Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 25

August 06, 2026
சந்தோஷ் குணா
0
11 min read
அத்தியாயம் - 25
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

என்ன சொல்லப்போகிறானோ..? என்ற பயம் பிரதிக்ஷாவிற்கு என்றால், ஹரிஹரனுக்கோ அப்படி என்னத்தான் சொல்லப்போகிறான் என்ற ஆர்வம்தான் அதிகம் இருந்தது.

 

அவனுக்கு மட்டுமல்ல சத்யன் குடும்பத்தார் அனைவருக்குமே அதே ஆர்வம்தான்.

 

அன்று அவர்களின் ஷாப்பிங் மாலிற்கு அவள் வந்தது முதல் தன் கைப்பட டிசைன் வரைந்து கொடுத்து நகை ஆர்டர் செய்தது வரை சொன்னவன்,

 

பின் அவள் டிசைன் செய்த நகையால் அவர்கள் நகை கடைக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்ததாகவும், அவளுக்கு நன்றி சொல்லும் பொருட்டு அவளை தேடி அலைந்ததாகவும்  சொல்ல, எங்கே எதையாவது உளறிக்கொட்டிவிடுவானோ என்று பயந்து போயிருந்தவளுக்கு அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது.

 

இப்போது அவள் புறம் திரும்பியவன், “இது உங்களுக்கு சேர வேண்டிய தொகை மேடம்” என்றவாறே ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை அவளிடம் நீட்டிய போது அவள் மட்டும் அல்ல மொத்த குடும்பமுமே அவனிடமிருந்து இப்படியொரு செயலை எதிர்ப்பார்க்கவில்லைதான்.

 

“இல்ல எனக்கு வேண்டாம்.” என்றவாறே இரண்டெட்டு அவள் பின்னோக்கி நகர,

 

“ஏன் வேண்டாம்…? இது உங்க உழைப்புக்கான ஊதியம்-ங்க. வாங்கிக்கோங்க.” என்றான் அவனும் விடாமல்.

 

அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அவள் கைகளை பிசைந்த படியே நின்றிருக்க,

 

அதுவரையும் நடப்பதையெல்லாம் பார்த்துகொண்டிருந்த ஹரிஹரனுக்கோ இப்போது பிரதிக்ஷா மீது கோவம்தான் வந்தது.

 

ஏற்கனவே அவனோடு நான்சியை பார்த்ததிலிருந்தே ஹரிஹரனுக்கு உள்ளூர எரிச்சல் தான். இதில் பிரதிக்ஷாவையும் தனக்கு தெரிந்தாற் போல் மீராநந்தன் காட்டிக் கொண்டவிதம் கொஞ்சமும் அவனுக்கு பிடிக்கவில்லை.

 

அதனால் எல்லாம் சேர்ந்து இப்போது ஹரிஹரனின் மொத்த கோவமும் பிரதிக்ஷா மீதுதான் திரும்பியிருந்தது. 

 

அந்த கோவத்தோடே, “உன்ன தான் ஜீவல் டிசைன்-லா பண்ண கூடாதுன்னு பாட்டி சொல்லியிருக்காங்க இல்ல”  என்றவன் கேட்ட கேள்வியில் பிரதிக்ஷாவிற்கு தூக்கிவாரிப்போட்டு விட்டது.

 

“இல்ல அத்தான்… அங்க டிசைன் எதுவும்..” என்று திக்கி திணறி ஆரம்பித்தவள், ஹரிஹரன் பார்த்த பார்வையில் வாயை மூடிக்கொண்டதோடு தலையையும் தாழ்த்திக்கொள்ள, மீராநந்தனுக்கோ ஹரிஹரனின் செயல் கோவத்தைதான் ஏற்படுத்தியது.

 

அந்த கோவத்தில் வெளிப்பாடாய் கை முஷ்டிகளை இறுக மூடித்திறந்தவன்,

 

இப்போது “அங்கிள்” என்று சோமசுந்தரத்தை அழைக்க, அவரும் என்ன என்பதுபோல் அவனைப் பார்த்தார்.

 

“ஆஸ் அ பிஸ்னஸ் மேன்-ஆ எனக்கு இதுதான் சரின்னு படுது அங்கிள்.” என்றவன் பிரதிக்ஷாவை சுட்டிக்காட்டி,

 

“இவங்க யாரு என்னனு இங்க வர்ற வரைக்குமே எனக்கு தெரியாது. ஆனா இவங்கள கண்டுபிடிச்சி சென்னையில இருக்கற எங்க கோல்டு ஷோரும்க்கு டிசைனர்-ஆ ஆக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்,” என்று வெகுநாட்களாக தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக சொன்னவன்,

 

“பட் டைம் காட்.. அவங்க உங்க வீட்டு மருமகளா இருக்கறதால  நாம இங்க ஆரம்பிக்கப்போற கோல்டு ஷோரும்-ல அவங்களே டிசைனிங் டீமோட ஹெட்டா இருக்கட்டுமே.” என்றவன் சொன்னபோது அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சிதான்.

 

அவன் சட்டென்று இப்படியொரு இடியை இறக்குவான் என்று அங்கு யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. அவள் உட்பட.

 

அவனின் வார்த்தைகளால் பிரதிக்ஷா அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, ஹரிஹரனோ, “இதுல எங்களுக்கு உடன்பாடு இல்லை நந்தன் சார்.” என்றான்.

 

“ஏன்…?” என்று பதிலுக்கு மீராநந்தன் கேட்டபோது,

 

“பாட்டி அவள இதெல்லாம் பண்ணகூடாதுன்னு சொல்லியிருக்காங்க..” என்றான் ஹரிஹரனும் விடாமல்.

 

“யாரு இந்த பாட்டியா..?” என்று சத்யனின் புகைப்படத்திற்கு அருகில் மாட்டியிருந்த புகைப்படத்தை பார்த்து கேட்டவன்,

 

“அவங்கதான் இப்போ உயிரோடவே இல்லையே.” என்றான் அசால்ட்டாக தோளைக்குலுக்கிவிட்டு.

 

“அதெல்லாம் சொன்னா உங்களுக்கு புரியாது சார். என் தம்பியே போனதுக்கு அப்புறம் இதெல்லாம் பிரதிக்ஷாவுக்கு எதுக்கு…? அவ இந்த வீட்டு மருமகளாக இந்த வீட்டுக்குள்ளே இருந்தா மட்டும் போதும்.” என்றான் அழுத்தம் திருத்தமாக இதற்குமேல் இது குறித்து பேச எதுவுமே இல்லை என்பது போல்.

 

“நான் சொன்னது கரெக்ட் தன-ப்பா” என்று சோமசுந்தரத்தைப் பார்த்து வேறு ஹரிஹரன் கேட்க, சோமசுந்தரத்திடம் மௌனம் மட்டுமே பதிலாக வந்தது.

 

“கமான் அங்கிள்.. எந்த காலத்துல இருக்கீங்க நீங்க..?” என்று மென்புன்னகையோடே பக்கவாட்டில் இரு கரங்களையும் விரித்து கேட்டவன்,

 

“இன்கேஸ் இவங்க இறந்து சத்யன் உயிரோட இருந்திருந்தா, அவரையும் நாலு செவுத்துக்குள்ளேதான் இருக்கணும்னு சொல்லியிருப்பீங்களோ..?” என்றவனின் கேள்வி அங்கிருந்த அனைவரையுமே கொஞ்சம் அதிரத்தான் வைத்தது.

 

அதிலும் சோமசுந்தரத்திற்கும், கௌசல்யாவிற்கும் பிரதிக்ஷா விஷயத்தில் ஏதோ தவறு செய்தது போன்ற ஒரு குற்ற உணர்வு.

 

ஆரம்பத்தில் இருந்தே பிரதிக்ஷா விஷயத்தில் சோமசுந்தரத்திற்கு உடன்பாடு இல்லைதான். ஆனால் அதே சமயம் தன் தாயை எதிர்க்கும் அளவிற்கு அவருக்கு தைரியமும் போதவில்லை.

 

கௌசல்யாவிற்கும் மாமியார் வார்த்தையை தட்டாத மருமகளாக வாழ்ந்தே பழகி விட்டது.

 

அத்தோடு அவரின் மாமியார் சொல்வது போல் வேலைக்கு செல்லும் இடத்தில் பிரதிக்ஷா காதல் கீதல் என்று இழுத்துவந்தால் அது சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் அவர்கள் குடும்பத்திற்குதானே அவமானம்.

 

 அதனால்தான் அவரும் பிரதிக்ஷாவின் விஷயத்தில் இதுநாள் வரை மாமியாரின் வார்த்தைகளை மீறாமல் இருந்தது.

 

ஆனால் இன்று மீராநந்தன் கேட்ட கேள்வி அவர் மனதையும் சஞ்சலப் படவே வைத்தது 

 

“இதென்ன கேள்வி..? ஒரு ஆம்பள எப்படி நாலு செவுத்துக்குள்ள இருக்க முடியும்.. அவன் வேலைக்கு போனாதன அவனுக்குன்னு ஒரு அடையாளத்த உருவாக்க முடியும்.” என்று ஹரிஹரன் ஆதங்கத்தோடு சொன்னபோது,

 

“ஆக்சுவலி எனக்கு இந்த லாஜிக்தான் புரியமாட்டிங்குது ஹரி” என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி சொன்னவன்,

 

“எப்படி கணவன் இறந்தா மனைவி விடோ-ன்ற அடையாளத்தோட நாலு செவுத்துக்குள்ள இருக்குறாங்களோ அப்படித்தன மனைவி இறந்தா கணவனும் இருக்கணும்..? ஆனா மனைவி இறந்த ஆறுமாசத்துல கணவன் புதுமாப்பிளை-ஆ ஆகறான்.. குழந்தை பெத்துகுறான்.. தனக்குன்னு ஒரு குடும்பத்த உருவாக்கிறான்.. வேலைக்கு போய் தனக்குன்னு ஒரு அடையாளத்தையும் உருக்காக்கிறான். ஆண் பெண் மத்தியில ஏன் இவ்வளோ பார்ஷியாலிட்டி ஹரி..? ஆண்…. என்ற நெடிலாலையா..?” என்றவனின் கேள்வி ஹரிஹரனை தவிர்த்து அங்கிருந்த அனைவரையுமே யோசிக்க வைத்திருந்தது.

 

பிரதிக்ஷாவோ இந்த அளவிற்கெல்லாம் இவன் பேசுவானா என்பது போல் அதிசயமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“நல்ல வேல நான்சிக்கு இந்தமாதிரி எந்த பிரச்சனையும் இல்ல.“ என்று வேறு ஏக்கப்பெருமூச்சி விட்டவன்,

 

“எனக்கு என் பிஸ்னஸ்தான் எல்லாமே ஹரி. அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்.” என்று உறுதியான குரலில் சொன்னதோடு நில்லாமல்,

 

“நான் ஃபிக்ஸ் பண்ணிட்டேன் அங்கிள் பிரதிக்ஷா டிசைனிங் டீம்-ல இருக்கணும்னு. இருந்தாகணும்.” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

“இதுல உங்களுக்கு உடன்பாடு இல்லன்னா இப்பவே இந்த செகண்டே நாம பார்ஷிப்-அ முடிச்சிக்கலாம்.” என்று வெட்டு ஒன்று துண்டு இரண்டாக அவன் சொன்னபோது அதிர்ந்துபோய் பார்த்தது சத்யனின் மொத்த குடும்பமும்.

 

எங்கு கைவைத்தால் அடங்கிபோவார்கள் என்று கணித்தே மீராநந்தன் அப்படி சொல்லியிருந்தான்.

 

அவனுக்கு தெரியும் அவர்களுக்கு இந்த கோல்ட்ஷோரும் எவ்வளவு முக்கியமென்று. நிச்சயம் அதை பிரதிக்ஷாவிற்காக இழக்க மாட்டார்கள் என்பது அவன் யூகம்.

 

என்ன சொல்வதென்று தெரியாமல் ஜெயசீலனும், ஹரிஹரனும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டதோடு சத்யமூர்த்தியையும் பார்க்க,

 

சத்யமூர்த்தியோ கீழ் அதரங்களை கடித்தப்படி யோசனையோடே அமர்ந்திருந்தார்.

 

எங்கே தன்னால் பிஸ்னஸ் கைவிட்டு போய்விடுமோ என்ற பயம் பிரதிக்ஷாவிற்கு.

 

நான்சியிடம் கூட ஒருவித பதற்றம் தான் அடுத்து என்ன நடக்குமோ என்று.

 

இப்படியே சில கணங்கள் நீள, மீராநந்தனும் எதற்கும் துணிந்தவன் போல் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.

 

நீண்ட யோசனைக்கு பின்னே இருக்கையிலிருந்து எழுந்து பிரதிக்ஷாவின் அருகில் சென்ற சத்யமூர்த்தி, “ஜீவல் டிசைன் பண்ண உனக்கு விருப்பம்தானே பிரதி-ம்மா..?” என்று அனுசரனையாக கேட்டபோது, பிரதிக்ஷாவிற்குதான் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

 

விருப்பமில்லை என்று அவளால் எப்படி சொல்ல முடியும்..? தன் வாழ்க்கையில் அவள் பிடித்து செய்த ஒன்றாயிற்றே.

 

அன்று வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து பறித்ததை, இன்று மீண்டும் அவள் கைகளில் கொடுத்திருக்க, பிரதிக்ஷாவிற்குள் அப்படியொரு சந்தோஷம்.

 

அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாய் அவள் கண்கள் கலங்கிவிட்டன.

 

வாய்திறந்து அவள் தன் பதிலை சொல்லாவிட்டாலும் அவள் விழிகளில் நிரம்பியிருந்த சந்தோஷமே சத்யமூர்த்திக்கான பதிலை தந்திருந்தது.

 

“நல்லாயிருடா..” என்று விழிகள் கலங்க, வாஞ்சையாக பிரதிக்ஷாவின் தலையை சத்யமூர்த்தி வருடிக்கொடுத்த போது, மீராநந்தனுக்குமே எதையோ சாதித்துவிட்ட திருப்திதான்.

 

பின் மீராநந்தன் அருகில் சென்ற சத்யமூர்த்தி அவனின் இருகரங்களையும் பற்றி, “ரொம்ப வருஷமாவே மனச உறுத்திக்கிட்டு இருந்த ஒன்னு இன்னைக்கு உன்னால முடிவுக்கு வந்திருக்கு தம்பி.” என்று மெலிதாக சிரித்துகொண்டே சொன்னவர்,

 

“நல்லா வளர்த்திருக்காங்க” என்று அவன் தோளை தட்டிகொடுத்து சொல்ல, பிரதிக்ஷாவின் விழிகள் நன்றி உணர்ச்சியோடு மீராநந்தனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது.

 

அவளின் விழி தீண்டலால் அவனும் இப்போது அவளை பார்த்தான்.

 

முகமலர்ச்சியோடு விழிகளால் அவள் அவனுக்கு நன்றி சொல்ல, அவனோ யாரும் அறியாவண்ணம் அவளைப் பார்த்து கண்ணடித்து சிரித்தான்.

 

அவனின் செயலால் சட்டென்று தலையை தாழ்த்திக்கொண்டவளின் இதழ்களிலுமே புன்னகைத்தான். 

 

அன்று மதிய உணவை அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் உண்டனர். எப்போதும் அறையில் உண்ணும் பிரதிக்ஷா கூட இன்று அனைவரோடும் சேர்ந்தேதான் உண்டாள்.

 

வந்த ஒரே நாளில் அவளுக்கான சுதந்தரத்தை அவள் வீட்டிலேயே வாங்கி கொடுத்திருந்தான் மீராநந்தன்.

 

மீராநந்தனின் கலகலப்பான பேச்சால் வெகுநாட்களுக்கு பின் மொத்த குடும்பமே சந்தோஷமாய் இருக்க, இதில் ஹரிஹரன் மட்டும் எதிலும் ஒன்றாமல் இருந்தான்.

 

அவனுக்குள் ஓடிக்கொண்டிருப்பதெல்லாம் நான்சி மற்றும் சத்யனுக்கு இடையேயான காதல் மீராநந்தனுக்கு தெரிந்திருக்குமா..? தெரிந்துதான் இங்கு வந்திருக்கிறானா..? என்பது தான்.

 

பெயருக்கென்று இரண்டு வாய் உண்டு முடித்தகையோடு, போனை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு விரைந்தவன் தினேஷிற்குதான் அழைத்தான் மீராநந்தன் சொல்வதெல்லாம் உண்மையா என்பதை அறியும் பொருட்டு.

 

தினேஷ்-ம் மீராநந்தன் முன்னமே சொல்லி கொடுத்திருந்தது போல் அச்சி பிசறாமல் சத்யனுக்கும் மீராநந்தனுக்கும் நல்ல நட்பு இருந்ததாக சொல்ல ஹரிஹரனுக்கு சொத்தென்றாகிவிட்டது.

 

உண்மையை எப்படி அறிவது என்று தீவிரமாக யோசித்தவனுக்கு நான்சியிடம் பேசுவதுதான் சரியென்று பட, அதற்கான சமயத்திற்காக காத்திருந்தான் ஹரிஹரன்.

 

பிரதிக்ஷாவின் அறைக்கு பக்கத்திலேதான் அவர்கள் இருவருக்கும் தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

வள்ளியம்மையும், ஹரிஹரனின் மனைவியும்தான் அவர்கள் இருவரையும் அவர்களுக்கான அறைக்கு சென்றுவிட்டது.

 

அறைக்கு வந்தபின் தான் நான்சியால் ஓரளவு நிம்மதி பெருமூச்சி விடமுடிந்தது.

 

படுக்கையில் உறங்கிகொண்டிருந்த ஷியாமின் தலையை வாஞ்சையாக வருடிவிட்டவளுக்கு இப்போது மனம் கனத்தது பிரதிக்ஷாவை நினைத்து.

 

பிரதிக்ஷாவை பார்த்தது முதலே நான்சிக்கு உள்ளூர வருத்தம் தான். தான் இருந்து அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களையெல்லாம் அவள் அனுபவித்துக் கொண்டிருப்பதை பார்த்து.

 

அதிலும் கை,கழுத்து, காதில் எதுவும் அணியாமல் வெள்ளை நிற சல்வாரில் விதவை கோலத்தில் இருந்தவளை பார்த்ததிலிருந்தே ‘இவங்களாம் எந்த காலத்துல இருக்காங்க’ என்ற ஆதங்கம்தான் அவளுக்கும்.

 

பேசாமல் அனைத்தையும் சொல்லிவிட்டால்தான் என்ன..? என்று கூட அவளுக்கு தோன்றியது பிரதிக்ஷாவிற்காக.

 

ஆனால் மீராநந்தந்தான் எதைப் பற்றியும் வாய் திறக்ககூடாது என்று அவளுக்கு ஸ்ரிட்டாக ஆர்டர் போட்டிருக்கிறானே.

 

மதிய உணவு முடித்த கையோடு அனைவரும் அவரவர் அறைகளுக்கு சென்று ஓய்வெடுக்க, மதிய வேளைகளில் உறங்கி பழக்கமில்லாததால் நான்சி எடுத்துவந்த உடைமைகளை வாட்ரோப்பில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அனைத்தையும் எடுத்து வைத்தவளுக்கு இப்போது பயணகளைப்பு தீர குளிக்கவேண்டும் போல் இருந்தது.

 

குளிப்பதற்கான உடைமைகளை எடுத்து வைத்தவள் தாழிடப்படாமல் மேலோட்டமாக சாற்றியிருந்த அறையின் கதவை தாழிட செல்லும் போதுதான், அவள் அறைக்கதவு தட்டப்பட்டது.

 

‘யாரா இருக்கும்..?’ என்ற யோசனையிலே நான்சி அறைக்கதவை திறக்காமல் இருக்க, தட்டிக்கொண்டிருந்த அறைக்கதவை திறந்து கொண்டு அதிரடியாக உள்ளே நுழைந்திருந்தான் ஹரிஹரன்.

 

அவனை பார்த்த கணமே நான்சிக்கு உள்ளூர உதறல் எடுத்துவிட்டது.

 

“ஏய்… உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம எங்க வீடு வரைக்கும் வந்திருப்ப..” என்று எடுத்த எடுப்பிலேயே அவன் காச்மூச்சென்று கத்த, நான்சிக்குதான் அவனை எப்படி சமாளிப்பதென்றே தெரியவில்லை.

 

“அவனுக்கும் உனக்கும் என்னடி சம்மந்தம்..?” என்று நெருங்கிவந்து கேட்டவனின் விழிகள் கோவத்தில் கோவைப்பழமாய் சிவந்து போயிருக்க, நான்சிக்கு இப்போது பயத்தில் கண்கள் கலங்கிவிட்டது.

 

“அவர் எனக்கு அண்ணன்..” என்று அவள் திக்கி திணறி சொல்ல,

 

”இந்த கதையெல்லாம் நம்ப நான் ஒன்னும் கட்டவிரல்-அ சூப்பிக்கிட்டு இல்ல. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது ஒழுங்கு மரியாதையா…,” என்றவன் படுக்கையில் உறங்கி கொண்டிருந்த ஷியாமை பார்வையால் சுட்டிகாட்டி,

 

“இந்த அசிங்கத்தையும் தூக்கிகொண்டு இந்த வீட்லேந்து கிளம்புற.. இல்ல...” என்று இழுத்தவன் கோவத்தில் பற்களை நரநரவென கடிக்க, நான்சியின் விழிகளிலிருந்தோ கண்ணீர் திவலைகள் உருண்டோடின.

 

விட்டால் விழிகளாலேயே அவளை மென்று விழுங்கிவிடுவது போல் ஹரிஹரன் அவளையே முறைத்திருக்க,

 

“இல்லனா..” என்று திடுமென பின்னாலிருந்து கேட்ட குரலால் இருவருமே கொஞ்சம் தடுமாறித்தான் போயினர்.

 

சத்தம் வந்த திசைநோக்கி பார்த்த ஹரிஹரனுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பதற்றம் தான் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி அறைவாசலில் அருகாலில்  சாய்ந்தபடி கேஷ்வலாக நின்றுகொண்டிருந்த மீராநந்தனைப் பார்த்து.

 

அவன் சற்றும் இங்கு மீராநந்தனை எதிர்ப்பார்க்கவில்லை.

 

மீராநந்தனை பார்த்த பின் தான் நான்சிக்கு உயிரே வந்தது போல் இருந்தது.

 

சற்றுமுன் தான் அவளிடம் பேசிய அனைத்தையும் அவன் காதில் வாங்கியிருப்பானா.? என்ற கேள்வி அவனுக்குள் இருந்தாலும், சட்டென்று முகபாவனையை மாற்றிக்கொண்ட ஹரிஹரன்,

 

“இங்க எல்லாம் கம்ஃபர்டம்புள்-ஆ இருக்காண்ணு கேட்டுட்டு இருந்தேன் நந்தன் சார்” என்றான் சமாளிக்கும் விதமாக.

 

“ஓ..” என்றவாறே உள்ளே வந்த மீராநந்தனோ,

 

“தம்பி வொய்ப் மேல அவ்வளோ அக்கறையா..?” என்று நக்கலாக கேட்டபோது, ஹரிஹரனுக்கு புரிந்து விட்டது மீராநந்தனுக்கும் எல்லாம் தெரிந்திருக்கிறது என்று.

 

இதற்கு மேல் நடிக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவிற்கு வந்த ஹரிஹரன், இப்போது நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அவனை பார்த்ததோடு

 

“அப்போ எல்லாம் தெரிஞ்சி.. ஒரு பிளானோடதான் இவள இங்க நீ கூட்டிட்டு வந்திருக்க..?” என்றான் விழிகள் நிறைய கோவத்தோடு ஹரிஹரன்.

 

அவனின் கேள்விக்கு இல்லை என்பது போல் இடவலமாக தலையை அசைத்தவன்

 

“ஒன்னு இல்ல…. ரெண்டு” என்று இருவிரல் ஆட்டி சொன்னவனை பார்த்து, ‘ரெண்டா..’ என்பது போல் அதிர்ச்சியாய் பார்த்தான் ஹரிஹரன்.

 

“இதுக்கே அதிர்ச்சியான எப்படி ஹரி..? அது என்னன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா..? எனக்கும் இங்க யாருக்கும் தெரியாம பிளான்-அ எக்சிகியூட் பண்றதுல சுத்தமா விருப்பம் இல்ல. ஏன்னா ஆப்போனன்ட் இல்லாம விளையாடுறதுல சுவாரசியம் இருக்காது பாரு. அதான் இன்னைக்கு உன் கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.” என்றவாறே ஹரிஹரனுக்கு எதிரில் இருந்த டேபுள் மீது கால் மேல் கால் போட்டு அமர, ஹரிஹரனுக்கோ மீராநந்தனின் செயலால் உள்ளுக்குள் அப்படியொரு கோவம்.

 

இருந்தும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் அவன் அப்படியே நின்றிருக்க,

 

“நம்பர் ஒன்.” என்று ஆள்காட்டி விரல் நீட்டி சொன்னவன், “இந்த வீட்ல சத்யனோட மனைவியா நான்சிக்கும் சத்யனோட மகனா ஷியாம்-க்கும் கிடைக்கவேண்டிய எல்லா உரிமையையும் வாங்கி தரபோறேன்.” என்று உறுதியான குரலில் சொன்னவன்,

 

“நம்பர் டூ” என்று அடுத்த விரலை உயர்த்தி,

 

“இந்த வீட்ல ஒரு கைதி வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்கற பிரதிக்ஷா-வ என் மனைவியா இந்த வீட்லேந்து கூட்டிட்டு போக போறேன்.” என்றவன் சொல்லி முடித்ததுதான் தாமதம்.

 

“ஏய்… அவ என் தம்பி பொண்டாட்டி” என்று கோவத்தில் ஹரிஹரன் கத்திய கத்தில் தூங்கிகொண்டிருந்த ஷியாம் பயந்துபோய் அரைதூக்கத்தில் சிணுங்க ஆரம்பிக்க,

 

“ஷ்” என்று ஆள்காட்டிவிரலை வாயில் வைத்து கோவப்பார்வையோடு ஹரிஹரனை எச்சரித்தவன்,

 

ஓடிச்சென்று சிணுங்கிகொண்டிருந்த ஷியாம் அருகில் அமர்ந்து, “ஒன்னு இல்லடா கண்ணா… ஒன்னு இல்ல… உன் ஹரி பெரியப்பாவுக்கு பைல்ஸ் போல அதான் கத்திட்டாரு. நீ தூங்குடா கண்ணா.” என்றவாறே மிருதுவாய் அவன் தட்டிக்கொடுக்கவும் செய்ய, ஷியாமும் சிணுங்கலை நிறுத்திவிட்டு உறங்க ஆரம்பித்தான்.

 

உறங்கிகொண்டிருந்த ஷியாமின் தலையை வாஞ்சையாக வருடிகொடுத்துவிட்டு அவன் நெற்றிபரப்பில் இதழ்பதித்தவன், அப்போதுதான் கவனித்தான் ஹரிஹரன் இன்னும் இங்கேயே நின்றுக் கொண்டிருப்பதை.

 

“ஹே.. நீ இன்னும் கிளம்பலையா… அதான் பிளான்-அ ஓப்பனா சொல்லிட்டேனே.. போ போ போய் எதையாவது உருபடியா யோசி போ” என்று சிரிப்பை விழுங்கிகொண்டு மீராநந்தன் அவனை கலாய்ப்பதை பார்த்து, நான்சிக்குமே  சிரிப்பு வந்துவிட்டது.

 

சிரிக்க முற்பட்டவள் ஹரிஹரன் பார்த்த அனல் பார்வையில் வாயில் கை வைத்து கொண்டாள்.

 

“இதுல யோசிக்க என்னடா இருக்கு..? பிரதிக்ஷா பத்தி நீ சொன்னத இப்பவே போய் அப்பாகிட்ட சொல்லி..  உங்க இரண்டு பேரையும் கழுத்த புடிச்சி வெளியில தள்ள வைக்கிறேன்.” என்றான் ஹரிஹரன் இப்போது அவனை மிரட்டும் தோணியில்

 

உன் மிரட்டலுக்கெல்லாம் நான் அப்பாற்பட்டவன் என்பதுபோல்,

 

“அதுதாண்டி மாப்பிளை எனக்கும் வேணும்.” என்று குதூகல குரலில் சொன்ன மீராநந்தனை இப்போது அதிர்ச்சியாய் பார்த்தான் ஹரிஹரன்.

 

“அப்புறம் ஏன் நிக்குற…? போ.. போய் சொல்லி எல்லாரையும் கூட்டிட்டு வா. நான் என் கிட்ட இருக்கற ஆதாரத்த காட்டி.. நான்சி பிரச்சனை-அ  சால்வ் பண்ண கையோட பிரதிக்ஷாவையும் கூட்டிகிட்டு இங்கிருந்து கிளம்பறேன்.” என்றவனை அப்படி என்ன ஆதாரம் வைத்திருக்கிறான் என்பது போல் பார்த்தான் ஹரிஹரன்.

 

செல்லாமல் ஹரிஹரன் யோசனையோடு மீராநந்தையே பார்த்திருக்க, “என்ன போகலையா..?” என்று மீண்டும் அவனை கேட்டவன், பின் ஏதோ நினைவு வந்தவனாய்,

 

“ஓ.. என்ன ஆதாரம்-னு தெரிஞ்சிக்கணுமா..?” என்று கேட்டவாறே அவன் அருகில் சென்று, தன் செல்போனில் இருந்த சத்யன் மற்றும் நான்சி ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்ட, ஹரிஹரனுக்கோ அதிர்ச்சிதான்.

 

அவனின் முகமாற்றத்தை கவனித்தவன் “இதுக்கே அதிர்ச்சியான எப்படி..? இத விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு.. பார்க்குறீயா..?” என்று கேட்டு ஒரு வீடியோ கிளிப்பை ஆன் செய்தான்.

 

அன்று நான்சியிடம் ஹரிஹரன் பேசிய வீடியோதான் அது.

 

எதற்கும் தேவைப்படும் என்று தினேஷ்தான் நான்சிக்கு கூட தெரியாமல் பட்டன் கேமரா உதவியோடு அன்று ஹரிஹரன் பேசிய அனைத்தையும் வீடியோவாக எடுத்திருந்தான்.

 

அதைத்தான் மீராநந்தன் இப்போது ஹரிஹரனிடம் பிளே செய்தது கூட.

 

ஏதோ மிரட்டியாவது அவனை தன் வழிக்கு கொண்டுவரலாம் என்று எண்ணிதான் சற்றுமுன் ஹரிஹரன் அப்படி சொன்னது.

 

ஆனால் பதிலுக்கு மீராநந்தன் தன்னை மிரட்டுவான் என்று ஹரிஹரன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

 

நிச்சயம் இதையெல்லாம் தன் குடும்பத்தார் பார்த்தால் அது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஹரிஹரனும் அறிவான் தான். அதிலும் சத்யமூர்த்தி இருக்கும் உடல்நிலையில் இந்த விஷயமெல்லாம் தெரியவந்தால்… என்று நினைக்கும் போதே ஹரிஹரனுக்கு தலையை சுற்றிவிட்டது.

 

பிஸ்னஸில் ஏற்பட்டிருக்கு இழப்பை கேட்டதற்கே அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதை அவனும் மறக்கவில்லைதான்.

 

மொத்தமாக மீராநந்தனிடம் மாட்டிக்கொண்டது போல் இருந்தது அவனுக்கு.

 

“என்ன கிளாரிட்டி செம்மையா இருக்கு இல்ல..?” என்று மீராநந்தன் வேண்டுமென்றே அவனை சீண்ட,

 

பதிலுக்கு தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லையே என்ற கோவமும், ஆதங்கமும் சேர்ந்து, “ஏய்..” என்று கத்தினான் ஹரிஹரன்.

 

முன்போலவே இதழ்மீது விரல்வைத்து “ஷ்” என்று அவனை அடக்கிய மீராநந்தன் உறங்கிகொண்டிருந்த ஷியாமை பார்த்தான் அவன் உறக்கம் கலைந்துவிட்டதா என்று.

 

நல்லவேளையாக நான்சி அவன் அருகில் அமர்ந்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 

“ஏண்டா.. உனக்கு அமைதியாவே பேச வராதா…” என்று பற்களை கடித்துகொண்டு ஹரிஹரனை பார்த்து கேட்டவன்,

 

“ஷியாம் கிட்ட நான் சொன்னமாதிரி பைல்ஸ் எதும் இருக்கா..? என்ன..?” என்று நக்கலாய் வேறு மீராநந்தன் கேட்டுவைக்க, ஹரிஹரனோ கோவத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டான்.

 

இருந்தும் அவனால் எதுவும் செய்ய முடியாத சூழல்.

 

பதிலுக்கு எதுவும் சொல்லாமல் கோவமாக அங்கிருந்து கிளம்ப முற்பட்ட ஹரிஹரனை,

 

“ஒரு நிமிஷம்” என்று தடுத்தி நிறுத்திய மீராநந்தன்,

 

“பிரதிக்ஷா என் பொண்டாட்டி” என்றான் உறுதியான குரலில்.

 

தன் கோவம் மொத்ததையும் கதவின் மீது காட்டிவிட்டு ஹரிஹரன் செல்ல, , நான்சிக்குதான் ஹரிஹரனை நினைத்து உள்ளுக்குள் அப்படியொரு பயம்.

 

அந்த பயத்தின் வெளிப்பாடாய், “எனக்கு இங்க இருக்க ரொம்ப பயமா இருக்கு ப்ரோ. அவர் கோவத்துல ஷியாம்-அ எதாவது பண்ணிட்டா..” என்று சொல்லும்போதே அவள் குரல் நடுங்க,

 

“ரிலாக்ஸ் நான்சி.. நான் தான் கூட இருக்கேன் இல்ல. என்ன மீறி ஹரியால உங்கள எதுவும் பண்ண முடியாது.” என்றான் அவளை தேற்றும் விதமாக.

 

நான்சியின் அறையிலிருந்து அதீத கோவத்தோடு புறப்பட்ட ஹரிஹரன் நேராக ஜெயசீலனின் அறைக்குதான் சென்றான்.

 

அவன் வந்து நின்றது கூட தெரியாமல் ஜெயசீலன் லேப்டாப்பில் மூழ்கிபோயிருக்க,

 

“அண்ணா..” என்றான் பொறுமையற்ற குரலில் ஹரிஹரன்.

 

“சொல்லு ஹரி” என்றவனின் பார்வை இப்போதும் லேப்டாப்பின் மீதே இருக்க,

 

பொறுமை இழந்து போன ஹரியோ சட்டென்று லேப்டாப்பை மூடிவிட, “இப்ப என்னடா பிரச்சனை உனக்கு.” என்றான் ஜெயசீலனும் கோவம் துளிர்க்கும் குரலில்.

 

“இந்த பிஸ்னஸ் பார்ட்னர்ஷிப்-அ கேன்சல் பண்ணிடலாம்.” என்றவன் சொன்னபோது,

 

“ஏன்..?” என்றான் மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி ஜெயசீலன்.

 

பாட்ர்னர்ஷிப் வேண்டாம் என்று வந்த வேகத்தில் சொல்லமுடிந்தவனால் அதே வேகத்தில் அதற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை.

 

எப்படி சொல்ல முடியும் அவனால்.

11 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels