Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 17

May 13, 2026
சந்தோஷ் குணா
0
11 min read
அத்தியாயம் - 17
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

பெங்களூர் விமான நிலையத்திலிருந்து அவளுக்கென்று தங்குவதற்காக ஏற்பாடு செய்திருக்கும் உயர்தர ஹோட்டலுக்கு செல்லும் வரையுமே பிரதிக்ஷாவின் விழிகள் சுற்றும் முற்றும் மீராநந்தனைதான் தேடி அலைந்து கொண்டிருந்தது சொன்னது போல் அவன் இங்கு வருவானா..? என்ற எதிர்பார்ப்போடு.

 

என்றைக்கும் இல்லாமல் இன்று அவளுக்குள் அதீத எதிர்பார்ப்பு தான்.

 

இத்தனை நாட்கள் சென்னையில் அவள் செல்லும் இடத்திற்கெல்லாம் அவளை தேடி கொண்டு முன்னால் வந்து நின்றவன், இப்போது ஊர் தாண்டி வேறொரு ஊர் வந்திருக்கும் நிலையிலும் தன்னை தேடி கொண்டு வருவானா…? என்பதுதான் இப்போது அவளுக்குள் இருக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பே.

 

அவன் வருவானா..? மாட்டானா..? என்ற யோசனையிலேயே அன்று இரவு உறக்கம் வராமல் படுத்துகொண்டிருந்தவளின் பார்வை, ஹேண்ட்பேக்கில் தொங்கி கொண்டிருந்த அந்த மீரா பொம்மை மீதேதான் இருந்தது.

 

தானும் அத்தையுடன் செல்வேன் என்று அழுது அடம்பிடித்த அனன்யாவை சமாதானப்படுத்தி, உண்ணவைத்து உறங்கவைப்பதற்குள் சுபத்ராவிற்கு போதும் போதுமென்றாகிவிட்டது.

 

துணைக்கு யாரும் இல்லாமல் தனியாக செல்லும் பிரதிக்ஷாவோடு பெங்களூர் செல்ல அனன்யாபோல் சுபத்ராவிற்கும் ஆசைதான்.

 

ஆனால் நாளை சுபத்ராவின் தந்தை பிறந்தநாளையொட்டி அவளின் பெற்றோர் இங்கு வருவதாக சொல்லியிருக்க, பிரதிக்ஷாவுடன் செல்ல நினைத்த சுபத்ராவின் பயணமும் இரத்தாகி போனது.

 

இத்தனைக்கும் திருமணம் முடித்த கையோடு பிரதிக்ஷா கிளம்பி இங்குதான் வரப்போகிறாள். இருந்தும் என்னவோ போல் இருந்தது அவள் இல்லாமல் சுபத்ராவிற்கு.

 

காரணம் இன்னும் ஒருவாரகாலம் தான் பிரதிக்ஷா இங்கு இருப்பாள். அதன்பின் அவள் மும்பை சென்றுவிட்டால் அவளை பார்ப்பதென்பது சுபத்ராவால் கூட முடியாத காரியம்.

 

அவள் இல்லாமல் வீடே வெறுமையாக இருப்பது போல் இருக்க, சுபத்ராவிற்கு இரவு உணவு கூட இறங்கவில்லை.

 

கன்னத்தில் கைகுற்றியபடி டைனிங் டேபுள் முன் அவள் அமர்ந்திருக்கும் போதுதான் வேலை முடித்துவிட்டு இராஜவர்மனும் வீடு வந்து சேர்ந்திருந்தான்.

 

அறைசென்று ரெஃப்ரஷ் ஆகிவிட்டு வந்தவனுக்கு சுபத்ரா உணவு பரிமாற, உணவை உண்டவாறே “வீட்டு வந்த அந்த லேடி யாரு..?” என்று எப்போதும்போல் தன் விசாரனையை ஆரம்பித்திருத்தான் இராஜவர்மன்.

 

அவனிடம் இந்த கேள்வியை அவளும் எதிர்பார்த்தாள் தான்.

 

காரணம் அவன் இல்லாத நேரங்களில் யார் வீட்டிற்குள் வந்தாலும் சரி.. வீட்டிலிருந்து வெளியேறினாலும் சரி அது நிச்சயம் இராஜவர்மனின் காதிற்கும் கண்ணிற்கும் சென்றுவிடும்.

 

அதனாலே “நீங்க சி.சி.டி.வி-ல மேம்-அ பார்த்தீங்களா…?” என்று கண்கள் மின்ன கேட்டபடியே அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தவள்,

 

“அவங்கதான் எங்க லேடிஸ் கிளப் ஹெட்…” என்றவள்,

 

பின் கார் டயரில் காற்று இல்லாமல் போனதால் அவர்தான் தன்னை  வீடுவரை வந்து டிராப் செய்ததாகவும், அவருக்கு நன்றி சொல்லும் விதமாக தான் அவரை வீட்டிற்கு அழைத்து உபசரித்ததையும் சொல்ல, இராஜவர்மனோ உணவை உண்டபடியே கேட்டுகொண்டிருந்தான்.

 

“சீனியர்-ன்ற ஆர்பாட்டம்-லா இல்லாம ரொம்ப தன்மையா ஜாலியா பேசுனாங்க. மீட் பண்ண அரை மணிநேரத்துலே ரொம்ப குளோஸ் ஆகிட்டோம்ன்னா பார்த்துகோங்களேன்” என்று சிரித்து கொண்டே சொன்னவளை, விழிகளில் கூர்மை தீட்டி பார்த்தவன்,

 

“குளோஸ் ஆகுற அளவுக்கு அப்படி எத பத்தி பேசுனீங்க..?” என்றான் எங்கே தன் பிஸ்னஸ் குறித்து ஏதாவது உளறியிருப்பாளோ என்ற சந்தேகத்தோடே.

 

“அதுவா..” என்று இழுத்தவள், “அவங்க பையனுக்கு பொண்ணு தேடிகிட்டு இருக்காங்களாம்.” என்று ஆரம்பித்து அதன் பின் நடந்தவைகளை சொன்னவள் மறந்தும் பிரதிக்ஷா குறித்து அவர்களிடம் சொன்னதை மட்டும் சொல்லவேயில்லை.

 

காரணம் இராஜவர்மன் ஏற்கனவே அவளிடம் சொல்லியிருக்கிறான் பிரதிக்ஷா குறித்து யாரிடமும் எதுவும் சொல்ல கூடாதென்று.

 

அப்படியிருந்தும் இன்று பிரதிக்ஷா குறித்து அவள் சொல்ல காரணம் கூட மீனாட்சியின் கேள்விதான்.

 

தன் கணவனுக்கு தங்கையே இல்லை என்று மறுத்து சொல்லும் அளவிற்கு சுபத்ராவும் ஒன்றும் மனசாட்சி இல்லாதவள் இல்லையே..

 

அவள் கூறுவதை காதில் வாங்கியவாறே இராஜவர்மன், உண்டுகொண்டிருக்க,

 

“என்னங்க..” என்று அவனை அழைத்தாள் சுபத்ரா.

 

“ம்” என்றவாறே அவன் உண்டவண்ணம் இருக்க,

 

அவனிடம் எப்படி கேட்பதென்று முதலில் தயங்கியவள்,

 

“நான் ஒன்னு சொன்னா கோவப்படமாட்டீங்களே..?” என்றாள் தைரியத்தை வரவழைத்து கொண்டு.

 

சொல்லு என்பது போல் அவளை பார்த்துவிட்டு மீண்டும் அவன் பிளேட்டில் பார்வையை பதிக்க, சுபத்ராவிற்கோ திக்திக்கென்ற உணர்வுதான் சொன்னால் எப்படி ரியாக்ட் செய்வானோ என்று.

 

அதனாலே எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டவள், “பிரதிக்கு நாம ஏன் இன்னொரு கல்யாணம் பண்ண கூடாது..?” என்றவள் முடிக்கும் முன்பே, கோவத்தில் உண்டுகொண்டிருந்த பிளேட்டை தூக்கி வீசியிருந்தான் இராஜவர்மன்.

 

அவள் எதிர்பார்த்த ஒன்றுதான். நிச்சயம் அவன் கோவப்படுவான் என்பதை அவளும் அறிந்துதான் வைத்திருந்தாள்.

 

அவனின் செயலால் பயத்தில் ஒருகணம் கண்களை மூடித்திறந்தவள், இப்போது பயத்துடனே அவனை பார்க்க,

 

“உன் கிட்ட நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். இந்த டாப்பிக்-அ பத்தி என் கிட்ட பேசாதன்னு.” என்று ஆள்காட்டிவிரலை நீட்டி கோவமாய் அவளை பார்த்து சொன்னவனின் விழிகளில்தான் எத்தனை கோவம்.

 

அவனின் கோவம் நிறைந்த விழிகளை பார்க்கவே சுபத்ராவிற்கு  இப்போது பயம்தான். அந்த பயத்தின் வெளிப்பாடாய் அவள் கை,கால்கள் கூட நடுங்க ஆரம்பித்திருந்தது.

 

இருந்தும் பிரதிக்ஷாவிற்காக பேசவேண்டிய கட்டாயம் அவளுக்கு.

 

என்ன இருந்தாலும் அவளும் பெண்தானே.

 

வாழவேண்டிய  இளம் வயதில்  ஒரு சன்யாசி போல் அவள் வாழ்வதை சுபத்ராதான் அனுதினமும் பார்க்கிறாளே.

 

அதனாலே “இல்லங்க..” என்று ஆரம்பித்தவளை பார்வையாலே நிறுத்தியவன்,

 

“அவ லைஃப்-ல கல்யாணம்-ன்னு ஒண்ணு நடந்து முடிச்சிடுச்சி” என்றான் இனி இது பற்றி பேச எதுவும் இல்லை என்பது போல்.

 

“எது..? பன்னிரண்டு வயசுல மோதிரம் மாத்தி.. பதினெட்டு வயசுல ரிஜிஸ்டர் பண்ணதுக்கு பேரு கல்யாணமாங்க..?” என்று அவனையே திருப்பி கேட்டவளுக்கு எங்கே கோவத்தில் அறைந்துவிடுவானோ என்ற பயமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.

 

ஆனால் அவள் நினைத்தது போல் எதுவும் செய்யாமல் அவன் இருக்க, அதையே தனக்கு சாதகமாக்கி கொண்டவள்,

 

“ஒருநாளாவது அந்த சத்யன் கூட ஒரு மனைவி-ஆ நம்ம பிரதி வாழ்ந்திருப்பாளா..? வாழாததுக்கு பேர் எப்படிங்க கல்யாணம் ஆகும்..? அப்புறம் அந்த சத்யன் இறந்ததுக்கு நம்ம பிரதிக்கு ஏங்க இவ்வளோ பெரிய தண்டனை..?” என்றவளின் வார்த்தைகளில் இப்போது கோவம் எட்டிப்பார்க்கவே செய்தது.

 

“ஏய்.. எது தண்டனை..?” என்று பதிலுக்கு அவளிடம் எரிந்து விழுந்தவன்,

 

“சத்யன் இல்லனாலும்.. அந்த வீட்ல பிரதி-அ மகாராணியாதான் வச்சியிருக்காங்க. பல கோடி ரூபா சொத்த அவ பேர்-ல எழுதிவச்சியிருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும்..?” என்றான் மனசாட்சியே இல்லாமல்.

 

“கோடி ரூபாய் சொத்து போதுமாங்க ஒரு பொண்ணு சந்தோஷமா வாழறதுக்கு…?” என்றவளை பற்களை கடித்துகொண்டு பார்த்தவன்,

 

“இங்க பாரு சுபத்ரா.. இதுக்கு மேல இத பத்தி பேசி என்ன கோவப்படுத்தாத..” என்றான் மேற்கொண்டு இதுகுறித்து பேச தனக்கு விருப்பம் இல்லை என்பது போல்.

 

“அவ சின்ன பொண்ணுங்க… வாழ வேண்டிய வயசுங்க..” என்ற சுபத்ராவின் வார்த்தைகளில் இப்போது கெஞ்சல்தான் அதிகம் இருந்தது.

 

ஆனால் இராஜவர்மனுக்கோ அவளின் வார்த்தைகள் உள்ளுக்குள்  கோவத்தையும், எரிச்சலையும் தான் ஏற்படுத்தியது.

 

“இப்போ எதுக்காக இந்த டாப்பிக்-அ விடாம புடிச்சிகிட்டு இருக்க.. நீ..? பிரதி உன் கிட்ட சொன்னாளா எனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவைங்கன்னு..?” என்றவன் முடிக்கவில்லை,

 

அதற்குள் “அவ சொல்லணுமாங்க..?” என்று திருப்பி அவனை கேட்டவள்,

 

“இதையெல்லாம் நாமளா அவளுக்கு செஞ்சி வச்சியிருக்கணும்-ங்க.” என்றாள் இப்போது வார்த்தைகளில் வலியோடு.

 

“எந்த உணர்ச்சியும் இல்லாம இருக்க அவ ஒண்ணும் கல்லு இல்லங்க” என்று சொல்லும் போதே அவள் குரல் தழுதழுத்ததோடு விழிகளும் கலங்கிவிட்டது பிரதிக்ஷாவை நினைத்து.

 

ஆனால் அவனோ, “உப்பு, புளி, காரம் இல்லாம சாப்பிடும் போது எப்படி உணர்ச்சி வரும்…?” என்று மனதில் ஈரமே இல்லாமல் கேட்டவனை நிஜமாலுமே பிரதிக்ஷாவிற்கு இவன் அண்ணன்தானா..? என்ற ரீதியில் பார்த்தவளுக்கு இனி இவனிடம் இது குறித்து பேசுவது வீண் என்றுதான் தோன்றியது.

 

மேற்கொண்டு எதுவும் பேசாமல் முகத்தில் அருவெறுப்பை உமிழ்ந்தபடி அவள் அவனையே பார்த்திருக்க,

 

“இதுதான் உனக்கு ஃப்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் சுபத்ரா.. இதுக்கப்புறமும் நீ இந்த டாப்பிக்-அ ஓப்பன் பண்ணா காலத்துக்கும் நீ உன் அப்பன் வீட்லதான் இருக்கறமாதிரி ஆகிடும்.” என்று முதலும் முடிவுமாக சொன்னவன், அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் வாஷ்பேஷனில் கை கழுவிவிட்டு அவர்கள் அறைநோக்கி விரைய, சுபத்ராதான் செல்லும் அவனையே பார்த்துகொண்டிருந்தாள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல்.

 

மாப்பிளையின் அப்பா சத்யமூர்த்தி-க்கு தூரத்து உறவினர் முறை என்பதால், பிரதிக்ஷா சென்னைக்கு வரும் போதே அவர்கள் குடும்பம் சார்பாக அந்த திருமணத்தில் கலந்து கொள்ளும் படி சொல்லிதான் அனுப்பியிருந்தார் சத்யமூர்த்தி.

 

அதனால் தான் அவளும் இந்த திருமணத்திற்காக பெங்களூர்-க்கு வந்தது கூட.

 

சத்யமூர்த்தி அளவுக்கு அவரின் உறவினர் வசதி இல்லையென்றாலும்,

 

அவர்கள் குடும்பம் சார்பாக வந்திருந்த பிரதிக்ஷாவை மாப்பிளை வீட்டார் உள்ளங்கையில் வைத்துதான் தாங்கினர்.

 

அவளுக்கென்று உயர்தர ஹோட்டலில் அறை புக் செய்திருந்தனர். உணவில் கூட அவளுக்கு மற்றவர்களை விட உயர்தரமான உணவுகள் என்று மாப்பிளையின் தந்தை அவளை பார்த்து பார்த்து கவனிப்பதை பார்த்து பெண்வீட்டாரே ஒருகட்டத்தில் வாயை பிளந்துவிட்டனர்.

 

காலையில் திருமணசடங்குகள் ஆரம்பமாகியிருக்க, உடன் வந்திருந்த காட்ஸ்களை மண்டபவாயிலில் நிற்க சொல்லிவிட்டு பிரதிக்ஷாவும் வள்ளியம்மையும் மண்டபத்திற்குள் நுழைந்தனர்.

 

மாப்பிளையன் குடும்பமே வாயில் நின்று வரவேற்று அவளை உள்ளே அழைத்து செல்ல, திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் கண்களும் பிரதிக்ஷாவின் மீதேதான் இருந்தது.

 

இதில் மாப்பிளையின் சொந்தகாரர்கள் சிலரால் அரசல்புரசலாக அவள் ஒரு விதவை என்று தெரியவர, அதுவரையும் அவளை பார்த்திருந்தவர்களின் பார்வை இப்போது மொத்தமாகவே மாறியிருந்தது.

 

ஆனால் பிரதிக்ஷா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

 

அவள் முழுவதுமாக வேறொரு உலகத்திற்குள் மூழ்கிபோயிருந்தாள் அந்த மீராநந்தனால்.

 

பார்ப்பவளின் முகமெல்லாம் அவள் விழிகளுக்கு அவனாகவே தெரிந்தது.

 

என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு அவளுக்கு ஒருவித பதற்றம் நிறைந்த பூரிப்பு.

 

நிச்சயம் அவன் வருவான் என்ற எதிர்ப்பார்ப்பு அவளுக்குள் நொடிக்கு நொடி அதிகரித்த வண்ணம் இருக்க, அவள் விழிகளும் நாலாபுறமும் அவனையேதான் தேடி அலைந்துகொண்டிருந்தது.

 

தேடல் கூட இன்று சுவரசியமாக இருந்தது அவளுக்கு.

 

இந்த தேடலே அவனை பார்த்துவிட்டது போன்றதொரு சந்தோஷத்தை அவளுக்குள் ஏற்படுத்தியிருந்தது.

 

அந்த சந்தோஷம் அவள் முகத்திலும் பிரதிபலிக்க, அது இன்னும் அவளின் அழகை மெருகூட்டவே செய்தது.

 

சடங்கு சம்பிராதயங்கள் எல்லாம் முடிந்து முகூர்த்த நேரமும் நெருங்க, மாப்பிளையின் தந்தை பிரதிக்ஷாவை மணமேடைக்கு அழைத்து செல்ல, அந்த செயல் மணப்பெண் வீட்டாருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

 

காரணம் அவள் ஒரு விதவை என்பதால்.

 

அதிலும் மணமகளின் பாட்டி “என்னடா நடக்குது இங்க..? உன் சம்மந்திக்கு மூளையில எதாவது இருக்கா இல்லையா..? தாலிகட்டபோற நேரத்துல அவள எதுக்குடா மேடைக்கு கூட்டிட்டு போறாரு..” என்று தன் மகனிடம் ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

தாலி கட்ட போகும் நேரத்தில் எதற்கு பிரச்சனை என்று மணப்பெண்ணின் தந்தை அவரை சமாதானப்படுத்த, அந்த பாட்டியின் கோவப்பார்வையோ சிரித்த முகத்தோடு மாப்பிள்ளை வீட்டாரோடு நின்றுகொண்டிருந்த பிரதிக்ஷாவின் மீதேதான் நிலைத்திருந்தது.

 

மேள தாளங்கள் முழங்க, மணமகன் மணப்பெண் கழுத்தில் மங்கள நாணை கட்ட, அனைவருமே அர்ச்சதை தூவி அவர்களை வாழ்த்தினர்.

 

சில சம்பிரதாய சடங்குகள் முடிந்தபின்னே பிரதிக்ஷா அவர்கள் குடும்பம் சார்பாக கிஃப்ட் கொடுத்த கையோடு அவர்களுக்கு வாழ்த்தும் சொல்லிவிட்டு நகர்ந்தவள், மேடையை விட்டு இறங்க கூட இல்லை

 

ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவர் சிறுமிகளில், ஒரு சிறுவன் தன்னை யாரும் பிடித்துவிடாவண்ணம் ஓடி வந்த வேகத்தில், மணமக்களுக்கு பின்னால் நாத்தி விளக்கு பிடித்திருந்தவரை இடித்ததில் விளக்கு கீழே விழுந்து அணைந்தும் விட்டிருந்தது.

 

யாரும் சற்றும் எதிர்ப்பார்க்கா நிகழ்வுதான்.

 

“ஐய்யோ” என்று சுற்றியிருந்தவர்கள் பதற, அந்த சிறுவனுக்கோ பயத்தில் முகம் வெளிறியதோடு, கண்களும் கலங்கிவிட்டது.

 

அங்கிருந்த அனைவரின் பார்வையும் அணைந்துகிடந்த விளக்கின் மீது இருக்க, பிரதிக்ஷாவின் பார்வையோ பயந்துபோய் நின்றுகொண்டிருந்த அந்த சிறுவனின் மீதுதான் இருந்தது.

 

“ஏண்டா… உனக்கு விளையாட இடமே கிடைக்கலையா…?” என்று கேட்டதோடு அவன் முதுகிலும் சுள்ளென்று மணமகளின் தாயார்வைக்க,

 

“அம்மா….” என்று சத்தம் போட்டு அழுதே விட்டான் அந்த சிறுவன்.

 

“செய்யறதெல்லாம் செஞ்சிட்டு என்னடா அழுகை..?” என்று கேட்டு மீண்டும் அவர் ஒன்று வைக்க, அதற்கு மேலும் பிரதிக்ஷாவால் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்க முடியவில்லை.

 

வேக எட்டுகளுடன் அந்த சிறுவன் அருகில் சென்றவள், அதுவரையும் அவர் பிடியிலிருந்தவனை தன்புறம் இழுக்க, அந்த சிறுவனோ பயத்தில் அவள் கால்களை கட்டிக்கொண்டு அழுதான்.

 

அவளுக்குமே இப்போது கண்கள் கலங்கிவிட்டது அந்த சிறுவனின் நிலையை பார்த்து.

 

அவன் கண்ணீரை துடைத்துவிட்டு சமாதானப்படுத்தியவள் அந்த சிறுவனின் தாயாரிடம் அவனை இங்கிருந்து அழைத்து போக சொல்ல அவரும் அவனை அழைத்து சென்றார்.

 

“என்ன ஆண்டி நீங்க..? அவன் சின்ன பையன்.. இங்க என்ன நடக்குதுன்னு கூட அவனுக்கு தெரியாது.. சின்னபையன் கிட்டபோய் இவ்வளோ ரூட்-ஆ நடந்துக்க எப்படி உங்களால முடியுது..?” என்றவளின் வார்த்தைகளில் லேசாக கோவம் எட்டிப்பார்க்கவே செய்தது.

 

அதுவரையும் பொறுமையை இழுத்துபிடித்து கொண்டிருந்த மணப்பெண்ணின் பாட்டியோ இதுதான் சந்தர்ப்பம் என்று வரிந்து கட்டிகொண்டு அவள் முன்னால் வந்து நின்றதோடு,

 

“அம்மாடி… அவனுக்கு இங்க என்ன நடக்காதுன்னு தெரியாது.. ஆனா உனக்கு தெரியும் இல்ல. இங்க என்ன நடக்குது..? இங்க நாம வரலாமா..? வரக்கூடாதுன்னு..?” என்றவரின் வார்த்தைகள் ஈட்டியை போல் அவள் மனதை துளைக்க, பிரதிக்ஷாவின் முகமே மாறிவிட்டது.

 

“பாட்டிம்மா..” என்று ஆரம்பித்த வள்ளியம்மையை விழிகளாலேயே பிரதிக்ஷா தடுக்க, வள்ளியம்மையும் அமைதியாகி போனாள்.

 

வந்த இடத்தில் தன்னால் எந்த பிரச்சனையும் வரவேண்டாம் என்றுதான் அவள் வள்ளியம்மையை அடக்கியது கூட.

 

“சம்மந்தி…யார்கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கீங்க..?” என்று மணமகனின் தந்தை கோவப்பட,

 

“சம்மந்தி.. அவங்க உங்களுக்கு யாராவேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். அவங்கள நீங்க தலையில தூக்கி வச்சி கொண்டாடுங்க.. இல்ல கோவில் கட்டி கும்பாபிஷேகம் பண்ணுங்க. இது உங்க பையனோட கல்யாணம் மட்டும் இல்ல.. என் பேத்தி சம்மந்தபட்ட விஷயமும் கூட. அவ வாழ்க்கை சம்மந்தபட்ட விஷயம். இந்த பொண்ணு மேடை-அ விட்டு இறங்க கூட இல்ல.. அதுக்குள்ள விளக்கு அணைஞ்சிபோயிடுச்சி.” என்று முகத்தை சுளித்தவாறு சொன்னவர்,

 

“அவர்தான் உன்ன மேல கூப்பிட்டாருன்னா உனக்கு தெரியாது நீ ஒரு அமங்கலி இந்த மாதிரி சுபகாரியம் நடக்கற இடத்துக்கெல்லாம் வர கூடாதுன்னு” என்றவரின் வார்த்தைகள் ஏற்படுத்திய வலிகளால் அவள் கண்களிலிருந்து  கண்ணீர் துளிர்க்க, அதை யாருக்கும் காட்டாமல் தலையை தாழ்த்திக்கொண்டாள் பிரதிக்ஷா.

 

“ஏம்மா. எந்த காலத்துலமா இருக்கீங்க நீங்க..? உலகமே மாறிகிட்டு வருது.. நீங்க என்னடாண்ணா இன்னும் பழைய பஞ்சாங்கத்த புடிச்சி தொங்கிகிட்டு இருக்கீங்க..?” என்று மணமகனின் தந்தையும் விடாமல் கேட்க,

 

“உலகம் எவ்வளோ மாறுனாலும் அமங்கலி அமங்கலிதான்.. அபசகுணம் அபசகுணம்தான். இந்த பொண்ணு இங்க வந்ததாலதான் விளக்கு அணைச்சி அபசகுணம் ஆகிடுச்சி” என்று அடித்து பேசிய அந்த மூத்தவள்,

 

அவளை பார்த்து, “இப்போ உனக்கு சந்தோஷமா..? உன்ன மாதிரி என் பேத்தியும் ஆகணும் அதுதானே உன் ஆசை.?” என்று கேட்டவரை பிரதிக்ஷாவால் நிமிர்ந்து கூட பார்க்கமுடியவில்லை.

 

கழிவிறக்கத்தில் கரைந்துகொண்டிருந்தாள்.

 

திருமணத்திற்கு செல்ல வேண்டுமென்று சத்யமூர்த்தி சொன்னபோது இதையெல்லாம் மனதில் வைத்துதான் பிரதிக்ஷாவும் முதலில் மறுத்தாள். ஆனால் சத்யமூர்த்திதான் விடாபிடியாக பேசி அவளை சம்மதிக்க வைத்தது.

 

அதுமட்டுமல்ல மணமகனின் தந்தைக்கு பிரதிக்ஷா என்றால் அதீத பிடித்தம். 

 

சிறுவயது முதலே அவளை பார்த்தவறாயிற்றே. தனக்கு மகள் இல்லாத குறையை அவர் தீர்த்துகொள்வது கூட பிரதிக்ஷாவை பார்த்துதான்.

 

அதனால்தானே நேற்று முதல் தானே முன்நின்று அவளுக்கு ஒவ்வொன்றையும் அவர் பார்த்து பார்த்து செய்தது.

 

“போச்சி… எல்லாம் போச்சி.. இந்த அமங்கலியால கல்யாணம் ஆன அன்னைக்கே விளக்கு அணைஞ்சிடுச்சி… இனிமே என்னலாம் ஆக போகுதோ.. பாவாடைராயா…” என்று அவர் ஒப்பாரி வைக்க, பிரதிக்ஷாவிற்கு தான் நிற்கும் இடம் மட்டும் உள்வாங்கி கொண்டால் என்ன என்ற நிலைதான்.

 

சுற்றி நிற்பவர்களும் அந்த பாட்டியை போலவே பேச அதுவும் பிரதிக்ஷாவின் காதிற்கு விழவே செய்தது.

 

ஒருகுற்றவாளி போல நிறைந்த சபையில் தலை குனிந்து நின்றாள்.

 

அவமானத்தில் குன்றி போய் நின்றிருந்தவளுக்கு இப்போது கை கால்கள் சில்லிட்டு போனதோடு நடுங்கவும் ஆரம்பித்திருந்தது.

 

இத்தனை அவமானங்களை பார்த்த பின்னும் ஏன் இந்த உயிர் உடலில் இருக்கிறது என்றுதான் அவளுக்கு தெரியவில்லை.

 

வாய்க்கு என்ன வேலை என்பது போல் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரின் வாயும் அவளை வசைபாட ஆரம்பித்திருக்க, மாப்பிள்ளை வீட்டாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை.

 

இப்படியே சில கணங்கள் நீடிக்க, தொடர்ந்து விடாமல் வந்து கொண்டிருந்த அழைப்பை ஏற்று காதில் வைத்த மணமகன் முகத்திலோ அத்தனை மகிழ்ச்சி.

 

அந்த மகிழ்ச்சியோடு பிரதிக்ஷாவிடம் ஓடி வந்தவன், “சிஸ்டர் அப்பா அடிக்கடி சொல்வாரு உங்க கையால ஒரு ரூபாய் வாங்குனா கூட அது கோடி ரூபாய்க்கு சமம்-னு.. உண்மைதான் சிஸ்டர்.” என்று பூரிப்போடு சொன்னவனை அவள் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே புரியாமல் பார்த்திருக்க,

 

“ஃபோர் யியர்ஸ்-ஆ நடையா நடந்துட்டு இருக்கேன் சிஸ்டர்.. என் ஸ்டார்டப் பிஸ்னஸ் ஃபண்ட்-க்காக. இந்தியாலே ஒரு பெரிய கம்பெனி என்னோட பிஸ்னஸ் பிளான் பார்த்துட்டு எனக்கு ஃபண்ட் கொடுக்கறன்னு சொல்லியிருக்காங்க. நீங்க நேர்ல வந்து விஷ் பண்ணி கிஃப்ட் கொடுத்த நேரம் என்னோட லைஃப் ஸ்டார்ட் ஆகிடுச்சி. தேங்க்யூ சிஸ்டர்.” என்று மகிழச்சிததும்பும் குரலில் இருகரம் கூப்பி அவன் சொன்னபோது, சற்றுமுன் வரை அவளை வசைபாடிய வாயெல்லாம் வாயடைத்துதான் போனது.

 

“என்னம்மா.. எதோ அபசகுணம் என்ன ஆகப்போகுதோன்னு ஒப்பாரி வச்சீங்க.. இப்போ இதுக்கு என்ன சொல்லபோறீங்க…?” என்று பெண்வீட்டாரை பார்த்து மணமகனின் தந்தையும் கேள்வியெழுப்பியபோது, பதிலுக்கு எதுவும் சொல்லமுடியாமல் அசடு வழிய நின்றனர் அனைவரும்.

 

“மாசம் லட்ச கணக்ககுல சம்பாதிக்கற மில்-அ நம்பிதன உங்க பொண்ண எங்க வீட்டுக்கு அனுப்பணும்னு நினைச்சீங்க…?”என்று மணப்பெண்ணின் பாட்டியை பார்த்து கேள்வியெழுப்பியவர்,

 

“அந்த மில்-வ வாங்க எந்த பொண்ண பார்த்து அமங்கலி, அபசகுணம்-னு சொன்னீங்களோ அந்த பொண்ணு கையாலதான் பணம் வாங்கிட்டு போய் வாங்குனேன்.” என்றவரை விழிகள் கலங்க பார்த்தாள் பிரதிக்ஷா.

 

அவளுக்கே இத்தனை நாட்கள் தெரியாத ஒன்றுதான் இதெல்லாம்.

 

“அந்த கடவுள் வேணும்னா மனசாட்சியே இல்லாம என் பொண்ணு வாழ்க்கையில விளையாடி இருக்கலாம். ஆனா என் பொண்ணு மனசு சொக்கதங்கம். அத விலை போடவும் முடியாது.. அதுக்கு விலையும் கிடையாது.” என்று பெருமிதமாக சொன்னவரை நெகிழ்ச்சியோடு பார்த்தவளுக்கு, அவருக்கு ஏன் தான் இத்தனை பிடித்தம் என்ற கேள்விக்கான பதிலும் இன்றுதான் கிடைத்திருந்தது.

 

“மன்னிச்சிரு தாயி. அவங்களுக்காக நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்” என்று இருகரம் கூப்பியவரின் கரத்தை சட்டென்று பற்றி கீழேவிட்டவள்,

 

“பொண்ணுகிட்ட அப்பா மன்னிப்பு கேட்கலாமா..?” என்க, அவருக்குமே அப்போதுதான் மனதிற்கு சற்று ஆறுதலாக இருந்தது.

 

“வா தாயி சாப்பிடலாம்” என்றவரைப்பார்த்து கஷ்டப்பட்டு புன்னகைத்தவள்,

 

“இப்போ பசியில்ல.. நான் அப்புறமா சாப்பிடறேன்ப்பா.” என்று சொல்லிவிட்டு மேடையிலிருந்து இறங்கியவள், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் நேராக வாசல் நோக்கி விரைய வள்ளியம்மையும் அவள் பின்னாலேயேதான் சென்றாள்.

 

மண்டபத்தை விட்டு வெளியில் வந்தவளின் பார்வையில் எதிரில் இருந்த காஃபிஷாப் பட, காஃபிஷாப் நோக்கி விரைந்தவளை வள்ளியம்மையும், காட்ஸ்-ம் பின் தொடரவே,

 

“என்ன கொஞ்சநேரம் தனியா விடுங்க. நான் எங்கயும் போகமாட்டேன். அந்த காஃபி ஷாப்-ல தான் இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு நகரமுற்பட்டவளை

 

“அம்மா..” என்றழைத்த வள்ளியம்மை, அவளின் ஹேண்ட்பேக்கை கொடுக்க, பிரதிக்ஷாவும் அதை வாங்கிகொண்டு எதிரில் இருந்த காஃபிஷாப் நோக்கி விரைந்தாள்.

 

அவளுக்கு இப்போது தனிமை வேண்டும். அதுவும் தன்னை யார் என்று தெரியாத ஒரு இடத்தில்.

 

உள்ளேநுழைந்து இருக்கையில் அமர்ந்தவளால் அதற்குமேல் கண்ணீரை கட்டுபடுத்த முடியவில்லை.

 

என்னதான் இறுதியில் எல்லாம் சுமூகமாக முடிந்தாலும், அவர்கள் அனைவரும் பேசிய பேச்சிக்களையெல்லாம் வாங்கிகொண்டு நின்றது என்னவோ அவள் தானே.

 

அத்தனை பேர் முன்னிலையில் ஆளாளுக்கு என்னவெல்லாம் பேசிவிட்டார்கள்.

 

இப்படியெல்லாம் பேசுவதற்கு பதில் கழுத்தை பிடித்து அவளை வெளியில் தள்ளியிருந்தால் கூட பிரதிக்ஷாவிற்-க்கு இந்த அளவிற்கு வந்திருக்காது.

 

உள்ளுக்குள் அதிகம் வலித்தது. அந்த வலியின் வீரியத்தால் இப்போது முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.

 

சுற்றியிருப்பவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்லாமல் தேற்றுவார் யாருமின்றி அழுதாள்.

 

தனக்கு ஏன் இப்படியொரு தலைவிதி என்று வருந்தி அழுதாள்.

 

எவ்வளவு நேரம் அழுதாளோ அது அவளுக்கே தெரியாது.

 

அதுவரையும் முகத்தை மூடியிருந்த கரத்தை விலக்கியவள், கன்னத்தில் வழிந்தோடியிருந்த கண்ணீரை துடைக்கும் பொருட்டு, டிஸ்யூ பேப்பரை எடுக்க சென்றவளின் கரம் அப்படியே நின்றுவிட்டது.

 

“கர்சிஃப்..” என்றவாறே அவள் முன்னால் நீட்டியிருந்த கரத்தையும், அந்த கரத்தில் இருந்த கைகுட்டையையும் பார்த்து.

11 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels