பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,
அவன் கூலாக “ஹாய் மீரா” என்று கையசைக்க,
எங்கே அவன் சத்தம் கேட்டு உறங்கிக்கொண்டிருக்கும் ரோஷினி எழுந்துவிடுவாளோ என்ற பயந்து போனவள்,
மேற்கொண்டு அவன் எதுவும் பேசிவிடா வண்ணம் சட்டென்று எழுந்து அவன் வாய் மீது கைவைத்து மூடியவள்,
திரும்பி ரோஷினியை பார்த்தாள் அவன் சத்தம் கேட்டு எழுந்துவிட்டாளோ என்று.
தன் தலையில் இடியே வந்து விழுந்தாலும் நான் எழுந்திரிக்க போவதில்லை என்பது போல் குறட்டை விட்டபடி ரோஷினி உறங்கிக்கொண்டிருக்க, பிரதிக்ஷாவிற்கு அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது.
“நல்லவேளை அக்கா-க்கு எதுவும் கேட்கலப்போல..” என்று நிம்மதியுற்றவள்,
நீ எதுக்கு இங்கு வந்த..? என்பது போல் கோவமாய் அவனை திரும்பிப் பார்த்தவளுக்கு திக்கென்ற உணர்வுதான் இத்தனை நெருக்கத்தில் அவனோடு ஒட்டி தான் நின்றுக் கொண்டிருப்பதைப் பார்த்து.
அத்தோடு அவன் வாயை மூடியிருந்தவளின் உள்ளங்கையில் அவன் மீசை முள் வேறு ஒருவித குறுகுறுப்பை ஏற்படுத்த,
கையை விலக்கிகொண்டு, சட்டென்று அவனை விட்டு விலகி நின்றவளுக்கு உள்ளுக்குள் அப்படியொரு படபடப்பு.
அவனை பார்க்ககூட முடியாமல் பாவையவள் பார்வையை தாழ்த்திக்கொள்ள,
“என்னாச்சி மீரா..?” என்றான் அவனே.
எங்கே அவன் சத்தம் கேட்டு ரோஷினி எழுந்துவிடுவாளோ என்ற பயத்தில், “ஏய்… சத்தம் போடாத..” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சன்ன குரலில் முனுமுனுத்தவள், அவன் கரத்தையும் பற்றி பால்கனி பகுதிக்கு இழுத்துச்சென்றாள்.
“இப்ப எதுக்காக இங்க வந்த…? நீ இங்க இருக்கறத ரோஷினி அக்கா பார்த்தா என்ன ஆகுறது..?” என்றாள் கோவத்தில் பற்களைக் கடித்து கொண்டு.
“அதான் பார்க்கலையே மீரா..” என்று அவள் நிலமை புரியாமல் குறும்பாய் கண்ணடித்து சொன்னவனைப் பார்த்து அவளுக்கு மேலும் கோவம்தான் வந்தது.
இருந்தும் இது கோவப்படுவதற்கான நேரம் இல்லை என்று நினைத்தவள்,
”தூங்கிட்டு இருக்கறவங்க எப்ப வேணும்னாலும் எழுந்திரிக்கலாம். அவங்க எழுந்திரிக்கறதுக்குள்ள தயவு பண்ணி இங்க இருந்து கிளம்பு. அக்கா மட்டும் நீ இங்க இருக்கறத பார்த்தா ரொம்ப பிரச்சனையாகிடும். பிளீஸ்..” என்று இருகரம் கூப்பியவள், “போ..” என்று கெஞ்சும் குரலில் சொல்ல,
“ஏங்க இப்டி வந்த உடனே கிளம்பவா.. பைப் லைன்-அ புடிச்சி கஷ்டப்பட்டு மேல வந்தேன்.”என்றவன், “இங்க பாருங்க..” என்று மேலே ஏறிவரும் போது அவன் கையில் சிராய்த்திருந்த காயத்தை காட்ட,
அதிலெல்லாம் அவள் கவனம் இப்போது பதியவே இல்லை. அவள் பிரச்சனை எல்லாம் இப்போது உறங்கி கொண்டிருக்கும் ரோஷினி எழுந்துவிடுவாளோ என்பதுதான்.
“ஏங்க உங்களுக்கு இப்போ என்ன பிரச்சனை..? ரோஷினி சிஸ்டர்தன..?” என்று கேட்டவன்,
“ரோஷினி சிஸ்டர்….. ரோஷினி சிஸ்டர்..” என்று சத்தம் போட்டு ரோஷினியை அழைக்க, “கடவுளே..” என்று பதறித்தான் போனாள் பிரதிக்ஷா.
சத்தம் போட்டு அழைத்தவாறே உறங்கிகொண்டிருந்த ரோஷினியின் அருகில் சென்றவன் இப்போது அவளை தட்டி எழுப்பவும் செய்ய,
“ஏய்.. என்ன பண்ற நீ..?” என்று பதறியவாறே அவனை நெருங்கியவளுக்கு ஆச்சரியம் தான். அவன் தட்டி எழுப்பிய பின் கூட ரோஷினி எழாமல் இருப்பதை கண்டு.
இது எப்படி சாத்தியம் என்பது போல் ஆச்சரியமாய் அவனைப் பார்த்தவள்
“அக்கா..” என்று அவளும் இரண்டு மூன்று முறை ரோஷினியை தட்டி எழுப்பி பார்த்தாள் அப்போதும் ரோஷினி உறங்கியபடியே இருக்க, அவளுக்கு இப்போது பயம் தான் ரோஷினி-க்கு என்ன ஆனதோ என்று.
ஆனால் அதே சமயம் அவள் ஒன்றும் மூச்சி பேச்சி இல்லாமல் இல்லையே. நன்றாக குறட்டை விட்டு உறங்கிகொண்டுதானே இருக்கிறாள். அதுவே பிரதிக்ஷாவிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
இருந்தும், “அக்கா.. ஏன் எழுந்திரிக்கல..?” என்று அவனிடமே அவள் கேட்டபோது, அவனோ மர்மமாய் சிரித்தபடியே “நாளைக்கு காலையில ஒன்பது மணிக்குதான் அவங்க எழுந்திரிக்கணும்னு மந்திரம் போட்டு இருக்கேன்” என்று கண்சிமிட்டி சொன்னவனை, நம்பாமல் பார்த்த பிரதிக்ஷாவிற்கு இங்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
எப்படி என்று கேட்டால் நிச்சயம் அவன் சொல்லபோவதில்லை. அதனால் குழப்பமாய் அவள் நின்றுகொண்டிருக்க,
பின் அவன் தான், “இப்பவும் நான் கிளம்பிதான் ஆகணுமா மீரா..?” என்றவனின் கேள்விக்கு அவளால் தான் கிளம்பு என்றும் சொல்லமுடியவில்லை, அதேசமயம் இங்கேயே இரு என்றும் சொல்ல முடியவில்லை.
அவளுக்கும் அவனை இங்கு பார்த்தது முதலே அவனிடம் பேச வேண்டும், அவன் நலன்பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஆசைதான்.
ஆனால் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் அவளால் எப்படி கேட்க முடியும்..? தனியாக அவனை சந்தித்து பேசுவது என்பதும் அவளால் முடியாத காரியம்.
இப்போது மனம்திறந்து அவனிடம் பேசுவதற்கான வாய்ப்பு கண்முன்னே இருக்க, அவனை போ என்று சொல்ல அவளுக்கு துளியும் விருப்பம் இல்லைதான்.
அதேசமயம் இரு என்று சொல்ல அவள் பெண்மையும் சம்மதிக்கவில்லை.
என்ன சொல்வதென்று தெரியாமல் விரல் நுனியில் ஷாலை சுற்றியபடியே அவள் இருக்க, பின் அவன்தான் மௌனமாய் சிரித்தப்படியே அவளை அழைத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றான்.
அவன் பின்னாலேயே பால்கனிக்கு சென்றவள் அப்போதுதான் கீழே குனிந்து அவன் ஏறிவந்த பைப் லைனை பார்த்தாள்.
பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான் இவ்வளவு உயரம் ஏறி வந்திருப்பவனைப் பார்த்து.
காரணம் அவள் அறை இருப்பது அந்த பங்களாவின் மூன்றாவது தளத்தில்.
“உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லையா..? ஏன் இவ்வளோ ரிஸ்க் எடுக்கற..? ஏறி வரும் போது கீழ விழுந்திருந்தா என்ன ஆகுறது..?” என்று அவன் மீதான அக்கறையில் அவள் கோவமாய் அவனை பார்த்து கேட்டபோது.
அவனோ கேஷ்வலாக, “என்ன மறுபடியும் ஒரு ஆறுமாசம் பெட்ரெஸ்ட் எடுக்க..” என்றவன் சொல்லிமுடிக்கவில்லை, அதற்குள் அவன் வாய்மீது கைவைத்து அவனை பேசவிடாமல் அவள் தடுக்க, அவளிடமிருந்து மீராநந்தன் இதை எதிர்பார்க்கவே இல்லை.
தன்னையே பார்த்து கொண்டிருந்தவனைப் பார்த்து அப்படி சொல்லாதே என்பது போல் இடவலமாக தலையை அசைத்தவளின் கண்கள் இப்போது கண்ணீரால் பளபளக்க,
அவள் கரத்தை விலக்கிவிட்டவாறே “மீரா.. என்னாச்சிங்க” என்றான் அவன்.
தன் கண்ணீரை அவனுக்கு காட்டாமல் தலையை வேறுபுறம் திருப்பிக்கொண்டவளுக்கு, இப்போது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் உருண்டோடின.
அவன் அறியாமல் அதை துடைத்துகொண்டவள்,
“நீ உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க..? உனக்கு எல்லாத்துலயுமே விளையாட்டுதான் இல்ல.. அன்னைக்கு எதுக்காக என் கார்-அ அவ்வளோ ஃபாஸ்ட்-ஆ ஃபாலோ பண்ண..?” என்றவளின் கேள்விக்கு அவன்,
“அது…” என்று இழுக்க,
“உனக்கு ஆக்சிடண்ட்-அ ஆனத பார்த்து நான் எவ்வளோ பயந்துட்டேன் தெரியுமா..? நான் எங்க போனாலும் அஞ்சு நிமிஷத்துல நீ என் முன்னாடி வந்து நிப்ப.. ஆனா இப்போ ஆறுமாசமாகியும் உன்ன பார்க்கமுடியலன்னா நான் என்னன்னு நினைக்கிறது. உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு ஒவ்வொரு நாளும் நான் துடிச்ச துடிப்பு என்னன்னு எனக்குதான் தெரியும்..” என்று சொல்லும் போதே மீண்டும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர,
அவனால் அவளை அப்படி பார்க்கமுடியவில்லை.
என்ன செய்ய ஆறுமாத காலமாக மனதிற்குள்ளே போட்டு புழுங்கிகொண்டிருந்தவள் இன்று சம்மந்தபட்டவனிடமே அனைத்தையும் கொட்டியிருந்தாள்.
மனதிலிருப்பதை அவனிடம் கொட்டிவிட்ட பின் தான் அவள் மனதிற்கும் சற்று ஆறுதலாக இருந்தது.
அதுவரையும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக நின்றிருந்தவன் அவளை தேற்றும் விதமாக,
“மீரா பிளீஸ்… நான் இப்போ உங்க முன்னாடி நல்லாதன இருக்கேன்.” என்றான் இருகரங்களையும் பக்காவாட்டில் நீட்டிய படி.
“அப்போ அதென்ன..?” என்று விழிகளால் அவன் இடதுபுருவத்திற்கு மேல் இருந்த காயத்தழும்பை சுட்டிக்காட்டி கேட்டவள்,
“எத்தனை தையல் போட்டு இருக்காங்க..?” என்று கேட்டவளின் பார்வை அப்போதும் அந்த காயத்தழும்பின் மீதேதான் இருந்தது.
“சும்மா.. ஒரு பத்து தையல் இருக்கும்” என்று சிரித்துகொண்டே அவன் சொல்ல,
“என்னது பத்து தையல்-ஆ..?” என்று அதிர்ச்சியில் வாயை பிளந்துவிட்டாள் அவள்.
பிளந்தவள் அத்தோடு நிறுத்தாமல். “நீ ஏன் தான் இப்படி இருக்கியோ..?” என்று கோவமாக கேட்டதோடு, வந்த கோவத்திற்கு சட்டென்று அவன் கையில் சுள்ளென்று ஒன்று வைக்கவும் செய்ய,
“ஏங்க வலிக்குதுங்க.” என்றான் அவள் அடித்த இடத்தை தடவிக்கொடுத்தப்படியே மீராநந்தன்.
“நல்லா வலிக்கட்டும், எனக்கும் ஆறுமாசம் இப்படித்தானே வலிச்சியிருக்கும்.” என்றவளின் வார்த்தைகளால் அவன் இதழ்களில் புன்னகை விரிய அதை அவளும் கவனிக்கவே செய்தாள்.
“நான் உன்ன திட்டிக்கிட்டு இருக்கேன் நீ வெட்கமே இல்லாமல் பல்ல காட்டிகிட்டு இருக்க..” என்று அதற்கும் அவள் கோவப்பட,
அவனோ அவளின் வார்த்தைகளால் இப்போது வாய்விட்டே சிரித்துவிட்டான்.
கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு பின் அவனின் கள்ளம்கபடமில்லா புன்னகையை பார்த்தவளால் அதற்கு மேல் கோவத்தை இழுத்து பிடித்துக்கொண்டிருக்க முடியவில்லை.
சிரித்துக் கொண்டிருந்தவன் என்ன என்பது போல் புருவ மத்தியை உயர்த்தி கேட்டபோதுதான், இமைக்க கூட மறந்து தான் அவனையே பார்த்துகொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது.
ஒன்னுமில்லை என்பது போல் அவசரஅவசரமாக தலையை ஆட்டிவிட்டு பார்வையை மாற்றிக்கொண்டவளுக்கு, ‘ஐய்யோ’ என்ற உணர்வுதான்.
“உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்ல பிரதிக்ஷா.. அவன் கவனிக்கிற அளவுக்கா பார்ப்ப..? என்ன நினைச்சியிருப்பான் உன்ன பத்தி..” என்று தன்னையே கேட்டுக்கொண்டவளால் அதன் பின் அவன் புறம் திரும்ப கூட முடியவில்லை.
என்னவோ போல் இருந்தது. அவன் புறம் திரும்பாமல் பால்கனி கம்பியை பிடித்துகொண்டு அங்கும் இங்கும் அவள் பார்வையை ஓட விட, மீராநந்தன் பார்வை அவள் மீதேதான் இருந்தது.
அவள் படும் அவஸ்தையை பார்த்து கீழ் அதரங்களை கடித்தப்படி மெலிதாக சிரித்துக் கொண்டவன்,
“மீரா..” என்று மென்மையாக அவளை அழைக்க, அவளுக்குதான் சற்று முன் நடந்த நிகழ்வால் அவனை எதிர்க்கொள்ளவே தர்மசங்கடமாக இருந்தது.
அதனாலே அவன் புறம் திரும்பாமல் “சொல்லு” என்றவள் சொன்னபோது,
அவனோ “என்ன பார்க்கமாட்டீங்களா..?” என்றான் வேண்டுமென்றே.
“விடமாட்டான் போலவே” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவள்,
“ஏன்.. அதுக்குள்ள.. உன் மண்டையில கொம்பு எதாவது முளைச்சியிருச்சா.?” என்றாள் அவனைப் பார்க்காமலேயே.
“முளைச்சியிருக்கா இல்லாயான்னு பார்த்தானங்க தெரியும்.” என்று அவனும் விடாமல் சொல்ல,
அவள் பொறுமையோ காற்றில் பறந்துதான் போனது.
“இப்ப என்னதான்யா உன் பிரச்சனை..?” என்று கேட்டவாறே அவன் புறம் திரும்பியவளிடம் அவன் ஒரு கிஃப்ட் பாக்சை நீட்டியிருக்க, அவளுக்குத்தான் ஒன்றுமே புரியவில்லை.
அவனையும் அவன் கையிலிருந்த கிஃப்ட் பாக்சையுமே மாறி மாறி அவள் பார்த்திருக்க,
“வாங்கிக்கோங்க மீரா.” என்றான் அவன்.
“என்ன திடீர்னு கிஃப்ட்-லாம்..?” என்றாள் அதை வாங்கிகொள்ளாமலேயே.
“ஆறுமாசத்துக்கு அப்புறம் மீட் பண்ணியிருக்கோம் இல்ல, அதான்..” என்று சிரித்துக்கொண்டே அவன் சொன்னபோதும் அவள் வாங்கிகொள்ளவே இல்லை.
பின் அவன் தான் கட்டாயப்படுத்தி அவள் கையில் கொடுத்து பிரிக்க சொல்ல,
“இது காஃபி ஷாப்-ல கொடுத்த கிஃப்டா..?” என்றாள் கிஃப்டை பிரிக்காமலேயே அவள்.
“ம்.. இல்லங்க” என்று மறுப்பாய் தலையை அசைத்தவன், “அத நீங்க பார்க்க வேண்டிய நேரம் இன்னும் வரல.” என்றவனை புரியாமல் பார்த்து உதட்டை பிதுக்கியவள், அதன் பின்னே கிஃப்ட் கவரை பிரிக்க ஆரம்பித்தாள்.
கிஃப்ட் கவரை பிரித்து அதிலிருந்த செல்போனை பார்த்தவளுக்கு அதிர்ச்சிதான்.
“போன்-ஆ..” என்று அதிர்ந்தவள், “இது எதுக்கு..? இத வச்சி நான் என்ன பண்றது..?” என்றாள் கேள்வியாய் அவனைப் பார்த்து.
“இன்கேஸ் மறுபடியும் நான் காணாம போனா எனக்கு என்ன ஆச்சோன்னு பதறாம,
“டேய் ராஸ்கல் எங்கடா போய் தொலைஞ்சன்னு..” போன் போட்டு கேளுங்க.” என்றவன் சொன்னபோது.
“நான் டா போட்டுலாம் கூப்பிடமாட்டேன்” என்றாள் அவள்.
“உரிமை இருக்கற இடத்துல மரியாதை இருக்கவேண்டிய அவசியம் இல்ல டி.” என்றவன் சொல்லி முடித்ததுதான் தாமதம்.
“என்னது டீ-யா..?” என்றாள் அவள் கோவம் துளிர்க்கும் குரலில்.
காரணம் பார்த்த நாள்முதல் சற்றுமுன் வரை அவளை அவன் மரியாதை நிமித்தமாக ‘ங்க’ என்று சேர்த்து பேசிதான் பழக்கம். அதை அவளும் நன்கு அறிவாள்.
அப்படிபட்டவன் இப்போது சட்டென்று ‘டீ’ போட, அவளாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதனால் தான் அவள் கோவமாக கேட்டது கூட.
ஆனால் அவள் கோவத்தையெல்லம் அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவே இல்லை.
“ஆமா.. டீ-தான்” என்று கேஷ்வலாக சொன்னவன், “கட்டிக்கபோறவள டீ போட்டு கூப்புடறதுல தப்பு இல்லையே டீ..?” என்று வேறு தன் செயலை அவன் நியாயப்படுத்தி சொல்ல, அவளுக்கு இன்னும் கோவம்தான் வந்தது.
“ஹலோ என்ன உன் இஷ்டத்துக்கு என்னென்னவோ உளறிகிட்டு இருக்க..?” என்றாள் கோவமாக.
“யாரு நான் உளறுறனா..?” என்று பதிலுக்கு கேட்டவன், “மீரா… நான் உன் கிட்ட ப்ரபோஸ் பண்ணி ஆறு மாசம் ஆகுது.” என்றான் அவன்.
“ஹலோ நானும் உன் ப்ரோபசல்-அ ரிஜெக்ட் பண்ணி ஆறு மாசம் ஆகுது.” என்றாள் அவளும் விடாமல்.
“ரிஜக்ட் பண்ணது ஆறுமாசத்துக்கு முன்னாடி தானே.. இப்போது என் மேல லவ் இருக்கலாம் இல்லையா..? இருக்கறதாலதானே எனக்கு என்ன ஆச்சோன்னு பதறுன.” என்று அவளை அவன் வசமாய் பிடிக்க, அவளுக்குதான் சில கணங்கள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இப்படி அவன் கேட்பான் என்று முன்னமே அவளுக்கு தெரிந்திருந்தால் சற்று முன் அவள் அவனிடம் வாயைத்திறந்திருக்கவே மாட்டாள்.
அவள் வார்த்தையை கொண்டே அவன் அவளை பிடித்திருக்க, அவளுக்குதான் எப்படி அவனை சமாளிப்பதென்றே தெரியவில்லை.
என்ன சொல்வதென்று தெரியாமல் சில கணங்கள் தடுமாறியவள் பின் ஏதோ நினைவு வந்தவளாய்,
“ஹலோ உனக்கு ஆக்சிடண்ட் ஆனதாலதான் நான் பதறுனனே தவிர மத்தபடி உன் மேல நீ நினைக்கறமாதிரி எனக்கு எந்த ஃபீலிங்க்சும் இல்ல.” என்று பொட்டில் அறைந்தார்போல் அவள் சொல்லிவிட,
“நிஜமா என் மேல உனக்கு எந்த ஃபீலிங்சும் இல்லையா..?” என்று புரும மத்தியை சுருக்கி அவன் கேட்டபோது கூட, அவள் ஆமாம் என்பது போல் உறுதியாய் தலையை அசைத்தாள்.
“ரியலி..?” என்று கேட்டவாறே அவன் இப்போது அவளை நெருங்க,
“இப்போ எதுக்கு கிட்ட வர்ற.. தள்ளி போ” என்றவளின் கால்களும் தன்னிச்சையாக பின்னால் நகரவே செய்தது.
“ஏன் பயமா இருக்கா..?” என்று கேட்டவாறே அவனும் அவளை நெருங்க, பின்னால் இருந்த சுவரில் இடித்து நின்றவளுக்கோ அவனின் அருகாமையில் இதயம் அதீத வேகத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தது.
இதில் அவள் தப்பித்து செல்லாவண்ணம் இரண்டு கைகளையும் அவளுக்கு பக்கவாட்டில் வைத்து மேலும் அவளை அவன் நெருங்கி நிற்க, பிரதிக்ஷாவிற்குதான் பயத்தில் கை கால்கள் சில்லிட்டு விட்டன.
விட்டால் சுவற்றுக்குள் புதைத்துவிடுவது போல் சுவரோடு சுவராக அவள் நின்றிருந்த நிலையை பார்த்து மீராநந்தனுக்குமே இப்போது சிரிப்புதான் வந்தது.
இருந்தும் சிரிப்பை விழுங்கி கொண்டு அவன் அவள் விழிகளையே பார்த்திருக்க, அவளால்தான் அவன் விழிகளை எதிர்கொள்ள முடியவில்லை.
அவனின் நெருக்கமும், அவனின் சூடான மூச்சிக்காற்றின் தீண்டலும், எல்லாவற்றிற்கும் மேல் அவன் பார்வையில் இருந்த காதலும் பெண்ணவளைத்தான் அதிகம் பாதித்தது.
கண்களை மூடி ஒரு ஆழ்ந்த பெருமூச்சை எடுத்துகொண்டவள், அதன் பின்னே, “தள்ளி.. தள்ளி.. போ நந்தன்.” என்று திக்கி திணறி சொல்ல,
“அப்போ.. என் கேள்விக்கு பதில் சொல்லு மீரா..” என்றவனை என்ன கேள்வி என்பது போல் புருவம் சுருக்கி பார்த்தாள் பிரதிக்ஷா.
“எனக்கு ஆக்சிடண்ட் ஆனப்போ நீ ஏன் பதறுன..? ஆறுமாசமா என்ன பார்க்க முடியலையேன்னு நீ ஏன் துடிச்ச..? பதறுற அளவுக்கு நான் யாரு மீரா உனக்கு..?” என்றவனின் கேள்வியால் அவள் தான் அதிகம் அதிர்ந்து போனாள்.
ஆம்.. அவன் கேட்பதும் நியாயம் தானே. உரிமை உள்ளவர்களுக்கு ஒன்று என்றால் தானே மனம் பதறும். அவர்களை பார்க்க துடிக்கும்.
எந்த உரிமையில் அவள் பதறினாள்..? அந்த உரிமைக்கு என்ன உறவுமுறை வைத்திருக்கிறாள் என்பதுதான் இப்போது அவன் கேள்வி.
அதைத்தான் அவளிடமே அவன் கேட்டிருந்தது கூட.
அவன் கேள்வி உண்மையில் அவளுக்குள் ஒருவித பதபதப்பை ஏற்படுத்ததான் செய்து.
என்ன ஒரு ஒரு மாதம் பழக்கம் இருக்குமா இருவருக்கும். இந்த ஒரு மாத பழக்கத்திற்காக ஆறுமாதகாலமாக தன்னை வருத்திகொள்ள வேண்டிய அவசியம் என்ன வந்தது..? என்ற கேள்வி அவளுக்குள்ளும் இப்போது எழாமல் இல்லை.
இத்தனைக்கும் அவன் தன் மனதிலிருக்கும் காதலை சொன்ன போதே அவளும் அவன் காதலை மறுத்துவிட்டாள்தான். அப்படியிருந்தும் தனக்குள் ஏன் இத்தனை பதற்றம், பரிதவிப்பு என்றுதான் அவளுக்குமே தெரியவில்லை.
“பதில் சொல்லு மீரா.. நான் யாரு உனக்கு..?” என்றவனின் கேள்வியால் சுயத்திற்கு திரும்பியவளுக்கு தெரியவில்லை அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று.
அவளிடம் பதில் இருந்தால் தானே அவளாலும் சொல்லமுடியும்.
அவளை பொறுத்தமட்டில் அவளுக்கு அவனோடு பேச புடிக்கும், அவனோடு தன் நேரத்தை செலவிட புடிக்கும். அவ்வளவுதான். அதைத்தாண்டி இருவருக்குள் என்ன நடக்கிறது என்றெல்லாம் அவள் யோசித்தது கிடையாது.
யோசிக்க வேண்டிய கட்டாயமும் அவளுக்கு வந்தது கிடையாது.
ஆனால் இன்று பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட்டதே. அதுவும் சம்மந்தபட்ட அவனிடமே.
அவனிடமிருந்து தப்பிப்பதற்காகவது எதையாவது சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தாள் பிரதிக்ஷா.
சில கணங்கள் யோசனைக்கு பின்னே ஒரு முடிவெடுத்தவளாய் எச்சிலைக் கூட்டி விழுங்கிகொண்டு அவனைப் பார்த்தாள்.
அவனோ பதில் சொல்லு என்பது போல் அவளையே பார்த்திருந்தான்.
“ஃப்ரண்ட்.. நீ எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட்.” என்று இருவருக்கும் இடையேயான உறவுமுறைக்கு நட்பு என்று புதுப்பெயரை சூட்டியிருந்தள் பிரதிக்ஷா.
அவளிடம் அவன் இப்படியொரு பதிலை எதிர்ப்பார்க்கவே இல்லை.
இருந்தும் “குட் மூவ்..” என்றவாறே அவளை விட்டு அவன் விலகி நிற்க, பிரதிக்ஷாவிற்கு அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது.
உச்சி வானிற்கு வந்திருந்த நிலவை பார்த்து முன்னுச்சியை கோதிவிட்டவாறே ‘ஃப்ரண்ட்’ என்ற வார்த்தையை இரண்டு மூன்று வாய்விட்டு சொல்லிப் பார்த்தவன்,
“இந்த ஃப்ரண்ட் லவ்வர்-ஆ அப்டேட் ஆக ரொம்ப நாள் ஆகாது மீரா.” என்றான் இப்போது அவளைப் பார்த்து.
“ப்ச்… இந்த டாப்பிக்-அ விடமாட்டான் போலவே” என்று மனதிற்குள் சலித்துகொண்டவாறே பால்கனியில் போடப்பட்டிருந்த சோஃபாவில் சென்று அமர்ந்தவள்,
“அப்படிலாம் நடக்க வாய்ப்பே இல்ல.” என்றாள் அவளும் ஆணித்தனமாக.
“ஹலோ மேடம்.. அதென்ன சொமேட்டோ சுவிக்கி-ஆ நான் வந்துட்டேன்னு டோர்-அ நாக் பண்ண..? லவ் மா.. அது யாருக்குள்ள எப்போ வரும்னு யாராலயும் சொல்லவே முடியாது. யாரு கண்டா இன்னைக்கு இந்த நந்தன்-அ மும்பைக்கு கூட்டிட்டு வந்த காதல் நாளைக்கு என்ன தேடி மீரா-வ சென்னைக்கு கூட கூட்டிட்டு வரலாம்.” என்றவன் சொன்னபோது,
அவளோ “உனக்கென்ன மனசுல பெரிய காதல் மன்னன்னு நினைப்பா..?” என்றாள் அவனை மட்டம் தட்டும் விதமாக.
“இல்ல… இந்த மீராவோட நந்தன்னு நினைப்பு.” என்றவாறே அவள் தோளை இடித்தபடி அவள் அருகில் அவன் அமர, அவன் வார்த்தைகளால் பிரதிக்ஷாவிற்குதான் இதயக்கூடு சில்லிட்டு போனது.
அதுவரையும் சரிக்குசமமாய் அவனோடு பேசிகொண்டிருந்தவளால் இப்போது பதிலுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அவனைவிட்டு தள்ளி அமர்வதற்காக எழ முற்பட்டவளின் கரத்தை பற்றி தடுத்தவன், “ஃப்ரண்ட்தன மீரா.. அப்புறம் ஏன் பயப்படுற..?” என்று கேட்டு அவளை தன் அருகிலேயே அமரவைக்க அவளும் வேறு வழியின்றி அவன் அருகிலேயே அமர்ந்துவிட்டாள்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவள் அமைதியாகிவிட, அவன் தான் அவளுக்காக வாங்கிவந்திருந்த போனை பற்றியும் அதை எப்படி உபயோகிப்பது என்பது பற்றியும் விளக்கிகொண்டிருந்தான்.
ஆனான் அவன் விளக்கத்தையெல்லாம் கேட்கும் மனநிலையில்தான் பாவம் அவள் இல்லை.
ஒட்டி உரசியபடி அமர்ந்திருந்த அவனின் அருகாமையும், அவனிடமிருந்து வந்த பர்ஃப்யூம் வாசனையும், அவ்வப்போது வெண்பற்கள் காட்டி அவளை பார்த்து அவன் உதிர்க்கும் புன்னகையும் அவளைத்தான் உள்ளுக்குள் அதிகம் இம்சித்துக் கொண்டிருந்தது.
“எல்லாம் புரிஞ்சிதுதன மீரா..?” என்று கேட்டவன் போனை சைலண்டில் போட்டு அவளிடம் கொடுக்க,
“வீட்ல யாருக்காவது தெரிஞ்சா பிரச்சனையாகிடும் நந்தன். எனக்கு இது வேண்டாம். “ என்றாள் அவள்.
“மீரா லிசன்.. இந்த போன்-அ நீ என் கிட்ட பேசுறதுக்காக மட்டும் நான் உனக்கு கொடுக்கல. உன்னோட சேஃப்டிக்காக. ஏன்னா எல்லா நேரமும் நான் உன் பக்கத்துல இருக்க முடியாது மீரா. புரிஞ்சிக்கோ.” என்றவன் சொன்னபோது,
“என் வீட்ல எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது..?” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு பிரதிக்ஷா.
இந்த அளவிற்கு இந்த குடும்பத்தை நம்பியிருக்கும் அவளைப் பார்த்து அவனுக்குமே இப்போது பாவமாகத்தான் இருந்தது.




