இருவருமே இப்படியொரு சூழ்நிலையை எதிர்ப்பார்க்கவில்லை.
ஆனால் காஃபிஷாப்பின் கண்ணாடியினூடே வள்ளியம்மை ஓட்டமும் நடையுமாக வருவதை மீராநந்தன் முன்பே கவனித்துவிட்டிருந்தான்.
கவனித்ததோடு நில்லாமல் சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்து, தானும் ஒரு கஸ்டமர் போல் பக்கத்து டேபிள் அருகில் சென்று அவன் நின்றுகொள்ள, இது எதையுமே பிரதிக்ஷா கவனிக்கவே இல்லை.
கிஃப்ட் கவரில் ஒட்டியிருந்த செல்லோ டேப்பை தேடி பிடித்து அவள் பிரிக்கவும், “அம்மா…” என்று கத்தியவாறே வள்ளியம்மை கதவை திறக்கவும் சரியாக இருந்தது.
வள்ளியம்மையின் குரல் கேட்டு திடுக்குற்று எழுந்தவளுக்கு இதயமே நின்றுவிட்ட உணர்வுதான்.
“அம்மா.. சத்யமூர்த்தி ஐய்யாவுக்கு அட்டாக் வந்துடுச்சாம். ரொம்ப சீரியசான நிலமையில ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்களாம். ஹரி ஐய்யா இப்போதான் போன் பண்ணி சொன்னாரு. நம்மள உடனே ஃப்ளைட் புடிச்சி வர சொல்லிட்டாரும்மா.. “ என்று ஓரே மூச்சில் சொன்னவள், அவளுக்கு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த மீராநந்தனையோ, அவள் முன்னால் இருந்த கிஃப்ட் பாக்சையோ கவனிக்கவே இல்லை.
ஏற்கனவே பதற்றத்தில் இருந்தவள், இப்போது வள்ளியம்மை சொன்ன விஷயத்தால் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நின்றுவிட்டாள்.
பின் வள்ளியம்மைதான் “அம்மா.. என்னம்மா நிக்குறீங்க..? வாங்க ம்மா… போகலாம்..” என்றவள் அத்தோடு இல்லாமல் பிரதிக்ஷாவின் ஹேண்ட்பேக்கை எடுத்துகொண்டு, அவளையும் அழைத்துகொண்டு அவசர அவசரமாக காஃபிஷாப்பிலிருந்து வெளியேற பிரதிக்ஷாவிற்குதான் தன்னை சுற்றி என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.
செல்லும் அவளை தடுக்கும் வழிதெரியாது “ஷிட்..” என்றவாறே முன்னுச்சியை கோதிவிட்டுகொண்டவனின் பார்வை பாதி பிரித்தும் பிரிக்காமலும் இருந்த கிஃப்ட் பாக்சின் மீது விழ, அப்படியே அமர்ந்துவிட்டான் மீராநந்தன்.
இன்று அவன் நினைத்து வந்தது ஒன்று ஆனால் நடந்தது என்னவோ வேறொன்றாக இருந்தது.
அவள் கார் இங்கிருந்து கிளம்பி சுமார் ஐந்து நிமிஷங்கள் கழித்தே இருக்கையிலிருந்து எழுந்தவனின் பார்வையில், வள்ளியம்மை ஹேண்ட்பேக்கை எடுக்கும் போது அறுந்துவிழுந்த மீராபொம்மை கீச்செயின் பட, அதன் பின் அவன் கொஞ்சமும் யோசிக்கவில்லை.
இந்த கீச்செயினிற்குள் இருக்கும் டிராக்கர் மூலமாகத் தானே அவன் இப்போதுவரை அவளோடு தொடர்பில் இருக்கிறான்.
வள்ளியம்மை அவளிடம் சொன்னதை வைத்து எப்படியும் விமானநிலையத்திற்குதான் சென்றிருப்பார்கள் என்று கனித்தான்.
பின் கிஃப்ட்-ஐ அங்கிருந்த காஃபிஷாப் ஓனரிடம் எடுத்து வைக்க சொன்னவன், பைக்கை கிளப்பிக்கொண்டு விமான நிலையம் நோக்கி பறந்திருந்தான்.
இந்த கீச்செயினை எப்படியும் அவளிடம் சேர்த்துவிட வேண்டும் என்று அதீத வேகத்தில் வண்டியை ஓட்டியவன், அவள் சென்றுகொண்டிருந்த காரை பிடித்ததோடு அந்த காரை பின் தொடரவும் செய்தான்.
காருக்குள் அமர்ந்தவளுக்கு மனம் பாரமாகி போனதொரு உணர்வுதான். அது சத்யமூர்த்தி பற்றிய செய்தியாலா… இல்லை மீராநந்தனை பிரிந்ததாலா..? அது அவளுக்கே தெரியவில்லை.
யாரோ வலுக்கட்டாயமாக அவள் உடலிலிருந்து உயிரைப் பிரிப்பது போல் இருந்தது.
அவளுக்கு பிடித்தமான ஒன்றை அவள் கைகளிலிருந்து வெடுக்கென்று பிடுங்கிவிட்டது போல் இருந்தது, வாய் விட்டு கத்தி அழவேண்டும் போல் இருந்தது.
ஆனால் கத்தி அழமுடியாத சூழல். இருந்தும் அவள் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் உதிர்ந்தது.
அவளால் கட்டுபடுத்த முடியவில்லை.. கட்டுபடுத்தும் எண்ணமும் அவளுக்குள் வரவில்லை.
யார்வேண்டுமானாலும் பார்த்துகொள்ளட்டும் என்பது போல், அழுதபடியே ஏற்றிவிடப்பட்டிருந்த காரின் கிளாஸ் விண்டோவில் தலையை சாய்த்துகொண்டாள்.
சத்யமூர்த்தியை நினைத்துதான் அழுகிறாள் என்று நினைத்து வள்ளியம்மையும் எதுவும் கேட்டு பிரதிக்ஷாவை தொந்தரவு செய்யவில்லை.
இப்படியே சிலநிமிடங்கள் நீள, தலைசாய்த்தப்படி ஈடுபாடே இல்லாமல் வெளிஉலகை பார்த்து கொண்டிருந்தவளின் பார்வையில் எதேச்சையாகத்தான் பட்டது காரின் சைட் மிரரில் பைக்கில் அவர்கள் காரை பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்த மீராநந்தனின் உருவம்.
தான் காண்பது நிஜம் தானா..? என்பது போல் அடித்து பிடித்துகொண்டு எழுந்து அமர்ந்தவள், சைட் மிரர்-ஐ உற்றுநோக்கி பார்த்தாள் உண்மையில் அது மீராநந்தன் தானா என்று.
அது அவன் தான் என்று அரிதியிட்டு சொன்னது பெண்ணவள் மனம்.
சற்றுமுன் வரை அவளுக்குள் இருந்த மனநிலைகூட அப்படியே மாறி போயிருந்தது.
அத்தோடு சற்றுமுன் தனக்குள் ஏன் இத்தனை வலிகள் என்ற கேள்விக்கான பதிலும் இப்போது அவளுக்கு கிடைத்திருக்க, கார் கண்ணாடியினூடே அமர்ந்தநிலையிலேயே திரும்பி அவனை பார்த்தாள்.
பைக்கில் அவள் காரை பின்தொடர்ந்த வண்ணம் அவன் வந்துகொண்டிருக்க, ‘நந்து’ என்று புன்னகை ததும்ப சத்தமில்லாமல் அவள் இதழ்கள் முனுமுனுத்துக் கொண்டன.
அவன் காதலை சொன்னபோது அவன் மீது அவளுக்கு வந்த கோவமெல்லாம் இப்போது எங்கு சென்றது என்றே தெரியவில்லை.
உண்மையை சொல்லப்போனால் அவளுக்கும் அவனை பிடித்திருக்கிறதுதான். ஆனால் அந்த பிடித்தத்திற்கு அவள் இன்னும் பெயர் வைக்கவில்லை. அவ்வளவுதான்.
காஃபி ஷாப்பில் அவளை கோவப்படுத்திய நிகழ்வுகள் எல்லாம் இப்போது அவளை இரசிக்கவைத்திருந்தது.
இது சரியா..? தவறா…? என்று தெரியவில்லை.. ஆனால் அவள் மனதிற்கு பிடித்திருந்தது.
அவள் மனதிற்கு இப்போது இறக்கை கட்டி பறக்காத குறைதான்.
அவன் அவளை பின் தொடர்ந்து வரும்போதெல்லாம் அவளுக்குள் எழும் பயமோ, பதற்றமோ எதுவுமே இப்போது அவளுக்குள் இல்லை மாறாக என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் அவளுக்குள் முளைவிட்டிருந்தது.
இனம்புரியாத சந்தோஷம் அவளுக்குள் நிறைந்திருந்தது.
ஆனால் அந்த சந்தோஷமும் அவளுக்குள் அதிக நேரம் நீடிக்கவில்லை.
அவன் பைக் விபத்துக்குள்ளாவதை பார்த்தவள் அதிர்ச்சியில், “ஐய்யோ…” என்று பதறியவாறே காரை நிறுத்த சொன்னபோது,
வள்ளியம்மைதான் பிளைட்டிற்கு நேரமாகிறது என்று சொல்லி காரை நிறுத்தவிடவில்லை.
அவன் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்த மீனாட்சிக்கு உள்ளம் பதறித்தான் போனாது.
“ஏண்டா.. எதாவது ஆகியிருந்தா..?” என்று சொல்லும் போதே அவர் கண்கள் கலங்க,
“ம்மா… அதான் எதுவும் ஆகலையே… உங்க முன்னாடி நான் நல்லாதன இருக்கேன்.” என்று என்னதான் அவன் சிரித்துகொண்டே சொன்னாலும், பெற்றவர்களால் அவனுக்கு நடந்த விபத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
“நந்தன்..” என்று அவனை அழைத்த சோமசுந்தரம், “உனக்கு அந்த பொண்ணு முக்கியம்தான். ஆனா அதே சமயம் நீ எங்களுக்கு ரொம்பவே முக்கியம்” என்றார் அடுத்து இது போல் எதுவும் நடக்ககூடாது என்பது போல்.
“அவசரம் இல்லாம.. டேக் யுவர் ஓன் டைம்.. என்னைக்கா இருந்தாலும் இந்த வீட்டு மருமக மீராதான்” என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு, அலுவலக வேலையாக சோமசுந்தரம் கிளம்பி சென்றார்,
“ஆமா… இதுதான் நீ மீரா-க்கு கொடுத்த கிஃப்ட்-ஆ..?” என்று கேட்டவாறே மேஜை மீது பாதி பிரித்தும் பிரிக்காமலும் இருந்த கிஃப்ட் பாக்சை சுட்டி காட்டி கேட்ட மீனாட்சி,
இப்போது அதை எடுத்து பிரிக்கவும் செய்ய, சட்டென்று அதை அவர் கையிலிருந்து பிடுங்கியிருந்தான் மீராநந்தன்.
ஏண்டா என்பது போல் அவர் அவனை பார்க்க, “ம்மா.. இத மீரா மட்டும்தான் ஓப்பன் பண்ணும்.” என்றவன் கறாராக சொன்னபோது,
“சரிடா… அட்லீஸ்ட் அதுல என்ன இருக்குன்னாவது சொல்லேன்..” என்றார் மீனாட்சியும் ஆர்வம் தாங்க மாட்டாமல்.
“அதுவா..?” என்று கேட்டவாறே, அவர் அருகில் சென்றவன் இரகசியம் சொல்வது போல் அவர் காதோராம் குனிந்து,
“சஸ்பென்ஸ்…” என்று கத்தி சொல்ல, அவன் கத்திய காதில் பாவம் மீனாட்சிதான் அரண்டுபோய் விட்டார்.
விருந்திற்கு வந்த பிரதீப்பிடம் கோல்ட் ஷோரும் சம்மந்தமாக தனக்கு தேவையான விவரங்களை கேட்டு தெரிந்துகொண்ட ஹரிஹரன் நேராக அண்ணன் ஜெயசீலனிடம் தான் சென்றான்.
தான் அறிந்த விவரங்களையும், இந்த பிரச்சனைக்கான தீர்வு பற்றியும் ஜெயசீலனிடம் அவன் சொன்னபோது,
ஜெயசீலனோ இது குறித்து தந்தையிடமும் பேசவேண்டும் என்றான்.
ஆனால் இப்போது அவர் உடல் இருக்கும் நிலமையில் இதுகுறித்து பேசுவது சரியில்லை என்பதால் அதற்கான நேரத்திற்காக காத்திருந்தனர் இருவரும்.
இங்கு வந்தது முதலே பிரதிக்ஷா கண்ணில் படாமலேயே இருக்க, பின் பிரதீப்தான் அவளை தேடிக்கொண்டு அவள் அறைக்கு சென்றான்.
அவன் வந்து நின்றது கூட தெரியாமல், எதையோ பறிக்கொடுத்தது போல் பால்கனியில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் பிரதிக்ஷா.
“பிரதி அக்கா..” என்றவனின் இரண்டு மூன்று அழைப்பிற்கு பின்னே சுயத்திற்கு திரும்பியவள்,
“வா.. பிரதீப்…” என்று கஷ்டப்பட்டு புன்னகைத்தப்படி அவனை வரவேற்று அமரவைத்தாள்.
அன்று அவளை பார்த்ததற்கும், இன்று அவளை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை அவனாலும் உணரமுடிந்தது.
சரியாக உண்ணாமலும் உறங்காமலும் கருத்து மெலிந்து போயிருந்தாள். அவள் இருந்த நிறத்திற்கு கண்களுக்கு கீழ் இருந்த கருவளையம் கூட நன்றாகவே தெரிந்தது.
அவள் கண்களில் ஜீவன் இல்லை.. எதையோ இழந்துவிட்டது போல் பொலிவிழந்து போயிருந்தது அவள் முகம்.
சற்றுமுன் அவனை பார்த்து அவள் புன்னகைத்த சிரிப்பில் கூட உயிர்ப்பு இல்லை.
சத்யன் இறந்தபோது கூட அவள் இந்த அளவிற்கு உடைந்து அவன் பார்த்தது கிடையாது.
‘ஒருவேளை அவள் இப்படியிருக்க காரணம் கூட மீராநந்தனாக இருக்குமோ..?’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், அது குறித்து அவளிடம் நேரிடையாக கேட்கவெல்லாம் இல்லை.
“இது உங்களோடதா..?” என்று கேட்டவாறே மீராநந்தன் கொடுத்த கீச்செயினை அவள் முன் பிரதீப் காட்டிய போது, அவள் முகத்தில் தான் எத்தனை பரவசம்.. எத்தனை சந்தோஷம்.
“இது… இது.. என்னோடது..” என்றவள், என்னவோ அவன் தரமாட்டேன் என்று சொன்னது போல் வெடுக்கென்று அவன் கையிலிருந்து பிடுங்கியும் இருந்தாள்.
அவன் நினைவாக அவளிடம் இருந்த ஒன்று..
மும்பை வந்து சேர்ந்தபோதுதான் அவள் ஹேண்ட்பேக்கில் அந்த கீச்செயின் இல்லை என்பதையே பிரதிக்ஷா கவனித்திருந்தாள்.
எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை. இருந்தும் தன் அறையையே ஒரு அலசு அலசிவிட்டாள் கிடைக்கும் என்ற நப்பாசையில்.
அவனையும் அவன் நினைவாக இருந்த கீச்செயினையும் தொலைத்துவிட்டதாக இத்தனை நாட்களாக வருந்தியிருந்தவளுக்கு, இப்போது கீச்செயினை பார்த்ததும் தான் உயிரே வந்தது போல் இருந்தது.
என்னவோ அவனையே பார்த்துவிட்டது போல் அவளுக்குள் அப்படியொரு சந்தோஷம். அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாய் அவள் கண்கள் மெல்ல கலங்க, பிரதீப்பும் அவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
சில கணங்கள் கழித்தே அவன் தன்னை பார்த்துகொண்டிருப்பதை கவனித்தவள்,
“சாரி.. பிரதீப்..” என்று தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததோடு,
“தொலைச்சிட்டனோன்னு நினைச்சேன்..” என்றாள் கீச்செயின் மீதிருந்த பார்வையை விலக்காமலேயே.
அவளையே சில கணங்கள் ஆழ பார்த்திருந்தவனுக்கு, அன்று மீராநந்தன் சொன்னது போல் அவன் கேள்விக்கான பதில் கிடைத்திருந்தது.
“நீங்க தொலைச்சிட கூடாதுன்னுதான்-க்கா கொண்டு வந்து கொடுத்தேன்.” என்று இருபொருள் பட சொன்னவனை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தவள்,
“ஆமா… இது எப்படி உனக்கு கிடச்சிது..? யாராவது..” என்று ஆரம்பித்தவள் பின் சுதாரித்துகொண்டு அமைதியாகி விட,
“ஒருத்தர் கொடுத்தாரு..” என்றான் வேண்டுமென்றே அவளை சீண்டும் விதமாக.
“யாரு…?” என்று விழிகள் நிறைய ஆர்வத்தோடு கேட்டவளுக்கு, அந்த ஒருத்தர் மீராநந்தனாக இருக்க கூடாதா என்ற ஏக்கம்தான்.
காரணம் அவன் இப்படியெல்லாம் செய்யக்கூடியவன் தானே. அத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி அவள் வீட்டிற்கே வந்தவனாயிற்றே.
தன் இருப்பை அவளுக்கு காட்ட கூட அவன் இப்படி செய்திருக்கலாம் என்பது அவள் கணிப்பு.
“காஃபிஷாப் ஓனர்-க்கா… நீங்க காஃபி ஷாப்-ல மிஸ் பண்ணிடீங்க போல.. நானும் இத உங்க ஹேண்ட் பேக்-ல பார்த்ததா நியாபகம்.” என்று மீராநந்தன் சொல்லிகொடுத்தது போல் அவள் நம்புவிதமாக அவன் சொன்னபோது, அவளுக்குதான் சொத்தென்று ஆகிவிட்டது.
பதிலுக்கு “ஓ..” என்றவளின் முகம் அப்படியே மாற, மீராநந்தன் பற்றி சொல்லிவிட்டால்தான் என்ன என்றுதான் தோன்றியது பிரதீப்பிற்கு.
ஆனால் மீராநந்தன் தான் அவளிடம் எதுவும் சொல்லக்கூடாது என்று சொல்லி அனுப்பியிருக்கிறானே.
அதேநேரம் பிரதீப்பின் பாக்கெட்டிலிருந்த செல்போன் கேமரா மூலம் பிரதிக்ஷாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் மீராநந்தன்.
மீராநந்தன் சொன்னது போல் அவள் அறைக்குள் நுழையும் முன்பே பிரதீப் அவனுக்கு வீடியோகால் செய்து பாக்கெட்டுக்குள் போட்டிருக்க, மீராநந்தனும் வீடியோகாலில் ஆரம்பம் முதல் அவளையே பார்த்துகொண்டிருந்தான்.
என்னதான் அன்று காதலை சொன்ன உடன் அவள் கோவப்பட்டிருந்தாலும், இன்று கீச்செயினை பார்த்த உடன் அவள் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்தவனுக்கு இப்போது தெள்ளத்தெளிவாக ஒன்று புரிந்துவிட்டது அவளுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று.
“இவ்வளோ மிஸ் பண்ணியாடி என்ன..?” என்று திரையில் தெரிந்தவளை பார்த்து காதல் மின்ன கேட்டவன்,
“இன்னும் கொஞ்சநாள் பொறுத்துக்கோ மீரா… எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வர்றேன். அதுக்கப்புறம் யாராலையும் உன்ன என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.” என்றவனின் வார்த்தைகளில்தான் எத்தனை காதல்.. எத்தனை நம்பிக்கை.
மேலும் சிறிதுநேரம் அவளிடம் பேசியிருந்துவிட்டு பிரதீப் அங்கிருந்து கிளம்பியிருக்க, மீண்டும் நத்தை போல் தன் அறைக்குள்ளே முடங்கிபோனாள் பிரதிக்ஷா.
அன்று சத்யமூர்த்தியே மகன்கள் இருவரையும் அழைத்து, ஷோரும் குறித்து கேட்ட போதுதான்,
ஷோரும் எரிந்தது முதல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டம், கடன் என்று அனைத்தையையும் சொன்ன ஜெயசீலன், அதையெல்லாம் சரிசெய்ய நிச்சயம் பார்ட்னர்ஷிப் வேண்டும் என்று சொன்னபோது, சத்யமூர்த்தியும் பிஸ்னஸ் வளர்ச்சிக்காக சரியென்று சொல்லிவிட்டார்.
அதேசமயம் அவர்கள் பிஸ்னசில் ஏற்பட்டிருக்கும் பெருத்த அடியை கேள்விபட்டதிலிருந்தே சத்யமூர்த்தியின் உடல்நிலையில் கொஞ்சம் இறக்கம் தான்.
அதனால் முழுநேரமும் அவரை பார்த்துக்கொள்ள ஹோம் நர்ஸிற்கும் ஏற்பாடு செய்திருந்தது அவர்கள் குடும்பம்.
இராஜவர்மன் அதியமானிடம் பேசி சென்னையிலேயே பார்ட்னர்ஷிப் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
மீட்டிங்கிற்கு சத்யமூர்த்திதான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மீராநந்தன் தான் மிடுக்காக மீட்டிங்கிற்கு வந்திருந்தான்.
ஜெயசீலன் தவிர்த்து மற்ற மூவருக்கும் கொஞ்சம் தடுமாற்றம்தான் மீராநந்தனை பார்த்து.
ஆனால் மீராநந்தன் வெகு இயல்பாக மூவருக்கும் தன்னை அறிமுகம் செய்த கையோடு அவர்களை பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டான்.
ஏற்கனவே அவனால் பாதிக்கப்பட்ட அதியமான் அவனை உபசரித்ததோடு வாயை இறுக்கமாக மூடிக்கொண்டார்.
இராஜவர்மன் மற்றும் ஹரிஹரன் கூட பார்வையாளர் போல் வாய் பார்த்தபடி அமர்ந்துவிட, ஜெயசீலன் தான் மீராநந்தனிடம் அதிகம் பேசினான்.
அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு முதல் பார்ட்னர்ஷிப் வரை அனைத்தையும் பற்றி பேசினான்.
பிஸ்னஸ் குறித்து மீராநந்தன் கேட்ட கேள்விகளுக்கு கூட தெள்ளத் தெளிவாக பதில் சொன்னான்.
மீட்டிங் ஆரம்பித்த அரைமணி நேரத்திலே நன்கு தெரிந்தவர்கள் போல் பேச ஆரம்பித்துவிட்டனர் இருவரும்.
மீராநந்தனும் இதைத்தானே எதிர்ப்பார்த்தான்.
அன்றே அதியமான் முன்னிலையில் பார்ட்னர்ஷிப்பிற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
அடுத்தமாதம் தான் மும்பை வரும் போது வேலைக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாம் என்றவன் சொன்னபோது மற்ற இருவருமே சரியென்றனர்.
வந்த வேலை இவ்வளவு சீக்கரமாக, எளிதாக முடியுமென்று நால்வருமே எதிர்பார்க்கவில்லை.
மதிய உணவை மீராநந்தன் ஏற்பாடு செய்திருக்க, ஐவரும் சேர்ந்தேதான் உண்டனர்.
எந்த பிரச்சணையும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக முடிந்ததை நினைத்து நிம்மதி பெருமூச்சிவிட்ட அதியமான் கொஞ்சம் பதறித்தான் போனார் மீராநந்தனின் “அங்கிள்..” என்ற அழைப்பால்.
“சொல்லுங்க தம்பி..” என்றார் அந்த பதற்றத்தோடே
அவரின் பதற்றத்தை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன்,
“ஒரு ஆறுமாசம் நான் மும்பையில ஸ்டே பண்ண நல்ல கெஸ்ட் ஹவுஸ் பார்த்து தரமுடியுமா அங்கிள். ரெண்ட்-க்கு வேண்டாம் பை பண்ணிக்கலாம்” என்றவன் சொன்னதுதான் தாமதம்.
“சகல வசதியோட கடல் போல நம்ம பங்களா இருக்கும் போது நீங்க ஏன் வெளியில ஸ்டே பண்ணனும்.” என்றான் வாயை வைத்துகொண்டு சும்மா இல்லாமல் ஹரிஹரன்.
‘வேலியில போற ஓணான்-அ ஏண்டா எடுத்து உன் வேட்டிக்குள்ள விடுற’ என்பது போல அதியமான் அவனைப் பார்க்க,
இராஜவர்மனோ, “உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை” என்று பற்களை கடித்தான் ஹரிஹரனுக்கு மட்டும் கேட்கும் படி.
சென்னையில் சத்யமூர்த்திக்கும், சத்யமூர்த்தியின் குடும்பத்தாருக்கும் இருக்கும் செல்வாக்கை பார்த்து ஹரிஹரன் ஆரம்பத்தில் கொஞ்சம் மிரண்டுதான் போனான்.
இருந்தும் மீராநந்தனை கொண்டு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மும்பை பக்கமே வராதபடி தன் பாணியில் அவனை கவனிக்க வேண்டுமென்ற ஹரிஹரனின் நப்பாசைதான் இராஜவர்மன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் வாய் திறந்ததற்கு காரணம் கூட.
தன் வீட்டில் தங்கியிருந்தால் அவனை வேவுபார்ப்பது சுலபாக இருக்கும் என்று நினைத்துதான் அவன் பொசுக்கென்று அப்படி சொன்னது கூட.
ஆனால் அவன் அறியவில்லை அவர்கள் வீட்டில் தங்குவதற்காகத்தான் மீராநந்தன் இப்போது அதியமானிடம் அடி போட்டது என்று.
இப்போது ஜெயசீலனும் ஹரிஹரனின் வார்த்தைகளை பிடித்துக் கொள்ள, அதன் பின் மீராநந்தனும் மறுக்கவில்லை.
இதற்கிடையில் நான்சியையும் தொடர்பு கொண்டு பேசியிருந்தான் மீராநந்தன்.
முதலில் இந்தியா வர மறுத்தவளை அவன் தான் பேசி புரியவைத்து இந்தியாவிற்கும் வரவழைத்திருந்தான்.
பாட்ர்னர்ஷிப் கிடைத்த சந்தோஷத்தில் சத்யனின் குடும்பம் இருக்க, இது எதிலுமே கலந்துகொள்ளாமல் ஒதுங்கியே இருந்தாள் பிரதிக்ஷா.




