Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 20

July 05, 2026
சந்தோஷ் குணா
0
9 min read
அத்தியாயம் - 20
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் இனி அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்று தெரிந்த பின் தான் சோமசுந்தரம் தம்பதியினரால் ஓரளவு நிம்மதி பெருமூச்சி விட முடிந்தது.

 

சொல்லபோனால் இந்த விபத்திலிருந்து அவன் உயிர்பிழைத்ததே பெரிய விஷயம்தான்.

 

இனி அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென்ற பின்தான் தனி விமானத்தில் அவனை சென்னைக்கு அழைத்து வந்தனர்.

 

அவர்களை சென்னை விமானத்தில் ஏற்றிவிடும் வரை பக்கத்திலிருந்து அனைத்தையும் பார்த்துகொண்டது என்னவோ பிரதீப்தான்.

 

சென்னையிலும் ஒரு மாத காலம் அவன் மருத்துவமனையில்தான் இருந்தான்.

 

காயம் ஓரளவு குணமாகி பிசியோ நடைபயிற்சி எல்லாம் முடிந்து அவன் வீடு திரும்பவே இரண்டு மாத காலங்கள் ஆகிவிட்டிருந்தன.

 

மீனாட்சி மற்றும் சோமசுந்தரத்தின் கவனிப்பால் என்னதான் அவன் உடல்நலனில் நல்ல முன்னேற்றம் தெரிந்தாலும், அவன் மௌனம் மட்டும் கலையவே இல்லை.

 

சுயத்திற்கு திரும்பியது முதல் அவள் பற்றிய சிந்தனை தான் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

 

அவள் எங்கு இருக்கிறாள்..? என்ன நிலையில் இருக்கிறாள்..? இனி எப்படி அவளை சந்திப்பது..? மும்பையில் எங்கு சென்று அவளை தேடுவது..? என்ற கேள்விகள்தான் உள்ளுக்குள் அவனை இம்சித்துக் கொண்டிருந்தது.

 

இத்தனை நாட்கள் அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவன் சென்று நின்றதற்கு காரணம் அவன் சொல்வது போல் யுனிவர்ஸ் எல்லாம் இல்லை..

 

அன்று எந்த மீரா பொம்மை கீச்செயினை வலுக்காட்டயமாக அவள் ஹேண்ட்பேக்கில் மாட்டினானே அந்த பொம்மைக்குள் அவன் பொருத்திவைத்திருந்த டிராக்கர் தான்.

 

ஆம்.. முதல் சந்திப்பிற்கு பின் அவளை தேடி அலைந்து சோர்ந்து போனவன், மீண்டும் அவளை சந்திக்க நேரிடிடும் பட்சத்தில் அவளை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும், எப்போதும் அவளுடன் தொடர்பில் இருப்பதற்காகவும்தான் கீச்செயினிற்குள் டிராக்கரை வைத்தது.

 

அப்படித்தான் அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவன் சென்றது.

 

ஆனால் அன்று பெங்களூரில் வள்ளியம்மை வலுக்கட்டாயமாக பிரதிக்ஷாவை அந்த காஃபி ஷாப்பிலிருந்து  இழுத்து செல்லும் போது அவள் ஹேண்ட்பேக்கில் அவன் மாட்டிவிட்டிருந்த மீராபொம்மை கீச்செயின் அறுந்து விழுந்ததை அந்த களேபரத்தில் அவளும் கவனிக்கவில்லை, அவனும்தான்.

 

அங்கிருந்து அவள் கிளம்பி சென்ற பின் தான் கீழே விழுந்து கிடந்த அந்த கீச்செயினை அவன் கவனித்தது.

 

அந்த டிராக்கர் இல்லாமல் நிச்சயம் அவளை தொடர்புகொள்வதென்பது எவ்வளவு கடினம் என்பது அவனும் அறிந்ததே.

 

அதனால்தான் எப்படியாவது அந்த கீச்செயினை அவளிடம் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் பைக்கில் அவள் செல்லும் காரை அதிவேகத்தில் அவன் பின் தொடர்ந்தது.

 

ஆனால் அன்று விதி வேறு விதமாக விளையாடி இருக்க, அவள் விஷயத்தில் மீண்டும் ஆரம்பித்த புள்ளிக்கே வந்துவிட்டது போல் இருந்தது மீராநந்தனுக்கு.

 

தன் கையில் இருந்த அந்த மீராபொம்மை கீச்செயினை பார்த்தவனுக்கு மனம் கனத்தது அவளை நினைத்து.

 

அவனுக்கு தெரிந்து அவள் இப்போது மும்பையில் இருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம்.

 

ஆனால் மும்பையில் எங்கு சென்று அவளை தேடுவது.

 

கையில் விலாசத்தை வைத்துகொண்டு தேடினாலே மும்பையில் கண்டுபிடிப்பது கடினம். இதில் அவளை பற்றி எதுவுமே தெரியாமல் அவளை தேடி கண்டுபிடிப்பதெல்லாம் இலகுவான காரியமா..? என்ன..?

 

அவளும் அன்று மேலோட்டமாக தன் வாழ்க்கையில் நடந்ததை பற்றி அவனிடம் சொன்னாளே தவிர, சத்யனை பற்றியோ அவன் குடும்பத்தார் பற்றியோ எதுவுமே சொல்லவில்லை.

 

அப்படி ஏதாவது சொல்லியிருந்தால் கூட அவன் அதை வைத்து அவளை தேட ஆரம்பித்திருப்பான்.

 

இப்போது அவளை கண்டுபிடிக்க அவனிடம் இருக்கும் ஒரே ஒரு துருப்பு சீட்டு என்றால் அது பிரதீப் மட்டும் தான்.

 

அதேசமயம் பிரதீப்-பும் அவள் குறித்து சொல்ல வேண்டுமே.

 

பிரதீப்பிடம் எப்படி பேசி அவள் குறித்த விவரங்களை வாங்குவதென்று மீராநந்தன் தீவிரமாக யோசித்துகொண்டிருந்த தருவாயில்தான் பிரதீப்பே அவனை தேடிகொண்டு அவன் வீட்டிற்கு வந்திருந்தான் அவனின் உடல்நலனை விசாரிக்கும் பொருட்டு.

 

நலம் விசாரிப்பு அதனை தொடர்ந்து ஸ்டார்ட் அப் பிஸ்னஸ் என்றெல்லாம் பேச்சை வளர்த்த மீராநந்தன்,

 

“தேங்க்ஸ் பிரதீப்” என்றான் அன்று தன் உயிரை காப்பற்றியதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு.

 

“என்ன சார்… தேங்கஸ்லாம்..? ஆக்சுவலி நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்..” என்றவன் சிரித்துகொண்டே சொன்னபோது,

 

பதிலுக்கு அவனை பார்த்து புன்னகைத்த மீராநந்தனோ “ஸ்டார்ட்-அப் ஃப்ண்ட் காகதன..?” என்றான்.

 

அவனின் கேள்விக்கு இல்லை என்பது போல் மறுப்பாய் தலையை அசைத்தவனை வேறு எதற்காக என்பது போல் புருவம் சுருக்கி பார்த்தான் மீராநந்தன்.

 

“அன்னைக்கு நீங்க மட்டும் எனக்கு போன் பண்ணலனா… என் சிஸ்டர்-அ என் வொயிஃப் வீட்டு ஆளுங்க வார்த்தையாலே கொன்னு இருப்பாங்க சார்..” என்று வருத்தத்தோடு பிரதீப் சொன்னபோது, அன்றைய நிகழ்வை நினைத்து மீராநந்தனின் முகமும் இறுகித்தான் போனது.

 

இருந்தும் அதை வெளிகாட்டிகொள்ளாமல், “ஏன் என்னாச்சி..?” என்றான் தனக்கு எதுவுமே தெரியாதது என்பது போல்.

 

இப்படி கேட்டால் தானே அவள் பற்றிய பேச்சை பிரதீப்பிடம் ஆரம்பிக்க முடியும்.

 

இந்த மாதிரியான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தானே மீராநந்தனும் வந்தவனிடம் பேச்சை வளர்த்து கொண்டிருந்ததது. அந்த வாய்ப்பை பிரதீப்பே இப்போது ஏற்படுத்தி கொடுத்திருக்க மீராநந்தனும் அதை கெட்டியாக பிடித்துகொண்டான்.

 

பின் அன்று நடந்தவைகளையெல்லாம் மீராநந்தனிடம் சொல்லி முடித்தவன்,

 

“ரொம்ப தேங்கஸ் சார்… அன்னைக்கு மட்டும் நீங்க கரெக்ட்டா அந்த டைம்-க்கு போன் பண்ணியிருக்கலனா என் சிஸ்டர் ரொம்பவே உடைஞ்சி போயிருப்பாங்க சார்.” என்று வருத்தம் தொணித்த குரலில் சொன்னவன்,

 

இப்போது இருகரம் கூப்பி கண்கள் கலங்க தன் நன்றியை மீராநந்தனிடம் தெரிவித்தபோது, அவள் மீது அவனுக்கு இருக்கும் பாசத்தை பார்த்து மீராநந்தனின் மனம் நெகிழ்ந்துதான் போனது.

 

“கமான் பிரதீப்…” என்றவாறே அதுவரையும் தான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து மெல்ல எழுந்து பிரதீப்பின் அருகில் சென்று அமர்ந்தவன், கூப்பியிருந்த அவன் கரத்தை பற்றி இறக்கி விட்டவாரே

 

“நான் ஒன்னு கேட்ட தப்பா எடுத்துக்க மாட்டீங்களே…?” என்க,

 

பிரதீப்போ “என்ன சார் இப்படிலாம் கேட்குறீங்க..?” என்று பதறியதோடு,

 

“கேளுங்க சார்..” என்றான் நீங்க என்ன கேட்டாலும் நான் தவறாக எடுத்துகொள்ள மாட்டேன் என்பது போல்.

 

“எனக்கு தேங்க்ஸ் சொல்றதுக்கு பதிலா நீங்க ஏன் உங்க சிஸ்டர்க்கு இன்னொரு மேரேஜ் பண்ணிவைக்க கூடாது..?” என்று கேட்டவனை பிரதீப் இப்போது அதிர்ந்து போய் பார்த்தான்.

 

“ஏன்னா ஒவ்வொரு டைம்-மும் அவங்கள சேவ் பண்ண யாராவது வருவாங்கன்னு சொல்ல முடியாது இல்லையா.. விடோ-ன்ற அடையாளத்த மாத்திட்டா அதுக்கப்புறம் யாரும் அவங்கள வார்த்தையால காயப்படுத்தவும் மாட்டாங்கதன.. எல்லாத்துக்கும் மேல உங்க சிஸ்டர்-க்கு வாழ வேண்டிய வயசு இருக்கு பிரதீப். இறந்துபோன ஒருத்தவங்களோட பேர்-அ சொல்லி இன்னொருத்தவங்க வாழ்க்கை-அ வாழவிடாம தடுக்கிறது தப்பில்லையா..?” என்று கேட்டவனின் விழிகள் பிரதீப்-பையேதான் ஆழ பார்த்து கொண்டிருந்தது அவன் மனதிற்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் பொருட்டு.

 

என்னதான் பிரச்சனைக்கான தீர்வை மீராநந்தன் இலகுவாக சொல்லிவிட்டிருந்தாலும், பிரதீப்பால் அவன் போல் இலகுவாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

 

பிரதீப்பிடம் அமைதி மட்டுமே நிலவ, கட்டைவிரல் நகத்தை கடித்தப்படி மீராநந்தனும் அவனையேதான் பார்த்து கொண்டிருந்தான்.

 

இப்படியே சில கணங்கள் நீள பின் மீராநந்தன் தான், “ஐம் சாரி பிரதீப்… என்ன இருந்தாலும் உங்க ஃபேம்லி பத்தி நான் என்னோட ஒப்பீனியன்-அ ஓப்பனா சொல்லியிருக்க கூடாது.” என்றவன் முடிக்கவில்லை,

 

அதற்குள் “சார் பிளீஸ்…” என்ற ஆரம்பித்த பிரதீப்பிற்கோ எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை.

 

சில கணங்கள் தடுமாறியவன் பின் ஒரு முடிவு எடுத்தவனாய் “சார்… சிஸ்டர்-க்கு இன்னொரு மேரேஜ் பண்ணிவைக்க எனக்கும் ஆசைதான் சார். ஆனா…” என்று இழுத்தவன்,

 

இப்போது மீராநந்தனை பார்த்து, “தம்பி-ன்ற உரிமையோட அவங்களுக்கு மேரேஜ் பண்ண அவங்க என் கூட பொறந்த சிஸ்டர் இல்ல சார்.. எங்களுக்கு அவங்க தூரத்து ரிலேட்டிவ். ஆனா பிரதி அக்கா-னா எனக்கு ரொம்ப புடிக்கும்.” என்றவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்பவே செய்தது.

 

“சார் உங்களுக்கு மும்பையில எஸ்.ஆர் ஜீவல்லரி ஷோரும் ஓனர் சத்யமூர்த்தி தெரியுமா..?” என்றவனை பார்த்து, தெரியாது என்பது போல் தலையை அசைத்தான் மீராநந்தன்.

 

பின் தன் போனில் வைத்திருந்த சத்யமூர்த்தியின் புகைப்படத்தை மீராநந்தனிடம் காட்டிய பிரதீப்,

“இவர்தான் சார் சத்யமூர்த்தி அங்கிள். இவங்களுக்கு மும்பையிலே மூணு ஜீவல்லரி ஷாப் இருக்கு. எங்களுக்கு தூரத்து ரிலேட்டிவ்-ஆ இருந்தாலும் சத்யமூர்த்தி அங்கிள்-க்கு எங்க அப்பா ரொம்ப நெருக்கம். அங்கிளோட மூணாவது பையன்-அ தான் பிரதி அக்கா மேரேஜ் பண்ணாங்க.” என்றவன்,

 

பிரதிக்ஷாவும் சத்யனும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை காட்ட, மேலோட்டமாக அந்த புகைப்படத்தை பார்க்க ஆரம்பித்தவனின் கருவிழிகள் அதிர்ச்சியில் ஒரு சுற்று விரிந்துதான் போனது அவளருகில் நின்றுகொண்டிருந்த சத்யனை பார்த்து.

 

அத்தோடு அதிர்ச்சியில் தன்னைமீறிக் கொண்டு அவன் இதழ்கள் “சத்யன்” என்ற பெயரையும் முனுமுனுத்தது.

 

அவனின் சத்யன் என்ற வார்த்தை பிரதீப்பின் காதிலும் நன்றாக விழவே செய்ய,

 

“சத்யன் மாமா-வ உங்களுக்கு தெரியுமா சார்..?” என்றான் பிரதீப்பும் கேள்வியாய் இப்போது மீராநந்தனை பார்த்து.

 

தெரியும் என்பது போல் யோசனையோடே தலையை அசைத்தவனுக்கு, படித்துகொண்டே பகுதிநேரமாக வேலை பார்த்துகொண்டிருந்த காஃபி ஷாப்பில் அடிக்கடி சத்யனை பார்த்த நிகழ்வுகள்தான் மனக்கண் முன்னே வந்து போனது.

 

ஆம்.. சத்யன் மருத்துவம் படித்துகொண்டிருந்த அதே டெக்சாஸ் மாகானத்தில் தான் மீராநந்தனும் தன்னுடைய எம்.எஸ் மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்தான்.

 

என்ன தான் செல்ல செழிப்பான குடும்பத்தில் மீராநந்தன் பிறந்திருந்தாலும் தன்னுடைய மேற்படிப்பிற்கான செலவை தானே பார்த்துகொள்வதாக சொல்லிவிட்டு அமெரிக்கா வந்தவன்,  படித்துகொண்டே பகுதிநேர வேலைகளையும் பார்க்க ஆரம்பித்திருந்தான்.

 

அப்படித்தான் சத்யன் படித்துகொண்டே பயிற்சி எடுத்துகொண்டிருந்த மருத்துவமனைக்கு அருகில் இருந்த காஃபிஷாப்பில் பகுதிநேரமாக மீராநந்தன் வேலைக்கு சேர்ந்தது.

 

தன்னுடைய சக தோழமைகளுடன் சத்யன் தினமும் காஃபிஷாப் வந்து சென்ற வண்ணம் இருக்க, அப்படித்தான் மீராநந்தன் அவனை அங்கு பார்த்தது.

 

பார்த்து கொண்டதோடு சரி பெரிதாக அவர்கள் இருவரும் பேசிக்கொண்டதெல்லாம் கிடையாது.

 

ஆனால் சத்யனின் தோழமைகளுள் தினேஷ் மட்டும் மீராநந்தனிடம் நன்கு பேசுவான், பழகுவான்.

 

காரணம் தினேஷ்-ம், மீராநந்தன் போல் தமிழ்நாடு என்பதால் அதுவே அவர்கள் இருவருக்குள் காலப்போக்கில் ஒருவித நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

 

அதே சமயம் சத்யனும் தன் தோழமைகளோடு அதிகம் சிரித்து பேசியெல்லாம் மீராநந்தன் பார்த்தது கிடையாது.

 

சத்யன் எப்போது தன் தோழமைகளோடு காஃபிஷாப்பிற்கு வந்தாலும் சரி அவர்கள் நட்புகுழுவில் இருக்கும் நான்சி என்ற பெண்ணோடு தனியாக சென்று அமர்ந்து பேச ஆரம்பித்துவிடுவான். அதை மீராநந்தனும் பார்த்திருக்கிறான் தான்.

 

ஏன் அவர்கள் இருவரும் லிவ்விங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், ஒருவரையொருவர் காதலிப்பதாகவும் சத்யன் நண்பன் தினேஷ் கூட பேச்சிவாக்கில் மீராநந்தனிடம் சொல்லியிருக்கிறான் தான்.

 

அதே போன்று அன்று பிரதிக்ஷா சொன்னது போல் அவன் ஒன்றும் நண்பர்களோடு சேர்ந்தெல்லாம் நீர்வீழ்ச்சிக்கு செல்லவில்லை,

 

நான்சியோடு அவன் நீர்வீழ்ச்சிக்கு சென்றபோதுதான் தவறிவிழுந்து இறந்துபோனது கூட.

 

சத்யனின் இறப்பிற்கு பின் நான்சியை கூட அவன் பார்த்தது கிடையாது.

 

ஆனால் தினேஷ் மட்டும் எப்பவாவது காஃபிஷாப்பிற்கு வருவான். கொஞ்சநேரம் மீராநந்தனிடம் பேசிவிட்டு செல்வான்.

 

பின் படிப்பு முடிந்து இந்தியா திரும்பியவனுக்கு எப்பவாவது தினேஷ் அழைத்து பேசுவான். அவ்வளவுதான்.

 

“சார் என்னாச்சி..?” என்ற பிரதீப்பின் அழைப்பால் சுயத்திற்கு திரும்பியவன், அவசர அவசரமாக தன் போனை தேடி எடுத்து தினேஷிற்குதான் அழைத்தான்.

 

“ஹே…நந்தன்… என்ன அதிசயமா நீ எனக்கு போன் பண்ணியிருக்க..?” என்று குரலில் குதூகலத்தோடு ஆரம்பித்தவனிடம்,

 

“வாட் அபவுட் நான்சி..?” என்றான் எடுத்த எடுப்பிலே மீராநந்தன்.

 

மறுமுனையில் தினேஷ் கூறிய விவரங்களை கேட்டு, மீராநந்தனின் முகம் மாற, கலவர முகத்துடன் பிரதீப்பும் அவனையேதான் பார்த்து கொண்டிருந்தான்.

 

தினேஷி-டம் நான்சியிடம் பேச வேண்டும் என்று சொன்னவன்,  அவளுடைய போன் நம்பர் மற்றும் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துகொண்ட புகைப்படங்களையும் தனக்கு அனுப்புமாறு சொல்லிவிட்டு போனை வைக்க, பிரதீப்பிற்குதான் மீராநந்தனின் செயல் எதுவுமே விளங்கவில்லை.

 

மீராநந்தன் கேட்டுக் கொண்டதற்கினங்க தினேஷ்-ம் நான்சியின் போன் நம்பர் மற்றும் தன்னிடம் இருந்த சில புகைப்படங்களையும் அவனுக்கு அனுப்பியிருந்தான்.

 

அந்த புகைப்படங்களையெல்லாம் புருவமுடிச்சிகளோடு பார்த்து கொண்டிருந்த மீராநந்தனையே அதுவரையும் பார்த்திருந்த பிரதீப்பால் அதற்கு மேல் அமைதிகாக்க முடியவில்லை.

 

அதனாலே “சார்…” என்று மெலிதாக அவனை அழைத்தவன்,

 

“நான்சி-ன்றவங்க யார் சார்...? சத்யன்மாமா-வோட ஃப்ரண்ட்-ஆ…?” என்று திக்கிதிணறி கேட்டவனை பார்த்து, இல்லை என்பது போல் மறுப்பாய் தலையை ஆசைத்த மீராநந்தன்,

 

இப்போது தன் செல்போனை அவனிடம் நீட்டினான்.

 

குழப்பத்துடனே அதை கையில் வாங்கி பார்த்தவனுக்கு தலையே சுற்றிவிட்டது.

 

நான்சியின் நெற்றியில் சத்யன் முத்தமிடுவது போன்றும் அவளை தன்னோடு அணைத்தாற்போல் சத்யன் இருக்கும் புகைப்படங்களை பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிய,

 

அந்த அதிர்ச்சியின் விளைவால், “சார்…. என்ன சார் இதெல்லாம். யார் சார் இந்த பொண்ணு…? மாமா ஏன் இந்த பொண்ணுகூட இவ்வளோ குளோஸ்-ஆ இருக்காரு…?” என்று கேட்டவன் மேலும் அதிர்ந்துதான் போனான்

 

“இந்த பொண்ணு பேர்தான் நான்சி. படிக்க வந்த இடத்துல இரண்டு பேருக்கும் புடிச்சி போய்ச்சி. லவ் பண்ணாங்க.. லிவ்விங் டூ கெதர் ரிஷன்ஷிப்-ல இருந்தாங்க. அங்க நான் பார்ட்டைம்-அ வொர்க் பண்ணிட்டு இருந்த காஃபிஷாப்-ல தான் இவங்க இரண்டு பேரும் அடிக்கடி மீட் பண்ணுவாங்க..” என்ற மீராநந்தனின் வார்த்தைகளால்.

 

“அப்புறம் சத்யன் நான்சியோடே அவுட்டிங் போனப்போதான் நீர்வீழ்ச்சியில தவறி விழுந்து இறந்தது” என்று நிறுத்தியவன்,

 

“அவங்க காதலுக்கு அடையாளமா இப்போ நாலு வயசுல ஒரு குழந்தை இருக்காம்” என்று புருவமுடிச்சிகளோடு சொன்னவனை அதிர்ந்து போய் பார்த்த பிரதீப்பிற்கோ கண்களை கட்டி காட்டில் விட்டது போனற உணர்வு தான்.

 

அவனுக்கு அவன் காதுகளையே இப்போது நம்ப முடியவில்லை.

 

சத்யன் காதலித்ததையே அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத போது. சத்யனுக்கு நான்கு வயதில் குழந்தை இருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

 

ஆனால் நம்புவதற்கான சாத்திய கூறுகள் அத்தனையும் அவன் கண்முன்னால் இருந்தது.

 

புகைப்படம் எடுக்கப்பட்ட லெக்கேஷன், நேரம், தேதி அத்தனையும் புகைப்படத்தின் ஓரத்தில் இருக்க, பிரதீப்பிற்கும் இதையெல்லாம் நம்புவதை தவிர வேறு வழியும் இல்லாமல் போனது.

 

முதலில் இதையெல்லாம் நம்புவதா என்று தடுமாறியவனுக்கு அனைத்தையும் நம்பிய பின் சத்யன் மீதுதான் கோவம் வந்தது.

 

“என் அக்கா-வ கல்யாணம் பண்ணிட்டு.. இவரால எப்படி சார் இன்னொரு பொண்ண காதலிக்க முடிஞ்சிது…? அந்த பொண்ணோட ஒன்னா வாழ முடிஞ்சிது…?” என்று ஆதங்கத்தோடு கேட்டவனுக்குள் இருக்கும் வலியை விடவே மீராநந்தனுக்குள் அதிகம் வலித்தது.

 

தனக்கும் தன் காத்திருப்பிற்கும் கொஞ்சமும் தகுதியில்லாத ஒருவனுக்காக நான்காண்டு காலமாக தன்னையும் தன் ஆசைகளையும் அழித்து கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னவளை நினைத்து.

 

அவனுக்குள் அதிகம் வலித்தது. அவள் விஷயத்தில் தானும் கொஞ்சம் மெத்தனமாக இருந்துவிட்டோமோ என்று இப்போது அவன் மனம் அவனை கடிந்தது.

 

அத்தனைக்கும் மேல் சத்யனின் சுயம் தெரிந்திருந்தும் அவன் குடும்பத்தார் அவளுக்கு இழைத்து கொண்டிருக்கும் கொடுமையை நினைத்து எரிமலை குழம்பாய் கொதித்தது அவன் உள்ளம்.

 

இப்போதே இந்த கணமே அவளை மீட்டெடுக்க அவன் உள்ளம் துடித்தது.

 

ஆனால் முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டி இருக்கிறது.

 

“பாவம் சார் பிரதி அக்கா.. இந்த ஆளோட சுயரூபம் தெரியாம இவனுக்காக நாலு வருஷமா சந்நியாச வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்காங்க.” என்றவனின் வார்த்தைகளில் இப்போது வருத்தம் தான் அதிகம் இருந்தது.

 

பின் ஏதோ முடிவெடுத்தவனாய், “இந்த போட்டோஸ் போதும் சார். என் பிரதி அக்காவ அந்த வனவாசத்துலேந்து காப்பாத்த. நான் இன்னைக்கே மும்பை போய் ஹரிஹரன் மாமா-வ நேர்ல பார்த்து பேசுறேன் சார். ஹரி மாமா சொன்னா சத்யமூர்த்தி அங்கிள் கண்டிப்பா கேட்பாரு.” என்று கண்கள் மின்ன நம்பிக்கையோடு சொன்னவனின் நம்பிக்கையெல்லாம் சுக்குநூறாகத்தான் போனது இந்த விஷயமெல்லாம் ஹரிஹரனுக்கு தெரியுமென்று மீராநந்தன் சொன்னபோது.

 

ஆம் சத்யன் இறந்து ஒரு மாதங்கள் கழித்துதான் சத்யனின் குழந்தை தனக்குள் வளர்வது நான்சிக்கு தெரியவந்தது.

தொடரும்....

9 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels