பிரதிக்ஷாவை காதலிப்பதாக மீராநந்தன் சொன்னபோது, அதை மீராநந்தனின் குடும்பம் ஏற்றுக்கொள்ளுமா..? அதுவும் கணவனை இழந்த நிலையில் இருக்கும் அவளை..? என்று ஏகப்பட்ட கேள்விகள் இங்கு வந்து சென்றது முதல் பிரதீப்பிற்குள்ளும் இருக்கத்தான் செய்தது.
ஆனால் அந்த கேள்விகளுக்கான பதில்களை இன்று கண்களால் கண்டபின், இப்படி பட்ட குடும்பத்தில் மருமகளாக வாழ பிரதிக்ஷா கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது அவனுக்கும்.
அவளை பார்க்காமலே வார்த்தைக்கு வார்த்தை அவளை மருமகள் என்று மீனாட்சி தாங்குவதை பார்த்து பிரதீப்பின் மனம் பூரித்து போனதோடு, இத்தனை ஆண்டுகள் அந்த வீட்டில் பிரதிக்ஷா பட்ட கஷ்டங்கள் வீண்போகவில்லை என்றுதான் தோன்றியது.
அத்தோடு இப்போது அவனுக்குள் மிகப் பெரிய சந்தேகம் வேறு, பிரதிக்ஷாவும் மீராநந்தனை காதலிக்கிறாளா..? என்று.
“பிரதீப்..” என்ற மீராநந்தனின் அழைப்பால் சுயத்திற்கு திரும்பியவன், “சார்.. நேத்து ஹரி மாமா கால் பண்ணியிருந்தாரு. டே ஆஃப்டர் என்ன விருந்துக்கு இன்வைட் பண்ணியிருக்காரு. அவர் இன்வைட் பண்ணியிருக்கறத பார்த்தா எப்படியும் ஷோரும் பத்தி பேசவாதான் இருக்கும்னு தோணுது.” என்றான் தன் மனதில் பட்டதை.
ஒருவேளை ஷோரும் பற்றி ஹரி ஏதாவது கேட்டால் என்ன சொல்லவேண்டும் என்ற புள்ளிவிவரங்களை மீராநந்தன் சொன்னபோது, பிரதீப்பும் அதை கவனாக காதில் வாங்கி கொண்டான்.
புதிதாக யாரோ கோல்டு ஷோரும் ஆரம்பிக்கபோவதாக பிரதீப் மூலம் கேள்விபட்டதிலிருந்தே ஹரிஹரனுக்கு வேலையே ஓடவில்லை.
காரணம் புதிதாக கோல்ட் ஷோரும் திறக்கப்பட்டால்.. அந்த ஷோருமால் அவர்களுக்கு எவ்வளவு பெரிய இழப்பு வரும் என்பதை அவனும் அறியாமல் இல்லை.
அதுவும் ஷோரும் எரிந்திருக்கும் நிலையில் இப்படியொன்று நிகழ்ந்தால் அவர்கள் கோல்ட் ஷோரும் கூண்டோடு கைலாசம் செல்ல வேண்டியதுதான்.
இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று நினைத்தவன் உடனே இராஜவர்மனுக்கு அழைத்து மும்பைக்கு வர சொல்ல,
இராஜவர்மனும் அடுத்தநாளே அவன் முன்னால் வந்து நின்றான்.
பிரதீப் மூலம் தான் அறிந்த விவரங்களை சொன்னவன்,
“அந்த சோமசுந்தரம் யாரு என்னன்னு பார்த்து மும்பை பக்கமே வராத அளவுக்கு ஒரு வார்னிங் கொடுத்துடு.” என்று திமிராக சொன்னவனின் முகம் மாறித்தான் போனது இராஜவர்மனின் நக்கல் நிறைந்த சிரிப்பை பார்த்து.
“அந்த சோமசுந்தரம் ஒன்னும் நீ நினைக்கிறமாதிரி பொட்டிக்கட வச்சியிருக்கறவன் இல்ல.. தமிழ்நாட்டு-ல அந்த ஆளு ஆரம்பிக்காத பிஸ்னஸே கிடையாது.. ஏன் தமிழ்நாட்டுக்கு வர முக்கால்வாசி வருமானத்துக்கு காரணமே அந்த சோமசுந்தரம்தான். அந்த ஆளுக்கு வார்னிங் கொடுக்கறதும் ஒன்னும்தான் நீயா உன் கையால மண்ண எடுத்து உன் தலையில போட்டுகறதும் ஒன்னுதான்.” என்று இராஜவர்மனும் கையை விரித்துவிட ஹரிஹரனுக்குதான் அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை.
“இந்த ஷோரும் மட்டும் எரியாம இருந்திருந்தா நாம இப்போ கவலைப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காது.” என்று ஹரிஹரன் நொந்துகொண்டபோது,
“ஷோரும் எரிஞ்சாலும் எரியாட்டாலும் அந்த சோமசுந்தரம் ஷாப் ஓப்பன் பண்ண ஆறுமாசத்துல மொத்த மும்பையையும் கவர் பண்ணிடுவான்.” என்றான் இராஜவர்மன் அதற்கும்.
அது ஹரிஹரனை மேலும் எரிச்சல் படுத்த,
“இலவசம் அது இதுன்னு சொல்லி கவர் பண்ண இது என்ன மளிகை கடை வியாபாரமா..? தங்கம்.” என்றான் சற்றே ஆதங்கத்தோடு.
“சரி தங்கத்த தகரம் விலைக்கு தரமுடியுமா உன்னால..?” என்று பதிலுக்கு கேட்டவனைப் பார்த்து, மாட்டேன் என்பது போல் ஹரிஹரன் தலையை ஆட்ட,
“அந்த ஆளு தருவான்.” என்று புருவமத்தியை உயர்த்தி சொன்னவனை, அதிர்ச்சியோடு பார்த்தான் ஹரிஹரன்.
“ஏன்னா.. அந்த ஆளுக்கு பிராஃபிட்லாம் முக்கியம் இல்ல.. வாடிக்கையாளர்கள்தான் முக்கியம். தன்னோட ப்ராடக்ட்-அ மக்கள் கைக்கு கொண்டுபோய் சேர்க்க அந்த ஆளு எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவான்.” என்று சோமசுந்தரத்தை கணித்து இராஜவர்மன் சொன்னபோது,
“இப்போ என்ன தான் பண்றது..?” என்றான் ஹரிஹரன் இதற்கு என்ன தான் தீர்வு என்பது போல்.
கட்டை விரல் நகத்தை கடித்தப்படி சிலகணங்கள் யோசித்த இராஜவர்மன் பின் ஒரு முடிவெடுத்தவானாய் தொண்டையை கனைத்தப்படி ஹரிஹரனை பார்க்க, ஹரிஹரனும் அவனையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க ஷோரும்-அ புதுபிக்க பார்ட்னர்ஷிப் தேட்டிகிட்டு இருக்கீங்கதன..?” என்று கேட்டவன்,
“பெட்டர் அவங்க கூட பார்ட்னர் ஷிப் வச்சிக்கோங்க” என்று சொன்னபோது ஹரிஹரனும் ஒப்புக்கு சரியென்றான்.
உண்மையை சொல்லப்போனால் அவர்களிடன் நாம் போய் பார்ட்னர்ஷிப்பிற்கு நிற்பதா..? என்ற நிலைதான் ஹரிஹரனுக்கு.
அதேசமயம் மூன்றுதலைமுறைகளாக நடத்தி வரும் பிஸ்னஸிற்காக செய்துதான் ஆகவேண்டிய கட்டாயம்.
“எதுக்கும் ஒருதடவ பிரதீப்கிட்ட பேசி கன்பார்ம் பண்ணிட்டு சொல்லு. நான் தொழில்துறை அமைச்சர் அதியமான் மூலமா பார்னர்ஷிப் மீட்டிங்-கு ஏற்பாடு பண்றேன்.” என்று இராஜவர்மன் சொன்னபோது,
முதலில் அவர்களை கொண்டு ஷோருமை புதுபிப்போம்.. அதன் பின் தன் பாணியில் அவர்களை கவனித்துகொள்வோம் என்ற முடிவுடனே
சரி என்பது போல் பதிலுக்கு தலையை ஆட்டிய ஹரிஹரனும், “நானும் இத பத்தி அண்ணா கிட்டயும் அப்பாகிட்டயும் பேசறேன்.” என்க, தான் வந்த காரியம் முடிந்துவிட்டதாக எழுந்த இராஜவர்மன் பின் என்ன நினைத்தனோ,
“ஹரி..” என்று அவனை அழைத்து, “பார்ட்னர் ஷிப் மீட்டிங்க்கு நீ வரவேண்டாம்” என்றான்.
அவனோ “ஏன்..?” என்றான் புருவம் இடுக்கி.
“ஏன்னா நீ எடக்கு முடக்கா எதையாவது பேசிவச்சிடுவ. அந்த சோமசுந்தரம் கூட ஒகே.. ஆனா அந்த ஆளு பையன் இருக்கானே அவன் வேற மாதிரி.. அமைச்சர் அதியமான்-யே அலறவிட்டான்னா பார்த்துக்கோ.” என்றவன் அதியமான் இல்ல திருமணவிழாவில் நடந்த குளறுபடிகளையும் சொல்ல தவறவில்லை.
“எப்போ என்ன பண்ணுவான்னு யூக்கிக்க முடியாத ஒரு கேரக்டர். எதுக்கும் அவன் கிட்ட நீ கொஞ்சம் கேர்புல்லா இரு” என்று அவனுக்கான சில அறிவுரைகளை வழங்கிவிட்டுதான் இராஜவர்மன் அங்கிருந்து கிளம்பினான்.
அதன் பின் தான் விருந்து என்ற பெயரில் ஹரிஹரன் பிரதீப்பை அழைத்திருந்தது.
“எனி அதர் டவுட் பிரதீப்..” என்று கேட்டவனிடன் இல்லை என்பது போல் தலையை ஆட்டிய பிரதீப்-பால் உள்ளுக்குள் அந்த கேள்வியை வைத்து கொண்டிருக்க முடியவில்லை.
அதனாலே, “சார்…” என்று இழுத்தவனை, தயங்காம சொல்லுங்க என்பது போல் மீராநந்தன் பார்க்க, அவனும் ஒரு வழியாக தட்டுதடுமாறி கேட்க ஆரம்பித்தான்.
“பிரதி அக்காவும் உங்கள..” என்றவானால் மேற்கொண்டு மனதில் இருப்பதை அப்படியே கேட்டுவிட முடியவில்லை.
ஒருவேளை இப்படி ஒருவன் தன்னை காதலித்துகொண்டிருப்பது பிரதிக்ஷாவிற்கு தெரியுமோ..? என்னவோ..? என்பதே அவனுக்கு இப்போது சந்தேகம்தான். காரணம் அவள் இருக்கும், வாழும் சூழல் அப்படி.
அப்படிப்பட்ட சூழலில் இந்த காதல் எல்லாம் சாத்தியமற்றது என்றதுதான் பிரதீப்பிற்கு தோன்றியது.
“பிரதீப்..” என்ற மீராநந்தனின் அழைப்பால், அவனை பார்த்த பிரதீப் “உங்கள பிரதி அக்காவுக்கு தெரியுமா..?” என்று தன் மனதில் இருப்பதை அப்படியே மாற்றிக் கேட்டான்.
அவனின் கேள்வியால் வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்தவன், தான் அணிந்திருந்த ஷார்ட்ஸ் பேக்கெட்டிலிருந்த மீராபொம்மை கீச்செயினை எடுத்து அவனிடம் நீட்டியிருந்தான்.
“டே ஆஃப்டர் மீட் பண்ணும் போது இந்த கீச்செயின்-அ மீராகிட்ட கொடு. உன் கேள்விக்கான பதில் கிடைக்கும்.” என்றவன் சொன்னபோது பிரதீப்பும் தலையை ஆட்டியபடி வாங்கிகொண்டான்.
பிரதீப்பை வழியணுப்பிவிட்டு வந்தவனிடம், இன்று நீ பெங்களூரில் நடந்ததை சொல்லித்தான் ஆகவேண்டும் என்பது போல் பிடிவாதமாக அமர்ந்துவிட்டனர் மீனாட்சியும் சோமசுந்தரமும்.
அவர்களும் மூன்றுமாத காலமாகவே அவ்வப்போது அவனிடம் கேட்டுகொண்டுதான் இருக்கிறார்கள்.
ஆனால் அவன் தான் அவளை தொலைத்துவிட்ட விரக்தியில் எதற்கும் வாயைத்திறக்கவே இல்லையே.
அதேசமயம் அவன் நிலை புரிந்து அவர்களும் அடிக்கடி அவனை கேட்டு தொந்தரவு செய்யவில்லை.
ஆனால் இன்றுதான் அவள் எங்கு இருக்கிறாள்..? எப்படி அவளை தொடர்பு கொள்வதென்ற அவனின் அத்துனை கேள்விகளுகளுக்கும் பதில் கிடைத்துவிட்டதே.
அதனால் இப்போதாவது அவன் வாயைத்திறக்கலாம் தானே என்பது அவர்கள் வாதம்.
“இப்பவாவது சொல்லேண்டா.. அவசராவசரமா பெங்களூர் கிளம்பிபோனீயே… மீரா-வ பார்க்கதான் கிளம்பிபோனியா..? அவகிட்ட பேசுனீயா..…?” என்று அவன் முன் அடுக்கடுக்காய் கேள்வி கேட்ட மீனாட்சியின் முகம் மட்டுமல்ல… சோமசுந்தரனின் முகமும் ஒருசேர மாறித்தான் போனது அவள் ஒரு விதவை என்று அவன் சொன்ன போது.
சுபத்ரா மூலமாக பிரதிக்ஷாவிற்கு திருமணமானதை அறிந்ததிலிருந்தே மீனாட்சிக்குள் குழப்பம்தான்.
ஆனால் விபத்திலிருந்து மீண்டவன் சதா அவள் நினைவிலேயே இருப்பதை பார்த்தபின், அந்த குழப்பத்தையும் ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டார் மீனாட்சி.
ஒருவேளை மகன் சொல்வது போல் தன்னை சமாளிப்பதற்காக கூட சுபத்ரா அன்று பொய் சொல்லியிருக்கலாம் என்று தான் தோன்றியது அவருக்கும்.
ஆனால் இன்று அவனே அவள் ஒரு விதவை என்று சொன்னபோது மீனாட்சிக்கு மட்டும் அல்ல சோமசுந்தரத்திற்குமே பேரதிர்ச்சிதான்.
“என்ன டா சொல்ற..?” என்று அதிர்ச்சியோடு வினவியவரிடன், அன்று மண்டபத்தில் அவள் தலைகுனிந்து நின்றது, அவளை காப்பாற்றும் பொருட்டு பிரதீப்பின் ஸ்டார்ட-அப்பிற்கு ஃப்ண்ட் கொடுத்தது, அதன்பின் காஃபி ஷாப்பில் அவள் பகிர்ந்த கசப்பான கடந்த காலங்கள், சத்யன் பற்றிய உண்மை என்று அத்தனையும் அவன் சொல்ல, அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த இருவருக்குமே மனம் கனத்துதான் போனது.
அதிலும் மீனாட்சிக்கு கண்கள் கலங்கிவிட்டது.
சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில் அவள் ஒரு சன்யாசி போல் வாழ்ந்துகொண்டிருப்பதை நினைத்து.
தன்னையும் அறியாமல் வழிந்தோடிய கண்ணீரை துடைத்துவிட்டவாறே சட்டென்று இருக்கையிலிருந்து எழுந்த மீனாட்சியை, என்ன என்பது போல் மீராநந்தன் பார்க்க,
அவரோ “ஏங்க… எழுந்திரிங்க.. நாம இப்பவே கமிஷ்னரோட அங்க போய் மீரா-வ இங்க கூட்டிட்டு வந்துடுவோம்.” என்ற அழுகையும் ஆத்திரமும் அடைக்க சொன்னபோது இருவருக்குமே அவரின் ஆத்திரம் புரியவே செய்தது.
இருந்தும் “பொறு மீனா..” என்று அவர் கரத்தை பற்றி தன் அருகில் அமரவைத்த சோமசுந்தரம்,
“இதென்ன பிஸ்னஸ்-ஆ எடுத்தோம் கவிழ்த்தோம்னு ஒரு முடிவு எடுக்கறதுக்கு.. இது பொண்ணு விஷயம்.. எடுத்து சொல்லி புரியவைக்க வேண்டிய விஷயம். நீ சொல்றமாதிரி இங்க கூட்டிட்டு வந்துட்டா மட்டும் மீரா சந்தோஷமா இருந்துடுவாளா..? ஏன் உன் அண்ணன் ஒருநாள் உனக்கு போன் பண்ணலனா கூட நீ இப்பவரைக்கும் சண்டை போட்டுகிட்டுதன இருக்க..?” என்றவரை என் அண்ணனும் இராஜவர்மனும் ஒன்னா என்பது போல் பார்த்தார் மீனாட்சி.
“உன் அண்ணனும் இராஜவர்மனும் ஒன்னு இல்லதான்.. ஆனா மீரா.. மீனாட்சியா இருக்காளே… இரண்டு குடும்பத்துலயுமே தனக்கு அநியாயம் நடக்குது.. தனக்காக பேச யாருமே இல்லன்னு தெரிஞ்சதுக்கப்புறம் எல்லாரையும் தூக்கி போட்டுட்டு மீரா ஏன் வெளியில வரல…? வெளியில வர தைரியம் இல்லாமலா இல்ல… எங்க அப்படி வெளியில போனா இரண்டு குடும்பத்துக்கும் தன்னால கெட்ட பேர் வந்துடுமோன்ற குற்ற உணர்வு அவள வெளியில போக விடல.. ஏன்னா இரண்டு குடும்பத்துக்குமே தன்னால எந்தகெட்ட பேரும் வந்துட கூடாதுன்ற பொறுப்ப இன்னுமுமே அவ கெட்டியா பிடிச்சி வச்சியிருக்கா..
எல்லார் மேலயும் அவளுக்குள்ள கோவம் இருக்கலாம்.. ஆனா பாசம் இல்லன்னு சொல்லிட முடியாது மீனா. மனசுல உள்ள கோவத்தாலயும், வெறுப்பாலயும் உள்ளுக்குள்ள உள்ள பாசத்த மறைச்சிதான் வைக்க முடியுமே தவிர, அத வேறோட பிடுங்கி எறிஞ்சிட முடியாது.” என்று பிரதிக்ஷாவின் மனதில் இருப்பதை கணித்து சொன்னவர்,
“சுதந்திரம் கிடைக்கிறது முக்கியமில்ல மீனா.. அது அடிமைபட்ட அதே இடத்துல கிடைக்குமா-ன்றதுதான் முக்கியம்” என்றவர் இப்போது மகனை பார்த்து,
“என்ன நந்தன்..?” என்க, “எக்ஸாட்லி டேட்” என்றான் தன் எண்ணமும் அதுதான் என்பது போல்.
அவன் நினைத்திருந்தால் அவர்களுடைய இரண்டாவது சந்திப்பிலேயே அவளை இங்கு வம்படியாக இழுத்து வந்திருக்கலாம் தாம். ஆனால் அவன் அதை விரும்பவில்லை.
சோமசுந்தரம் சொன்னது போல் அவளுக்கான நியாயங்களை வாங்கி கொடுத்து அதன்பின் அவளை தன்னவளாக்கி கொள்ளத்தானே அவனும் அவளை பார்த்த நாள் முதல் போராடிக்கொண்டிருக்கிறான்.
சோமசுந்தரத்தின் வார்த்தைகளால் ஓரளவுதான் மீனாட்சியால் தன்னை சமதானப்படுத்திகொள்ள முடிந்தது.
என்னதான் அவர் பேசுவதெல்லாம் நியாயமாக இருந்தாலும் அத்தனை வலிகளையும் தாங்கிகொண்டு அவள் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கையை ஒரு பெண்ணாக அவரால் இலகுவாக கடந்துசெல்ல முடியவில்லை.
இருந்தும் “மீராகிட்ட உன் காதல்-அ சொல்லிட்டியாடா…? என்று தன் வலிகளை தனக்குள் விழுங்கிகொண்டு அவரால் பேச்சைதான் மாற்ற முடிந்தது.
சொல்லிவிட்டேன் என்பது போல் யோசனையோடு தலையை அசைத்தவனுக்கு அன்று அதிரடியாக அவளிடம் தன் காதலை சொன்ன நிகழ்வுதான் கண்முன்னே வந்து நின்றது.
அவன் கரங்களை பற்றி, அழும் அவளை தேற்றும் விதமாக, “மீரா… மீரா.. பிளீஸ் அழாதீங்க..” என்று அவனும் எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டான்.
இருந்தும் அவள் அழுகை நின்றபாடில்லை.
மனதில் இருக்கும் பாரம் தீரும் மட்டும் அழுது கரைந்தவள், அதன் பின்னே அவனை நிமிர்ந்துபார்த்தாள் அவனுக்கு நன்றி சொல்லும் பொருட்டு.
அவள் நன்றியை முன்பே கனித்தவன் போல், “தேங்கஸ் வேணாங்க..” என்றான் அன்று மாலில் சொன்னது போலவே.
அவனின் வார்த்தைகளால் அவள் இதழ்களில் இப்போது மென் புன்னகை அரும்ப அந்த புன்னகைமாறாமல் “வேற..” என்றாள் அவளும் அன்று போலவே.
“லவ் பண்ணனும்” என்றவன் சொல்லி முடித்ததுதான் தான் அதுவரையும் அவள் இதழ்களிலிருந்த புன்னகை எங்கு சென்று ஒளிந்ததென்றே தெரியவில்லை.
“வாட்..?” என்று பெண்ணவள் அதிர்ச்சியில் அதிர,
“லவ் யூ மீரா.” என்று தன் காதலை வெளிப்படுத்தி மீண்டும் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தான் மீராநந்தன்.
அதுவரையும் அவன் கரத்தை பற்றியிருந்த தன் கரத்தை எடுக்க முற்பட்டவள் அப்போதுதான் கவனித்தாள் அவள் கரம் இப்போது அவன் கரங்களுக்குள் சிறைப்பட்டிருப்பதை.
அவன் செயலால் அவளுக்கு இப்போது கோவம் வர, “என்ன விளையாட்டு இது..? கை-அ விடு..” என்றாள் கோவம் துளிர்க்கும் குரலில்.
ஆனால் அவனோ வெகு இயல்பாய், “இனி இந்த கை-அ விடுற ஐடியா இல்ல மீரா.” என்றவன் சொன்னபோது, அவளுக்குதான் மேலும் தூக்கிவாரிப் போட்டது.
“கை-அ விடு..” என்று மீண்டும் அவள் சொன்னபோது கூட அவன் அவள் கரத்தை விடவே இல்லை.
மாறாக விடமாட்டேன் என்பது போல் மேலும் அவள் கரத்தை இறுக்கமாக அவன் பற்றிக்கொள்ள, அவனின் செயலால் அவள்தான் பேச்சற்றுப் போனாள்.
அவளும் அவன் பிடியிலிருந்து தன் கரத்தை விடுவித்து கொள்ள எவ்வளவோ முயன்றுபார்த்துவிட்டாள்தான்… அவன் பிடி மேலும் மேலும் இறுகியதே தவிர கொஞ்சமும் இளகவில்லை.
அவள் அவனை கோவத்தோடு பார்க்க, அவனோ கள்ளபுன்னகை புரிந்தவண்ணம் அவளையேதான் பார்த்துகொண்டிருந்தான்.
அதுவே அவளுக்கு மேலும் கோவத்தை ஏற்படுத்த, “அப்போ.. இப்படியொரு எண்ணத மனசுல வச்சிக்கிட்டுதான்.. நான் போற இடத்துக்கெல்லாம் என் பின்னாடியே வந்தீயா..?” என்றாள்.
“ம்.. இல்லன்னு பொய்லாம் சொல்லமாட்டேன் மீரா..” என்று தைரியமாக சொன்னவனை பார்த்து மேலும் அதிர்ந்துதான் போனாள் பெண்ணவள்.
“ஆக்சுவலி நம்ம ஃப்ஸ்ட் மீட்-லே ஃபிக்ஸ் பண்ணிட்டேன் மீரா. மீரா இந்த நந்தனுக்கு தான்னு” என்று விழிகள் நிறைய காதலோடு அழகாய் சிரித்துகொண்டே சொன்னவனின் வார்த்தைகளால், அவளுக்குதான் சொரேரென்றது.
அத்தோடு ‘என்ன திமிர்..? இவன் ஃபிக்ஸ் பண்ணிட்டானாமே.. இவன் ஒருத்தன் முடிவுபண்ணிட்டா போதுமா..?’ என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டவள்,
“என்னது.. ஃபிக்ஸ் பண்ணிட்டியா..?” என்று விழிகள் நிறைய கோவத்தோடு கேட்டவள்,
“ஹலோ… நான் ஒன்னும் கடையில விக்கற பொம்மை இல்ல.. யார் ஆசைப்பட்டாலும் எடுத்துக்க.. எனக்குள்ளயும் உயிர் இருக்கு.. உணர்வுகள் இருக்கு.. மனசு இருக்கு…” என்றவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே,
“அந்த மனசுக்குள்ள இந்த நந்தனுக்கு இடமும் இருக்கு.” என்று ஆணித்தனமாய் அவன் சொல்ல, பாவம் அவள்தான் ஆடிப்போய்விட்டாள்.
“ஹே… என்ன உன் இஷ்டத்துக்கு உளறிக்கிட்டு இருக்க.. நான் அந்தமாதிரி எண்ணத்துல உன்கிட்ட பழகவும் இல்ல.. பேசவும் இல்ல..” என்று அவளும் அடித்து சொல்ல,
“நம்பிட்டேங்க..” என்றான் அவனும் அழகாய் சிரித்துக் கொண்டே.
அதுவே அவளுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்த,
“நான் ஒரு விடோ” என்றாள் இப்போது பற்களை கடித்துகொண்டு அழுத்தம் திருத்தமாக. இந்த நிலமையில் இருக்கும் நான் எப்படி உன்னை காதலிப்பேன் என்பது போல்.
ஆனால் அதற்கும் அவன், “ஏன் விடோ லவ் பண்ணக்கூடாதா..? பண்ணக் கூடாதுன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன…?” என்றவன் திருப்பி கேட்டபோது அவள்தான் மேலும் திணறிப்போனாள்.
“பிடிக்காம நடந்த மேரஜ்க்கு நீங்க இவ்வளோ முக்கியதுவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல மீரா. அது ஒரு ஆக்சிடண்ட் அவ்வளோதான். உங்களுக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. அத நீங்க வாழவேண்டாமா.. உங்க நந்தன் கூட..?” என்றவன் கேட்டபோது, சற்றுமுன் அவனிடம் மனம் திறந்து பேசியது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது அவளுக்கு புரிந்தது.
இப்போது புரிந்து என்ன பயன்…? அவன் தான் காதல்… காதல் என்று விடாமல் பிதற்றுகிறானே… அவள் கரத்தையும் விட மாட்டேன் என்கிறானே..
அன்று ஏன் வீட்டை விட்டு வெளியேறினோம் என்று இப்போது வருந்தினாள்.
இது மட்டும் அவள் குடும்பத்தாருக்கு தெரியவந்தால் அதன் என்ன நடக்கும் என்பதை யூகிக்கும் போதே அவளுக்குள் அப்படியொரு பதற்றம்.
அப்படி எதுவும் நடக்ககூடாது… நடக்கவிடகூடாது.. என்ற முடிவோடு
“ஹலோ… என்ன உங்க நந்தன்..” என்று திருப்பி அவனை முறைத்தவள்,
“அப்போ இது என் மேல உள்ள அனுதாபத்துல வந்த காதல் இல்லையா…?” என்று அவனை மடக்கினாள்.
“கமான் மீரா… உங்க பாஸ்ட் எனக்கு ஜஸ்ட் நவ் தான் தெரியும். ஆனா நான் உங்கள பார்த்த அன்னைக்கே..” என்றவனை அவள் நம்பமாட்டாமல் பார்க்க,
“வெயிட்” என்றவாறே அவள் கரத்தைவிடுத்து இருக்கையிலிருந்து எழுந்தவன் அவளுக்கு கொடுப்பதற்காக தன் கையோடு கொண்டுவந்திருந்த கிஃப்ட் பாக்சை எடுத்து வந்து,
“திஸ் ஈஸ் ஃபார் யூ மீரா..” என்றவாறே அவளிடம் நீட்டியிருந்தான்.
அவளுக்கோ இங்கிருந்து ஓடிவிட்டால் என்ன..? என்ற எண்ணம்தான் அந்நேரம்.
அந்த எண்ணத்தின் வெளிப்பாடாய் அவள் கடைவிழிப்பார்வையால் கதவை பார்க்க, “டோர் கீ என் கிட்டதான் இருக்கு மீரா.” என்றான் கையிலிருந்த சாவியை ஆட்டியபடியே.
‘அடப்பாவி… இவனைப்போய் நல்லவன்னு நம்புனேன் பாரு. என்ன சொல்லணும்.’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டவள்,
அதன் பின்னே வேறு வழியின்றி அவன் கொடுத்த கிஃப்ட் பாக்சை வாங்கினாள்.
வாங்கி மேஜை மீது வைத்தவள் அவனையும் அந்த கிஃப்ட் பாக்சையும் மாறி மாறி பார்க்க,
“ஓப்பன் பண்ணு மீரா… என் காதல் அனுதாபத்துல வந்துதா… இல்ல….” என்று இழுத்தவன் மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் விழிகளால் அதை ஓப்பன் செய்ய சொல்ல,
அவளும் அதை ஓப்பன் செய்ய எத்தனித்த நேரம், “அம்மா…” என்றவாறே காஃபி ஷாப் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்திருந்தாள் வள்ளியம்மை.




