“இந்த பொண்ணு பார்க்க அழகா மார்டன்-ஆ இருக்கா இல்ல… பேஷன் டிசைனர்” என்றவாறே போனை திரும்பி அந்த பெண்ணின் புகைப்படத்தை அவனிடம் காட்ட,
“எனக்கு பிடிக்கல” என்றான் அந்த புகைப்படத்தை பார்க்காமலேயே ரிஷப்.
“விளையாடுறீயா..? இந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்..?” என்று அவனும் விடாமல் கேள்வியெழுப்ப,
“ஹேய்.. நான் எனக்கு கல்யாணமே பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடான்னா ஏன் பொண்ண புடிக்கல.. புடலங்காய பிடிக்கலன்னு விசாரணை பண்ணிட்டு இருக்க..?” என்றவனின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்துதான் போனான் கவின்.
அந்த அதிர்ச்சியோடே “என்னது கல்யாணம் பிடிக்கலையா..? அப்போ கடைசி வரைக்கும் இப்படியே இருக்க போறீயா..?” என்றவன் முடிக்கவில்லை அதற்குள்.
“இருக்க போறீயா இல்ல.. இருக்க போறோம்” என்றான் உனக்கும் சேர்த்து நானே முடிவெடுத்துவிட்டேன் என்பது போல்.
அவன் பதிலால் மேலும் அதிர்ந்து போனவன், “ஐய்ய ச்சே பே.. நைட் நீ கட்டிபுடிச்சிட்டு தூங்கறதுக்காக நானும் கல்யாணம் பண்ணாம உன் கூடவே இருக்கணுமா..? என்னால முடியாதுப்பா” என்று முகத்தை அஷ்ட கோணலாய் வைத்து கொண்டு சொன்னவன்,
“இங்க பாரு டார்லிங்… என்னைக்கு நான் வயசுக்கு வந்தேனோ அன்னைலேந்து ஒவ்வொரு நைட்டயும் கடக்க நான் படுற வேதனை இருக்கே அது என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.” என்றவனை பார்த்து,
“அதான் ரீமா, ஜானு, வர்ஷா-ன்னு பெரிய லிஸ்டே வச்சியிருக்கியே.. அவங்க போதாதா உன் நைட்-அ கடக்க” என்று கிடைத்த சந்தர்பத்தில் ரிஷப்-பும் அவனை வார,
“ஹே அவங்க என் ஸ்கில்-அ டவலப் பண்ண மட்டும்தான்” என்று வெட்கமே இல்லாமல் சொன்னவனை பார்த்து ரிஷப் “தூ…” என்க,
“நீ என்ன எவ்வளோ கழுவி ஊத்துனாலும் சரி.. நான் கல்யாணம் பண்ணியே ஆவேன்” என்று தீர்க்கமாக சொன்னவன், பின் ஏதோ நினைவு வந்தவனாய்
அவன் அருகில் சென்று அவன் மோவாயை பிடித்து இப்படியும் அப்படியுமா திருப்ப, “என்ன..?” என்றான் ரிஷப்.
ஒன்றுமில்லை என்பது போல் தலையை இருபுறமாக அசைத்தவன், “எதுக்கும் உனக்கு ஒரு மெடிக்கல் செக்-கப் பண்ணலாமா..?“ என்று கேட்க,
அவன் கையை தட்டிவிட்ட ரிஷப்போ, “எனக்கு எதுக்கு..?” என்றான் எரிச்சலோடே.
“ஏன்னா..“ என்று இழுத்தவாறே அவனை விட்டு சற்று தள்ளி நின்றுகொண்டவனுக்கு உள்ளுக்குள் பயம்தான் அவனிடம் எப்படி அன்று ரீமா தன்னிடம் கேட்ட கேள்வி குறித்து கேட்பதென்று.
இருந்தும் “ஆக்சுவலி ரீமா தான் இதகூட என்கிட்ட கேட்டா..” என்றவன் முடிக்கவில்லை, அதற்குள், “என்ன கேட்டா..?” என்றான் அவசரமாக ரிஷப்.
“எனக்கு தெரிஞ்சி நீ பொண்ணுங்க கிட்ட குளோஸ்-ஆ இருந்து.. ஏன் நீ பேசி கூட நான்பார்த்தது இல்ல. அப்படியே பேசுறதா இருந்தாலும் நீ எறிஞ்சி விழறதுல அந்த பொண்ணுங்க அதுக்கப்புறம் உன்ன திரும்பி பார்க்க கூட பயப்படுதுங்க. அதனால ஒருவேளை நீ கே(gay)-வா இருக்க…” என்றவன் முழுதாய் சொல்லி முடிக்கும் முன்பே,
அவன் சொல்லவருவதன் அர்த்தம் புரிந்துகொண்டரிஷப்-போ “செருப்பு பிஞ்சிடும்” என்றதோடு காலிலிருந்த செருப்பையும் கழற்றி அவன் மீது வீச. அதை இலாவகமாக பற்றி கொண்ட கவினோ, ஒரு விரல் உயர்த்தி “அவுட்” என்று சொல்லிவிட்டு சிரிக்க,
அவனோ இன்னொரு செருப்பையும் கழற்றி அவனை நோக்கி எறிந்தான்.
அதுவும் தன் மீது படாதவாறு தள்ளி நின்று கொண்டவன்,
“அப்புறம் என்னதான் டார்லிங் உனக்கு பிரச்சனை..?” என்று கேட்டவாறே அவன் அருகில் சென்று அமர்ந்தவன்,
“உனக்கு ஏண்டா பொண்ணுங்கள பார்த்தாலே பிடிக்க மாட்டிங்குது. ஏன் அவங்ககிட்ட எரி எரி-ன்னு எறிஞ்சிவிழற.. அதுவும் என் கூட இருந்துகிட்டு” என்றவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் ரிஷப் போனை நோண்ட ஆரம்பிக்க,
“நம்ம சைன்ஸ் மிஸ் சொல்லவாங்க இல்ல.. எதிர் எதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும்-னு. அது காந்தத்துக்கு மட்டும் இல்ல டார்லிங்.. மனுஷங்களுக்கும் பொருந்தும். ஒரு பொண்ணுன்னா ஒரு ஆண்-அ கவர்ந்து இழுக்கணும். ஒரு ஆண்ணா ஒரு பெண்ணோட கவர்ச்சியில விழணும். இதுதான் இயற்கை..” என்றவனை ஏகத்துக்கும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அவன் போனை பார்க்க,
அவன் மோவாயை பற்றி தன்னை பார்க்க வைத்தவன், “நிஜமாலுமே எந்த பொண்ண பார்த்துமே உனக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கலையா..? என்று கேட்டவனை பார்த்து ரிஷப் முறைக்க,
“சரி.. இதுவரைக்கும் பறக்கலனா என்ன.. இதுக்கப்புறம் பறக்க வச்சிடுவோம்..” என்று தன் கேள்விக்கு தானே பதில் சொல்லி கொண்டவன்,
“இனி பொண்ணுங்க கிட்ட எப்படி பேசணும்னு நான் உனக்கு டிரெயின் பண்றேன் டார்லிங். கை வசம் நாலஞ்சி பிக் அப் லைன்ஸ் இருந்தா போதும் ஈஸியா மடக்கிடலாம்” என்றவன் பின் ஏதோ நினைவு வந்தவனாய்,
“அப்புறம் இன்னைக்கு காலையில காலேஜ் ஃபங்கஷனுக்கு டேட் கேட்டு ஒரு பொண்ணு வந்தாளே.. அவ பேர் கூட, “ என்று இருவிரலால் கீழ் அதரங்களில் தாளம் போட்டவாறே கவின் யோசிக்க,
போனை நோண்டிக்கொண்டிருந்த ரிஷப் நந்தனோ “இதழ்” என்று சில கணங்கள் நிறுத்தி “ழினி” என்றான்.
“ஆ.. இதழினி… பாவம் அந்த பொண்ணுக்கிட்ட கேட்ட மாதிரி அரகண்ட்-ஆன கேள்வியயெல்லாம் இனி கனவிலும் மறந்து எந்த பொண்ணுகிட்டயும் கேட்டுடாதா. நெக்ஸ்ட் வீக் கெஸ்ட்-ஆ நாம போற காலேஜ் கூட விமன்ஸ் காலேஜ் தான். அங்கயே உனக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ண பார்க்கறோம்.. தட்டி தூக்கறோம்.. அம்மா ஆசைப்படி ஆறு மாசத்துக்குள்ள உனக்கு கல்யாணத்த முடிக்கறோம். சரியா..?” என்றவன் கட்டை விரலை உயர்த்தி காட்ட, புருவமத்தியை உயர்த்தி ஒரு அவனை ஒரு பார்வை பார்த்த ரிஷப்போ,
“மூடிட்டு வர்றீயா.. போய் தூங்கலாம்” என்றதோடு எழுந்து படுக்கை அறை நோக்கி செல்ல,
“அப்போ இவ்வளோ நேரம் நான் தம் கட்டி பேசுனது எல்லாமே வேஸ்ட்-ஆ” என்று தன்னிடமே கேட்டு கொண்டவனுக்கு தெரியவில்லை அவனை எப்படி இந்த விஷயத்தில் கையாள்வதென்று.
செல்லும் அவனை பார்த்தவாறே “ம்..” என்று ஏக்க பெருமூச்சிவிட்டவன், “நான் வேற பெரிய பருப்புகணக்கா.. அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கறேன்னு அம்மா-கிட்ட சொல்லிட்டேன். இவன் போற போக்க பார்த்தா கூடிய சீக்கரத்துல அவன மாதிரி இவன் என்ன மாத்துனாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல போலவே” என்று புலம்பியவாறே அவனும் படுக்கையில் சென்று விழுந்தான்.
என்ன செய்ய ரிஷப்-பும் வேண்டுமென்றா இப்படி இருக்கிறான்.
தன்னை அவமான படுத்திய சொந்த பந்தங்கள் முன்னிலையிலும், கேலி செய்த சக மாணவர்கள் முன்னிலையிலும் தந்தையின் தயவு இல்லாமல் முன்னேற வேண்டும் என்ற பிடிவாதத்தில் ஓடிக்கொண்டிருந்தவனுக்கு இதற்கெல்லாம் நேரம் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மனதிற்கு பிடித்தமான தொழில், புகழின் உச்சம், கள்ளம் கபடமில்லாத கவினின் நட்பு இதை தாண்டி வேறெதும் பெரிதாக அவனுக்கு தேவைப்பட்டது இல்லை.
அவனை பொறுத்தமட்டில் இந்த வாழ்வை சந்தோஷமாக வாழ இதுவே போதுமானதாக தோன்றியது.
அதனாலே தன்னை சுற்றிசுற்றி வந்த பெண்கள் யாரிடமும் அவனுக்கு பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை.
அத்தோடு இன்றைய காலகட்டத்தில் திருமணம் செய்த கையோடு விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் நிற்பவர்களை அவனும் பார்க்கிறான் தானே.
ஏன் உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்ட எத்தனையோ திரைப்பிரபலங்கள் கூட இப்போது இலகுவாக விவாகாரத்து செய்வதை அருகில் இருந்து பார்த்தவனுக்கு காதல் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது.. திருமணம் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது.
அடுத்தவரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து அந்த வாழ்க்கையில் பிடித்தமில்லாமல் வாழ்ந்து பின் விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலுக்கு சென்று நிற்பதற்கு திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது என்பதுதான் அவன் வாதம்.
அவனை பொறுத்தமட்டில் இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் வாழ்க்கையே நிறைவானதுதான்.
அதனால் தான் இதுநாள் வரை அவன் திருமணத்திற்கு பிடிகொடுக்காமல் இருப்பது கூட.
நேற்று தாரிகாவிடம் அவர்கள் இருவர் குறித்து இதழினி சொன்னவை அனைத்தும் செய்திதாள்களில் கிசுகிசுவாக வந்திருக்க, இது எதுவும் தெரியாமல் எப்போதும் போல் கல்லூரிக்கு கிளம்பிகொண்டிருந்தாள் இதழினி
“அக்கா.. இங்க பாருங்களேன்.. ரிஷன் கவின் பத்தி என்னவெல்லாம் எழுதியிருக்காங்கன்னு. அவங்க பாட்டு ஹிட் ஆக கூடாதுன்னுதான் இப்படில்லாம் போட்டு இருக்காங்க” என்று புலம்பியவாறே ஆரண்யா தன் கையிலிருந்த செய்திதாளை இதழினியிடம் காட்ட,
அவர்களின் பெயரை காதில் வாங்கிய இதழினிக்கோ நேற்று அவர்களால் தனக்கு நேர்ந்த அவமானங்கள்தான் நினைவிற்கு வந்தது.
அந்த அவமானங்கள் தந்த கோவத்தின் வெளிப்பாடாய் ஆரண்யா கையிலிருந்த செய்திதாளை பிடுங்கி சுக்குநூறாக கிழிக்க,
அவள் செயலால் “அக்கா” என்று அதிர்ந்தாள் சின்னவள்.
“இன்னொரு தடவ இவனுங்க பேர் உன் வாயிலேந்து வந்துது இந்த நியூஸ்பேப்பர்-அ கிழிச்சி மாதிரி உன் வாயையும் கிழிச்சிபோட்டுடுவேன். போ போய் ஸ்கூல்-க்கு கிளம்பற வழி-அ பாரு” என்றவள் கோவத்தில் கத்தி விட்டு செல்ல,
“இந்த அக்கா ஏன் இவ்வளோ கோவப்படுது” என்று வாய்க்குள் முனகியவாறே பள்ளிக்கு கிளம்ப ஆரம்பித்தாள் ஆரண்யா.
இன்னும் ஒரு வாரத்தில் ஆண்டு விழா என்பதால் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையோடு சேர்த்து தாரிகா சொல்லியிருக்கும் வேலையையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தால் இன்று வீட்டிற்கு தாமதமாகதான் வருவேன் என்று இலக்கியாவிற்கு தகவல் சொன்னவள் அதன் பின் மொத்தமாகவே வேலையில் மூழ்கி போய் விட்டாள்.
ஆண்டுவிழாவிற்கான இன்விடேஷனையும் டிசைன் செய்து முடித்தவள் அதன் பின் தான் கல்லூரியிலிருந்து கிளம்பினாள்.
வேலை நிமித்தமாக கல்லூரி பேருந்தை விட்டதால், மாற்று பேருந்து பிடித்து செல்வதற்காக பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தாள் இதழினி.
மாலை மங்கி லேசாக இருள் பரவதொடங்கியிருக்க, யாரும் அற்ற அந்த சாலையில் நடந்து செல்லவே அவளுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.
இருந்தும் சுற்றும் முற்றும் பார்த்தபடியே அவள் நடந்து சென்று கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கு எதிரில் வந்த இருவர் அவள் சற்றும் எதிர்பார்க்கா வண்ணம் அவள் முகத்திற்கு முன் எதையோ ஸ்பிரே செய்ய, அடுத்த கணமே மயங்கி சரிந்தாள் இதழினி.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் முகத்தில் சில்லென்ற தண்ணீர் பட, திடுக்குற்று கண்களை திறக்க முயன்றவளால் இமைகளை பிரிக்கவே முடியவில்லை.
வெகு சிரமப்பட்டு இமைகளை பிரித்தவளுக்கு எல்லாமே மங்களாய் தெரிய, கண்களை கசக்கிவிட்டு பார்த்தவளின் கருவிழிகள் அதிர்ச்சியில் ஒரு சுற்று விரிந்துதான் போயின அவளுக்கு அருகில் அமர்ந்திருந்த கவினை பார்த்து.
ஒரு வேளை இது கனவாக இருக்குமோ என்று மீண்டும் கண்களை கசக்கி விட்டு பார்த்தவளுக்கு, கனவில்லை நிஜம்தான் என்பது போல் அவன் அவளை பார்த்து அவன் சிரித்து கொண்டிருக்க,
“இவன் எப்படி இங்க..?” என்று சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அப்போதுதான் புரிந்தது தான் இருப்பது அவர்களின் அப்பார்ட்மெண்டில் என்று.
“நான் எப்படி இங்கவந்தேன்” என்று யோசித்தவளுக்கு அப்போதுதான் கல்லூரியிலிருந்து கிளம்பும் போது தனக்கு எதிரில் வந்த இருவர், முகத்திற்கு முன் எதையோ ஸ்பிரே செய்தது நினைவிற்கு வர, இதழினிக்கோ இப்போது பயத்தில் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டன.
அதிலும் கவினை பார்த்தபின் பயத்தில் அவளுக்கு அந்த ஏ.சி அறையிலும் வியர்த்து வழிய ஆரம்பித்துவிட்டது.
அமர்ந்த நிலையிலேயே அவனை விட்டு சற்று பின்னுக்கு தள்ளி நகர்ந்துகொண்டவள்,
“ச….சார் நீங்க நினைக்கற மாதிரி பொண்ணு நான் இல்ல சார்.. பிளீஸ் என்ன விட்டுடுங்க… நான் வீட்டுக்கு போகணும்” என்றவள் இருகரம் கூப்பி அழுதுகெஞ்ச,
“என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்களேம்மா..” என்று கேட்டு அவளை கலாய்த்த கவின்,
“ஏன்ம்மா நேத்து உன் கிட்ட நான் எவ்வளோ டீசண்ட்-ஆ நடந்துகிட்டேன். மனசார மன்னிப்பு கேட்டு ரிஷப் கிட்ட பேசி டேட்-லா கூட வாங்கி கொடுத்தேனே. இங்க மண்டைய மண்டைய ஆட்டிட்டு பிரஸ்கிட்ட எங்க கேரக்டர் பத்தி உன் இஷ்டத்துக்கு சொல்லியிருக்கியே... இது நியாயமா..?” என்றவன் கேட்க,
அவளுக்குதான் ஒன்றுமே விளங்கவில்லை.. நான் எந்த பிரஸ்ஸிடம் இவர்களை பற்றி சொன்னேன் என்று.
“சார் நான் இங்க நடந்தது பத்தியோ இல்ல உங்களை பத்தியோ எந்த பிரஸ்-கும் சொல்லல சார். என்ன நம்புங்க சார்” என்றவள் முடிக்கும் முன்பே, அந்த செய்திதாளை அவள் முகத்தில் விசிறியடித்திருந்தான் ரிஷப் நந்தன்.
“நீ சொல்லாம எப்படிடி இங்க நடந்தது எல்லாம் பேப்பர்-ல வந்துச்சி” என்று ஆக்ரோஷமாய் கேட்ட ரிஷப் நந்தனை அப்போதுதான் இதழினி கவனித்திருந்தாள்.
அழுதவாறே அவன் தூக்கியெறிந்த செய்திதாளிலிருந்த செய்தியை படித்தவளுக்கு பகீரென்ற உணர்வுதான்.
அவள் சொன்னதில் க், ச் கூட மாறாமல் அப்படியே செய்திதாளில் வந்திருக்க, அவளுக்குமே புரியவில்லைதான் இது எப்படி என்று.
“ஏன்ம்மா உன் பாய் ஃப்ரண்டுக்கு புரோமோஷன் கிடைக்கிறதுக்காக நீ எங்கள பத்தி நியூஸ் கொடுப்பியா..?” என்றான் கவினும் விடாமல்.
அவன் கூறியதை கேட்டு “பாய் ஃப்ரண்டா..?” என்று மேலும் அதிர்ந்தவளுக்கு தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
ஏற்கனவே இந்த செய்தி எப்படி பிரஸ்ஸிற்கு சென்றதென்று தெரியாமல் அவள் தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் போய் பாய்ஃப்ரண்ட், புரோமோஷன் என்று சொன்னால் பாவம் அவளும் என்ன தான் செய்வாள்.
அவர்கள் சொல்வது போல் பிரஸ்ஸிற்கு செல்லும் அளவிற்கெல்லாம் அவளுக்கு தைரியம் ஏது…? இருந்தும் இதெல்லாம் எப்படி செய்திதாளில் வந்தது என்றுதான் அவளுக்கும் தெரியவில்லை.
அத்தோடு தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை எப்படி இந்த தடியன்களுக்கு சொல்லி புரியவைப்பது என்பதுதான் அவளுக்கும் தெரியவில்லை.
யோசிக்க யோசிக்க தலையே வெடிப்பது போல் இருக்க, “ஐய்யோ பெருமாளே.. நான் எப்படி இவங்களுக்கு புரியவைப்பேன்” என்றவாறே தலையை பிடித்துகொண்டவளை கொலைவெறித்தாக்குதலோடு பார்த்து கொண்டிருந்தான் ரிஷப் நந்தன்.
காலையில் செய்திதாளை பார்த்த போது அவனுக்குள் கொழுந்து விட்ட கோவம், இப்போது அவளையே எரிக்கும் அளவிற்கு எரிமலை குழம்பாய் அவனுக்குள் கொந்தளித்து கொண்டிருந்தது.
தங்களுடைய செல்வாக்கை வைத்து இந்த செய்தியை போட்ட ரிப்போர்ட்டரை பிடித்த போது, அவனோ தன் மாமன் மகள் தாரிகா-விற்கு எந்த பிரச்சனையும் ஏற்படா வண்ணம் இதழினியை கை காட்டியிருந்தான்
ஆம் அன்று தாரிகாவுடன் வந்திருந்த அவளின் அத்தை மகன் ஒரு ரிப்போர்ட்டர் என்பதை பாவம் இதழினி அறிந்திருக்கவில்லை.
அதுதெரியாமல் அவனை அருகில் வைத்துகொண்டு அவள் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்க, அனைத்தையும் அவனும் காதில் வாங்கிகொண்டான்.
ஏற்கனவே புரோமோஷனுக்காக காத்துகொண்டிருந்தவனுக்கு இந்த செய்தி தானாக காதில் வந்து விழ, அதை தன் புரோமோஷனுக்காக பயன்படுத்திகொண்டான்.
பின் விஷயம் கேள்விட்டு அந்த செய்திதாள் உரிமையாளரே நேரில் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டதோடு, இந்த செய்தி தவறானது என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் மீடியாவில் அறிக்கை விட்ட போதுகூட ரிஷப் நந்தனால் அமைதி கொள்ள முடியவில்லை.
“எனக்கு அப்பவே தெரியும் அந்த குள்ளச்சி இந்தமாதிரி ஏதாவது வேலை பார்ப்பான்னு” என்று கோவத்தில் கத்தியவன், பின் தன் பவுன்சர்களை அனுப்பி அவளை தூக்கி வர சொல்ல, கல்லூரி முடித்து எப்போதும் அவள் இறங்கும் நிறுத்ததில் அவளுக்காக காத்திருந்தனர் அவனின் பவுன்சர்கள்.
ஆனால் வேலை நிமித்தமாக அவள் அன்று கல்லூரி பேருந்தை விட்டுவிட, அவளை தேடி கொண்டு அவளின் கல்லூரிக்கு விரைந்தனர்.
செல்லும் வழியிலேயே அவளை பார்த்தவர்கள் ஏற்கனவே தீட்டிவைத்திருந்த திட்டத்தின் படி மயக்கமருந்தை ஸ்பிரே செய்து ரிஷப் கட்டளை படி அவளை இங்கு தூக்கி வந்திருந்தனர்.
மயக்க மருந்தின் வீரியத்தால் அவள் உறங்கிகொண்டே இருக்க, பின் கவின் தான் அவள் முகத்தில் தண்ணீர் தளித்து எழுப்பினான்.
“சார் சத்தியமா எனக்கு பாய்ஃபிரண்ட்-லா யாரும் இல்ல சார்.. என்ன நம்புங்க..” என்றவள் கோவமும் அழுகையுமாக சொல்ல,
“அப்போ இதெப்படி..?” என்றான் செய்திதாளை தூக்கி பிடித்தப்படி கவின்.
“கவின்” என்றவாறே அவன் தோளை தொட்ட ரிஷப், “நீ நகரு நான் பார்த்துக்கறேன்” என்க, அவளுக்கோ வயிற்றில் புளியை கரைத்தது ரிஷ்ப நந்தனை நினைத்து.
நேற்று யார் என்றுதெரியாதபோதே அவளை வைத்து செய்தவன். இப்போது குற்றவாளியாக தன் முன் இருப்பவளை அவ்வளவு லேசில் விட்டுவிடுவானா.. என்ன..? அந்த பயம் தான் இப்போது இதழினிக்கு.