மீட்டிங்கில் நடுநாயகமாக அமர்ந்திருந்த மீனாட்சியின் சிந்தனையெல்லாம் சுபத்ராவிடம் எப்படி பேசுவது என்ற யோசனையில் மட்டுமே ஆழ்ந்திருந்தது.
எப்போதும் போல் அன்றாட வாழ்வில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வுகள், உதவிகள் என்று மீட்டிங்கும் முடிவிற்கு வர மீனாட்சியால் தான் சுபத்ராவை நெருங்க கூட முடியவில்லை.
காரணம் மீனாட்சியின் நெருங்கிய தோழிகள் அவரை விட்டு நகரவும் இல்லை, நகர்ந்து செல்ல அவரை அனுமதிக்கவும் இல்லை.
ஆளாளுக்கு மீராநந்தன் திருமணம் நின்றுபோனதை குறித்தும், தங்கள் மகள்களுக்கு அவனை மாப்பிளை கேட்டும் தொந்தரவு செய்த வண்ணம் இருக்க, மீனாட்சிக்குதான் ஏன் இன்று மீட்டிங் வைத்தோம் என்றாகிவிட்டது.
அவர் இன்று மீட்டிங் அரேஜ் செய்ததே சுபத்ராவிடம் பேசி பிரதிக்ஷா குறித்த தகவல்களை திரட்டுவதற்காகத்தான்.
ஆனால் மீட்டிங் முடிந்து அனைவரும் கிளம்பும் வரையுமே அவரால் சுபத்ராவை நெருங்க முடியவில்லை.
எப்போதும் போல் தன் தோழிகளிடம் சொல்லிவிட்டு சுபத்ரா அங்கிருந்து கிளம்ப, அதை பார்த்த மீனாட்சியுமே தனக்கு முக்கிய வேலை இருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
அவள் பின்னாலேயே சென்றவருக்கு அவளை எப்படி தடுத்து நிறுத்துவதென்றுதான் தெரியவில்லை. காரணம் இதுநாள் வரை அவளிடம் அவர் பேசியதே கிடையாது.
அதுவும் இல்லாமல் இந்த லேடிஸ்கிளப்பில் சுபத்ரா சேர்ந்தே ஒரு வருடங்கள்தான் ஆகிறது.
“ஐய்யோ.. இப்போ நான் என்ன பண்றது..?” என்று முனகியவாறே அவள் பின்னாலேயே அவர் சென்றுகொண்டிருக்க, அவளோ வேக எட்டுகளுடன் சென்று காரில் ஏறியிருந்தாள்.
“போச்சி… அவ கிளம்பிட்டா..” என்று மனதிற்குள் நினைத்தவருக்கு செல்லும் அவளை தடுப்பதற்கான வழிவகைகளும் கிடைக்கவில்லை.
என்ன செய்வது என்ற யோசனையோடே அவள் காருக்கு அருகில் நிறுத்தபட்டிருந்த தன் கார் அருகில் சென்று அவர் நின்றுகொண்டிருக்கும் போதுதான்,
அவர் சற்றும் எதிர்பார்க்காவண்ணம் கார் கதவை திறந்துகொண்டு சுபத்ரா இறங்கியிருந்தாள்.
இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்தவர் “என்னாச்சிம்மா.. எதும் பிரச்சனையா..?” என்று பேச்சை ஆரம்பிக்க,
“அதெல்லாம் எதுவும் இல்ல மேம்.. போன்-அ வச்சிட்டு வந்துட்டேன்.” என்று சொன்னவள் வேக எட்டுகளுடன் கிளப் நோக்கி செல்ல, அவள் இங்கு வருவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தீவிரமாக யோசித்தது மீனாட்சியின் மூளை.
என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்துகொண்டிருந்தவரின் மூளையில் மின்னல் வெட்ட,
“ஐ…. ஐடியா..” என்று சொடுகிட்டு சந்தோஷ குரலில் சொல்லிகொண்டவர், இப்போது சுற்றும் முற்றும் பார்த்தார் யாராவது இங்கு இருக்கிறார்களா என்று.
தூரத்திலிருந்த கேட் அருகில் வாட்ச்மேன் மட்டும் தான் அமர்ந்திருந்தான். ஆனால் அங்கிருந்து பார்ப்பவனுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதெல்லாம் நிச்சயம் தெளிவாக தெரிய வாய்ப்பில்லை.
அதனாலே வேக எட்டுகளுடன் சுபத்ராவின் கார் அருகில் சென்றவர், கணநேரத்தில் அவள் கார் டயரிலிருந்த காற்றை பிடுங்கியும் விட்டிருந்தார்.
இரண்டு டயர்களில் காற்றை பிடுங்கிவிட்டவர், பின் ஏதும் நடக்காதது போல், அவர் கார் அருகில் சென்று நின்றுகொண்டதோடு போன் பேசுவது போல் பாவலா வேறு செய்துகொண்டிருக்க, சுபத்ராவும் அப்போதுதான் போனை எடுத்துகொண்டு காரை நோக்கி வந்துகொண்டிருந்தாள்.
காரின் அருகே வந்தவளுக்கு அதிர்ச்சிதான் காரின் முன்பக்க மற்றும் பின்பக்க டயரில் இப்போது காற்று இல்லாமல் இருப்பதை கண்டு.
சற்றுமுன் பார்த்தபோதுகூட கார் டயரில் காற்று இருந்ததாகதான் அவளுக்கு நியாபகம், ஆனால் உள்ளே சென்று வருவதற்குள் இதெப்படி என்றுதான் சுபத்ராவிற்கும் விளங்கவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்தபடியே அவள் நின்றிருக்க, பின் மீனாட்சிதான் ஒன்றுமே நடக்காதது போல் அவள் அருகில் சென்று நின்றதோடு
“ஏம்மா… கிளம்பலையா..?” என்க, அவளோ அவரிடம் காற்றில்லாத கார் டயரை சுட்டிகாட்டினாள்.
“அச்சோ..” என்று அவரும் போலியாக வருத்தப்பட,
“நான் உள்ள போகும் போது கூட ஏர் இருந்துச்சி மேம்” என்றாள் அவள் ஆணித்தனமாக.
“ஐய்யோ.. ஒருவேளை நான் காத்த பிடுங்கிவிட்டத இவ பார்த்திருப்பாளோ..?” என்று வாய்க்குள்ளே முனகிகொண்டவர்,
“சமாளிப்போம்” என்றவாறே “அப்டியா..?” என்று அவளை பார்த்து புருவ மத்தியை சுருக்கியவர்,
“ஆனா எனக்கு தெரிஞ்சி இங்க யாரும் வரலையேம்மா.. நான் இங்கதன போன் பேசிட்டு இருந்தேன்.” என்றதோடு,
“வெய்யில் காலம் இல்லையா..? லாஸ்ட் வீக் நான் ஷாப்பிங் போனப்போ கூட என் கார் டயரும் இப்படித்தான் ஆகிடுச்சி. நான் கூட யாராவது வேணும்னே பண்ணியிருப்பாங்களோன்னுதான் நினைச்சேன். அப்புறம் என் பையன்தான் சொன்னான் வெய்யில் காலத்துல இப்படில்லாம் ஆகும்னு” என்று வாய்க்கு வந்ததை அடித்துவிட்டார் மீனாட்சி.
பதிலுக்கு “ஓ..” என்ற சுபத்ரா யோசனையோடே காற்றில்லா கார் டயரை பார்த்தவாறே நின்றிருக்க,
“டோண்ட் வொரி மா. நீ வாட்ச்மேன் கிட்ட கார் சாவி-அ கொடு. அவன் சரி பண்ணி வீட்டுக்கே கார்-அ கொண்டுவந்து விட்டுடுவான். நீ வா.. நான் உன்ன டிராப் பண்றேன்.” என்றவர் சொன்னபோது.
சுபத்ராவோ “தேங்கஸ் மேம்..” என்றாள் மென்புன்னகையோடே மீனாட்சியை பார்த்து.
பின் “நீங்க கிளம்புங்க மேம். அவருக்கு கால் பண்ணா வேற கார் அனுப்புவாரு…” என்றவள் பணிவான குரலில் சொல்ல,
“என்ன..? கார் வர்ற வரைக்கும் நீ தனியா இங்கயே நின்னுகிட்டு இருப்பியா..? அதெல்லாம் வேண்டாம் வா..” என்ற மீனாட்சி அவளை தன் காரில் ஏற்றுவதிலேயே குறியாக இருந்தார்.
“அப்போ நான் கேப் புக் பண்ணிக்கிறேன் மேம்..” என்றவள் முடிக்கவில்லை,
“என்னது கேப் புக் பண்ண போறியா..?” என்று விழிகள் விரித்து கேட்டவர்,
“இந்த காலத்துல வீட்ல உள்ள ஆம்பிளைங்களையே நம்பமுடியல.. இதுல நீ யாருன்னே தெரியதவன் ஓட்டிட்டு வரற கேப்-ல போக போறியா..? அதெல்லாம் எதுவும் தேவை இல்லை.. நீ வா நானே உன்ன டிராப் பண்றேன்..” என்றவர் சொன்னபோது சுபத்ராவிற்குதான் சற்று சங்கடமாக இருந்தது.
“இல்ல மேம்… உங்களுக்கு ஏன் வீண் சிரமம்.” என்றாள் மீண்டும் சங்கடத்துடனே.
“இதுல என்ன சிரமம்..? நான் என்ன உன்ன தூக்கிட்டா போகபோறேன்…? என் கார்தன இரண்டு பேரையும் தூக்கிகிட்டு போகபோகுது” என்றவரின் கலகலப்பான வார்த்தைகளால் சுபத்ராவிற்குமே இப்போது சிரிப்பு வந்துவிட்டது.
மேற்கொண்டு மறுக்காமல் வாட்ச்மேன்-னிடம் கார்சாவியை கொடுத்துவிட்டு காருக்குள் அவள் அமர, மீனாட்சி-க்கு அப்போதுதான் அப்பாடா என்றிருந்தது.
எப்படியோ அவளை காருக்குள் அமரவைத்தவருக்கு அடுத்து அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனைதான்.
ஆனால் யோசிப்பதற்கான கால அவகாசங்கள் இப்போது இல்லை என்பதால், “நீ என்ன மா படிச்சியிருக்க… வீட்டுகாரர் என்ன பண்றாரு..?” என்று மீனாட்சியேதான் அவளிடம் பேச்சி கொடுத்தார்.
முதலில் அவரின் கேள்விக்கு தயங்கி தயங்கி பதில் சொன்ன சுபத்ரா, பின் அவரின் கலகலப்பான பேச்சால் அவருடன் சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
தன் குடும்பத்தை பற்றியும், கணவன் மற்றும் மகன் பற்றியும் மீனாட்சி சொல்ல, அதையெல்லாம் ஆர்வமாக கேட்ட சுபத்ராவும் தன் குடும்பத்தை பற்றி கூற ஆரம்பித்தாள்.
அதிகம் தன் மகள் அன்னயாவை பற்றி தான் பேசினாள்.
அறிமுகமான பத்துநிமிஷங்களிலே இருவருமே ஒருவருக்கொருவர் நன்கு பரிட்சயமானவர்கள் போல பேச ஆரம்பித்து விட்டனர்.
குடும்பம் தாண்டி சமூகம், உலகம் என்று அவர்கள் பேச்சி விரிந்தாலும், மீனாட்சி எதிர்பார்த்த விஷயம் மட்டும் சுபத்ராவிடமிருந்து வரவே இல்லை.
அவராலும் அது குறித்து அவளிடம் நேரடியாக கேள்வி கேட்கவும் முடியவில்லை.
அவளிடம் எப்படி கேட்பதென்று யோசித்தவாறே அவளிடம் அவர் பேசிக்கொண்டிருக்கும் போதுதான், மீராநந்தனே அவரை தொலைபேசியில் அழைத்திருந்தான்.
“என் பையன்தான்” என்றபடியே காரை ஓரமாக நிறுத்தியவர், அதன் பின்னே அழைப்பை ஏற்று ஸ்பீக்கரிலும் போட்டதோடு “சொல்லுடா.” என்க,
“ம்மா.. முகுந்தன் அங்கிள் போன் பண்ணியிருந்தாரு. இப்போ நான் நம்ம ஆபீஸ்-க்குதான் போய்ட்டு இருக்கேன். எதோ இம்பார்ட்டண்ட் மீட்டிங்காம். மீட்டிங் முடிய எப்படியும் ஈவ்னிங் ஆகிடும். ஸோ நானும் டேட்டும் ஆபீஸ்லே சாப்டுக்கறோம். நீங்க எங்களுக்காக வெயிட் பண்ணாம சாப்பிடுங்க” என்றவனின் வார்த்தைகள் சுபத்ராவின் காதிலும் விழவே செய்தது.
“சரிடா..” என்று பதிலுக்கு சொன்னவர், “உன்கிட்ட எத்தனை தடவ சொல்லியிருக்கேன் நந்தன்.. டிரைவ் பண்ணிக்கிட்டே போன் பேசாதன்னு.” என்றார் எப்போதும் போல் அவன் மீதான அக்கறையில்.
“ஐ நோ ம்மா… ஓரம்கட்டிட்டு பேசலாம் சுத்தமா டைம் இல்ல.. ஆல்ரெடி கிளைண்ட் ரீச் ஆகி அரைமணிநேரம் ஆகுது ம்மா.” என்று தன் நிலமையை சொன்னவன்.
“ஆமா… நீங்க இன்னும் வீட்டுக்கு போகாம எங்க ஊர் சுத்திகிட்டு இருக்கீங்க..?” என்றவனின் துடுக்கான கேள்வியால் இப்போது மீனாட்சியின் இதழ்களில் மட்டுமல்ல சுபத்ராவின் இதழ்களிலுமே புன்னகை விரிந்தது.
“டேய் இப்போதாண்டா மீட்டிங் முடிஞ்சிது” என்றவர் சொன்னபோது,
“ஆமா.. அந்த சுசுசீலா ஆண்டி-கிட்ட என்ன சொன்னீங்க..?” என்றான் அவன்,
“ஏண்டா..? என்றவர் கேள்விக்கு,
“ஒரே ஒரு டைம் அவங்க பொண்ண மீட் பண்ண சொல்லி டார்ச்சர் பண்றாங்க. இதுல அவங்க பொண்ணு வேற எப்போ மீட் பண்ணலாம்னு கேட்டு மெசேஜ் பண்ணிகிட்டே இருக்கா..” என்றான் இப்போது கடுப்பான குரலில்.
அவர்கள் எதற்காக அவனை தொந்தரவு செய்கிறார்கள் என்பது மீனாட்சியும் அறிந்ததே.
இருந்தும்,”டேய்.. ஒரு தடவ மீட் பண்ணிதான் பாரேன். ரொம்ப நல்ல பொண்ணுடா” என்று வேண்டுமென்றே அவரும் அவனை சீண்ட,
“அப்போ… உங்க வீட்டுக்காரருக்கு இரண்டாம் தாரமா கல்யாணம் பண்ணி வைங்க” என்றவனின் பதிலால் சுபத்ராவாலுமே சிரிப்பை அடக்க முடியவில்லை.
இருந்தும் கீழ் அதரங்களை கடித்துகொண்டு சிரிப்பை விழுங்கியபடியே அவள் அமர்ந்திருக்க,
“ஏண்டா நான் உனக்கு பொண்ணு பார்த்தா.. நீ என் புருஷனுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ண பார்குறீயா..?” என்றவரின் கேள்வியால் அவனுக்குமே சிரிப்புதான் வந்தது.
இருந்தும் அதை விழுங்கிகொண்டே “நீங்க தன சொன்னீங்க ரொம்ப நல்ல பொண்ணுன்னு” என்று அவர் வார்த்தையே அவன் திருப்பி கொடுக்க, மீனாட்சிதான் பேச்சற்று போனார்.
“சரி.. சரி.. அங்க அங்க கார்-அ நிறுத்தி சைட் அடிச்சிகிட்டு இருக்காம சீக்கரம் வீட்டுக்கு போய் சாப்பிடுங்க” என்று மேற்கொண்டு தன்னை கேலி செய்தவனை,
“டேய்…” என்றவர் போலியாக மிரட்ட, மறுமுனையிலிருந்து மீராநந்தனின் வசீகரமான சிரிப்பு சத்தம் தான் கேட்டது.
அவனின் சிரிப்பு சத்தத்தை கேட்டு பெண்கள் இருவர் முகத்திலுமே புன்னகைதான்.
“ஓகே ம்மா.. ஆபீஸ் வந்துட்டேன். சாப்டுட்டு மறக்காம பீ.பி டேப்ளட் போடுங்க” என்று எப்போதும் போல் மாத்திரை போடுவதை நினைவு படுத்திவிட்டு அவன் வைக்க, மீனாட்சியும் அதன் பின் தான் காரை ஸ்டார்ட் செய்தார்.
“சரியான வாலு. எப்பவும் இப்படித்தான் எதையாவது சொல்லி நம்ம வாய்-அ அடைச்சிடுவான்.” என்று அவர் வாய்தான் அவனை குறை சொன்னதே தவிர, அவரின் மனம் அவனின் வார்த்தைகளை இரசிக்கவே செய்தது. பெற்ற மனம் அல்லவா.
“ஒரே பையன்-றதால ரொம்பவே செல்லம் கொடுத்துட்டோம்.” என்று மெலிதாய் சிரித்துகொண்டே சொன்னவரைப் பார்த்து, மெலிதாய் புன்னகைத்த சுபத்ரா,
“இவரோட கல்யாணம்தான் நின்னுடுச்சா..மேம்..?” என்று கேட்டபோது, அதுவரையும் மீனாட்சியின் முகத்திலிருந்த புன்னகை காணாமல் போக, அதை கவனித்த சுபத்ராவிற்கோ ஏன் அப்படி கேட்டோம் என்றாகி விட்டது.
“ஐய்யோ சாரி மேம். நான் உங்கள கஷ்டப்படுத்தனும்னு கேக்கல” என்றவள் பதறிகொண்டு சொல்ல.
“அட இப்போ எதுக்கு சாரி..?” என்று கேஷவலாக கேட்டவர்,
“மேரேஜ் நிக்கல மா.. இவன் நிறுத்திட்டான்” என்றவர் சிரித்துகொண்டே சொன்னபோதுதான் சுபத்ராவின் மனதிற்கும் சற்று ஆறுதலாக இருந்தது.
“உங்க பையன்-ஆ..? ஏன்..?” என்று ஆர்வம் தாங்காமல் சுபத்ரா கேட்டபோது,
“யார்கிட்டயும் சொல்ல மாட்டியே..?” என்று பதிலுக்கு கேட்டவரை பார்த்து சொல்லமாட்டேன் என்பது போல் சுபத்ராவும் தலையை அசைக்க, மீனாட்சியும் அனைத்தையும் அவளிடம் கூற ஆரம்பித்தார்.
அனைத்தையும் கேட்ட சுபத்ராவிற்குமே இந்த சுயநல உலகில் இப்படியொரு மனிதனா என்ற ஆச்சரியம்தான்.
“ரியலி… உங்க பையன் ரொம்ப கிரேட் மேம். இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ற நல்ல மனசுலாம் எல்லாருக்கும் இருக்காது.” என்ற சுபத்ராவின் வார்த்தைகளால் அவனை பெற்றவரின் மனம் பூரித்துதான் போனது.
“அவன் நல்ல மனசுக்கு ஏத்தமாதிரி ஒரு நல்ல பொண்ணு கிடைக்கணும்னு நானும் வேண்டாத கடவுள் இல்ல-மா” என்று அவளை ஓரப்பார்வையால் பார்த்தபடி நிறுத்தியவர்,
இப்போது அவளை பார்த்து “உனக்கு தங்கச்சி இருக்கா-ம்மா..?” என்க,
“ஏன் மேம்” என்றவளின் முகத்திலோ சற்று முன் வரை இருந்த சந்தோஷம் துளிகூட இல்லாமல் இருந்தது.
அவளின் முக மாற்றத்தை கவனித்தவர், “நான்தான் சொன்னேனே மா என் பையனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்துட்டு இருக்கேன்னு. எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிபோச்சி.. அதான் உன் குடும்பத்துல உன்ன மாதிரியே நல்ல பொண்ணும் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு பார்த்தேன்.” என்றவர் சமாளிக்க, சுபத்ராவின் முகத்தில் அப்போதுதான் தெளிவு பிறந்தது.
அந்த தெளிவுடனே “இல்ல மேம்… நான் என் வீட்டுக்கு ஒரே பொண்ணு.” என்றவள் சொல்லிமுடிக்கவில்லை,
“உன் வீட்டுகாரருக்கு..?” என்றவரின் கேள்வியால் மீண்டும் சுபத்ராவின் முகம் மாறவே செய்தது.
சட்டென்று பதில் சொல்லமுடியாமல் அவள் தடுமாற, அவள் தடுமாற்றத்தை மீனாட்சியும் கவனிக்கவே செய்தார்.
சிலகணங்கள் அவளிடம் அமைதி நிலவ,
“என்னாச்சி மா.. அவரும் வீட்டுக்கு ஒரே பையன்-ஆ..?” என்று மீனாட்சியே தான் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
முதல் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தயங்கியவள், இப்போது அவசர அவசரமாக “இல்ல மேம்.” என்று சொன்னதோடு
“அவருக்கு ஒரு தங்கச்சி உண்டு.” என்றவளின் வார்த்தைகளால் பூரித்துபோன மீனாட்சியின் முகம் அடுத்த கணமே மாறித்தான் போனது.
“ஆனா அவளுக்கும் மேரேஜ் ஆகிடுச்சி மேம்” என்ற சுபத்ராவின் வார்த்தைகளால்.
அவள் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தால், அவர் கால்கள் தன்னையும் அறியாமல் சடன் பிரேக் போட்டிருக்க, சீட் பெல்ட் அணிந்திருந்ததால் பெரிதாக இருவருக்கும் எதுவும் ஆகவில்லை.
“என்னாச்சி மேம்..?” என்று அவரின் தோளை தொட்டு சுபத்ரா கேட்ட போதுதான், மீனாட்சி-க்கு தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதே புரிந்தது.
சட்டென்று முகபாவனையை மாற்றிகொண்டவர், “நத்திங் மா.. நாய் குறுக்க வந்துடுச்சி” என்று தன் செயலுக்கு பொய்யாக ஒரு காரணத்தை சொல்லி அவளை சமாளித்தவர், அதன் பின்னே மீண்டும் காரை ஓட்ட ஆரம்பித்தார்.
“அவளுக்கும் மேரேஜ் ஆகிடுச்சா..?” என்று வருத்தம் தொணித்த குரலில் சொன்னவர்,
“மாப்பிளை என்ன பண்றாரு..?” என்றார் மேற்கொண்டு அவள் குறித்த தகவல்களை திரட்டும் விதமாக.
“அவர் பிஸ்னஸ்தான் பண்றாரு.” என்றவள் அவள் கணவன் தற்சமயம் உயிரோடு இல்லை என்பதை மட்டும் சொல்லவே இல்லை.
இப்போது திருமணம் ஆனதாக சுபத்ரா சொன்னது கூட, எங்கே அவர் மகனுக்கு அவளை பெண்கேட்டுவிடுவாரோ என்ற பயத்தினால் தான்.
“ஓ சூப்பர்” என்றவர், “ஆமா.. உன் நாத்தனார் எப்படி..? அடிக்கடி சண்டபோட்டுபீங்களோ..?” என்ற மீனாட்சியின் கேள்விக்கு சர்வநிச்சயமாய் இல்லை என்பது போல் தலையை அசைத்த சுபத்ரா,
“உண்மை-அ சொல்லணும்னா இதுவரைக்குமே பிரதி மேல எனக்கு நாத்தனார் ஃபீல் வந்ததே இல்ல மேம்” என்று மென்சிரிப்புடனே சொன்னவளை பார்த்து,
“பிரதி..?” என்றவர் வினவ,
“ஆ.. அவ பேர் பிரதிக்ஷா.. நான் பிரதி-ன்னுதான் கூப்பிடுவேன்.” என்று சிரித்துகொண்டே சொன்னவள், “நான் கூட சம்டைம்ஸ் அவகிட்ட கோவபட்டு இருக்கேன். ஆனா பிரதி கோவபட்டதே கிடையாது. என்னவிடவே ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு. என் பொண்ணு அனன்யா என்ன விட அத்த அத்த-ன்னு பிரதி கூடவேதான் இருப்பா” என்றவள்,
“மேம்.. அடுத்த லெஃப்ட் கட் பண்ணீங்கன்னா ஃப்ஸ்ட் வீடு” என்க, மீனாட்சியும் அவள் சொன்னது போலவே சென்று அவள் வீட்டின் முன்பு காரை நிறுத்தினார்.
காரிலிருந்து இறங்கிய சுபத்ரா, “வீட்டுக்கு வாங்களேன் மேம்.” என்று சொன்ன போது மீனாட்சியும் மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை தன் மகன் விரும்பும் பெண் வீட்டிற்குள் இருக்கலாம் என்ற எண்ணத்திலும், அந்த பெண்ணை பார்க்க வேண்டிய ஆவலிலும்தான் சுபத்ராவின் அழைப்பை தட்டி கழிக்காமல் அவர் அவளுடன் வீட்டிற்குள் சென்றது.
மகன் சொன்னது போலவே வீடு முழுமையுமே அதீத செக்யூரிட்டிதான்.
அவரை சோஃபாவில் அமரவைத்த சுபத்ரா அவருக்காக காஃபி எடுத்து வருவதற்காக கிச்சன் நோக்கி விரைய, மீனாட்சியின் விழிகளோ அவசரஅவசரமாக அந்த வீட்டில் பிரதிக்ஷாவைத்தான் தேடி அலைந்தது.
அவருக்கு சுபத்ரா தன் வீட்டை சுற்றி காட்டியபோது கூட அவள் எங்கும் அவர் கண்களுக்கு புலப்படவே இல்லை. ஏன் அவள் புகைப்படம் கூட.
கோவிலிலிருந்து கிளம்பியவள் அப்படியே வரும் வழியில் நாளை செல்ல இருக்கும் திருமணத்திற்கு கிஃப்ட் வாங்குவும் செய்ய, மீனாட்சி அங்கிருந்து கிளம்பும் வரையுமே பிரதிக்ஷா வீடு வந்து சேரவில்லை.
சுபத்ராவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிய மீனாட்சி அடுத்து தன் மகன் மீராநந்தனுக்குதான் அழைத்தார்.
ஆனால் மீட்டிங்கில் இருப்பதால் அவன் அழைப்பை ஏற்காமல் போக, அதுவே மீனாட்சிக்கு உள்ளுக்குள் ஒருவித டென்ஷனைதான் ஏற்படுத்தியது.
பின் தன் கணவருக்கு அழைத்து பார்த்தார். அவரும் எடுக்கவில்லை.
காதில் வாங்கிய விஷயத்தை யாரிடமாவது கொட்டிவிட்டால் கூட அவருக்கு சற்று நிம்மதியாக இருந்திருக்கும்.
தன் மகன் காதலிக்கும் பெண்ணிற்கு திருமணம் ஆனதை கேள்விபட்டதிலிருந்தே மீனாட்சிக்குள் சொரேரென்ற உணர்வுதான்.
அதிலும் அவள் அண்ணியே சொல்லும் போது அதை அவரால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
அவர் இருந்த மனநிலைக்கு அவர் பத்திரமாக வீடு வந்து சேர்ந்ததே ஆச்சரியம் தான்.
அதீத பதற்றத்தால் அவருக்கு பீ.பி அதிகமாகி கை கால்கள் நடுங்க செய்ய, மாத்திரை போடுவதற்காக மட்டும் கஷ்டப்பட்டு இரண்டு வாய் உண்டார்.
எப்போது அவனிடமிருந்து போன் வரும்.. எப்போது அவன் வீட்டிற்கு வருவான் என்று போனையும் வாயிலையுமே பார்த்து கொண்டிருந்த மீனாட்சிக்கு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாகத்தான் கழிந்தது.
இரவு மணி ஏழாகி இருக்க, மீண்டும் அவனுக்கு அழைத்தார்.
ஆனால் இம்முறையும் அவன் அழைப்பை ஏற்காமல் இருக்க,
“ச்சீ..” என்றவாறே போனை சோஃபாவில் தூக்கிபோட்டவருக்கு, அவன் டூவீலர் சத்தம் கேட்க, வாயிலுக்கு விரைந்து சென்றார்.
வாயிலில் வந்து நிற்பவரை பார்த்து “என்ன மீனாட்சி..?” என்று எப்போதும் போல் அவன் வம்பிழுக்க, பாவம் மீனாட்சிதான் அதையெல்லாம் இரசிக்கும் மனநிலையில் இல்லை.
“டேய் நந்தன்..” என்றவாறே அவனிடம் சென்றவர், “அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் டா” என்றார்.
“ஓ சூப்பர் ம்மா.. புருஷன் யாரு உங்க வீட்டுகாரர்தானே..” என்று மதியம் நடந்த நிகழ்வை மனதில் வைத்துகொண்டு அவன் அவரை கேலி செய்ய,
“டேய் சுசிலா பொண்ணுக்கு இல்லடா.. பிரதிக்ஷா-க்கு” என்றார் மீனாட்சியும் இப்போது பொறுமையை இழுத்து பிடித்துகொண்டு.
“பிரதிக்ஷாவா..? அது யாரு..? எந்த ஆண்டியோட பொண்ணு..” என்றவனை ஓரப்பார்வையால் முறைத்தவர்,
“ஆ… நீ லவ் பண்ற இராஜவர்மனோட தங்கச்சி பேர்தான் பிரதிக்ஷா.” என்றார் பற்களை கடித்துகொண்டு.
“ரியலி..?” என்று கண்கள் மின்ன அவரை பார்த்து கேட்டவன்,
பிரதிக்ஷா என்ற பெயரை இரண்டு மூன்று முறை வாய் விட்டு சொல்லி பார்த்ததோடு நில்லாமல்
“பேர் ரொம்ப அழகா இருக்கு இல்ல ம்மா..” என்க, மீனாட்சிக்குதான் எங்கு சென்று முட்டிகொள்வதென்றே தெரியவில்லை.
“டேய்… நான் சொன்னது உன் காதுல விழுந்துதா இல்லையா..?” என்று அவன் தோள்களை பற்றி உலுக்கி கேட்டவர்,
“அந்த பிரதிக்ஷாவுக்கு கல்யாணம் ஆகிடுச்சாம் டா..” என்றவரை இப்போது நம்பமாட்டாமல் பார்த்தான் மீராநந்தன்.
பின் அவனை நம்பவைக்கும் பொருட்டு இன்று சுபத்ராவை சந்தித்து பேசியது முதல் அவள் வீட்டுக்கு சென்று வந்தது வரை அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவனிடம் அவர் சொன்னபோது கூட அதை மீராநந்தனின் மனம் நம்ப மறுத்தது.
“ம்மா.. நீங்க பொசுக்குன்னு பொண்ணு கேட்டுடுவீங்களோன்ற பயத்துல கூட அவங்க மேரேஜ் ஆனதா பொய் சொல்லியிருக்கலாம்.” என்று சொல்லியவாறே அவன் உள்ளே செல்ல, அவன் பின்னாலேயே சென்ற மீனாட்சிக்கு தெரியவில்லை அவனுக்கு எப்படி எடுத்து சொல்லி புரியவைப்பதென்று.
“டேய்…. டேய்….” என்றவாறே அவன் கரத்தை பற்றி தடுத்தவர், “நிஜமா தாண்டா..” என்றார் என்னை நம்பு என்பதுபோல் இப்போது பாவமாக முகத்தை வைத்துகொண்டு.
“ம்மா..” என்றவாறே இடுப்பில் கைவத்தபடி அவரை பார்த்தவன்,
“நீங்க சொல்ற மாதிரி அவளுக்கு கல்யாணம் ஆகியிருந்தா அவ கால்-ல மெட்டி, கழுத்துல ஜெயின், வகுட்டுல குங்குமம் இருக்கணும் இல்ல. இதையெல்லாம் நான் என் மீராகிட்ட பார்த்ததே கிடையாது.” என்று ஆணித்தனமாக சொன்னவன்,
“ஒவ்வொரு தடவ அவள மீட்பண்ணும் போதெல்லாம் அழகா தேவதை மாதிரி வொயிட் அண்ட் வொயிட்-ல..” என்றவனின் மூளையில் ஏதோ மின்னல் வெட்ட, மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாமல் அப்படியே நின்றுவிட்டான் மீராநந்தன்.
அவர்களின் அனைத்து சந்திப்பிலும் அவள் வெள்ளை நிற உடையில் மட்டுமே இருந்தது, அவள் அறை இருந்த கோலம், வாட்ரோப்பில் அணிவகுத்திருந்த வெள்ளை நிற சல்வார்கள், ஏன் இன்று கோவிலில் கூட அவள் நெற்றியிலிருந்த விபூதி கீற்று என்று அத்தனையும் அவன் கண்முன்னே வந்து போக, இப்போது மீராநந்தனின் முகமும் மாறித்தான் போனது.
அவன் முகமாற்றத்தை கவனித்தவர், “டேய் நந்தன்… என்னாச்சி டா..?” என்றவரின் கேள்வியால் சுயத்திற்க்கு திரும்பியவன்,
ஏதோ சொல்ல வந்தவனாய் “ம்மா..” என்று ஆரம்பிக்கவும், அவன் செல்போனில் நோட்டிபிக்கேஷன் சத்தம் வரவும் சரியாக இருந்தது.
அவசரஅவசரமாக பேண்ட் பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து பார்த்தவன்,
“ம்மா.. நான் உடனே பெங்களூர் கிளம்பணும்..” என்றதோடு விறுவிறுவென தன் அறைக்கு சென்று உடமைகளோடு கீழே வர,
“இப்போ எதுக்குடா பெங்களூர்..?” என்றார் மீனாட்சி.
“வந்து சொல்றேன் ம்மா… டேட் கிட்டயும் சொல்லிடுங்க” என்று நின்றுகூட சொல்லாமல் பைக்கை நோக்கி விரைந்தபடியே அவன் சொல்ல,
“டேய் சாப்டுட்டாவது போகலாம் இல்ல” என்றார் மீனாட்சி.
“பசிக்கல ம்மா..” என்று சுரமே இல்லாமல் சொன்னவன், அடுத்த கணமே பைக்-கை ஸ்டார்ட் செய்து விமானநிலையம் நோக்கி கிளம்பியும் இருந்தான்.




