Back to All Novels
நாவல்கள்வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
0

அத்தியாயம் - 15

April 24, 2026
சந்தோஷ் குணா
0
10 min read
அத்தியாயம் - 15
ஹீரோ - பிஸ்னஸ்மேன், ஹீரோயின் - கைம்பெண்

சொல்லியிருந்தது போலவே அடுத்த நாள் இரவு அவளுக்கு முன் வந்து காத்திருந்து தன் பைக்கிலேயே அவளை அழைத்து சென்றான் மீராநந்தன்.

 

அன்று போல் ஹெல்மெட் எதுவும் அணியாமல் மிதமான வேகத்தில் பைக்கில் செல்வது கூட அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

ஒரு லாங் டிரைவிற்கு பின்னே அவளை லைட் ஹவுசிற்கு அழைத்து சென்றான்.

 

ஆரம்பத்தில் இது என்ன இடம் என்று தெரியாமல் அவன் பின்னாலேயே சென்றவளுக்கு அவ்வளவு உயரத்திலிருந்து கீழே பார்க்கவே பயம் தான்.

 

அந்த பயத்தின் வெளிப்பாடாய் “எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றவள் அவனுக்கு பின்னாலேயே நின்று கொண்டாள்.

 

பின் அவன் தான் வலுக்கட்டாயமாக அவள் கரம் பற்றி இழுத்து முன்னிருத்த, அவளோ இப்போது கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் நான் பார்க்கமாட்டேன் என்பது போல்.

 

“ஏங்க… நான் உங்க கூடதாங்க இருக்கேங்க.. கண்-அ தொறங்க..” என்றவனின் வார்த்தை அவளுக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அதுவரையும் மூடியிருந்த விழிகளை திறந்து அவனை பார்த்தாள்.

 

“எஸ்.. ஐ அம் வித் யூ-ங்க மீரா.” என்று அழகாய் சிரித்து கொண்டே அவன் சொன்ன வார்த்தைகள், இரணப்பட்டிருந்த அவள் மனதிற்கு மிகப்பெரிய ஆறுதலைதான் கொடுத்திருந்தது.

 

இத்தனை வருட காலங்களில் எத்தனையோ முறை அவள் உடைந்திருக்கிறாள் தான்.

 

அப்போதெல்லாம் பெயருக்கென்று கூட யாரும் நான் உன்னுடன் இருக்கிறேன் என்று சொல்லி அவளை தேற்றியது கிடையாது.

 

ஆனால் இன்று யாரென்றே தெரியா ஒருவன், ஒவ்வொரு சந்திப்பிலும் ‘நான் உன்னுடன் இருக்கிறேன்’ என்று தன்னை தைரியப்படுத்துவதை அவளும் கவனித்துதான் வருகிறாள்.

 

பிடித்திருந்தது அவனின் இந்த வார்த்தை அவளுக்கு பிடித்திருந்தது.

 

சொல்லபோனால் அந்த வார்த்தை கொடுத்த தைரியம் தானே அவளை இங்குவரை அழைத்தும் வந்திருந்தது.

 

அவனுக்காகவும், அவன் சொன்ன வார்த்தைகாகவும் தன்னை தைரியப்படுத்திகொண்டு கீழே பார்த்தாள்.

 

கீழே பார்த்தவளின் முகத்தில் சற்றுமுன் வரை முகாமிட்டிருந்த பயம்மெல்லாம் இப்போது எங்கு சென்றது என்றே தெரியவில்லை.

 

அவள் முகம் முழுமையும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்தான் நிறைந்திருந்தது.

 

பரந்துவிரிந்திருந்த கடல், ஆள் அரவமற்ற சாலைகள், கண்கெட்டிய தூரம் வரை தெரிந்த அடுக்கு மாடி குடியிருப்புகள் என்று அத்தனையும் உயரத்திலிருந்து பார்க்க பார்க்க பிரம்மிப்பாகவும் அழகாகவும் இருந்தது.

 

இப்படிபட்ட இடத்திற்கெல்லாம் இதற்கு முன்னால் அவள் வந்ததே கிடையாது. ஏன் இப்படியொரு இடம் சென்னையில் இருக்கிறது என்பது கூட அவளுக்கு தெரியாது.

 

அவ்வளவு உயரத்தில் இருந்து பார்க்க அந்த இரவு நேரத்திலும் சாலையோரத்தில் எரிந்துகொண்டிருந்த மின்விளக்குகளால் சென்னை வெகு அழகாகவே இருந்தது.

 

விழிகள் நிறைய ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்தவளையே பார்த்திருந்தவன் இப்போது “மீரா-க்கு புடிச்சியிருக்கா..?” என்க,

 

“ரொம்ப..” என்றவள் சொன்னது தான் தாமதம்,

 

தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக அவன் விசில் அடிக்க,

 

விசில் சத்தத்தால் அவனை திரும்பி பார்த்தவள், “எப்படி விசில் அடிச்ச..?” என்றாள் விழிகளில் ஒருவித ஆர்வத்துடன்.

 

இப்படித்தான் என்பது போல் நாக்கை மடித்து நாக்கிற்கு கீழ் கட்டைவிரலையும், ஆள்காட்டிவிரலையும் ஒன்று சேர்த்து வைத்து அவன் விசில் அடித்துகாட்ட, அவளும் அவன் சொன்னதுபோல் செய்துபார்த்தாள்.

 

ஆனால் விசில் சத்தத்திற்கு பதிலாக அவள் வாயிலிருந்து காற்று மட்டுமே வர, இருவருமே சிரித்துவிட்டனர்.

 

“பிராக்டிஸ் பண்ணா வரும்ங்க” என்றவன் சொல்ல, அவளும் இரண்டு மூன்று தரம் முயன்று பார்த்தாள். ஆனால் அவள் என்ன முயன்றும் அவ: வாயிலிருந்து காற்று மட்டுமே வர, அதுவே இருவரையும் மேற்கொண்டு சிரிக்க வைத்தது.

 

அதன் பின் இருவரும் பொதுவாக நிறைய விஷயங்களை பற்றி பேசினர். சிரித்தனர்.. பேசியபடி கொஞ்சதூரம் நடந்தனர்.

 

பின் அவளை மெட்ரோ ரெயிலில் அழைத்து சென்றான்..

 

இன்று அவளுக்கு அவன் காட்டிய விஷயங்கள் அத்தனையுமே அவளுக்கு புதுமையாகவும் பிடித்தமாகவும் இருந்தது.

 

மெட்ரோவில் இருந்த படியே சென்னையின் முக்கிய இடங்களை அவன் காட்ட, அவளும் ஆர்வத்தோடு பார்த்தாள்.

 

அங்கும் அவளிடம் நிறைய பேசினான் அவளையும் பேச வைத்தான். சிரிக்க வைத்தான்.

 

எந்த இடத்திலும் அவள் மனம் சங்கடபடும் படி பேசிவிடக்கூடாது என்பதில் மீராநந்தனும் கவனமாகவே இருந்தான்.

 

தன்னை பற்றியும் அவளிடம் பேசவில்லை. அவள் குறித்தும் அவளிடம் அவன் கேள்வியெழுப்பவில்லை. அப்போதைக்கு நடக்கும் விஷயங்களை பற்றியும் பார்க்கும் இடங்களை பற்றியுமே அவளிடம் பேச, அவளும் அவனிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள்.

 

அப்படி அவனிடம் அவள் பேசிகொண்டிருக்கும் போதுதான், அவர்கள் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரெயில் அந்த சும்மிங்கபூல், டீக்கடை இருந்த பகுதியை கிராஸ் செய்ய, அவளையும் மீறிகொண்டு அவள் விழிகள் ஒருவித ஏக்கத்தோடு அந்த இடத்தை பார்த்தது.

 

அவள் பார்ப்பதை கவனித்தவனின் இதழ்களில் இளநகை விரிய, அதை அவளுக்கு காட்டாமல் மறைத்துகொண்டான் மீராநந்தன்.

 

அதன் பின் வந்த இரவுகளிலும் அவர்களின் சந்திப்பு தொடர்ந்து கொண்டேதான் இருந்தது.

 

அவனோடு பேசவும், அவனோடு பழகவும் அவளுக்கு பிடித்திருந்தது. அவனோடு இருக்கும் போது மட்டும் அவளின் வலிகள் நிறைந்த கடந்தகாலங்கள் எதுவுமே அவளுக்கு நினைவிற்கு வருவதில்லை.

 

அவனோடு இருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தாள்.. தனக்கு பிடித்ததை செய்தாள்… சுதந்திரமாக செயல் பட்டாள்.

 

முக்கியமாக அவள் அவளாக இருந்தாள்.

 

அதேசமயம் தங்கள் இருவருக்கும் இடையேயான உறவு முறைக்கு அவள் எந்த பெயர் சூட்ட விரும்பவில்லை.

 

எல்லா உறவுமுறைகளுக்கும் பெயர் வைத்துதான் ஆகவேண்டுமென்று அவசியம் இல்லையே.. சில உறவுகளுக்கு பெயர் வைக்காமல் இருப்பதே அழகுதான்.

 

அவர்கள் இருவருக்கும் இடையேயான உறவும் அப்படித்தான் கள்ளம் கபடமில்லாமல் அழகாய் இருந்தது.

 

விருப்பப்படி மழையில் நனைந்தாள்.. மழையை இரசித்தப்படி டீ குடித்தாள். காரசாரமாக பிரியாணி உண்டாள். பைக் ரைட், பேருந்தில் பயணம் கடல் அலைகளோடு விளையாட்டு என்று சிறுபிள்ளையாகவே மாறிபோனாள்  பிரதிக்ஷா.

 

சிறுவயதுமுதல் எதற்கெல்லாம் அவள் ஏங்கி ஏங்கி தவித்தாளோ அதையெல்லாம் திகட்ட திகட்ட அனுபவித்தாள்.

 

சத்யன் இறப்பிற்கு பின் மாதம் மாதம் வரும் அவன் இறந்த திதி-யில் கோவிலுக்கு சென்று விளக்கு போடவேண்டும் என்று சத்யனின் குடும்ப ஜோசியர் சொல்லியிருக்க, அவளும் அன்று காலையிலேயே கோவிலுக்குதான் கிளம்பிகொண்டிருந்தாள்.

 

எப்போது அவள் கோவில் சென்றாலும் சுபத்ராவும் அவள் உடன் செல்வது வழமை.

 

ஆனால் இம்முறை லேடிஸ்கிளப்பில் முக்கிய மீட்டிங் இருப்பதால் அனன்யாவை ஸ்கூலில் டிராப் செய்துவிட்டு நேராக லேடிஸ்கிளப்பிற்கு சென்றுவிட்டாள்.

 

அதனால் எப்போதும் போல் காட்ஸ் மற்றும் வள்ளியம்மையோடுதான் கோவிலுக்கு கிளம்பினாள்.

 

வள்ளியம்மை வீட்டுக்கு விலக்கு என்பதால் அவளும் உடன் வந்த காட்ஸ்-ம் கோவிலுக்கு வெளியிலேயே இருந்துவிட, பிரதிக்ஷா மட்டும் தான் கோவிலுக்குள் சென்றாள்.

 

எப்போதும் போல் குறித்த நேரத்திற்குள் விளக்கேற்றி விட்டு, சாமி கும்பிட்டவள், பக்தர்கள் அமர ஏதுவாக வடிவகைப்பட்டிருந்த புல் தரையில் சென்று அமர்ந்தாள்.

 

அது பழைய காலத்தில் கட்டப்பட்ட கோவில் என்பதால் கோவிலை சுற்றிலும் பலவகையான பூத்துக்குலுங்கும் மலர்செடிகள், தெய்வீக தன்மை வாய்ந்த மரங்கள் என்று ஒரு நந்தவனம் போல் இருக்க, அவள் எப்போது இங்கு வந்தாலும் சரி குறைந்தது ஒரு மணிநேரமாவது இங்கு அமர்ந்துவிட்டுதான் செல்வாள்.

 

அப்படி அமர்ந்துவிட்டு செல்வதில் அவளுக்கு ஒரு மன நிம்மதி.

 

இது பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் கூட்டம் எப்போதும் சுமாராகவே இருக்கும்.

 

இன்று கூட கூட்டம் கொஞ்சம் வழக்கத்தை விட அதிகமாகத்தான் இருந்தது வெள்ளிகிழமை என்பதால்.

 

ஒரு சிலர் ஆங்காங்கே அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்க, குழுவாக வந்திருந்த கல்லூரி மாணவர்களோ போட்டோ எடுப்பது, ரீல்ஸ் எடுப்பது, ஒருவரையொருவர் கலாய்ப்பது என்று கலகலப்பாக இருந்தனர்.

 

வெளியூரிலிருந்து இந்த கோவிலுக்கு வந்திருந்த சில குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு கொண்டிருக்க, அவர்களோடு வந்திருந்த சிறுவர் சிறுமியர்களோ ஒன்று சேர்ந்து ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.

 

தன்னை சுற்றியிருப்பவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்தவளும் இப்போது கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

 

அங்கு ஒளித்துகொண்டிருந்த “ஓம்” என்ற நாதமும், பூத்துகுலுங்கி கொண்டிருந்த மலர்களின் வாசனையும், அம்மரங்களிலிருந்து வீசும் காற்றும் உடம்பிற்கு மட்டுமல்ல மனதிற்குள்ளும் ஒருவித புத்துணர்ச்சியை ஏற்படுத்த எவ்வளவு நேரம் கண்களை மூடியிருந்தாளோ அது அவளுக்கே தெரியாது.

 

“ௐ நமசிவாய” என்று மனதிற்குள் சொல்லியபடியே மெல்ல இமைகளை திறந்தவளின் விழிகள் அதிர்ச்சியில் ஒரு சுற்று விரிந்துதான் போயின

 

“ஹாய் மீரா…” என்று கையசைத்தப்படி அவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த மீராநந்தனை பார்த்து.

 

அந்த அதிர்ச்சியோடே ”ஹே.. நீ எப்படி இங்க..?” என்று விழிகள் விரித்து ஆச்சரியத்தோடு கேட்டவளால் இப்போது வரையுமே தன் கண்களை நம்ப முடியவில்லை.

 

“உங்கள பார்க்கணும்னு தோணுச்சி.. வந்துட்டேன்..” என்றவனின் வார்த்தைகளால் மேலும் அதிர்ச்சியானவள்,

 

“ஐய்யோ காட்ஸ்.. வள்ளியம்மை-ன்னு யாராவது பார்த்துட போறாங்க.” என்று கைகளை உதறியபடியே சொன்னவள்,

 

எங்கே யாராவது வந்து விடுவார்களோ என்ற பயத்தில் அங்கும் இங்கும் பார்த்தபடியே “முதல்ல இங்க இருந்து கிளம்பு.” என்றாள் அவள்.

 

ஆனால் அவனோ ரிலாக்சாக, “அடிக்கிற வெய்யில்ல குடுகுடுப்புகாரன் மாதிரி கருப்பு கலர் சஃபாரி போட்டுட்டு நிக்கறானுங்களே அந்த நாலுபேர்-அ..?” என்றவனின் நக்கல் கேள்வியால் அவளுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

 

இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஓரப்பார்வையால் அவனை அவள் முறைத்து பார்க்க

 

“ஏங்க உங்க அண்ணன் கிட்ட சொல்லுங்க.. கால நிலைக்கு ஏத்த மாதிரி யூனிஃபார்ம் கொடுக்க சொல்லி..” என்றவனை முறைத்தவாறே

 

“அதென்ன கால நிலைக்கு ஏத்த மாதிரி..?” என்றாள்.

 

“அதாங்க… இந்த வெயில் காலத்துல கதர் டிரஸ்.. பனி காலத்துல ஜர்கின்.. அப்புறம் மழை காலத்துல ரெயிங்கோர்ட்-னு” என்றவன் சிரிப்பை விழுங்கிகொண்டே சொல்ல, அவன் கூறியதை கேட்டு பிரதிக்ஷாவோ வெடித்து சிரித்துவிட்டாள்.

 

அவள் சிரிப்பதையே சில கணங்கள் பார்த்திருந்தவன், “இப்படி சிரிச்சிகிட்டே இருங்க மீரா. சிரிக்கும் போது நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்று அவள் புன்னகையை இரசித்தபடியே அவன் சொல்ல,

 

அவனின் வார்த்தைகளால் அவள்தான் கொஞ்சம் தடுமாறிப்போனாள்.

 

சட்டென்று சிரிப்பதை நிறுத்திகொண்டவளுக்கு அடுத்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

 

அவன் பார்வை அவள் மீதே இருக்க, அவளால் தான் அவனை பார்க்க முடியவில்லை.

 

இருந்தும் கஷடப்பட்டு அவனை பார்த்து, “என்ன..” என்றவள் சொல்லவந்ததை முடிக்கவில்லை,

 

அதற்குள், “சத்தியமா பிக்-அப் லைன்ஸ் இல்லங்க..” என்று அவளை கணித்தவன் போல் தன் தலைமீது கை வைத்து சத்தியம் செய்து அவன் சொல்ல, அவனின் செயலால் மீண்டும் அவள் சிரித்துவிட்டாள்.

 

சில கணங்கள் அங்கே சிரிப்பலை வீச, பின் பிரதிக்ஷாதான் “நான் இங்க இருக்கன்னு உனக்கு எப்படி தெரியும்..?” என்றாள் எப்போதும் போலவே.

 

அவனும் எப்போதும் போலவே யுனிவர்ஸ் என்று சொல்ல,

 

“இதெல்லாம் நம்பற மாதிரியே இல்ல..” என்று ஏக்க பெருமூச்சோடு சொன்னவள்,

 

பின் என்ன நினைத்தாளோ, “ஆமா… இப்படி வேலை வெட்டிக்கு போகாம என் பின்னாடியே சுத்துறீயே.. சாப்பாட்டுக்கு என்ன பண்ற..?” என்றாள் வேண்டுமென்றே அவனை சீண்டும் விதமாக.

 

“சாப்பாட்டுக்கா…” என்று இழுத்தவன், “ரொம்ப கஷ்டபடுறேன் தாங்க… கை-ல காசு இல்லாம காலையில கூட பிரட், ஜாம் தாங்க சாப்ட்டேன்.” என்றான் அவனும் வேண்டுமென்றே வருத்தம் தொணித்த குரலில்.

 

அவன் சொல்லும் விதத்திலேயே அது பொய்யென்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது.

 

இருந்தும் “அப்போ என்ன படிச்சியிருக்கன்னு சொல்லு.. நான் வேணும்னா என் அண்ணா ஆஃபீஸ்-ல எதாவது வேலை கிடைக்குமான்னு பார்க்கறேன்.” என்றாள் இதற்கும் அவன் என்ன பதில் சொல்வான் என்று.

 

“அம்மா.. அப்பா எல்லாத்தையும் வித்துதாங்க எம்.பி.ஏ படிக்க ஃபாரின்-க்கு அனுப்பனாங்க. ஆனா எனக்குதான் மண்டையில ஒன்னும் ஏற” என்று தலையை சொறிந்துகொண்டே சொன்னவன்,

 

“ஆனா.. எப்படியோ ஜஸ்ட் பாஸ்-ஆகி கோல்ட் மெடலோட வெளியில வந்துட்டேன்.” என்று பாவமாக முகத்தை வைத்துகொண்டு சொன்னவனை, ‘என்னது கோல்ட் மெடலா..?’ என்பதுபோல் விழிகள் விரித்து ஆச்சரியமாக அவனை பார்த்தாள் பிரதிக்ஷா.

 

ஆனால் அவனோ அவளின் ஆச்சரியத்தையெல்லாம் சிறிதும் சட்டை செய்யாமல், “ஏங்க இந்த குவாலிஃபிகேஷன்-க்கு உங்க அண்ணன் ஆபீஸ்-ல எதாவது வேலை கிடைக்குமா..?” என்றான் மீண்டும் வேண்டுமென்றே பாவமாக முகத்தை வைத்து கொண்டு.

 

“அச்சோ… இவ்வளோதான் உங்க குவாலிஃபிகேஷன்-ஆ..? இந்த குவாலிஃபிகேஷன்க்கு எங்க அண்ணன் ஆபீஸ்-ல வாட்ச்மேன் வேலை கூட கிடைக்காதே..” என்று அவனுக்கு ஒரு படி மேல் சென்று அவள் கையை விரிக்க,

 

மீராநந்தனோ வெடித்து சிரித்துவிட்டான். அத்தோடு நான் தோற்றுவிட்டேன் என்பது போல் தலைக்கு மேல் அவன் கும்பிட்டு காட்ட அவளும் அவன் சிரிப்பில் இணைந்துகொண்டாள்.

 

இப்படியே இருவரும் பேசி சிரித்துகொண்டிருக்கும் போதுதான், “ஐய்யோ..” என்றவாறே அவன் தலையை திருப்பி கொண்டதோடு, ஒற்றை கையால் முகத்தையும் மூடிக்கொள்ள, அவளுக்கோ அவன் செயல் புரியவில்லை.

 

“என்னாச்சி..?” என்றவளின் கேள்விக்கு அவன் சைகையாலே வெயிட் என்று சொல்ல, அவளும் அமைதியானாள்.

 

சில கணங்கள் கழித்தே முகத்திலிருந்த கையை எடுத்தவன், “அவங்க என் அம்மாவோட ஃப்ரண்ட்..” என்றான் அவர்களை கடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணியை சுட்டிகாட்டி.

 

“அப்போ பேச வேண்டியதுதானே..” என்றவளின் பார்வை சென்றுகொண்டிருந்த அந்த பெண்மணி மீதே இருக்க,

 

“ஏங்க… நாலா மழைக்கு கூட கோவில் பக்கம் ஒதுங்கனது இல்லங்க..” என்று விரித்து சொன்னவன்,

 

“அப்படிப்பட்ட என்ன கோவில்குள்ள பார்த்தாங்க என்ன நினைப்பாங்க..? அதுவும் ஒரு அழகான பொண்ணுகூட பார்த்தா…” என்றவனை அவள் இப்போது ஓரப்பார்வையால் முறைத்து பார்க்க,

 

“ஏங்க நிஜமாதாங்க…” என்று சீரியசாக முகத்தைவைத்து கொண்டு சொன்னவன்,

 

“இந்த கோவில்-ல ஏதோ இராகு காலத்துல ஒன்பது வெள்ளிகிழமை தொடர்ந்து விளக்கு போட்டா சீக்கரம் கல்யாணம் ஆகணும்-னு இந்த ஆண்டியும் என் அம்மாவும் என்ன டார்ச்சர் பண்ணி எடுத்துட்டாங்க.” என்றவனின் பார்வை இப்போதும் அந்த பெண்மணி மீதே இருக்க,

 

“அம்மா ஆசைப்படுற மாதிரி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே..” என்றாள் அவள்.

 

“ப்ச்” என்று சலித்து கொண்டவன், “நாட் இன்ட்ரஸ்ட்-ங்க” என்றான்.

 

“ஏன்… யாரையாவது லவ் பண்றீயா..?” என்று சட்டென்று அவள் வாய் கேட்டுவிட,  பிரதிக்ஷாவிற்கோ ஏண்டா அப்படி கேட்டோம் என்றாகி விட்டது.

 

அவளின் கேள்வியால் அவன் பார்வையும் இப்போது அவள் புறம் திரும்பி இருக்க, அவளுக்குதான் அவனை பார்க்கவே சங்கடமாக இருந்தது.

 

சங்கடமாக இருந்ததாலும் அவன் பதில் என்னவாக என்ற எதிர்பார்ப்பு அவளுக்குள்ளும் இருக்கத்தான் செய்தது.

 

திருமணம் குறித்த கேள்விக்கு சட்டென்று பதில் சொன்னவன், காதல் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல் இருப்பதே அவளின் இதயத்துடிப்பை காரணமே இல்லாமல் அதிகரிக்க செய்திருந்தது.

 

அத்தோடு என்ன பதில் சொல்வானோ என்ற பயமும் பதற்றமும் வேறு.

 

அது ஏன் என்றுதான் அவளுக்கு தெரியவில்லை.

 

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் விழிகள் தடுமாற, அதை மீராநந்தனும் கவனிக்கவே செய்தான். கவனித்தவனின் இதழ்களில் இப்போது குறுநகையும் மின்ன,

 

என்ன நினைத்தானோ, “ப்ச்… லவ்-லா பண்ணலங்க” என்றான் அவளை ஆழ பார்த்தவாறே.

 

அவன் பதிலால் அதுவரையும் அவளுக்குள் இருந்த பயமும், பதற்றமும் குறைந்ததோடு, இப்போது அவளுக்குள் இனம்புரியாத சந்தோஷம் வேறு. அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடாய் அவள் இதழ்களில் மெல்ல புன்னகை அரும்ப, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அதுவரையும் அவள் முக மாற்றங்களையே கவனித்திருந்தவன், சட்டென்று பார்வையை மாற்றியிருந்தான் நான் உன்னை பார்க்கவில்லை என்பது போல்.

 

நல்லவேளை அவன் தன்னை பார்க்கவில்லை என்று நிம்மதிபெருமூச்சிவிட்டவள் அறியவில்லை, அவளின் சின்ன சின்ன முகமாற்றங்களையும், அசைவையும் கூட அவன் கண்காணித்து கொண்டுதான் இருக்கிறான் என்று.

 

“ஏன் லவ் பண்ணல…? உனக்கு நிறைய புரோபோசல் வந்திருக்குமே..” என்றாள் வேண்டுமென்றே.

 

“ஆ.. நிறைய புரோபசல் வந்துச்சிங்க..” என்று அவளை பார்த்து சொன்னவன், “அழகா இருந்தாலே இதாங்க பிரச்சனை.” என்று இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டு அவன் சொல்ல,

 

“ஹலோ… நீ ஒன்னும் ரொம்ப அழகு-லாம் இல்ல.. பார்க்க சுமாராதான் இருக்க..” என்று என்னதான் பதிலுக்கு அவனை அவள் வாரினாலும்,  அவன் அழகன் இல்லை என்று சொன்னதை நினைத்து உள்ளுக்குள் அவள் மனம் வருத்தப்படவே செய்தது.

 

முதன் முறையாக பேனரில் அவன் முகம் பார்த்தபோது, அவனில் இருந்து கண்களை எடுக்க முடியாமல் அவள் பட்ட கஷ்டங்கள் அந்நேரத்திலும் அவள் நினைவிற்கு வந்து போக தவறவில்லை.

 

அவன் நிச்சயம் அழகன்தான். அதை அவளும் மறுக்கவில்லை.

 

அதிலும் இன்று ஜீன் மற்றும் ஆர்ம்கட் டீ-ஷர்ட் என்ற சாதாரண உடையில் கூட அவன் ஹேண்ட்சம்-ஆகத்தான் இருந்தான்.

 

ஏன் அவர்களுக்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த கல்லூரி மாணவிகள் கூட அவன் இங்கு வந்தது முதல் அவ்வப்போது அவனை பார்ப்பதை அவளும் கவனித்திருந்தாள் தான். அன்று பேருந்தில் கூட.

 

அப்படிப்பட்டவனை சுமார் என்று சொன்னது அவள் மனதை உறுத்தியதோ என்னவோ,

 

“ஆனா.. சுமாரான பசங்களதான் பொண்ணுங்களுக்கும் ரொம்ப பிடிக்குது.” என்றாள்.

 

அவளின் வார்த்தைகளை கேட்டு வெண்பற்கள் தெரிய சத்தமில்லாமல் அவன் சிரிக்க, அவன் சிரிப்பை அவளால் இரசிக்க முடியாமல் இல்லை.

 

“அப்போ.. இந்த சுமாரான பையன்-அ மீராக்கும் புடிக்கும்.. அப்படித்தானே..?” என்று கேட்டு அவளை அவன் வசமாக பிடிக்க, அவனின் வார்த்தைகளால் அவளுக்குதான் இதயக்கூடு சில்லிட்டுவிட, ஏன் அப்படி சொன்னோம் என்றாகி விட்டது அவளுக்கு.

 

அத்தோடு அவன் கேள்விக்கு அவளால் பதில் சொல்லவும் முடியவில்லை.

 

பந்தயகுதிரைப்போல் அவள் இதயம் வேறு அதி வேகத்தில் துடித்தது.

 

இனி இங்கிருப்பது சரியன்று என்று நினைத்தவள், “டைம் ஆகுது.. நான் கிளம்பறேன்..” என்றவாறே எழ,

 

“நைட் பார்க்கலாம்-ங்க” என்றான் அவனும் எழுந்தவாறே.

 

அவன் நைட் என்று சொன்னபின் தான் அவளுக்கும் ஒன்று நினைவிற்கு வர சட்டென்று அவன் புறம் திரும்பியவள்,

 

“ஹே… இன்னைக்கு நைட் நான் வரமாட்டேன்..” என்றாள்.

 

ஏன் என்பது போல் அவளை விழிகள் விரித்து பார்த்தவன், “ஏங்க..?” என்றபோது.

 

“நாளைக்கு கசின் ஒருத்தவங்களோட மேரேஜ் இருக்கு. ஸோ இன்னைக்கு ஈவ்னிங்கே நான் கிளம்பணும்” என்றவள் சொன்னதுதான் தாமதம்,

 

“மேரேஜ் எங்க..?” என்றான் அவன்.

 

“மேரேஜ்..” என்று ஆரம்பித்தவள் பின் என்ன நினைத்தாளோ, “ஹே… நான் எங்க இருந்தாலும் உனக்குதான் யுனிவர்ஸ் சொல்லுமே. அப்புறம் ஏன் என் கிட்ட கேட்குற..?” என்றாள் அவள் மார்பின் குறுக்கே கைகளை கட்டியப்படி.

 

“ஆ… சொல்லும் தாங்க” என்றவாறே முன்னுச்சியை கோதிவிட்டவன்,

 

“ஆனா மீரா-க்குதான் என்மேல நம்பிக்கையில்லையே” என்று சற்றுமுன் அவள் சொன்ன வார்த்தைகளையே அவன் திருப்பி சொல்ல, அவள் இதழ்களிலோ இப்போது குறுநகை மின்னியது.

 

சில கணகங்கள் இருவரிடமுமே அமைதி நிலவ,

 

பின் என்ன நினைத்தாளோ “நாளைக்கு நீ என் முன்னாடி வந்து நில்லு… அப்போ… நான் நம்பறேன்..” என்று சிரித்துகொண்டே அவள் சொல்ல,

 

“நிஜமா..?” என்றான் அவனும் சிரித்துக்கொண்டே.

 

நிஜம் தான் என்பது போல் சிரித்துகொண்டே தலையை மேலும் கீழுமாய் அசைத்தவள், விழிகளாலேயே அவனிடம் விடைபெற்றுவிட்டு செல்ல, அவனும் அழகாய் சிரித்துகொண்டே விழிகளாலேயே அவளுக்கு விடை கொடுத்தான் அந்த சந்திப்புதான் அவர்களின் இறுதி சந்திப்பு என்று அறியாமல்.

10 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

28 novels published100% original contentRegular updates

More வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!! Stories

Discover similar captivating stories

View All in வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
அத்தியாயம் - 28
Blog
நாவல்…வேங்க…
Sep 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 28

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!
(5.0)(1)

சத்யன் பற்றிய உண்மையையும், ஹரிஹரனின் சூழ்ச்சியையும் இப்போதே இந்த நிமிடமே அவளிடம் சொல்லிவி...

Read more →
அத்தியாயம் - 27
Blog
நாவல்…வேங்க…
Aug 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 27

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

பயத்தில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தவளை பார்த்து,

 ...

Read more →
அத்தியாயம் - 26
Blog
நாவல்…வேங்க…
Aug 11, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 26

Blog
வேங்குழலால் வர்ணம் தீட்டவா..!!!

நான்சியை பற்றிய உண்மையையும் அவனால் சொல்ல முடியவில்லை, பிரதிக்ஷா குறித்து மீராநந்தன் சொன்ன...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels