Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 19

May 31, 2026
சந்தோஷ் குணா
0
8 min read
அத்தியாயம் - 19
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

“மீரா… மீரா..” என்று கத்தியவாறே அவள் சென்று கொண்டிருந்த காரை அதிவேகத்தில் பைக்கில் பின் தொடர்ந்துகொண்டிருந்தவன், சாலையின் மறுபுறத்திலிருந்து அதே வேகத்தில் சாலையை கடக்க முற்பட்ட அந்த காரை கொஞ்சமும் கவனிக்கல்லை.

 

அதி வேகத்தில் வந்த காரும் பைக்கும் பெரும் சத்தத்தோடு மோதிக்கொள்ள, “நந்து….“ என்று அலறியவாறே உறக்கத்திலிருந்து கண்விழித்திருந்தாள் பிரதிக்ஷா.

 

அலறி துடித்து எழுந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, அவளால் இயல்பாக மூச்சி கூட விட முடியவில்லை.

 

அவளின் அலறல் சத்தம் கேட்டு அடித்து பிடித்துகொண்டு எழுந்த வள்ளியம்மைக்கு, அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்து கை கால் ஓடவில்லை.

 

அந்த ஏ.சி அறையிலும் அவளுக்கு வியர்த்து வழிவதை கவனித்த வள்ளியம்மை,

 

“அம்மா… அம்மா… என்னாச்சி ம்மா..” என்றவாறே பிரத்திக்ஷாவின் கரத்தை பற்றியவளுக்கு நெருப்பை தொட்ட உணர்வுதான்.

 

“ஐய்யோ… அம்மா… என்னம்மா உடம்பு இப்படி நெருப்பா கொதிக்குது..?” என்று பதறியவள்,

 

ஓடிச்சென்று டவலை நனைத்து வந்து அவள் முகம், கைகளை துடைத்துவிட, பிரதிக்ஷாதான் இன்னும் அந்த கனவின் அதிர்ச்சியிலிருந்து வெளி வரமால் அப்படியே அமர்ந்திருந்தாள்.

 

பிரதிக்ஷா மும்பை வந்து மூன்று மாத காலங்கள் ஆகிவிட்டன.

 

இந்த மூன்று மாத காலமும் அவனுக்கு என்ன ஆனதோ என்ற பயமும், பதற்றமும்தான் அவளை வாட்டி வதைத்து கொண்டிருந்தது.

 

பெங்களூரிலிருந்து கிளம்பும் போது அவள் என்ன காட்சியை கண்டாலோ அந்த காட்சி தான் அனுதினமும் அவளை கனவில் வந்து இம்சித்து கொண்டிருப்பது கூட.

 

அன்று உங்களோடு நான் வரமாட்டேன் என்று சொல்லிருக்கலாமோ…  அவன் விபத்துக்குள்ளானதை பார்த்த பின்னும் ஏன் தான் காரை நிறுத்த சொல்லவில்லை..

 

தனக்கு ஏன் சொல்லும் அளவிற்கு தைரியம் வரவில்லை.. தான் ஏன் இந்த அளவிற்கு கோழையாக இருக்கிறேன் என்று அனுதினமும் தன்னை நிந்தித்துகொண்டவளுக்கு தெரியவில்லை அவனை எப்படி தொடர்பு கொள்வதென்று.

 

எப்படியாவது தன் தோழி பார்த்திமா-வை தொடர்பு கொண்டு அவன் பற்றி விசாரிக்க சொல்லலாம் என்றால், அவன் பெயரைத்தவிர வேறு எதுவுமே அவளுக்கு தெரியாதே.

 

வெறும் பெயரை மட்டும் வைத்து ஒருவரை கண்டுபிடிப்பதெல்லாம் நடக்கிற காரியமா என்ன..?

 

பிரதீப்பை தொடர்பு கொண்டு கேட்கலாம் என்றாலோ அடுத்து அவன் கேட்கும் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியாது. அத்தோடு அவன் மூலமாக அவள் குடும்பத்தாருக்கும் தெரிய வந்துவிடும்.

 

அவன் போன் நம்பரையாவது வாங்கி வைத்திருக்கலாமோ என்று இப்போது அடித்துகொண்டது பெண்ணவள் மனம்.

 

எங்கு சென்றாலும் தன் முன்னால் வந்து நிற்பவன், மூன்று மாத காலமாக தன்னை ஏன் தேடிவரவில்லை.

 

ஒருவேளை அன்று நடந்த விபத்தில் அவனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று நினைக்கும் போதே அனலில் இட்ட புழுவாய் துடித்து போனது பெண்ணவள் மனம்.

 

‘நீங்க ஏன் நந்து கார்-அ ஃபாலோ பண்ணீங்க..? உங்களுக்கு என்னாச்சி நந்து’ என்று யாருக்கும் தெரியாமல் அவளால் அழ மட்டுமே முடிந்தது.

 

அவனுக்கு என்ன ஆனதோ என்ற பரிதவிப்பில் சரியாக உண்ணாததாலும் உறங்காததாலும் நாளும் மெலிந்த வண்ணமாகவே இருந்தாள் பிரதிக்ஷா.

 

இதில் எதிர்பாராத சத்யமூர்த்தியின் இருதய அறுவை சிகிச்சையாலும், மின் கசிவால் அவர்கள் நகைகடை  எரிந்து சாம்பலாகி பிஸ்னசில் விழுந்திருந்த பெருத்த அடியாலும் சத்யனின் குடும்பமே சோகத்தில் மூழ்கிபோய் இருக்க, இதில் அவளின் சோகம் அடுத்தவர் கண்களுக்கு தனியாக தெரியவா போகிறது.

 

ஜீரத்தின் வீரியத்தால் பிரதிக்ஷாவில் உடல் இப்போது நடுங்க ஆரம்பித்திருக்க, இதற்கு மேல் காலதாமதம் ஏற்படுத்த விரும்பாத வள்ளியம்மை நேராக சத்யனின் தாயார் கௌசல்யாவைத்தான் தேடி சென்றாள்.

 

வள்ளியம்மை கௌசல்யாவின் கதவை தட்டிய சத்தத்தில் குடும்பமே எழுந்துவிட்டிருக்க,  பின் சத்யனின் மூத்த அண்ணன் ஜெயசீலன் அவர்கள் குடும்ப மருத்துவருக்கு அழைத்திருந்தான்.

 

சத்யமூர்த்தி மற்றும் கௌசல்யா தம்பதியினருக்கு மொத்தம் மூன்று மகன்கள். இதில் சத்யன் கடைக்குட்டி என்பதால் குடும்பத்தினர் அனைவருக்குமே அவன் அதீத செல்லம்.

 

மூத்தவன் ஜெயசீலன் மற்றும் அவனுக்கு அடுத்தவன் ஹரிஹரன் இருவருமே சத்யமூர்த்தியின் விருப்பப்படி பெயருக்கென்று ஒரு டிகிரி முடித்த கையோடு, சத்யமூர்த்தியோடு சேர்ந்து குடும்ப பிஸ்னஸ்-ஐ கவனிக்க ஆரம்பித்துவிட்டனர்.

 

இதில் சத்யன் மட்டும் மருத்துவம்தான் படிப்பேன் என்று ஒற்றை காலில் நிற்க, சத்யமூர்த்தியும் மறுப்பு தெரிவிக்க வில்லை.

 

அவன் படித்து முடித்துவிட்டு வரும் வரை பிரதிக்ஷா வீட்டில் சும்மா இருக்க வேண்டாம் என்று தான் அவளை நகை பற்றிய படிப்பில் சத்யமூர்த்தி சேர்த்து விட்டது கூட.

 

படிப்பு முடிந்த பின்னாவது அவளோடு அவன் சேர்ந்து வாழ்வான் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தான் அவன் மருத்துவத்தில் முதுகலை படிக்க வேண்டும் அதுவும் அமெரிக்கா சென்று படிக்க வேண்டும் என்று சொல்ல, கௌசல்யா அதற்கு சம்மதிக்கவே இல்லை.

 

“டேய் என்னடா நினைச்சிகிட்டு இருக்க நீ.. எம்.பி.பிஸ் படிக்க போறன்னு நாலு வருஷமா ஹைத்ராபாத்-ல போய் உட்கார்ந்துகிட்ட.. இப்ப என்னடாண்ணா அமெரிக்கா போறன்னு வந்து நிக்குற..” என்று முதலில் கோவமாக சத்யனிடம் கத்தியவர்,

 

“பாவம் டா அவ… உனக்காக ஆறு வருஷமா காத்துகிட்டு இருக்கா” என்றார் இப்போது குரலை தாழ்த்தி.

 

“மாம்… “ என்றவாறே அவர் அருகில் சென்று அமர்ந்தவன்,

 

“நாலு வருஷத்துல படிப்ப முடிச்சிட்டு இங்கதன மாம் வரப்போறேன். அதுக்கப்புறம் லைஃப் லாங் பிரதி கூட தன மாம் வாழப் போறேன். அவ இன்னும் நாலு வருஷம் ஃபிரீ-யா இருக்கட்டுமே.” என்றவன் சொன்னபோது,

 

“ஆறு வருஷம் அவ ஃபிரீயா இருந்தது போதாதா..?” என்றார் அவரும் விடாமல்.

 

“என்னது ஆறு வருஷம்-ஆ..? பிரதி மேஜர் ஆகியே ஒரு வருஷம் தான் மாம் ஆகுது” என்றான் அவனும் தன் பங்கிற்கு.

 

“அதெல்லாம் எனக்கு தெரியாது.. உங்களுக்கு கல்யாணம் ஆகி ஆறுவருஷம் ஆகிடுச்சி.” என்று கராறாக சொன்னவரை பார்த்து,

 

“எது எனக்கு பதினாறு வயசும், அவளுக்கு பதிநான்கு வயசும் இருக்கும் போது நீங்க செஞ்சி வச்சதுக்குது பேர் மேரேஜ்-ஆ…?” என்று சிரித்துகொண்டே கேட்டவன்,

 

“நீ சொல்லு பிரதி நான் ஃபாரின் போய் படிக்கறது-ல உனக்கு எதும் பிரச்சனையா…?” என்றவனின் கேள்வியால் அதுவரையும் தாயும் மகனும்  பேசிக் கொண்டிருப்பதை பார்த்திருந்தவளுக்கு தூக்கி வாரித்தான் போட்டது.

 

திடீரென்று இப்படியொரு கேள்வியை அவளிடம் கேட்டால் பாவம் அவளால் என்ன பதில் சொல்ல முடியும்.

 

மலங்கமலங்க விழித்தப்படி இருவரையும் மாறி மாறி பார்த்திருந்தவளை, “அதான் கேட்கறான் இல்ல… சொல்லேண்டி போகாதன்னு…” என்று கௌசல்யா அதட்ட,

 

அவரின் அதட்டலால் பிரதிக்ஷாவின் முகத்தில் பயம் கூடவே செய்தது.

 

“மாம்… அவள ஏன் இப்போ அதட்டுறீங்க..?” என்று அவளுக்காக கேட்டவன், இப்போது எழுந்து பிரதிக்ஷாவின் அருகில் சென்று நிற்க, அது இன்னும் அவளுக்குள் பயத்தைதான் ஏற்படுத்தியது.

 

அந்த பயத்தோடே எச்சிலை கூட்டி விழுங்கிகொண்டவள், வெளிறிய முகத்தோடே அவனை பார்க்க,

 

“யாருக்கும் பயப்படாம நீ சொல்லு பிரதி நான் படிக்க அமெரிக்கா போகட்டுமா..? வேண்டாமா..?” என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை சத்யன் அவள் கைகளில் கொடுத்திருக்க,

 

அவள் என்ன சொல்வாள் என்ற பதற்றத்துடன் கௌசல்யாவும்  அவளையேதான் பார்த்துகொண்டிருந்தார்.

 

என்ன சொல்வதென்று முதலில் தடுமாறியவள், பின் “நீங்க படிங்க” என்க,

 

“என்ன பொண்ணு இவ..” என்று முனுமுனுத்து கொண்டது கௌசல்யாவின் இதழ்கள்.

 

சொல்லப்போனால் அவளுக்கும் இந்த இடைவேளை தேவைப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

 

என்னதான் ஆறுவருட காலமாக அவனின் மனைவி என்ற அடையாளத்தோடு அந்த வீட்டில் அவள் இருந்தாலும், இதுநாள் வரை அவனை அவளால் கணவனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை.

 

அது ஏன் என்றுதான் அவளுக்கும் தெரியவில்லை.

 

அதே போல் அவனும் இதுநாள் வரை கணவன் என்ற முறையில் அவளிடம் பேசியதும் இல்லை, அவளிடம் உரிமை எடுத்துகொண்டதும் இல்லை.

 

பள்ளி முடித்த கையோடு கல்லூரி என்று ஹைத்ராபாத் சென்றுவிட்டான். வாரத்திற்கு ஒரு முறை வீட்டினர் அனைவரிடமும் பேசும் போது அவளிடமும் நலம் விசாரிப்பான்.

 

விடுமுறை நாட்கள் என்று வீட்டிற்கு வந்தால் கூட நண்பர்களை சந்திக்க கிளம்பி விடுவான்.

 

கௌசல்யாவின் வற்புறுத்தலுக்காக மட்டும் பிரதிக்ஷாவை தியேட்டர், கோவிலுக்கு அழைத்து செல்வான் அதுவும் தனியாக இல்லை அண்ணன் குழந்தைங்களோடே.

 

மேஜர் ஆனவுடன் இருவர் திருமணத்தையும் பதிவு செய்த சத்யனின் பெற்றோர், அவன் கல்லூரி முடித்த பின் வெகுவிமர்சையாக அவர்களின் திருமணத்தை நடந்த வேண்டும் என்று திட்டமிருந்தனர்.

 

ஆனால் அதையும் தன் மேற்படிப்பை காரணம் காட்டி தட்டி கழித்திருந்தான் சத்யன்.

 

அவன் படிப்பு முடித்து வரும் வரை அவளும் மேற்கொண்டு படிக்கட்டும் என்று சத்யமூர்த்தி சொன்னபோது, அதற்கு சத்யமூர்த்தியின் தாயார் மரகதம் மறுத்துவிட்டார்.

 

வயது கோளாரில் காதல் கீதல் என்று அவள் விழுந்துவிட்டால் அது அவர்களின் குடும்பத்திற்குதானே கெட்ட பெயர்.

 

அதனாலே அவள் படித்த படிப்பு வீண் போகாவண்ணம் அவர்கள் நகை கடையில் டிசைனராக அவளை பணியில் அமர்த்த, பிரதிக்ஷாவிற்கும் அது பிடித்திருந்தது.

 

நாட்கள் இப்படியே செல்ல, சத்யன் நான்கு ஆண்டுகள் படிப்பு முடிந்து எப்போது வருவான் என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தனர் அவனின் குடும்பத்தார்.

 

இந்த நிலமையில்தான் அவன் அங்கு சென்று ஒரு வருடம் கடந்த நிலையில் நண்பர்களோடு நீர்வீழ்ச்சிக்கு சென்றவன் தவறி விழுந்து இறந்துவிட, அந்த செய்தி அவன் குடும்பத்தார் அனைவரையுமே அதீத அதிர்ச்சிகுள்ளாக்கியிருந்தது.

 

பேரன் இறந்த துக்கத்தில் மரகதமும் இறந்துவிட, சடங்கு சம்பிரதாயங்கள் என்ற பெயரில் பிரதிக்ஷாவும் நான்கு சுவருக்குள் சிறைவைக்கப்பட்டாள்.

 

அவளை பரிசோதித்த மருத்தவர் அவள் உடல் நலனுக்கு தேவையான மருந்துகளை ஊசி மூலம் செலுத்த, நடுக்கம் குறைந்து மெல்ல உறங்க ஆரம்பித்திருந்தாள் பிரதிக்ஷா.

 

அவள் தலையை இதமாக வருடிகொடுத்தப்படி அவள் தலைமாட்டில் அமர்ந்திருந்த கௌசல்யா

 

“என்னாச்சி டாக்டர்..? திடீர்னு ஏன் இவ்வளோ ஃபீவர்..? ஜீரத்தோட வீரியத்துல அம்மா அம்மான்னு முனக வேற ஆரம்பிச்சிட்டா… எதுவும் பிரச்சனை இல்லையே டாக்டர்..” என்று வினவியவருக்கு உள்ளுக்குள் பயம்தான் எங்கே அவளுக்கும் தன் கணவர் போல் பெரிதாக எதும் பிரச்சனை இருக்குமோ என்று.

 

என்ன செய்ய கடந்த சில மாதங்களாகவே அவர்களுக்கு அடி மேல் அடிதான்.

 

முதலில் சத்யமூர்த்திக்கு மாரடைப்பு வந்தது.

 

அவரை காப்பாற்றி நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள் அவர்களின் நகைகடை தீப்பிடித்து பெருத்த நஷ்டம்.

 

என்ன தான் இரண்டு மூன்று கிளைகள் வைத்திருந்தாலும் மும்பையில் இருப்பதுதான் அவர்களின் மெயின் கிளை.

 

கணக்கில் காட்டப்பட்ட, காட்டப்படாத தங்கம், வைர நகைகள் என்று அனைத்தையும் இங்குதான்  வைப்பார்கள்.

 

ஆனால் இப்போது அனைத்துமே தீக்கிரையாகி இருந்தது.

 

அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் இழப்பிற்குமுன் இன்சூரன்ஸ் தொகையெல்லாம் ஒன்றுமே இல்லை.

 

இதில் முன்னமே ஆர்டர் செய்திருந்த நகைகளுக்கு பணம் கட்ட வேண்டிய கட்டாயம் வேறு.

 

இதய அறுவை சிகிச்சை செய்திருக்கும் சத்யமூர்த்தியின் காதிற்கு மட்டும் இந்த விஷயமெல்லாம் சென்றால், நிச்சயம் அவர் உடம்புக்கு எதாவது பிரச்சனை வரும் என்று எண்ணி, இதுகுறித்து யாரும் அவரிடம் மூச்சி கூட விடவில்லை.

 

ஏற்பட்டிருக்கும் பெருத்த நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என்று குடும்பமே கவலைக்கொண்டிருக்கும் போதுதான், பிரதிக்ஷாவிற்கும் உடல் நிலை சரியில்லாமல் போயிருந்தது.

 

“பயப்படுற மாதிரி எதுவும் இல்லங்க… உங்க மருமக ரொம்ப வீக்-ஆ இருக்காங்க.. அவங்க கண்டிஷன் பார்க்கும் போது நல்லா சாப்பிட்டு தூங்கி ரொம்ப நாள் ஆகுது போலவே.” என்றவர்,

 

“அவங்க நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கட்டும். நான் நாளைக்கு வந்து பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பி செல்ல, கௌசல்யா அன்று இரவு அவளுடனே படுத்துகொண்டார்.

 

அதன்பின் வந்த மூன்று நாட்களும் ஜீரம், மருந்து மாத்திரை, பெட் ரெஸ்ட் என்றே கழிய, கௌசல்யாதான் அருகில் இருந்து அவளை கவனித்துகொண்டார்.

 

அவரின் கவனிப்பால் என்னதான் அவள் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், எதையோ பறிகொடுத்தது போலவே இருந்தாள் பிரதிக்ஷா.

 

குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் அவள் அப்படி இருக்கிறாள் என்று கௌசல்யாவும் எதுவும் கேட்டு அவளை தொந்தரவு செய்யவில்லை.

 

அவனுக்கு என்ன ஆனதோ என்ற கேள்வி நாளும் அவளை உள்ளுக்குள் கொல்லாமல் கொன்றுகொண்டிருந்தது.

 

அன்றும் அப்படித்தான் பூஜை அறையில் அமர்ந்திருந்தவனின் கரங்கள் பகவத்கீதையை புரட்டிக்கொண்டிருக்க, அவளின் கண்களோ அந்த பூஜை அறையில் நடுநாயகமாக குழலூதியபடி நின்றிருந்த அந்த கண்ணனின் மீதேதான் படிந்திருந்தது.

 

அந்த மீராநந்தனை முதன் முறையாக பார்த்தது முதல் அத்தனை நிகழ்வுகளும் அவள் மனக்கண்முன்னே ஓட, அதன் வெளிப்பாடாய் அவள் விழிகளிலிருந்து கண்ணீர்துளிகள் உதிர்ந்தன.

 

அவனின் கள்ளம்கபடமில்லாத சிரிப்பு, வார்த்தைக்கு வார்த்தை அவன் பேசும் விதம் என்று அத்தனையையும் நினைத்தவளுக்கு நெஞ்சம் பாரமாகி போனதொரு உணர்வுதான்.

 

‘அவனுக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது’ என்று இப்போதும் அவனுக்காக வேண்டிக்கொண்டது பெண்ணவள் மனம்.

 

அதேநேரம் தலை, கை மற்றும் கால்களில் கட்டுடன் படுக்கையில் அமர்ந்திருந்த மீராநந்தனின் பார்வை கையிலிருந்த அந்த மீரா பொம்மை கீச்செயின் மீதே பதிந்திருந்தது.

 

“நந்தன்.. நந்தன்..” என்று சோமசுந்தரம் அழைப்பதை கூட காதில் வாங்காமல் அவன் அப்படியே அமர்ந்திருக்க, அவன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை அவராலும் யூகிக்க முடிந்தது.

 

எப்போதும் கலகலவென பேசி சிரித்த முகமாகவே வலம் வருப்பவன்,

 

இந்த மூன்று மாத காலமாக அவர்களிடம் கூட சரியாக முகம் கொடுத்து பேசுவதில்லை.

 

அவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று கேட்டு அவர்களும் அவனை தொந்தரவு செய்யவில்லை.

 

அவர்களை பொறுத்தமட்டில் இவ்வளவு பெரிய விபத்திலிருந்து அவன் உயிர் பிழைத்து வந்ததே பெரிய விஷயம் தான்.

 

“நந்தன்..” என்றவாறே சோமசுந்தரம் இப்போது அவன் தோளை தொட, அவரின் தொடுகையால் சுயத்திற்கு திரும்பியிருந்தான் மீராநந்தன்.

 

“சொல்லுங்க டேட்..” என்று சுரமே சொன்னவனின் அருகில் சென்று அமர்ந்தவர்,

 

“பிரதீப் நமக்கு ஹெல்ப் பண்ணுவான்னு நினைக்கிறீயா..?” என்றார் அவனை ஆழ்ந்து பார்த்து.

 

அவரின் கேள்வியால் சில கணங்கள் அவனிடம் அமைதி நிலவ, சோமசுந்தரத்தின் பார்வையும் அவன் மீதேதான் நிலைத்திருந்தது.

 

“எனக்கு என் மீரா வேணும் டேட்… அதுக்காக நான் எந்த எல்லைக்கும் போகத்தயார்” என்று அழுத்தம் திருத்தமாக அவன் சொல்லிமுடிக்கவும், அவன் அறையிலிருந்த இண்டர்காம் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

 

இண்டர்காமை எடுத்து காதில் வைத்த சோமசுந்தரத்தின் பார்வை இப்போ மகனைத்தான் அதிர்ச்சியாக பார்த்தது, அவனை பார்ப்பதற்காக பிரதீப் வந்திருக்கும் செய்தியை கேள்விபட்டு.

 

“அனுப்பு..” என்று சொல்லிவிட்டு அவர் ரிசீவரை வைக்க, “பிரதீப் தன டேட்” என்றான் மீராநந்தனும் கணித்தவன் போல்.

 

அன்று நடந்த விபத்தில் இரத்தவெள்ளத்தில் சுயம் இன்றி கிடந்தவனை, துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த காவலர்,  இறுதியாக அவன் தன் செல்போனில் அழைத்து பேசிய எண்ணிற்குதான் போன் செய்தார் விஷயத்தை தெரிவிக்கும் பொருட்டு.

 

அது பிரதீப்-பின் எண்ணாக இருக்க, விஷயம் கேள்விபட்ட அடுத்த பத்துநிமிஷங்களுக்கெல்லாம் மருத்துவமனைக்கு வந்திருந்தான் பிரதீப்.

 

பின் அவன் தான் மீராநந்தனின் அலுவலகத்திற்கு தொடர்புகொண்டு, சோமசுந்தரத்தின் போன் நம்பரை வாங்கி விஷயத்தை அவரிடம் தெரிவித்தான்.

 

அடுத்த பிளைட்டிலேயே சோமசுந்தரமும் மீனாட்சியும் இங்கு வந்து சேர்ந்து விட்டனர்.

 

உடம்பெல்லாம் இரத்த கட்டுடன் சுயமின்றி இருந்தவனை பார்த்த மாத்திரத்திலேயே இருவருக்குமே உள்ளம் பதறித்தான் போனது.

 

இதில் மகனை பார்த்த அதிர்ச்சியில் மீனாட்சிக்கு பீ.பி அதிகமாகி மயக்க நிலைக்கு செல்ல, பின் பிரதீப்தான் அருகில் இருந்து அவர்கள் இருவரையும் பார்த்துகொண்டான்.

8 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels