கவினின் வற்புறுத்தலுக்காக மட்டும் ஒரு லாங் டிரைவ் சென்றுவிட்டு இருவரும் அப்போதுதான் அப்பார்ட்மெண்ட் திரும்பியிருந்தனர்.
பொதுவாகவே இது போன்று கிடைக்கும் ஓய்வு நாட்களில் வெளியில் எங்கும் செல்லாமல் உறங்குவது தான் ரிஷப் நந்தனுக்கு வழமை.
காரணம் ரெக்கார்டிங், கான்சர்ட் என்று இரவு பகல் பாராமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஓய்வு நாள் என்பது அரிதாகதான் கிடைக்கும்.
அப்படி கிடைக்கும் அந்த நாளையும் அவுட்டிங் என்ற பெயரில் வீணடிக்க ரிஷப் நந்தன் விரும்ப மாட்டான்.
அதீத வேலை பளுவால் அவன் தலைக்குள் ஏறியிருக்கும் மொத்தஸ்ரெஸ்சையும் கிடைக்கும் இந்த மாதிரியான நாட்களில் உறங்கிதான் அவன் குறைப்பான்.
கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்கு பின் அவர்களுக்கு கிடைத்திருக்கும் ஓய்வு என்றால் அது இந்த ஒரு வார காலம் தான்.
இந்த ஓய்விற்காகதான் இரண்டு மூன்று கான்சர்ட்களை கூட அவன் தவிர்த்தது.
இன்று கூட அவனுக்கு வெளியில் செல்ல விருப்பமில்லைதான். ஆனால் கவினின் கட்டாயத்திற்காக மட்டும் லாங் டிரைவ் சென்றவர்கள் இரவு உணவையும் முடித்துவிட்டுதான் அப்பார்ட்மெண்டிற்கு திரும்பினர்.
ரெஃப்ரஷ் ஆகி பால்கனியில் ரிஷப் நந்தன் அமர்ந்திருக்க, வெகுநேரமாக அடித்து கொண்டிருந்த அவன் போனை எடுத்து வந்த கவினோ “டார்லிங் அம்மா..” என்றவாறே அவன் முன் நீட்டினான்.
போனை வாங்கியவனுக்கோ இப்போதும் அழைப்பை ஏற்க மனமில்லைதான்.
அழைப்பை ஏற்காமல் அவன் போனை பார்த்தபடியே இருக்க, பின் கவின் தான் “எடு டார்லிங்.. மார்னிங்லேந்து கால் பண்ணிட்டே இருக்காங்க” என்க, அதன் பின் தான் அழைப்பை ஏற்று காதில் வைத்தான் ரிஷப்.
அழைப்பை அவன் ஏற்ற கணம் “ரிஷப்… ரிஷப்..“ என்று மறுமுனையில் அவனின் தாயார் சுமதி பாசத்தோடு அவனை அழைக்க,
அவனோ “ம்.. சொல்லுங்க” என்றான் சுரமே இல்லாமல்.
முதலில் அவனுக்கு தன் பிறந்தநாள் வாழ்த்தை சொன்னவர், “ஏண்டா போன்-அ எடுக்கவே மாட்ற..? காலையிலேந்து எத்தனை தடவ போன் பண்ணியிருப்பேன்.. மதியம் கூட உன்ன பார்க்க அப்பாட்மெண்ட்-க்கு வந்தேன்.. எங்கடாபோயிருந்தீங்க..?” என்றவரின் கேள்விக்கு
“ம்மா ரெக்கார்டிங்-ல பிஸி” என்று பொய் சொன்னவன், மார்பில் கைகட்டியபடி தன்னையே பார்த்து கொண்டிருந்த கவின்-ஐ பார்த்து கண்ணடிக்க,
“நீ நடத்து” என்று முனகியவாறே அவனை பார்த்து முறுவலித்தவன் அவனுக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
“இன்னைக்கு கூட வீட்டுக்கு வரக்கூடாதா ரிஷப்..?” என்று வருத்தம் தொணித்த குரலில் சுமதிகேட்ட போது,
“அதான் சொன்னேனே… ரெக்கார்டிங்” என்றவன் இப்போது பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு சொல்ல.
அவனின் சூடான பதிலே அவருக்கு சொல்லாமல் சொல்லியது அவனுக்குள் ஆறாமல் இருக்கும் கோவத்தை.
என்ன செய்ய கிட்டதட்ட பத்தாண்டு காலமாகவே அவன் பிறந்தநாள் இப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது. அந்நாளில் அவன் வீட்டுக்கும் செல்வதில்லை.. அவர்களுடைய அழைப்பையும் ஏற்பதில்லை.
ஏன் இன்னும் சொல்லப்போனால் அந்த வீட்டிற்கு அவன் சென்றே பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்த பத்தாண்டுகளில் அவனும் அவர்களை சென்று பார்ப்பதில்லை, அவர்களையும் தன்னைபார்க்க அவன் அனுமதிப்பதில்லை.
அவனின் பதினாறாம் அகவையின் போது ஏற்பட்ட ஒரு பிரச்சனை மொத்தமாகவே அவர்களிடமிருந்து அவனை பிரித்திருந்தது.
தோளுக்கு மேல் வளர்ந்திருந்தவனை அன்று சுமதியும் அடித்திருக்க கூடாதுதான். அவரும் ஒன்றும் வேண்டுமென்றே அவனை அடிக்கவில்லையே.. அவன் அப்படி பேசியதால்தானே அவரும் அவனை அடித்தார்.
என்னதான் கோவம் என்றாலும் அவனும் கொஞ்சம் பார்த்து பேசியிருக்கலாம். அவன் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் அவரையும் மீறிக்கொண்டு அவனை அடிக்க வைத்திருந்தது.
அன்று வீட்டை விட்டு வெளியில் வந்தவன் தான். அதன் பின் எத்தனையோ முறை சுமதி அவனிடம் பேசிபார்த்துவிட்டார்..
ஏன் அழுது அவனிடம் கெஞ்சியும் பார்த்து விட்டார். ஆனால் அவன் தான் எதையும் மறக்கபோவதும் இல்லை மன்னிக்கப்போவதும் இல்லை என்றதோடு அவன் தந்தை சுதாகரன் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுக்க மாட்டேன் என்றுபிடிவாதமாய் இருந்துவிட்டான்.
அவன் பிடிவாதமாக இருக்கிறான் என்பற்காக அவனை அப்படியே அவர்களால் விட்டுவிட முடியுமா..? என்ன இருந்தாலும் பெற்ற மனமல்லவா... அதிலும் அவர்களுக்கென்றும் இருக்கும் ஒரே தவப்புதல்வனும் அவன் தானே.
அந்த தவப்புதல்வனும் பத்தாண்டு காலமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருப்பதுதான் சுமதியை அதிகம் கவலை கொள்ள வைத்தது.
துளிர்த்த கண்ணீரை துடைத்துவிட்டு கொண்டவர், “சாப்டியாப்பா..” என்க, அவனோ “ம்” என்றதோடு முடித்துகொண்டானே தவிர பதிலுக்கு அவரின் நலனை பற்றியெல்லாம் விசாரிக்கவே இல்லை. அதுவே சுமதிக்கு மேலும் சங்கடத்தைதான் ஏற்படுத்தியது.
இருந்தும் தன்னை சமன் படுத்திகொண்டவர், “ரிஷப் நான் ஏற்கனவே உன் கிட்ட இத பத்தி பேசியிருக்கேன்.” என்றவர் ஆரம்பிக்கும் போதே அவனுக்கு புரிந்துவிட்டது அடுத்து அவர் எதைப் பற்றி பேசபோகிறார் என்று.
“அதுக்கான பதில்-அ நானும் உங்ககிட்ட சொல்லிட்டேன் ம்மா..” என்றான் அவனும் பதிலுக்கு.
“இல்ல ரிஷப்.. குருதிசை முடியறதுக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணியே ஆகணும்னு காலையில கூட நம்ம குடும்ப ஜோசியர் போன் பண்ணி சொன்னாரு. குருதிசை முடிய இன்னும் ஆறுமாசம் தான் இருக்கு. இந்த ஆறுமாசத்துக்குள்ள முடியலன்னா அப்புறம் உனக்கு கல்யாணம் ஆகறதே கஷ்டம்னு வேற சொல்றாரு. எங்களுக்குன்னு இருக்கறது நீ ஒரே பையன். உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கணும்.. உன் புள்ளைங்கள தூக்கி கொஞ்சணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா..?” என்றவர் ஏக்கத்தோடு அவர் சொல்லிகொண்டிருக்கும் போதே,
“உங்க ஆசைக்காகலாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது ம்மா..” என்றான் அவனும் பட்டென்று.
“ஏன்-டா புரிஞ்சக்க மாட்ற.. எங்க ஆசைக்காக மட்டுமா சொல்றோம்.. உன் சந்தோஷத்துக்காகவும்.. எங்களுக்கு அப்புறம் உனக்கு ஒரு துணைவேணும்றதுக்காகத்தானே சொல்றோம்” என்று சொல்லும் போதே அவர் குரல் தழுதழுக்க,
“ம்மா… சும்மா அழுது டிராமாலா பண்ணிட்டு இருக்காதீங்க.. என் சந்தோஷத்த பத்திலா கூட நீங்க யோசிக்கிறீங்களா.. என்ன…? அப்புறம் என்ன சொன்னீங்க உங்களுக்கு அப்புறம் எனக்கு துணையாவா..?” என்று கேட்டு நக்கலாய் சிரித்தவன்,
“பத்துவருஷ காலமா நீங்களே எனக்கு துணையாய் இருந்தது இல்லையே. என்ன விட்டுட்டு அந்த ஆளு கூடதனஇப்பவரைக்கும் இருக்கீங்க” என்று சொல்லும் போதே அவன் கண்கள் கோவத்தில் மின்ன,
“ரிஷப் அந்த ஆளு-இல்ல அவர் உன் அப்பா” என்று அவன் வார்த்தையை திருத்தினார் சுமதி..
“ஐ நோ ம்மா… நீங்க எப்பவும் அந்த ஆளுக்குதான் சப்போர்ட் பண்ணுவீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. அதனால தான் நீங்க யாரும் வேணாம்னு நான் கிளம்பி வந்து கூட.. அப்புறம் ஏன் அடிக்கடி எனக்கு போன் பண்ணி என்ன டென்ஷன் பண்ணிட்டு இருக்கீங்கன்னுதான் எனக்கு புரியல. இது என் லைஃப்… நான் பார்த்துக்கறேன்.. நீங்க யாரும் என்ன பத்தி கவலை பட வேண்டிய அவசியம் இல்ல.“ என்று பொட்டில் அறைந்தாற்போல் அவன் சொன்னாலும், அவன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டியாகத்தான் அந்த தாயின் மனதை துளைத்தது.
கட்டிய கணவனா..? பெற்ற பிள்ளையா..? என்ற போராட்டத்தில் நாளும் பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது என்னவோ சுமதிதான்.
மகனின் கூற்று படி அவர் கணவரும் தவறு செய்தார்தான்.. அதை அவரும் மறுக்கவில்லை.. ஆனால் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்பின் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்பதுதான் அந்த தாயின் நிலைபாடு.
ஏதோ போறாத காலம்.. யாரின் கண்பட்டதோ அவர்கள் குடும்பம் இப்படி கண்ணாடியாக உடைந்திருந்தது.
அதை சரிசெய்யதான் நாளும் சுமதியும் முயன்று கொண்டிருக்கிறார். சுமதி மட்டுமல்ல அவனின் தந்தை சுதாகரும் கூட.
அவனுக்காகதான் ஆசை ஆசையாக சேர்ந்த போலீஸ் வேலையை துறந்துவிட்டு இன்று பிடித்தமே இல்லாமல் அவர் பிஸ்னஸ் செய்து கொண்டிருப்பது கூட.
அவரும் அவனை நெருங்க என்னென்னவோ செய்து பார்த்தார்தான். ஆனால் அவன் தான் அவரை தன்னை அருகில் கூட நெருங்கவிட வில்லை.
சுமதியிடமாவது அவ்வப்போதுபோனில் பேசுபவன், அவரின் அழைப்பை இதுநாள் வரை ஏற்றதே கிடையாது.
ஏன் இன்று கூட அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக காலையிலிருந்து சுதாகரும் விடாமல் அவனுக்கு அழைத்து கொண்டிருக்கிறான் தான். ஆனால் அவன் தான் யாரின் அழைப்பையும் ஏற்க போவதில்லை என்று போனை சைலண்டில் போட்டிருந்தான்.
இப்போது கூட மனம் கேட்காமல் கவின் தான் போனை எடுத்து வந்து கொடுத்ததோடு அவனை பேசவும் சொன்னது.
சுமதி மகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதுதான் மீட்டிங் முடித்து சுதாகரும் வீடு வந்து சேர்ந்திருந்தார்.
சுமதி போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தவாறே உள்ளே வந்தவர், “ரிஷப்-ஆ” என்று கேட்டவாறே அவர் கையிலிருந்த போனை ஆசை ஆசையாக வாங்கியதோடு,
“ரிஷப்” என்று பாசத்தோடு அவனை அழைக்கவும் செய்ய, அவனோ அவர் குரல் கேட்ட மறுகணமே அழைப்பை துண்டித்திருந்தான்.
இரண்டு மூன்று முறை ரிஷப் என்று அழைத்து பார்த்தவர், “வச்சிட்டான் போல” என்று சோகமாக சொல்லியவாறே சுமதியிடம் போனை கொடுக்க, அதை வாங்கியவர் மீண்டும் அவனுக்குதான் அழைத்தார்.
இரண்டு மூன்று முறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காமல் இருக்க, அதுவரை நடப்பதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த கவினோ, “நீ ஏன் டார்லிங் இப்படி இருக்க.. எடுத்துதான் பேசேன்” என்க,
அவனோ, “என்னால அந்த ஆள் கூடலாம் பேச முடியாது” என்றான் கோவமாக.
பின் கவின் தான் விடாமல் வந்து கொண்டிருந்த அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ம்மா.. நான் கவின் பேசுறேன்” என்க, அவனிடம் பேச நினைத்ததையெல்லாம் கவினிடம் கொட்டி தீர்த்து கொண்டிருந்தது அந்த தாயுள்ளம்.
“நீயாவது அவனுக்கு சொல்லி புரியவைக்க கூடாதா கவின். பாவம் அவர். அவன நினைக்காத நிமிஷம் இல்ல.. அவன பார்க்கணும்.. அவன் கிட்ட பேசணும்னு ஒவ்வொரு நிமிஷமும் துடியா துடிச்சிகிட்டு இருக்காரு. அவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணாலாவது எல்லாம் சரியாகும்-னுதான் அவரும் அவனுக்கு பார்த்து பார்த்து பொண்ணு பார்த்துகிட்டு இருக்காரு. ஆனா அவன் நான் அனுப்பன புரொஃபைல் எதையும் இதுவரைக்கும் பார்க்க கூட இல்ல.. “ என்று அழுதுகொண்டே சொல்ல,
“ம்மா.. பிளீஸ் அழாதீங்க.. நான் அவன் கிட்ட பேசுறேன். நீங்க டீட்டலைஸ்-அ எனக்கு அனுப்பி வைங்க. நான் பேசி அவன சம்மதிக்க வைக்குறேன். நீங்க எதை பத்தியும் யோசிக்காம சாப்டுட்டு போய் தூங்குங்க ம்மா..” என்று அவரை சமாதனபடுத்தி விட்டு போனை வைத்தவன், “ஏண்டா..” என்றவாறே அவன் அருகில் சென்று அமர்ந்ததோடு,
“எப்பவோ நடந்து முடிஞ்ச விஷயத்த இப்பவரைக்கும் நீ நினைச்சிட்டு பேசாம இருக்கறது ரொம்ப தப்பு டார்லிங்” என்றவனை ரிஷப் முறைத்து பார்க்க,
“ஒகே தப்பு அவர் மேலயும் இருக்குதான் பட் நீ நினைச்சா மன்னிக்கலாம் இல்லையா டார்லிங்..” என்றவனின் கேள்விக்கு,
“என்னால எதையும் மறக்கவும் முடியல.. மன்னிக்கவும் முடியல” என்று தீர்க்கமான குரலில் சொன்னவனுக்கு அன்று அவனுடன் பயிலும் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் அவமானபட்டு நின்ற நிகழ்வுதான் கண்முன் வந்து போனது.
இவர்கள் எல்லாம் சொல்வது போல் அவன் ஒன்றும் பிறந்தது முதலே சுதாகரனை வெறுக்க வில்லையே.
பதினைந்து வயது வரை சுமதியை விட சுதாகரின் செல்ல மகனாகத்தானே அந்த வீட்டில் அவன் வலம் வந்தான்.
தந்தை மகன் இடையில் அப்படியொரு பாசபிணைப்பு. பொதுவாகவே ஆண்பிள்ளைகள் அம்மா செல்லமாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் விஷயத்தில் அவன் அப்பா செல்லமாக இருந்தான்.
அப்படிப்பட்டவன் அந்த நிகழ்விற்கு பின் தானே சுதாகரனை வெறுக்க ஆரம்பித்தது.
காரணம் அன்று சக மாணவ ,மாணவிகள் முன்னிலையில் சுதாகரனால் அவமானம் பட்டு நின்றது என்னவோ அவன் தானே.. அவர்களின் கேலிகளையும் கிண்டலையும் இன்றளவும் மறக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதும் அவன் தானே.
அப்படிப்பட்டவனால் எப்படி நடந்த அனைத்தையும் மறந்துவிட்டு அவர்களிடம் சகஜமாக இருக்க முடியும்.
அவமானம் தாங்க மாட்டாமல் கை நரம்பை அறுத்துகொள்ள போனவனை அன்று கவின் மட்டும் தக்க சமயத்தில் தடுத்திருக்கா விட்டால் இந்நேரம் ரிஷப் நந்தனை புதைத்த இடத்தில் விருட்சமே வளர்ந்திருக்கும்.
சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்து தாத்தா-வின் அரவணைப்பில் மட்டுமே வளர்ந்து வந்த கவினுக்கு மியூசிக் காம்பெடிஷனுக்காக தங்கள் பள்ளிக்கு வந்த ரிஷப் நந்தனை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது.
அவனோடு நட்பு வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் தாத்தாவிடம் சொல்லி தான் பயிலும் பள்ளியிலிருந்து ரிஷப் பயிலும் பள்ளிக்கு மாற்றுதலானான்.
ஆரம்பத்தில் கவினை தன் நட்பு வட்டத்திற்குள் சேர்த்து கொள்ள மறுத்த ரிஷப் அந்த நிகழ்விற்கு பின் தான் அவனை தன் உயிர் நண்பனாக ஏற்றுகொண்டது கூட.
இருவரிடமும் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியவனுக்கு அடைக்கலம் கொடுத்து, அவனின் பள்ளிபடிப்பை முடிக்க உதவியது கூட கவினும் அவன் தாத்தாவும் தான்.
அதனால் தான் இன்றளவும் ரிஷப் கவினை விடாமல் இருப்பது.
என்னதான் கவினி-ன் குடும்பம் செழுமை நிறைந்ததாக இருந்தாலும், அவர்களை எதிர்பார்க்காமல் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பணம் சம்பாதித்தவன், அதில் வரும் வருவாயை கொண்டு தன் கல்லூரி படிப்பையும் முடித்தான்.
முறையாக இசையை கற்றுதேர்ந்த இருவரும் ஒன்று சேர்ந்து தங்கள் சேனலில் ஆல்பம் பாடல்களை வெளியிட,
அந்த ஆல்பம் பாடல்களும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற, அங்கிருந்து தான் அவர்களின் திரைபயணமும் ஆரம்பமானது.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் கவினுக்கு இத்தனை ஆண்டுகாலம் துணையாக இருந்த அவன் தாத்தா தவறிவிட,
எங்கே அந்த வீட்டிற்குள் இருந்தால் தாத்தாவின் நினைவால் கவின் அனுதினமும் கஷ்டப்படுவான் என்றுநினைத்தவன் கவினையும் தன்னோடு அழைத்து கொண்டு அப்பார்ட்மெண்டிற்கு குடியேறி இருந்தான்.
அவர்களின் பதினோரு வருட கால நட்பில் இதுநாள் வரை சிறு கீறல் கூட விழுந்தது இல்லை. ஏன் இன்றளவும் அவர்களுக்குள் சிறு கருத்து வேறு பாடு கூட வந்தது இல்லை.
அவர்களை பொறுத்தமட்டில் அவர்களுக்கு எல்லாமே இசை தான். அதனாலே வெற்றி தோல்வி பற்றியெல்லாம் அவர்கள் அதிகம் யோசித்ததுஇல்லை.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.. ஒரே மாதிரியாகத்தான் உடையணிவார்கள்.
ஏதேனும் பிரச்சனை என்றால் கூட ஒருவரையொருவர் அடுத்தவர் முன்னிலையில் விட்டு கொடுத்து கொண்டது கிடையாது. அவர்களுக்குள் இருக்கும் இந்த அந்யோன்யத்தை பார்த்துதான் திரையுலகம் அவர்களுக்கு ‘டிவின் பிரதர்ஸ்’ என்ற பெயரை சூட்டியது கூட.
என்னதான் டிவின் பிரதர்ஸ் என்று அனைவராலும் அழைக்கப்பட்டாலும் குணாதிசியங்களில் இருவரும் இரு துருவங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ரிஷப் கொஞ்சம் முன் கோபி. யார் என்னவென்று பார்க்காமல் மனதில் பட்டத்தை அவர்கள் முகத்திற்கு முன் பட்டென்று சொல்லிவிடுவான். ஆனால் கவின் முடியாது என்பதை கூட அடுத்தவர் மனம் நோகாமல் சொல்பவன்.
ரிஷப்பிற்கு பெண்கள் என்றாலே ஆகாது. அப்படியும் எந்த பெண்ணாவது அவனை நெருங்க முயற்சித்தால் சுள்ளென்று எதையாவது கேட்டு விரட்டியடித்துவிடுவான். ஆனால் கவின் பார்வையாலே பெண்களை மயக்கும் வல்லமை கொண்டவன்.
இருப்பினும் பெண்கள் அதிகம் கொண்டாடுவது என்னவோ ரிஷப் நந்தனைதான்..
ரிஷப் நந்தன் வெறித்த பார்வையோடே அமர்ந்திருக்க, ஆறுதலாக அவன் கரத்தை பற்றிய கவின்,
“அம்மா அப்பா இல்லாம வாழற வாழ்க்கை எவ்வளோ நரகமானதுன்னு அந்த வாழ்க்கை-அ வாழ்ந்து பார்த்த எனக்குதான் தெரியும் டார்லிங். உன் கோவம் நியாயமானதுதான். ஆனா உனக்காகதன அப்பாவும் தனக்கு பிடிச்ச வேலை-அ விட்டாரு. நீ அவங்களுக்கு முக்கியம்-ன்றதாலதன நீ எவ்வளோ ஹேர்ட் பண்ணாலும் அவங்க உன்னையே சுத்தி சுத்தி வராங்க. உன் கோவத்துக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுத்து ஃப்யூச்சர்-ல உன்ன நீயே குற்றவாளி ஆக்கிக்காத டார்லிங்.” என்று கவின் அவனுக்கு எடுத்து சொல்ல, ரிஷப் நந்தனிடம் மௌனம் தான்.
அவன் மௌனத்தையே சில கணங்கள் பார்த்திருந்தவன், “சரி வா உனக்கு பொண்ணு பார்க்கலாம். உனக்கு எப்படி ஹோம்லி-ஆ இல்ல மார்டன்-ஆ..?” என்று கேட்டவாறே அவன் போனுக்கு சுமதி அனுப்பியிருந்த புரொஃபைல்களை பார்க்க ஆரம்பிக்க,
“ஏய் அவங்கதான் புரியாம உளறிட்டு இருக்காங்க.. நீ கூடவா..?” என்று எரிந்து விழுந்தவன் அவன் கையிலிருந்த தன் போனை பிடுங்க போக,
அதை சுதாரித்து கொண்ட கவினோ சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்ததோடு அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவன் தாயார் அனுப்பியிருந்த புரொஃபைல்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான்.