இங்கு வந்தது முதல் யாரை நொடிக்கு நொடி எதிர் பார்த்தாளோ, யாரைத்தேடி அவள் விழிகள் அலைந்ததோ, அந்த மீராநந்தன் தான் இப்போது கைக்குட்டையோடு அவள் முன்னால் நின்று கொண்டிருந்தான்.
அவன் குரலிலேயே அவனை கண்டு கொண்டவளுக்கு, இதயம் அதீத வேகத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தது.
சற்றுமுன் வரை யார் பார்த்தால் என்ன..? என்பது போல் அழுது கரைந்தவளுக்கு, இப்போது தன் கண்ணீரை அவனுக்கு காட்ட என்னவோ போல் இருந்தது.
அதனாலே அவன் கையிலிருந்த கைக்குட்டையை வெடுக்கென்று பிடுங்கி கன்னத்தில் வழிந்தோடி கொண்டிருந்த கண்ணீரை துடைத்து விட்டவள் அதன் பின் தான் அவனை நிமிர்ந்தே பார்த்தாள்.
அவன் எதுவும் கேட்பதற்கு முன்பே, “நான் ஒன்னும் அழல…” என்றாள் மூக்கை உறிஞ்சியபடியே.
அவளின் வார்த்தைகளால் அவன் இதழ்களில் இப்போது மென்புன்னகை விரிய, “நீங்க அழுதீங்கன்னு நான் சொல்லவே இல்லையே மீரா.” என்றான் இருக்கையை இழுத்து போட்டு அவளுக்கு முன்னால் அமர்ந்தவாறு.
அவனின் வார்த்தைகளால் அவனை ஓரப்பார்வையால் முறைத்தவள், “அப்புறம் ஏன் கர்சீஃப் கொடுத்த..?” என்றாள் இப்போது கேள்வியாய் அவனை பார்த்து.
“ஏன்னா… உங்க அழகான கண்களுக்கு ரொம்ப வேர்த்து இருந்துச்சிங்க. அதான் துடைக்க கொடுத்தேன்.” என்று சிரிப்பை விழுங்கிய படி சீரியசாக முகத்தை வைத்து கொண்டு அவன் சொல்ல, அவளோ அவன் வார்த்தைகளால் சத்தம் போட்டே சிரித்துவிட்டாள்.
சற்றுமுன் வரை அவள் இருந்த மனநிலை அப்படியே மாறிபோயிருந்தது அவனால்.
கண்கள் மின்ன சிரிப்பவளையே மென்சிரிப்புடன் பார்த்திருத்திருந்தவன்,
“இப்போவாவது நம்புறீங்களா..?” என்க,
அவளோ “என்ன…?” என்றாள் வேண்டுமென்றே.
“ஏங்க… நீங்க தன நேத்து கோவில்-ல சொன்னீங்க… உங்க முன்னாடி வந்து நின்னா எனக்கு யுனிவர்ஸ் ஹெல்ப் பண்றத நம்புறன்னு.” என்று நேற்று அவள் சொன்னதை அவளுக்கு நினைவூட்டியவன்,
“நம்புறீங்கதன..?” என்று சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை இருபுறமும் ஆட்டியபடி கேட்க,
அவளுக்கே இப்போது அவனை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
அதனாலே நம்புகிறேன் என்பது போல் யோசனையோடே தலையை ஆட்டியவள்,
“நிஜமாலுமே எனக்காகதான் சென்னையிலேந்து பெங்களூர் வந்தியா..?” என்றாள் தனக்காக அவன் இந்த அளவிற்கு மெனக்கெட்டிருப்பதை நம்ப மாட்டாமல்.
“ஏன்…? மீராக்காக இந்த நந்தன் வரக்கூடாதா…?” என்று அவள் விழிகள் பார்த்து கேட்டவனின் கேள்வியால் அவளுக்கு இதயக்கூடு சில்லிட, அவனை பார்க்க முடியாமல் அவள் விழிகள் தடுமாறின.
அத்தோடு அவன் கேள்வியால் அவளையும் மீறிக்கொண்டு அவள் இதழ்களிலும் மென்புன்னகை விரிய, அதை அவனுக்கு காட்டாமல் கீழ் அதரங்களை கடித்துகொண்டாள் பிரதிக்ஷா.
சில கணங்கள் இப்படியே நீள, பின் மீராநந்தன் தான் “ஏங்க காஃபி குடிக்கலாமா..?” என்று கேட்டவாறே இருக்கையிலிருந்து அவன் எழுந்து சென்ற வண்ணம் இருக்க,
அப்போதுதான் அந்த காஃபி ஷாப்பே காலியாகி இருப்பதை கவனித்திருந்தாள் பிரதிக்ஷா.
கடைக்குள் நுழையும் போது ஆங்காங்கே ஒரு சிலர் அமர்ந்திருந்ததாகதான் அவளுக்கும் நியாபகம். ஆனால் இப்போது கடையின் ஊழியர் முதற்கொண்டு யாரும் இல்லாமல் இருப்பதுதான் எப்படி என்று அவளுக்கு விளங்கவில்லை.
‘எல்லாரும் எங்க போய்ட்டாங்க..?’ என்ற யோசனையோடே இருக்கையிலிருந்து எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தவள், இப்போது கடையின் கண்ணாடியினூடே வெளியில் பார்த்தாள்.
உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு வெளியில் நடப்பது தெரிந்தாலும், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பது தெரியாதது போலதான் அந்த கடையின் அமைப்பு இருந்தது.
வெளியில் கூட யாரும் இருப்பதாக தெரியவில்லை. சாலையின் மறுபுறம் வள்ளியம்மை மற்றும் காட்ஸ் மட்டுமே நின்றுகொண்டிருக்க,
யோசனையோடே அவனை தேடிக்கொண்டு உள்ளே சென்றவளுக்கு ஆச்சரியம் தான் அவனே காஃபி போட்டுக்கொண்டிருப்பதை பார்த்து.
“உனக்கு காஃபிலாம் கூட போடத்தெரியுமா…?” என்றாள் அதே ஆச்சரியத்தோடே.
“ம் தெரியும்-ங்க.. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டிலதான் கத்துக்கிட்டேன்” என்று சீரியசாக முகத்தை வைத்துகொண்டு எப்போதும் போல் அவன் அவளை கலாய்க்க, அவளோ அவனை ஓரப்பார்வையால் முறைத்து பார்த்தாள்.
பதிலுக்கு அவளை பார்த்து வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்து வைத்தவன், காஃபி போடுவதில் தன் கவனத்தை செலுத்த, பிரதிக்ஷாவின் விழிகளோ அவன் மீதேதான் இருந்தது.
ஏதோ கடமைக்கென்று இல்லாமல் சிரித்த முகத்துடன் இரசித்து காஃபி போட்டு கொண்டிருப்பவனை பார்த்தவளுக்கு ஆச்சரியம்தான்.
அவள் வீட்டிலும் சரி, சத்யன் வீட்டிலும் சரி ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எழுதப்படாத சட்டம் உண்டு.
ஏன் தண்ணீர் குடிப்பதாக இருந்தால் கூட யாராவது அவர்களுக்கு கிளாசில் ஊற்றிக்கொடுக்க வேண்டும்.
அனைத்திற்கும் அங்கு வேலையாட்கள் என்பதால் பெண்கள் கூட கிச்சன் பக்கம் சென்றது கிடையாது.
அதையெல்லாம் பார்த்து வளர்ந்தவளுக்கு மீராநந்தனின் செயல் பிரம்மிப்பைதான் ஏற்படுத்தியது.
தனக்கு தேவையானதை தானே செய்து கொள்வதோடு அடுத்தவருக்கும் சேர்த்து செய்யும் அவன் செயல் அவளுக்கு பிடித்தும் இருந்தது.
இமைக்க கூட மறந்து அவள் அவனையே பார்த்திருக்க, அவனும் இருவருக்குமான காஃபி கப்போடு அவள் முன்னால் வந்து நின்றான்.
அவன் கொடுத்த காஃபி கப்பை வாங்கி வாயருகே கொண்டு சென்றவளுக்கு, அதன் வாசமே அதன் ருசியை சொல்லாமல் சொல்லியிருந்தது.
ஒரு மிடறு குடித்தவளுக்கு உள்ளுக்குள் அத்தனை புத்துணர்ச்சிதான்.
“ரொம்ப சூப்பர்-ஆ இருக்கு..” என்று விழிகள் விரித்து சொன்னவளை பார்த்து,
பதிலுக்கு சிரித்தபடியே “தேங்கஸ்” என்றவன், நின்றுகொண்டிருந்தவளுக்கு அமரும் விதமாக சேரை இழுத்துபோட்டதோடு, தானும் ஒரு சேரில் அமர்ந்து காஃபியை அருந்த, தன் மீது அவனுக்கு இருக்கும் அக்கறையை பார்த்து முதன் முறையாக அவளுக்குள் குற்ற உணர்வு.
சந்தித்த நாள் முதல் இந்த நொடிவரை எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் தனக்காக யோசித்து, தனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் அவனுக்கு தான் உண்மையாக இல்லையே என்று முதன் முறையாக அவள் மனம் வருத்தம் கொண்டது.
ஏன் இதுநாள் வரை தன் பெயரை கூட அவனிடம் அவள் சொன்னது கிடையாது.
அவனும் முதல் சந்திப்பில் அவள் பெயரை கேட்டதோடு சரி.. அதன் பின் அவள் குறித்து எதுவும் கேட்டு அவனும் அவளை தொந்தரவு செய்தது கிடையாது.
ஆனால் அவள் கூறாமல் அவள் பிடித்தங்களை அறிந்து நிறைவேற்றினான். அவள் உடையும் போதெல்லாம் அவளிடம் எதுவும் கேட்காமல் அவளை தேற்றினான், கஷ்டம் மறந்து அவளை சிரிக்க வைத்தான்.
சந்தித்த நாள் முதல் அவளுக்காக அவன் செய்த ஒவ்வொன்றும் அவள் மனக்கண் முன்னே வந்து போக, அதுவரையும் அவனையே பார்த்துகொண்டிருந்தவளின் விழிகள் இப்போது தன்னையும் அறியாமல் கலங்க அதை மீராநந்தனும் கவனிக்கவே செய்தான்.
“என்னாச்சிங்க..? காஃபில காரம் அதிகமா இருக்கா..?” என்றவனின் துடுக்கான கேள்வி மீண்டும் அவளை சிரிக்க வைக்க, அவனும் அவள் சிரிப்பில் இணைந்துகொண்டான்.
சிரிக்கும் அவனையே சில கணங்கள் பார்த்திருந்தவள், பின் என்ன நினைத்தாளோ,
அவன் முன் வலக்கரத்தை நீட்டி, “ஐ அம் பிரதிக்ஷா” என்றாள் அவர்களின் முதல் சந்திப்பை மனதில் வைத்து.
இதை அவளிடம் அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
இருந்தும் “நைஸ் நேம்-ங்க” என்றவாறே அவள் கரத்தை பற்றி குலுக்கியவன்,
“ஆனா நான் உங்கள மீரான்னு தான் கூப்பிடுவேன்.” என்று சிரித்துகொண்டே சொன்னவனின் முகத்திலிருந்த சிரிப்பு அடுத்த கணமே மறைந்துதான் போனது
“நான் ஒரு விடோ” என்றவளின் வார்த்தைகளை கேட்டு.
என்னவோ தெரியவில்லை இன்று அவனிடம் தன்னை பற்றி சொல்லவேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
காரணம் இன்றைய நாளை விட்டால் அதன் பின் அவளால் அவனை பார்க்க முடியுமோ.. என்னவோ..
இன்னும் ஒரு வார காலத்திற்கு பின் அவள் மும்பை சென்றுவிட்டால் அவ்வளவுதான்.
அவனிடம் தான் உண்மையாக இல்லையே என்ற குற்ற உணர்வு நிச்சயம் அவளை நிம்மதியாக இருக்க விடாது.
அதனால் தான் இன்று அவள் தன்னை பற்றி அவனிடம் சொன்னது கூட.
இமைக்க மறந்து தன்னையே பார்த்துகொண்டிருந்தவனை பார்த்து தான் சொன்னது உண்மைதான் என்பது போல், விழிகள் கலங்க தலையை மேலும் கீழுமாய் அசைத்தவள்,
“என்னோட லவ்-அ புரோபஸ் பண்ண அன்னைக்கு நான் வீட்டுக்கு போயிருக்க கூடாதுன்னு இன்னைக்கு வரைக்குமே நினைச்சது உண்டு நந்து.” என்று எங்கேயோ பார்த்தப்படி நிறுத்தவள்,
“ஏன் தெரியுமா நந்து..?” என்றாள் இப்போது அவனை பார்த்து.
பதிலுக்கு எதுவும் சொல்லாமல் ஏன் என்பது போல் அவன் அவளையே பார்த்திருக்க,
விழிகளிலிருந்து உதிர்ந்த கண்ணீரை துடைத்துவிட்டு கொண்டவள்,
அன்று அவள் தாத்தாவிற்கு அட்டாக் வந்தது முதல் முன்னமே இரு குடும்பத்தாரும் பேசி வைத்திருந்தது போல் அன்றே அவள் தாத்தாவின் முன்னிலையில் மோதிரம் மாற்றிகொண்டது, தாத்தாவின் காரியங்கள் முடிந்து மும்பை சென்றது, அவளுக்கு பதினெட்டு வயது நிரம்பிய பின் அந்த திருமணத்தை பதிவு செய்தது, மேற்படிப்பிற்காக ஃபாரின் சென்ற சத்யன் நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சியில் சிக்கி உயிர் இழந்தது என்று அனைத்தையும் அவள் சொல்ல,
அவனோ முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“நான் என் லைஃப்-ல எனக்கான்னு எடுத்த முடிவு-னா… அது என்னோட ஸ்கூல் லைஃப் லவ் மட்டும் தான். அதுக்கப்புறம் யார் யாரோ என் லைஃப்-ல முடிவெடுத்தாங்க.” என்று மீண்டும் எங்கேயோ பார்த்தப்படி சொன்னவளின் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது மற்றவர்களின் முடிவால் இதுநாள் வரை அவள் அனுபவித்துகொண்டிருக்கும் வலிகளின் வெளிப்பாடாய்.
வழிந்தோடிய கண்ணீரை துடைத்துவிட்டு விட்டு கசப்பான புன்னகையை உதிர்த்தவள்,
“எனக்கு இப்பவரைக்குமே புரியல நந்து… நான் ஏன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்லல, சத்யன்-அ ஏன் பிடிக்கலன்னு சொல்லல, கல்யாணத்த தவிர எங்களுக்குள்ள எதுவுமே நடக்கலன்னு தெரிஞ்சியிருந்தும்.” என்றவள் இப்போது தான் இருக்கும் கோலத்தை சுட்டிக்காட்டி,
“இவ்வளோ பெரிய தண்டனை-அ எல்லாருமா சேர்ந்து எனக்கு கொடுத்தப்போ நான் ஏன் என்னால முடியாதுன்னு சொல்லன்னு எனக்கு சத்தியமா தெரியல.. இறந்தது அவர்தன… நான் இல்லையே… எனக்குள்ள இருக்கற உணர்வுகள் இல்லையே…” என்று சொல்லும் போதே அவளுக்கு துக்கம் தொண்டயை அடைக்க, மீராநந்தனுக்கும் அவள் வலிகள் புரியவே செய்தது.
இருந்தும் அமைதிகாத்தான். வருடக்கணக்கில் மனதிற்குள்ளே அவள் அடக்கிவைத்திருக்கும் வலிகளையெல்லாம் இப்போதாவது அவள் வெளியில் கொட்டட்டுமே என்று.
எப்படி மனதிற்கு பிடித்தமானவர்களை பார்த்துவிட்டால் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிடுவோமோ அப்படித்தான் பிரதிக்ஷாவும் இத்தனை வருடகாலமாக மனதிற்குள் அடக்கி வைத்திருந்த வலிகளையெல்லாம் அவனிடம் கொட்டிக்கொண்டிருந்தாள்.
“நான் எனக்கு இன்னொரு மேரேஜ் பண்ணிவைங்கன்னு சொல்லல.. எனக்கு புடிச்சமாதிரி என்ன ஏன் இருக்க விடமாட்றாங்கன்றதுதான் என்னோட கேள்வி. எனக்கு மழை-ன்னா ரொம்ப புடிக்கும் ஆனா நனையக்கூடாது. காரசாரமா பிரியாணி சாப்பிட புடிக்கும்.. ஆனா சாப்பிடகூடாது. பட்டுபுடவைன்னா ரொம்ப புடிக்கும் ஆனா கட்ட கூடாது. சத்யன் இறந்ததுக்கு எனக்கு ஏன் இவ்வளோ பெரிய தண்டனை…? ஒருவேளை நான் இறந்திருந்தா எனக்கு கொடுத்தமாதிரி இதே தண்டனை-அ சத்யன்-க்கும் கொடுத்திருப்பாங்களா நந்து…?” என்றவளின் கேள்வியில் இருந்த நியாயம் அவனுக்கும் புரியவே செய்தது.
அதெப்படி கொடுப்பார்கள். காரணம் அவன் ஆண் அல்லவா.. இங்கு சடங்கு சம்பிராதாயங்கள் அத்தனையும் பெண்களுக்கு மட்டும் தானே வகுக்கப்பட்டிருக்கிறது.
“எல்லாரும் நீ ஒரு அமங்கலி, அபசகுணம்னு சொல்லும் போது எனக்கு எவ்வளோ வலிக்கும் தெரியுமா.. நந்து…? நிறைய டைம் தற்கொலைக்கு கூட முயற்சி பண்ணியிருக்கேன்” என்றவள்,
“நீ என் வீட்டுக்கு வந்த அன்னைக்கு கூட.” என்றவளின் வார்த்தைகளால் சட்டென்று மீராநந்தனின் கண்கள் கலங்கிவிட்டன.
அத்தோடு அன்று அவளின் அழுதுவடிந்த முகமும் கணநேரத்தில் அவன் கண்முன்னே வந்து போகவும் தவறவில்லை.
“இன்னைக்கு கூட நான் ஸ்டேஜ்-ல ஏறனதாலதான் அபசகுனமா விளக்கு அனைஞ்சிடுச்சின்னு அத்தனை பேர் முன்னாடியும் அந்த பாட்டிம்மா சொல்லும் போது ஏன் இனி உயிரோட இருக்கணும்தான் தோணுச்சி.” என்று சொல்லும் போதே அவள் குரல் தழுதழுக்க, அவள் முன்னிலையில் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட கூடாதென்று கை முஷ்டிகளை இறுக்கமாக மூடி திறந்தான் மீராநந்தன்.
அழும் அவளை அணைத்து உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லதான் அவனுக்கும் ஆசை.
ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போது இல்லை என்பதால்
“மீரா பிளீஸ்… என்னைக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்த மாதிரி ஒரு முடிவு எடுக்கணும்னு மட்டும் நினைக்காதீங்க.” என்றான் அவளை தேற்றும் விதமாக.
“நான் அப்படிலாம் பண்ணமாட்டேன் நந்து. ஏன்னா எனக்குதான் வாழவும் தைரியம் இல்ல… வாழ்க்கை-அ முடிச்சிக்கிறதுக்கும் தைரியம் இல்லையே” என்றவாறே கசப்பான புன்னகையை உதிர்த்தவளுக்கு தான் ஏன் இந்த அளவிற்கு கோழையாக இருக்கிறோம் என்றுதான் தெரியவில்லை.
எதுவும் பேசாமல் அவன் அவளையே பார்த்திருக்க, பின் என்ன நினைத்தாளோ, அழுத விழிகளை அவன் கொடுத்த கைகுட்டையால் அழுந்த துடைத்துவிட்டு, மென்புன்னகை சிந்தியபடியே அவனைப்பார்த்தவள்,
“ஐம் சாரி… நான் இருந்த மைண்ட் செட்-ல மனசுல இருந்த எல்லாத்தையும் உன்கிட்ட புலம்பி தள்ளிட்டேன்.” என்று புன்னகை மாறாமலேயே சொன்னவள்,
“ஆமா… நீ எங்க ஸ்டே பண்ணியிருக்க..?” என்றாள் உடனே பேச்சை மாற்றும் விதமாக.
அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சில கணங்கள் அவளையே பார்த்திருந்தவன், “ஏன் என் கிட்ட புலம்பக்கூடாதா…?” என்றவனின் உரிமை நிறைந்த கேள்வியால் அவள் தான் வாயடைத்து போனாள்.
அத்தோடு அவனின் கேள்வி இரணப்பட்டிருந்த அவள் மனதை மயிலிறகால் வருடிவிட்டது போலவும் இருக்க, அதன் வெளிப்பாடாய் அவள் இதழ்களில் உண்மையான புன்னகை விரிந்தது.
“ம்… புலம்பலாமே…” என்று சிரித்துகொண்டே சொன்னவளை பார்த்து இப்போது அவன் இதழ்களிலும் புன்னகை அரும்பின.
இத்தனை வருட காலமாக யாரிடமும் பகிராமல் மனதிற்குள் பூட்டி வைத்திருந்ததையெல்லாம் அவனிடம் கொட்டி விட்ட பின் தான் அவளாலும் நிம்மதி பெருமூச்சி விட முடிந்தது.
மனதில் இருந்த இறுக்கமெல்லாம் இப்போது காணாமல் போனதொரு உணர்வு அவளுக்குள்.
“நல்லவேளை யாரோ ஒரு புண்ணியவானாலதான் இன்னைக்கு அந்த கோவக்கார பாட்டிக்கிட்டேந்து நான் தப்பிச்சேன். அந்த புண்ணியவான் மட்டும் பிரதீப்போட ஸ்டாட்அப்-க்கு ஃப்ண்ட் கொடுக்காம இருந்திருந்தா அவங்க இருந்த கோவத்துக்கு என்ன உயிரோட புதைச்சாலும் ஆச்சரியப்படுறதுக்கில்ல..” என்று விழிகளை உருட்டி சிரித்துகொண்டே சொன்னவள்,
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா.. நந்து..?” என்க,
“சொல்லுங்க மீரா.” என்றான் அவன்.
“என் பிரதர் பிரதீப்போட ஸ்டார்டப்-க்கு ஃபண்ட் கொடுத்தது யாருன்னு உன்னால கண்டுபிடிக்க முடியுமா..?” என்றவள் கேட்டபோது,
“ஏன் அந்த புண்ணியவான்-அ கண்டுபிடிக்கணும்..?” என்றான் விழிகளில் ஒருவித ஆர்வத்தை தேக்கி மீராநந்தன்.
“ஏன்னா.. அவர்தன லாஸ்ட் மினிட்-ல அந்த பாட்டிம்மா கிட்டேந்து என்ன காப்பாத்துனது. ஸோ அவர் கை-அ புடிச்சி மனசார தேங்கஸ் சொல்லணும்.” என்றவள் சொல்லிமுடித்ததுதான் தாமதம்.
“அப்போ சொல்லுங்க” என்றவாறே அவன் தன் கரத்தை அவள் முன் நீட்டியிருக்க, பிரதிக்ஷாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துவிட்டன.
சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தவனுக்கு பெங்களூர் சென்றடையும் வரை அவள் பற்றிய சிந்தனைதான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அதுவும் அவன் தாய் அவள் குறித்து சொன்னவைகளை நினைத்துதான்.
அவள் வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது..? இந்த இளம் வயதில் அவளுக்கு ஏன் இப்படியொரு இழிநிலை..?
இந்த கேள்விகளுக்கான பதிலை யாரிடம் சென்று அவனால் கேட்க முடியும்.
அவனாலும் அவளிடம் நேரடியாக கேட்க முடியாது. அதேசமயம் அவளும் நிச்சயம் சொல்ல மாட்டாள்.
வேறு எப்படி இதையெல்லாம் தெரிந்துகொள்வதென்று யோசிக்க யோசிக்க மீராநந்தனுக்கு தலையே வெடிப்பது போல் இருந்தது.
அதேசமயம் என்ன நடந்தாலும் சரி அவள் மீதான காதலை மட்டும் துறப்பதில்லை என்பதிலும் மீராநந்தன் உறுதியாகவே இருந்தான்.
அவள் தங்கியிருந்த அதே உயர்தர ஹோட்டலில்தான் அவனும் தங்கினான்.
அவளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக ஹோட்டலுக்கு வந்திருந்த பிரதீப் மற்றும் பிரதீப்பின் அப்பா-வை பார்த்தவனுக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது.
சுமார் ஆறு மாத காலங்களுக்கு முன் தன்னுடைய ஸ்டார்ட்-அப் பிஸ்னசிற்காக பிரதீப் தன்னை சந்தித்து பேசி உதவி கோரியதும், இரண்டு வாரங்களுக்கு முன் அலுவலகத்திற்கே வந்து திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைத்ததும்.
முதலில் திருமணத்திற்கு செல்ல வேண்டாமென்று முடிவு செய்திருந்தவன் அவளுக்காக திருமணத்திற்கு செல்வதென்று முடிவு செய்தான்.
அவளோடு சேர்த்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக மண்டபத்திற்குள் நுழைந்தவன் கண்ட காட்சி என்னவோ மேடையில் அவளை நிற்கவைத்து அனைவரும் அவளை காய்ந்து கொண்டிருப்பதைதான்.
கண்ணீர் மல்க தலைகுனிந்தபடி நின்றிருந்தவளை பார்த்த மாத்திரத்திலே மீராநந்தனுக்குள் அப்படியொரு கோவம்.
அந்த கோவத்தின் வெளிப்பாடாய் அவன் கண்கள் கூட கோவைப்பழமாய் சிவந்து விட்டன.
அவன் மட்டும் நினைத்திருந்தால் வந்த கோவத்திற்கு அங்கிருந்த அனைவரையுமே ஒரு வழி செய்திருப்பான். ஆனால் அவளுக்காக பொறுமை காத்தான்.
தன் கோவத்தால் அவளுக்கு எந்த விதத்திலும் பாதிப்பும் ஏற்பட்டு விடகூடாது என்பதில், அந்த கோவத்திலும் மீராநந்தன் உறுதியாகவே இருந்தான்.
கோவத்தை அடக்கும் விதமாக கை முஷ்டிகளை இறுக மூடியவாறே, அங்கிருந்து வெளியேறியவன், அடுத்து அழைத்தது பிரதீப்பின் எண்ணிற்குதான்.
எதை இழுத்தால் கொதிப்பது அடங்கும் என்பது போல் பிரதீப்பின் ஸ்டார்ட்-அப்பிற்கு ஃப்ண்ட் கொடுத்து, அங்கிருந்தவர்கள் அவள் மீது வைத்த விமர்சனங்கள் அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்தவன், அனைவரின் முன்னிலையிலும் அவளை தலை நிமிரவும் வைத்திருந்தான்.
எப்படியும் அவள் வெளியில் வருவாள் என்று மண்டபத்திற்கு வெளியில் வந்து நின்றவன், அவளை பின் தொடர்ந்து காஃபி ஷாப்பிற்குள்ளும் நுழைந்திருந்தான்.
அவனின் உத்தரவின் பேரிலேயே அந்த காஃபி ஷாப்பிலிருந்து உரிமையாளர் உட்பட அனைவருமே வெளியேறி இருந்தனர்.
முகத்தை மூடிக்கொண்டு தேம்பி அழும் அவளை பார்த்தவாறே நின்றிருந்தவனுக்குமே உள்ளுக்குள் அதீத வலி தான் அவள் நிலையை பார்த்து.
மனதிலிருந்த பாரம் தீர அழுது முடித்தவள், அதுவரையும் முகத்தை மூடியிருந்த கரத்தை விலக்கிவிட்டு டிஸ்யூ பேப்பரை எடுக்கபோக, அப்போதுதான் அவனும் அவள் முன் தன் கைகுட்டையை நீட்டியிருந்தான்.
அதிர்ந்த விழிகளில் நீர் கோர்த்தவாறே, “நீ…” என்று தடுமாறியவளால் மேற்கொண்டு எதுவுமே சொல்ல முடியவில்லை.
“நான் தான் நீங்க கண்டுபிடிக்க சொன்ன அந்த புண்ணியவான்.” என்றவன், “ஆனா நான் ஃபண்ட் கொடுத்தது பிரதீப்காக இல்ல இந்த மீராக்காக” என்று புருமமத்தியை உயர்த்தி அழகாய் சிரித்துக்கொண்டே அவன் சொல்ல,
நீட்டியிருந்த அவன் கரத்தை இருக்கைகளாலும் சட்டென்று பற்றிகொண்டவள், அதில் முகம் புதைத்து அழவும் ஆரம்பித்திருந்தாள்.
அழும் அவளை தேற்றும் விதமாக அவள் தலையை வருட முற்பட்டவனின் கரங்கள் அப்படியே நின்றதோடு கை முஷ்டிகளை இறுக மூடி திறந்தவன்,
“மீரா…. மீரா.. என்னாச்சிங்க…?” என்றான்.




