Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 24

July 30, 2026
சந்தோஷ் குணா
0
9 min read
அத்தியாயம் - 24
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

மீராநந்தனை வரவேற்க ஹரிஹரன் தான் விமான நிலையத்திற்கு சென்றிருந்தான்.

 

 “ஹாய் ஹரி..” என்றவாறே முத்து பற்கள் காட்டி சிரித்தப்படி வந்து நின்ற மீராநந்தனை பார்த்து பதிலுக்கு சிரித்தவனின் முகம் மாறித்தான் போனது அவனோடு வந்து நின்ற நான்சி மற்றும் அந்த சிறுவனைப் பார்த்து.

 

“இவ எப்படி இங்க..? அதுவும் இவன் கூட..?” என்ற யோசனையோடே அவன் நான்சியையே பார்த்து நிற்க, பாவம் நான்சியால் அவனை எதிர்க்கொள்ளவே முடியவில்லை.

 

பின் மீராநந்தன் தான் “என்னாச்சி ஹரி..?” என்றான் அவன் முகமாற்றத்தை கவனித்து.

 

பதிலுக்கு அவனை பார்த்து “அது..” என்று ஆரம்பித்தவனின் பார்வை மீண்டும் நான்சி மீதே படிய, மீராநந்தனும் அதை கவனிக்கவே செய்தான்.

 

ஹரியை பார்த்தது முதலே நான்சிக்குள்ளும் பயமும், படபடப்பு தான். இருந்தும் மீராநந்தன் அருகில் இருக்கும் தைரியத்தில் சமாளித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

 

“ஓ.. ஐம் சாரி ஹரி… இவங்க என்னோட சிஸ்டர் நான்சி… அவங்க பையன் ஷியாம். ஆக்சுவலி இங்க இந்த கோல்ட்ஷோரும்-அ நான் ஓப்பன் பண்றதே நான்சிக்காகத் தான்.” என்றவன் சிரித்துகொண்டே சொன்னபோது ஹரிஹரனுக்கு தலையில் இடி விழுந்த உணர்வுதான்.

 

“என்னது..? இவ இவன் சிஸ்டர்-ஆ..? இவளுக்காகதான் இங்க கோல்ட் ஷோரும்-ஆ..?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டவனுக்கு உள்ளுக்குள் அத்தனை அதிர்ச்சிதான்.

 

“ஆனா சார்… நீங்க சத்யமூர்த்தி சார்க்கு ஒரே சன்-னுன்னு அதியமான் சொன்னாரே..?”  என்று அதிர்ச்சியை மறைத்துகொண்டு ஹரிஹரன் கேட்டபோது,

 

“ஓ.. அப்போ என் ஜாதகமே உங்க கையில இருக்குன்னு சொல்லுங்க..” என்று கேட்டுவிட்டு மீராநந்தன் சிரிக்க, ஹரிஹரனுக்குதான் முகத்தில் ஈயாடவில்லை.

 

“அப்படிலாம்  இல்ல சார்… சும்மா ஜென்ரல்-ஆ தான்” என்றவன் சமாளிக்க,

 

“நீங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மைதான் ஹரி.” என்று நிறுத்தியவன் இப்போது நான்சியை பார்த்துவிட்டு

 

“நான் இவங்கள என் சிஸ்டர்-ஆ அடாப் பண்ணியிருக்கேன்.” என்றான் மேற்கொண்டு இதுகுறித்து அவன் எந்த கேள்வியும் கேட்காதபடி,

 

“ஓ” என்று பதிலுக்கு சொன்ன ஹரிஹரனுக்கு, “தத்தெடுத்த தங்கச்சிக்கு போய் யாராவது கோடிகணக்குல இன்வெஸ்ட் பண்ணுவாங்களா..?” என்ற ஆச்சரியம்.

 

என்னதான் மேற்கொண்டு எதுவும் கேட்காத படி மீராநந்தன் முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், ஹரிஹரனால் இந்த விஷயத்தை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

 

‘கண்டுபிடிக்கறேன்.’ என்று மனதிற்குள் சூளுரைத்தவாறே, அவனை வரவேற்க கையோடு கொண்டுவந்திருந்த பூங்கொத்தை “வார்ம் வெல்கம் சார்..” ஏன்றவாறே மீராநந்தன் முன்னால் நீட்டினான்.

 

அவன் நீட்டிய பூங்கொத்தை வாங்காமல், “லேடிஸ் ஃபஸ்ட்” என்று மீராநந்தன் ஒதுங்கிகொண்டபோது, ஹரிஹரனுக்கோ “நான் போய் இந்த அனாதை-அ வரவேற்கணுமா..?’ என்ற எரிச்சல் தான்.

 

அவன் மனதை படித்தவன் போல், “நீங்க இனிமே இங்க கவனிக்கவே வேண்டிய ஆளே இவங்கதான் ஹரிஹரன்,” என்று மீராநந்தன் சொன்னபோது, ஹரிஹரனுக்கும் அவன் வார்த்தையில் இருந்த அர்த்தம் புரியவே செய்தது.

 

அதனாலே வேறுவழியின்றி “வார்ம் வெல்கம் மேம்” என்று கஷ்டப்பட்டு புன்னகை புரிந்தவாறே பூங்கொத்தை அவன் நீட்ட, நான்சியும் வாங்கி கொண்டாள்.

 

எந்த நான்சியை அன்று வார்த்தைகாளால் காயப்படுத்தினானோ அவனைக்கொண்டே அவளை வரவேற்க வைத்திருந்தான் மீராநந்தன்.

 

காரை ஹரிஹரன் தான் ஓட்டிக்கொண்டிருந்தான்.

 

நான்சி பின்னிருக்கையில் அமர்ந்திருக்க, முன்னுருக்கையில் ஷியாமோடு அமர்ந்திருந்த மீராநந்தனோ, காரிலிருந்தவாறே மும்பையை அவனுக்கு சுற்றிக்காட்டிக் கொண்டிருந்தான்.

 

அரைமணிநேரத்திற்கெல்லாம் அவர்கள் கார் சத்யமூர்த்தியின் பங்களாவை அடைந்திருந்தது.

 

பிரதிக்ஷாவை தவிர்த்து குடும்பமே வாயிலுக்கு வந்து சந்தோஷமாக அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து செல்ல, இதில் ஹரிஹரன் முகம்தான் எள்ளும் கொள்ளும் போட்டால் வெடிக்கும் என்ற நிலையில் இருந்தது.

 

உள்ளே நுழைந்த மீராநந்தனின் விழிகள் முதலில் பிரதிக்ஷாவைத்தான் தேடி அலைந்தது.

 

ஆனால் எங்கு அவள் இல்லாமல் போக, சத்யனின் குடும்பத்தார்க்கு தன்னுடைய தங்கையென்று நான்சியை அறிமுகப்படுத்திவைத்தான்.

 

அதிலும் ஷியாமை பார்த்த மாத்திரத்திலேயே அனைவருக்கும் பிடித்துபோய் விட்டது.

 

அதிலும் அவனின் அமெரிக்க ஆங்கிலம் கலந்த தமிழ் அனைவரையும் இரசிக்கவைத்ததோடு ஒருவித ஒரு ஈர்ப்பையும் கௌசல்யாவிற்குள் ஏற்படுத்தியிருந்தது.

 

அதேசமயம் ஷியாமும் அனைவரிடமும் நன்றாகவே ஒட்டிக்கொண்டான்.

 

நான்சியிடம் கூட பெண்கள் அனைவரும் நன்றாகவே பேசினர். என்னதான் அவர்களின் கவனிப்பால் நான்சி சகஜநிலைக்கு திரும்பியிருந்தாலும் ஹரிஹரனை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு அடிவயிற்குள் சொரேன்ற உணர்வுதான்.

 

அவள் நிலை இப்படியென்றால் ஹரிஹரனுக்கோ எங்கே நான்சி மற்றும் ஷியாம் பற்றிய உண்மை தன் குடும்பத்தாருக்கு தெரிந்துவிடுமோ என்ற பயம்.

 

அதிலும் ஷியாமை மடியில் அமர்த்தி கௌசல்யா சாதம் ஊட்டுவதை பார்த்த ஹரிஹரனுக்கோ, “இந்த அம்மா-க்கு ஏன் இந்த தேவை இல்லாத வேலை..?”  என்று வாய்க்குள் முணுமுணுத்தவன்,

 

“பாவம் அவனே டிராவல் அலைச்சல்-ல இருப்பான். அவன்-அ கொஞ்சம் நேரம் ஃபீரியா விடுங்கம்மா” என்று சொல்லி அவர் மடியிலிருந்து ஷியாமை இறக்கி கீழே விட ஷியாமோ அடுத்து ஜெயசீலன் மற்றும் ஹரிஹரனின் குழந்தைகளோடு விளையாட  ஆரம்பித்துவிட்டான்.

 

சத்யமூர்த்தியின் உடல்நிலை பற்றி விசாரித்த மீராநந்தன் அவர் கேட்கும் பார்ட்னர்ஷிப் குறித்த கேள்விகளுக்கும் தெளிவாக பதிலளித்தான்.

 

அத்தோடு தன்னை பற்றியும் தன் குடும்பம் பற்றியும் சொன்னான்.

 

இடையிடடையே தன் சமார்த்தியமான பேச்சால் அவரை அசரவும் வைத்தான்.. மனதிலிருந்து சிரிக்கவும் வைத்தான்.

 

இருவருக்குமே இதுதான் முதல் சந்திப்பு என்பது போல் இல்லாமல் அதிகம் பேசினர்… சிரித்தனர்..

 

அவர்கள் பேச்சில் ஜெயசீலனும் கலந்து கொண்டான்.

 

குழந்தைகள் சேர்ந்து ஒருப்பக்கம் விளையாடிக்கொண்டிருக்க, பெண்கள் கூட  ஒருப்பக்கம்  ஒன்று கூடி பேச ஆரம்பித்துவிட்டிருந்தனர்.

 

இதில் ஹரிஹரன் மட்டும் தான் யாரோடும் ஒன்றாமல் நடப்பதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். இல்லை இல்லை வேவு பார்த்துக் கொண்டிருந்தான்.

 

எல்லாம் நன்றாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில்தான் சிறுவர் சிறுமிகளோடு ஒளிந்து கொள்ளும் விளையாட்டு விளையாடிக்கொண்டிந்த ஷியாம், “ஐ டாடா… டாடா… மம்மா… டாடா…” என்று சந்தோஷத்தில் கைதட்டி துள்ளிக்குதிக்க, அங்கிருந்த அனைவரின் முகத்திலுமே அதிர்வலைத்தான்.

 

காரணம் ஷியாம் ‘டாடா’ என்று சொன்னது சுவற்றில் மாட்டப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்த சத்யனின் புகைப்படத்தை பார்த்துதான்.

 

ஷியாமின் இந்த செயலால் நான்சி மட்டுமல்ல ஹரிஹரனுக்குமே பயத்தில் உதறல் கண்டுவிட்டது.

 

நான்சி பயந்து போய் மீராநந்தனை பார்க்க,  சத்யனின் குடும்பத்தாரோ நான்சியையும் மீராநந்தனையும் ஒரு வித அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

மீராநந்தன் கூட இப்படியொரு சூழ்நிலையை எதிர்ப்பார்க்கவே இல்லை. இருந்தும் சமாளிக்கவேண்டிய கட்டாயம் அவனுக்கு.

 

அவர்களையெல்லாம் பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தவாறே ஓடிச்சென்று ஷியாமை தூக்கிக்கொண்டவன், “வெரி சாரிங்க... ஷியாம்-க்கு  அப்பா இல்ல.. ஷியாம் அவங்க அப்பாவ போட்டோல பார்த்துதான் வளர்ந்தான். அதான் மாலை போட்டிருக்கற போட்டோவ பார்த்ததும் அப்பா-ன்னு சொல்லிட்டான். சின்ன குழந்தை இல்லையா..?” என்று சமாளித்தான்.

 

அவன் சொல்வது அங்கிருந்தவர்களுக்கும் புரிய, இந்த வயதிலேயே தந்தையை இழந்திருக்கும் ஷியாமின் மீது பரிதாபம்தான் வந்தது.

 

அதிலும்  கௌசல்யாவிற்கு மனம் கனத்துவிட்டது.

 

இருந்தும் ஷியாம் “டாடா.” என்று சொல்வதை நிறுத்தவே இல்லை.

 

பெரியவர்களுக்குள் நடக்கும் விஷயமெல்லாம் பாவம் குழந்தைக்கு எப்படி தெரியும்.

 

பின் நான்சிதான், “டேய் ஷியாம்…” என்று அதட்டியவாறே அவன் அருகில் சென்று, “ஹீ இஸ் நாட் யுவர் டாடா..” என்றாள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு.

 

எந்த தாய்க்கும் வரக்கூடாத சூழல்தான்..

 

அவளின் அதட்டலால் ஷியாம் உதட்டை பிதுக்கிகொண்டு அழ,

 

“நோ ஷியாம்” என்றாள் அதற்கும் அவள் அதட்டலாய்.

 

அதுவரையும் அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யாவால் அதற்கு மேலும் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க முடியவில்லை. மூன்று   பிள்ளைகளை பெற்று வளர்த்தவராயிற்றே.

 

“அவன் சின்ன குழந்தை ம்மா… அவன் கிட்டபோய் கோவப்பட்டுகிட்டு. டாடா-ன்னு கூப்டுட்டுதான் போகட்டுமே” என்றவாறே அவர்கள் அருகில் சென்றவர்,

 

“இங்க வாடா கண்ணா..” என்றவாறே அவனை வாரி உச்சிமுகர ஹரிஹரனுக்கு தாயின் செயல் எரிச்சலைத்தான் ஏற்படுத்தியது.

 

”என் பையன் மட்டும் உயிரோட இருந்திருந்தா இன்னைக்கு ஷியாம் வயசுல அவனுக்கும் ஒரு பையன் இருந்திருப்பான்.” என்று சொல்லும் போதே அவர் குரல் உடைய,

 

நான்சிக்குமே அவரின் வார்த்தைகள் உள்ளுக்குள் வலியைத்தான் ஏற்படுத்தியது.

 

“ஷியாம் உங்க பேரன் தான் ம்மா” என்று சொல்ல துடித்த நாவை சிரமப்பட்டு கட்டுபடுத்திக்கொண்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

 

கண்ணெதிரே இரண்டு தாய்மார்கள் படும் வேதனையை பார்த்துகொண்டிருந்த மீராநந்தன்  என்ன நினைத்தானோ,

 

“இது சத்யன் தான..?”  என்றான் மீண்டும் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக.

 

‘ஏன் ப்ரோ..?’ என்பது போல் விழிகளில் கெஞ்சலோடு நான்சி அவனைப் பார்க்க,

 

அவனோ, “நான்சி நீயே பார்றேன்.. இது நம்ம சத்யன் மாதிரியே இல்ல..” என்று அந்த புகைப்படத்தை காட்டி அவன் சொன்னபோது அவளுக்கு மயக்கம் வராத குறைதான்.

 

இதில் ஹரிஹரன் வேறு எப்போது என்ன வெடிக்கும் என்று யூகிக்க முடியாமல் நெருப்பின் மேல் நிற்பது போல் நின்றுக்கொண்டிருந்தான்.

 

“எங்க சத்யன்-அ உங்களுக்கு எப்படி தெரியும்..?” என்றாள் இப்போது முந்திக்கொண்டு ஹரிஹரனின் மனைவி ரோஷினி.

 

அவளின் அவசரபுத்தியை நினைத்து “மெண்டல் மெண்டல்..” என்று ஹரிஹரனால் பற்களைத்தான் கடிக்க முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்யமுடியவில்லை.

 

அவன் தான் சூழ்நிலை கைதியாக நின்றுக்கொண்டிருக்கிறானே.

 

மேற்படிபிற்காக சென்ற இடத்தில் தான் பார்ட் டைம்மாக வேலைப்பார்த்து கொண்டிருந்த காஃபிஷாப் சத்யன் படித்துகொண்டே வேலை பார்த்துக்கொண்டிருக்கும் மருத்துவமனைக்கு அருகில் இருந்ததாகவும், அப்படித்தான் சத்யன், தினேஷ் மற்றும் நான்சி தனக்கு பழக்கம் என்று சொன்னவன்,

 

“நான்சி கூட சத்யன் கிளாஸ்மேட் தான் ஆன்டி.. இரண்டுபேரும் ரொம்ப குளோஸ் ஃப்ரண்ட்ஸ் கூட” என்று சிரித்துகொண்டே சொன்னவன்,

 

“அப்படித்தானே நான்சி…?” என்று நான்சியை பார்த்து கேட்டபோது, நான்சிக்கோ அவனின் செயலால் புரையேறிவிட்டது.

 

“ஹே பார்த்து..” என்றவன் அவளுக்கு தண்ணீர் கொடுத்த கையோடு தலையிலும் தட்டிவிட,

 

“என்ன ஏன் ப்ரோ இப்படி கோத்துவிடுறீங்க..?” என்பது போல் பாவமாக அவனைப் பார்த்தாள் நான்சி.

 

“குளோஸ் பிரண்ட்ஸ்-னு சொல்றீங்க சத்யன் ஒரு தடவ கூட உங்கள பத்திலாம் சொன்னது இல்லையே” என்று இப்போது வாயை திறந்திருந்தான் ஹரிஹரன்.

 

“எங்ககிட்ட கூடதான் இப்படி ஒரு பாசமான ஃபேம்லி இருக்கறதா சத்யன் சொன்னது கிடையாது.” என்று தன் வார்த்தையை கொண்டே மீராநந்தன் தன்னை மடக்குவான் என்று ஹரிஹரன் நினைக்கவே இல்லை.

 

அத்தோடு நான்சிக்கும் சத்யனுக்கும் இடையே இருக்கும் உறவுமுறை மீராநந்தனுக்கும் தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் வேறு அவனுக்குள் இப்போது.

 

“ஓ… அப்போ மேரேஜ் ஆனத கூட சத்யன் சொல்லியிருக்க வாய்ப்பு இல்லை அப்படித்தானே.” என்றான் ஹரிஹரனும் விடாமல்.

 

ஆமாம் என்பது போல் ஹரிஹரனை பார்த்து “ரியலி..?” என்று ஆச்சரியபட்டு போனவன்,

 

“மிஸ்ஸஸ் சத்யன் எங்க..? இங்கதான் இருக்காங்களா..? நான் அவங்கள பார்க்கலாமா…?” என்று பதிலுக்கு கேட்பான் என்று ஹரிஹரன் சற்றும் எதிர்ப்பார்க்க இல்லை.

 

அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஹரிஹரன் இப்போது சத்யமூர்த்தியை பார்க்க.

 

பின் சத்யமூர்த்திதான் வள்ளியம்மையை அழைத்து பிரதிக்ஷாவை அழைத்து வர சொன்னார்.

 

மீராநந்தனை பார்த்த வள்ளியம்மைக்கோ இதற்கு முன்னால் எங்கோ அவனை பார்த்த நியாபகம்.

 

ஆனால் எங்கு எப்போது என்று தான் சட்டென்று அவளுக்கு நினைவிற்கு வரவில்லை.

 

யோசனையோடே பிரதிஷாவின் அறைக்கு சென்றவள், சத்யமூர்த்தி ஐயா அழைப்பதாக சொல்லி கையோடு அவளை அழைத்துகொண்டு கீழே வர, பிரதிக்ஷாவின் பார்வையோ நிலம் நோக்கியே இருந்தது.

 

வந்திருக்கும் பிஸ்னஸ் பார்ட்னருக்கு தன்னை அறிமுகப்படுத்ததான் அழைத்திருப்பார்கள் என்பது அவள் யூகம்.

 

நிச்சயம் நிமிர்ந்து பார்த்தால் புதிதாக வந்திருப்பவர் அவளின் சோக கதைகளையெல்லாம் கேட்டு அவள் மீது அனுதாப பார்வையை வீசுவர்.

 

எதற்கு அந்த பார்வையை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் அவள் தலையை தாழ்த்தியே இருந்தது.

 

“இவதான் பிரதிக்ஷா. சத்யனோட மனைவி.” என்று மீராநந்தனுக்கு அவளை அறிமுகப்படுத்தியவர்,

 

“அம்மாடி… பிரதிக்ஷா..” என்று அவளை அழைத்து, “இவர்தான் நம்ம கோல்டுஷோரும் பார்ட்னர்…” என்றவர் அவன் பெயரை சொல்வதற்கு முன்பே

 

“மீராநந்தன்” என்று முடித்திருந்தான் அவன்.

 

அந்த பெயரையும், குரலையும் கேட்ட மாத்திரத்திலேயே விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தவளுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.

 

ஆறு மாத காலமாக யாரை காணாமல் வாடினாளோ, யாருக்கு என்ன ஆனதென்று நாளும் தன்னை வருத்திக்கொண்டிருந்தாளோ அவன்தான் இப்போது அவளுக்கு எதிரில் ஜம்பமாய் அமர்ந்திருந்தான் அவளை பார்த்து மோகன புன்னகை புரிந்தவாறு.

 

நடந்த விபத்தில் அவனுக்கு என்ன ஆனதோ என்று இத்தனை நாட்களாக உள்ளுக்குள் பதறிப்போய் இருந்தவளுக்கு இப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.

 

ஓட்டிச்சென்று அவன் கரம் பற்றி அவன் நலம் குறித்து விசாரிக்கத்தான் அவளுக்கும் ஆசை.

 

ஆனால் அவள் குடும்பத்தார் முன்னிலையில் அவனை தெரிந்தவள் போல் காட்டிக்கொண்டால் அது பின் அவளுக்குதானே பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

 

அதனாலே வெகு சிரமப்பட்டு தன்னையும், தன் உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு விழிகளாலேயே அவனிடம் நலம் விசாரித்தாள்.

 

நடந்த விபத்தில் அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று உச்சி முதல் பாதம் வரை தன் பார்வையாலே அவனை ஆராய்ந்தவளுக்கு, அவன் இடது புருவத்திற்கு மேல் இருந்த காயத்தழும்பே சொல்லாமல் சொல்லியிருந்தது விபத்தின் வீரியத்தை.

 

அதை பார்த்த கணமே அவள் விழிகள் சட்டென்று கலங்கி விட, கலங்கிய விழிகளோடே  ‘ஏன் இப்படி பண்ண..?’ என்பது போல் அவனை பார்த்தாள் பிரதிக்ஷா.

 

ஆனால் அவனோ யாரும் பார்க்காவண்ணம் ஒற்றை கண்ணடித்து குறும்பாய் அவளைப் பார்த்து சிரிக்க, அவளுக்குத்தான் திக்கென்று ஆகிவிட்டது.

 

இனி அவனை பார்க்க கூடாது என்பது போல் அவள் தலையை தாழ்த்திக்கொள்ள,

 

“ஹலோ மேடம்..” என்றவனின் அழைப்பால் அவளுக்கு மட்டுமல்ல, அங்கிருந்த அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சிதான்.

 

‘ஐய்யோ’ என்று பதறிப்போய் அவனைப் பார்த்தவள், விழிகளாலேயே அவனிடம் கெஞ்ச,

 

அவனோ, “நான் உங்கள எங்களாம் தேடுனேன் தெரியுமாங்க..? திடீர்னு  எங்க காணாம போய்ட்டீங்க..?” என்று கேட்டு மேலும் அவளை அவன்  அதிர்ச்சிக்குள்ளாக, பிரதிக்ஷாவிற்கு பயத்தில் கை, கால்கள் சில்லிட்டு போய்விட்டது.

 

‘என்ன நடக்குது இங்க..? உனக்கு இவனை முன்னாடியே தெரியுமா..?’ என்பது போல் அவள் குடும்பத்தார் அனைவருமே அவளைப் பார்க்க, பாவம் அவளால்தான் யாரையும் எதிர்க்கொள்ள முடியவில்லை.

 

‘படுபாவி எங்க வந்து எப்படி கோர்த்துவிட்டிருக்கான் பாரு. உனக்கு போய் பரிதாப பட்டேன் பாரு என்ன சொல்லணும்’   என்று தன்னையே நிந்தித்து கொள்ளத்தான் அவளால் முடிந்தது.

 

“உனக்கு மீராநந்தன்-அ முன்னாடியே தெரியுமாமா..?” என்று சத்யமூர்த்தி வேறு நேரிடையாகவே அவளிடம் கேட்டுவிட, பயத்தில் ஷாலை இறுக்கமாக பற்றிக்கொண்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

 

“அது.“ என்று ஆரம்பித்தவளின் வாயிலிருந்து வார்த்தைக்கு பதிலாக காற்றுத்தான் வந்தது.

 

பயத்தில் தொண்டை வறண்டு நாக்கு வேறு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டது.

 

தொண்டையை கனைத்து எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டு ஒருவாறு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டவள், “அது.. அது வந்து மாமா..” என்று மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற, அந்த கிராதகனோ கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அவள் படும் வேதனையையெல்லாம் கன்னத்தில் கை குற்றியபடி பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.

 

இரசித்துக்கொண்டிருந்தவனை பார்த்து அவள் இப்போது முறைக்க,

 

அவனோ, “ஏங்க… என்ன உங்களுக்கு நியாபகம் இருக்குதானே…?” என்றான் சிரிப்பை விழுங்கிக்கொண்டு மீண்டும் அவளை சீண்டும் விதமாக.

 

“டேய்.. வேணாம்” என்று சத்தமில்லாமல் அவள் பற்களை கடிக்க, அவனோ கொஞ்சமும் பயமில்லாமல் மீண்டும் அவளைப் பார்த்து கண்ணடித்து அழகாய் முறுவலித்தான்.   

 

“அது வந்துக்கு அப்புறம்..?” என்று ஹரிஹரன் கேட்ட தோணியில், பிரதிக்ஷாவிற்கு தூக்கி வாரிப்போட,

 

“நான் சொல்றேன் ஹரி.” என்றவாறே தன் முழு உயரத்திற்கு எழுந்து நின்றவனை பார்த்து அவளுக்கு இப்போது மயக்கம் வராத குறைதான்.

 

‘ஐய்யோ கடவுளே… என்னத்த சொல்லி தொலைக்கப்போறானோ..? நான் இன்னைக்கு செத்தேன்’ என்று புலம்பியபடியே விழிகளில் மிரட்சியோடு அவனைப் பார்த்தாள்.

9 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels