, “நந்தன்” என்று சத்தமில்லாமல் பற்களை கடித்துகொண்டவன்,

“ஆக்சுவலி நான் தாங்க உங்க கிட்ட சாரி கேட்கணும்.” என்றவனை புரியாமல் பார்த்தாள் பிரதிக்ஷா.

அவளின் முகபாவனையை வைத்தே அவள் மனதை படித்தவன்,

“எல்லாத்துக்கும் காரணமே அந்த மயி…” என்று ஆரம்பித்தவன், மேற்கொண்டு அந்த வார்த்தையை சொல்லாமல் நாக்கை கடித்துகொண்டு அவளை பார்த்ததோடு, கண்களை சுருக்கி “சாரி.. சாரி” என்றும் சொல்ல, அவன் செயலை பார்த்து அவளுக்குமே இப்போது சிரிப்புதான் வந்தது.

இருந்தும் அவன் முன் சிரித்துவிடக்கூடாதென்று கீழ் அதரங்களை அழுந்த கடித்துகொண்டாள்.

“என்ன பிக்-அப் பண்ண அவன் அனுப்பன கார் பாதி வழியிலே பிரேக் டவுன் ஆகிடுச்சிங்க. அத அவன் எனக்கு இன்ஃபார்ம் பண்ணவும் இல்ல. அது தெரியாம நான் தான் தப்பா உங்க கார்-ல ஏறி உங்களையும் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன். ஐ அம் சாரி.” என்றவனின் வார்த்தைகள் மட்டும் அல்ல அவனின் கண்களும் மனப்பூர்வமாக தான் செய்த தவறுக்கு அவளிடம் மன்னிப்பு கேட்க, அவளாலும் அவன் மன்னிப்பை மறுக்க முடியவில்லை.

அதனாலே, “இட்ஸ் ஓகே… நீங்க தெரியாமதன பண்ணீங்க..” என்றாள் அவனை சமாதனப்படுத்தும் விதமாக.

அவள் கூறியதை கேட்டு அவன் இதழ்களில் புன்னகை தவழ,

“ஏங்க…” என்று மீண்டும் அவளை அழைத்தவன்,  “உங்களுக்கு வொயிட் கலர்-னா ரொம்ப பிடிக்குமோ..?” என்றவனின் கேள்வியால் அவள் முகம் சட்டென்று மாறியதோடு, அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்றும் அவளுக்கு தெரியவில்லை.

முன்பின் தெரியாத ஒருவனிடம் போய் தனக்கு நடந்த அவலத்தை பற்றியெல்லாம் அவளால் சொல்ல முடியுமா..?

அதனாலே கைகளை பிசைந்தபடி அவள் அமைதியாய் இருக்க,

அவளின் முகமாற்றத்தை கவனித்தவனுக்கோ ஏன் அப்படி கேட்டோம் என்றாகிவிட்டது.

“டேய் நந்தன்… இதெல்லாம் ஒரு கேள்வியாடா..? எதாவது சொல்லி சமாளி” என்று தன்னிடமே பேசிக்கொண்டவன், பின் நிலமையை சமாளிக்கும் விதமாக,

“இல்லங்க… உங்க கார்.. கார் சீட்.. உங்க டிரஸ்..” என்று இழுத்தவனின் பார்வையில், காரில் இருந்த அந்த மீராபொம்மையும் பட, “ஆ.. அப்புறம் இந்த மீரா..” என்றவாறே அதையும் சுட்டிகாட்டி,

“எல்லாமே வொயிட்-ல இருந்துது அதான் கேட்டேங்க.” என்று மென் புன்னகையோடே அவன் சொன்னபோதும் அவள் முகம் மாறவில்லை.

அதனாலே “ஏங்க.. எனக்கும் வொயிட் கலர் ரொம்ப பிடிக்கும்ங்க.. அதனாலதான் அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காம இந்த வொயிட் கலர் ஷர்வானி-அ எடுத்தேன்.” என்றவன், சர்வசாதாரணமாக “நல்லா இருக்கா..?” என்று அவளிடம் கேட்டுவிட, அவள் தான் அவனின் கேள்வியால் மேலும் திக்குமுக்காடி போனாள்.

அத்தோடு அவன் சொல்லிதான் அவன் உடையை அவள் கவனித்தது கூட.

பேனரில் பார்த்ததை விடவே இந்த வெள்ளை நிற ஷர்வானியில் இன்னும் அவன் மிடுக்காகவே இருந்தான்.

ஆனால் அவள் தான் இப்போது அவனை இரசிக்கும் மனநிலையில் எல்லாம் இல்லை. காரணம் இன்னும் ஒரு மணிநேரத்தில் அவள் அவள் வீட்டில் இருந்தாக வேண்டும்.

அதனாலே, அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் “சாரி… எனக்கு டைம் ஆகுது… கிளம்பலாமா..?” என்றவளின் கேள்விக்கு அவனும் இழுவையாக சரி என்பதுபோல் தலையை அசைக்க அவளும் காரை கிளப்பினாள்.

காரிலிருந்த டிஜிட்டல் கிளாக்கையும், சாலையையும் மாறி மாறி பார்த்தவாறே அவள் காரை ஓட்டிகொண்டிருக்க, அவன் பார்வை என்னவோ அவள் மீதேதான் இருந்தது.

அவளையே பார்த்துகொண்டிருந்தவனுக்கு அவளை பற்றி தெரிந்தகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தான் உள்ளுக்குள் அதிகமாக இருந்தது.

ஆனால் எப்படி தெரிந்துகொள்வது என்று தீவிரமாக யோசித்தவன்,

“ஏங்க…. நீங்க சென்னையா..?” என்றான் மீண்டும் அவனே பேச்சை ஆரம்பிக்கும் விதமாக.

அவனை பார்க்காமலேயே “வெக்கேஷனுக்கு வந்திருக்கேன்..” என்று ஒரே வார்த்தையில் அவள் முடித்துவிட, அவனால் மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாமல் போனது.

“இப்படி பட்டும் படாம பதில் சொன்னா.. நான் எப்படிடி உன்ன பத்தி தெரிஞ்சிகிறது..?” என்று முனகியவாறே முன்னுச்சியை கோதிவிட்டவனுக்கு அடுத்து அவளிடம் என்ன கேட்பதென்று தெரியவில்லை.

இப்படியே சில கணங்கள் நீடிக்க… “டைம்-அ வேஸ்ட் பண்ணாம எதாவது பேசு நந்தன்.. எதாவது பேசி அவள பத்தி தெரிஞ்சிக்கோ” என்று அவன் மனம் வேறு அவனை உந்திதள்ள,

“ஏங்க..” என்று மீண்டும் அவளை அழைத்தவன், “என்ன பத்தி எதுவும் கேட்கமாட்டீங்களா..?” என்றான் அவளை பேச வைக்கும் பொருட்டு.

“கேட்க என்ன இருக்கு..? இன்னும் இரண்டு மணிநேரத்துல கல்யாணத்த வச்சிகிட்டு, ஊரவிட்டு ஓடிபோகபோற புது மாப்பிளை” என்றவள் சொன்ன தோணியில் மீராநந்தனோ வெடித்து சிரித்துவிட்டான்.

அவனின் கம்பீரம் நிறைந்த சிரிப்பொலி அவளையும் மீறிகொண்டு அவனை பார்க்கவே வைத்தது.

சிரிப்பதற்கு கூட சென்டிமீட்டர் அளவுவைத்து சிரிப்பவர்களை பார்த்து பார்த்து சிரிப்பதையே மறந்து போயிருந்தவளுக்கு வாய்விட்டு அவன் சிரிப்பதை பார்க்க பிடித்திருந்தது.

வெண்பற்கள் தெரிய.. மனதிலிருந்து உண்மையாய், அழகாய் சிரித்தான். அவனின் அந்த கள்ளமில்லாத சிரிப்பை பார்த்துகொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.

அவனையே பார்த்திருந்தவள் சாலையில் இருந்த பேரிகேட்டை கவனிக்கவில்லை.

அதில் அவள் இடிக்க போன தருணம், “ஏங்க பேரிகேட்-ங்க” என்று விழிகள் விரித்து கத்தியவன் தன் வலக்கரத்தால் ஸ்டியரிங்கை பற்றி பேரிகேட்டில் இடித்துவிடாமல் இலாவகமாக காரை வளைக்க, அவளோ பயத்தில் கண்களை இறுக்கமாக மூடிகொண்டாள்.

எல்லாமே சில கணங்களில் நடந்தேறி இருந்தது. அவன் மட்டும் கொஞ்சம் சுதாரித்திருக்காவிட்டால் இந்நேரம் அவர்கள் கார் பேரிகேட்டில் மோதி விபத்துக்குள்ளாவது நிச்சயம்.

“ஒன்னும் ஆகலங்க… கண்ண தொறங்க.” என்றவன் சொன்ன பின் தான் அவளும் மெல்ல கண்களை திறந்தாள். கண்களை திறந்தாலும் உள்ளுக்குள் அவள் இதயம் தாறுமாறாக துடித்துகொண்டிருந்தது சற்றுமுன் நடக்க இருந்த களேபரத்தை எண்ணி.

அவளுக்குள் இருந்த பயம் அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிய, பின் மீராநந்தன் தான், “நான் டிரைவ் பண்ணட்டுமாங்க..?” என்று கேட்டபோது வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தவள், அப்போதுதான் ஸ்டியரிங்கை பற்றியிருந்தவனின் கரங்களுக்குள் தன் கரம் இருப்பதை கவனித்திருந்தாள்.

கவனித்த கணமே சட்டென்று அவள் தன் கையை பின்னுக்கு இழுத்துகொள்ள, அவள் செயலால் அவனுக்குமே ஒரு மாதிரியாகி விட்டது.

அவன் ஒன்றும் வேண்டுமென்றே அவள் கரத்தை பற்றவில்லையே. பேரிகேட்டில் அவள் இடித்துவிடாதவாறு அவசரத்தில் ஸ்டியரிங்கை பிடித்தவனும் கவனிக்கவில்லை அவள் கரத்தையும் சேர்த்து பிடித்திருப்பதை.

அவளின் செயலால் “சாரி-ங்க” என்றவாறே அதுவரை ஸ்டியரிங் மீதிருந்த தன் கரத்தை அவன் எடுத்துகொள்ள, அவனின் சாரி-யால் அவளுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது.

என்ன செய்ய சத்தியனின் இறப்பிற்கு பின் அவள் குடும்ப ஆண்களிடம் கூட ஒரு நிமிடத்திற்கு மேல் அவள் பேசியது கிடையாது. அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதோடு நிறுத்திகொள்வாள்.

இத்தனைக்கும் இத்தனை வருடங்களில் அவள் முகம் பார்த்து பேசும் ஒரே ஆண் மகன் என்றால்.. அது அவளின் அண்ணன் இராஜவர்மன் மட்டும் தான்.

அப்படிப்பட்டவளால் முன்பின் தெரியாத ஒரு ஆண்மகனின் தொடுகையை எப்படி இயல்பாக எடுத்து கொள்ள முடியும்..

நிச்சயம் அவன் வேண்டுமென்றே அவளை தொடவில்லைதான். அது அவளுக்கும் தெரியும்.

ஆனால் உதவிக்காக ஒருவன் தன்னை தொடுவதைகூட ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் அவள் இல்லை என்பதுதான் உண்மை.

வார்த்தைக்கு வார்த்தை சிரித்து பேசி கொண்டு வந்தவன் இப்போது அமைதியாய் வர, அதுவே அவளுக்கு சங்கடமாகத்தான் இருந்தது.

இத்தனைக்கும் அவன் யார் என்றே அவளுக்கு தெரியாது. இரண்டு மணிநேரத்திற்கு முன் தான் அவனை அவள் சந்தித்து கூட. இருந்தும் அவனின் முக வாட்டம் உள்ளுக்குள் அவளை என்னவோ செய்தது.

சற்றுமும் தான் அவனிடம் அப்படி நடந்திருக்க கூடாதோ என்று அவள் மனம் வருத்தம் கொள்ள கூட செய்தது.

10 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 20
Blog
கவிதை…மாயோன…
Jan 23, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 20

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஒரு முடிவெடுத்தவனாய் அவள் முகம் நோக்கி மேலும் அவன் குனிய, அவனின் உஷ்ண மூச்சிகாற்றின் தீண்...

Read more →
அத்தியாயம் - 3
Blog
நாவல்…வேங்க…
Jan 20, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 3

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

காரை ஓட்டியவாறே அவனை பார்த்தாள். வார்த்தைக்கு வார்த்தை சிரித்து பேசிகொண்டிருந்தவன் இப்போத...

Read more →
அத்தியாயம் - 1
Blog
நாவல்…வேங்க…
Jan 02, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 1

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(2)

மணி நள்ளிரவு பன்னிரண்டை நெருங்கி கொண்டிருந்த தருணம் அது.

செ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels