“ம்.. அப்புறம் என்ன..? தாத்தா-க்கு அட்டாக் வந்து இறந்துட்டாரு. வேற ஊர் வேற ஸ்கூல்-னு வாழ்க்கையே வேற மாதிரி ஆகிடுச்சி” என்று ஏக்க பெருமூச்சோடே சொன்னவள் தனக்கு நேர்ந்த அவலத்தை பற்றியெல்லாம் அவனிடம் வாய்திறக்கவில்லை.
சொல்லபோனால் சொல்லவேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை.
அதை சொல்லி இந்த சந்தோஷமான தருணத்தை கெடுத்துகொள்ள அவள் விரும்பவில்லை.
“பட் யூ ஸ்டில் ரிமம்பர் ஹிம்..?” என்றவனின் கேள்விக்கு,
“ம்..” என்றவாறே மேலும் கீழுமாய் தலையை அசைத்தவள்,
“ஸ்கூல் பசங்க, டீ ஷாப், பஸ், சும்மிங்பூல்-ன்னு பார்க்கற ஏதாவது ஒன்னு அவன்-அ நியாபபடுத்திவிட்டுடும். பட் அந்த டைம் என்ன மனநிலையில இருந்தாலும் மனசு அப்படியே ரிலாக்ஸ் ஆகிடும்” என்றாள் மெலிதாய் சிரித்துகொண்டே.
“ஸோ… இப்பவரைக்கும் மனசுல சுமந்துகிட்டு இருக்கற காதல்-அ அவன்-அ பார்த்து அவன் கிட்ட சொல்லணும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கீங்க..? ஆம் ஐ ரைட்..” என்றவனின் கேள்விக்கு,
“ச்சீ..” என்றவாறே மறுப்பாய் தலையை அசைத்தவள்,
“எதோ அந்த வயசுல அது லவ்-ஆ தோணுச்சி.” என்றவள் முடிக்கும் முன்பே,
“ஏன் இப்போ தோணலையா..?” என்றான் அவன் சட்டென்று.
அவனின் கேள்வி அவளையும் சில கணங்கள் அமைதிகொள்ளவே செய்தது.
ஒருவேளை அவள் வாழ்க்கையில் சத்யன் மட்டும் வரவில்லையென்றால் இப்போதும் அவன் மீது தனக்கு இருப்பது காதல்தான் என்று அருதியிட்டு சொல்லிவிடுவாள்.
ஆனால் இப்போதுதான் அவள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிட்டதே.
அவனின் கேள்விக்கு அப்படி தோணவில்லை என்பதுபோல் கஷ்டப்பட்டு தலையை இடவலமாக அசைத்தவளின் முகத்தில் சற்றுமுன் இருந்த சந்தோஷம் காணாமல் போய் இருந்தது.
அத்தோடு அவள் மனமும் பாரமாகி போயிருந்தது.
மேற்கொண்டு இது குறித்து பேசவும் அவள் விரும்பவில்லை.
அதனாலே “ஹீ ஈஸ் ஜஸ்ட் கிரஷ் அவ்வளோதான்.” என்று கஷ்டப்பட்டு புன்னகைத்து சொன்னவளுக்கு உள்ளுக்குள் வலித்தது அப்படி சொன்னதை நினைத்து.
“ஜஸ்ட் கிரஷ்-அ ஏன் பார்க்கணும்..?” என்று அவனும் விடாமல் கேள்வியெழுப்ப,
“ஏன்னா…” என்று இழுத்தவள், “அவன் அப்பவே ரொம்ப துருதுரு-ன்னு இருப்பான். அதான் இப்போ எப்படி இருக்கான்னு பார்க்கணும்-னு ஆசை. அதுவும் தூரத்துலேந்துதான்.” என்று மீண்டும் கஷ்டப்பட்டு புன்னகைத்தபடி சொன்னவளையே, வைத்த கண் எடுக்காமல் அவன் பார்த்திருக்க, என்னவோ தெரியவில்லை முதன் முறையாக அவன் பார்வையை எதிர்கொள்ளமுடியாமல் அவள் விழிகள் தடுமாறியது.
அதனாலே, “நீ கேட்ட நான் சொன்னேன்.. அவ்வளோதான்.. உடனே நீ இத சீரியசா எடுத்துகிட்டு அவன்-அ கண்டுபிடிக்கலாம் டிரை பண்ணாத. ஏன்னா அந்த டீ-ஷாப், சும்மிங்பூல் எல்லாத்தையும் மேம்பாலம் கட்டும் போது எடுத்துட்டாங்க” என்று மெலிதாக சிரித்துகொண்டே சொன்னவள்,
அவன் பதிலுக்கு கூட காத்திராமல், “ரொம்ப குளிருது. வா போகலாம்..” என்றவாறே எழுந்தும் இருந்தாள்.
எழுந்தவளை, “மீரா..” என்றவன் அழைக்க, அவனை பார்க்காமலே “என்ன..?” என்றாள் தன் ஆடையில் ஒட்டியிருந்த மண்துகள்களை தட்டிவிட்டவாறே.
“அந்த பையன்..” என்று ஆரம்பித்தவனை அவள் இப்போது புருவம் சுருக்கி பார்க்க,
சொல்லவந்ததை விடுத்து “இன்கேஸ் அந்த பையன் உங்கள தேடி வந்தா..?” என்றவனின் கேள்வியால் அவளோ வெடித்து சிரித்துவிட்டாள்.
“உன்னால மட்டும் எப்படி இப்படிலா யோசிக்க முடியுது..?” என்று சிரித்துகொண்டே அவனை பார்த்து கேட்டவள்,
“அவனுக்கு நான் யாரு..? என் பேரு.. என்னன்னு கூட தெரியாது.. ஏன் அந்த புரோபசல் லட்டர்-ல என்னோட ஆர்ட் சிக்னேச்சர் தவிர, என்ன பத்தி வேற எதுவுமே நான் எழுதல. அப்புறம் எப்படி என்ன தேடி வருவான்னு சொல்ற..?” என்று புருவ மத்தியை உயர்த்தி கேட்டவள்,
“எனக்கென்னவோ அந்த லெட்டர் அவன் கையில கிடைச்சிதா-ன்றதே பெரிய டவுட் தான்” என்றவள் இப்போது முன்னோக்கி நடக்கவும் ஆரம்பித்திருந்தாள்.
அவள் செல்வதையே சில கணங்கள் பார்த்திருந்தவன், பின் எழுந்து சென்று சட்டென்று அவள் கரத்தை பற்றியிருக்க, அதை அவள் சற்றும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை.
“என்ன இது..?” என்றவாறே அவன் பிடியிலிருந்து சட்டென்று கரத்தை விலக்கிகொண்டவள் அவனை விட்டு இரண்டெட்டு தள்ளி நிற்க,
பின் அவன் தான் இருகைகளையும் பக்கவாட்டில் உயர்த்தி “சாரிங்க..” என்றதோடு,
“எப்படியோ… அவன் உங்கள தேடி வந்துட்டா..?” என்று மீண்டும் அதே கேள்வியிலேயே அவன் நிற்க,
அவனின் கேள்வியால் தலையை இருபுறமும் அசைத்தவள், “ஐய்யோ சாமி.. தெரியாம உன் கிட்ட சொல்லிட்டேன்.” என்று தலைக்கு மேல் கும்பிட்டு சொன்னவள்,
“இதோட இந்த டாப்பிக்-அ விட்டுடு..” என்றதோடு எங்கே மீண்டும் தன் கரத்தை பற்றிவிடுவானோ என்ற எண்ணத்தில் இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டியபடி முன்னோக்கி நடந்தாள்.
ஆனால் அவனோ “மீரா..” என்றவாறே ஓடிச்சென்று அவள் வழியை மறித்து நிற்க, அவளுக்கோ அவன் செயல்கள் எல்லாம் புதிதாக இருந்தது.
“இன்கேஸ் தேடி வந்தா…?” என்று மீண்டும் அதே கேள்வியை அவளிடம் எழுப்ப, அவன் ஏன் இந்த விஷயத்தில் இத்தனை பிடிவாதமாக இருக்கிறான் என்றுதான் அவளுக்கு புரியவில்லை.
அத்தோடு அவனின் பிடிவாத குணம் பற்றி தெரிந்திருந்தும் அவனிடம் சொன்னது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது அவள் மூளைக்கு புரிந்தது.
இப்போது புரிந்து என்ன பயன்..? அதுதான் அவனிடம் வசமாக மாடிக்கொண்டு விட்டாளே.
“தேடி வந்தா.. ஒரு ஹாய்.. ஒரு கப் காஃபி அவ்வளோதான்” என்றாள் பதில் சொல்லிவிட்டால் நிச்சயம் இந்த டாப்பிக்கை விட்டுவிடுவான் என்ற நம்பிக்கையில்.
ஆனால் அவனோ “ஒரு கப் காஃப்பி-க்கு அப்புறம் நான் ஸ்டில் உங்களுக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன், உங்களதான் லவ் பண்றேன்னு.. அவன் ப்ரபோஸ் பண்ணா..?” என்றவனின் வார்த்தைகளை கேட்டு, அவள் மீண்டும் வெடித்து சிரித்துவிட, அவன் விழிகளோ சீரியசாக அவளையேதான் பார்த்துகொண்டிருந்தது.
“நீ என்ன பைத்தியமா..? யாரு என்னன்னே தெரியாத ஒருத்தவங்களுக்காக யாராவது காத்துகிட்டு இருப்பாங்களா..?” என்று அவனிடமே கேள்வியெழுப்பியவள்,
“இப்படில்லாம் ஃபிலிம்-ல கூட நடக்க வாய்ப்பில்ல.” என்று உதட்டை பிதுக்கியதோடு. “எனக்கு தெரிஞ்சி இந்நேரம் அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தைங்க இருக்க கூட வாய்ப்பு அதிகம்” என்றவள் முடிக்கவில்லை,
அதற்குள் “இன்கேஸ் அவன் கல்யாணம் பண்ணிக்கலனா..?” என்றவனின் கேள்வியால்,
புருவமத்தியை உயர்த்தி அவனை பார்த்தவள், “நல்ல பொண்ணா பார்த்து நானே என் தலைமையில அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.” என்றாள்.
“அவன் கல்யாணம் பண்ணா உங்களதான் பண்ணுவேன்னு சொன்னா..?” என்று அதற்கும் அவன் கேள்வியெழுப்ப,
பிரதிக்ஷாவின் முகம் இப்போது மாறித்தான் போனது.
அவ்வப்போது தன் சிறுவயது காதலை நினைத்து மட்டுமே பார்த்திருந்தவள், அவன் கேட்பது போலெல்லாம் ஒருபோதும் நினைத்து பார்த்தது இல்லை.
நினைப்பதற்கான தேவைகளும் அவளுக்கு ஏற்பட்டது கிடையாது.
அவளை பொறுத்தமட்டில் அந்த கடிதம் அவன் கைக்கு கிடைத்திருக்குமா என்பதே சந்தேகம் தான். அப்படியே கிடைத்திருந்தாலும் அவளை தேடிகொண்டு வரும் அளவிற்கெல்லாம் அதில் தன்னை பற்றி எதுவும் எழுதவில்லை என்ற ஆறுதலில்தான் அவள் இத்தனை நாட்கள் இருந்தது.
ஒருவேளை இவன் சொல்வது போல் அவன் தன்னை தேடிகொண்டு வந்து நின்றால்.. என்று யோசிக்கும் போதே அவளுக்குள் சொரேரென்றது.
முகத்திற்கு முன் அவன் போட்ட சொடுக்கு சத்தத்தால் சுயத்திற்கு திரும்பியவள், சட்டென்று முகபாவனையை மாற்றிகொண்டதோடு
“ஆமா.. யாருனே தெரியாத அவன் மேல உனக்கு ஏன் அவ்வளோ அக்கறை..?” என்றாள் இதற்கும் அவன் என்ன பதில் சொல்வான் என்ற ஆர்வத்தில்.
“சிம்புள் ஒரு பெண்ணோட மனசு எப்படி இன்னொரு பொண்ணுக்கு புரியுமோ.. அந்தமாதிரி ஒரு ஆணோட மனசுல என்ன இருக்கும்னு இன்னொரு ஆணுக்குதானே தெரியும்.” என்று சிரித்துகொண்டே அவளை சமாளித்தவன்,
“பதில் சொல்லுங்க… மீரா..?” என்றான் விழிகளில் ஒருவித ஆர்வத்தை நிரப்பி.
“பதிலா..?” என்று கேட்டு அவனையே சில கணங்கள் ஆழ பார்த்திருந்தவள்,
“நான் அத அவன் கிட்டயே சொல்லிக்கிறேன்.” என்று மேற்கொண்டு அவன் கேள்வியெழுப்பா வண்ணம் தீர்க்கமாக சொல்லிவிட்டு அவள் முன்னோக்கி செல்ல,
“மீரா…” என்று பற்களை கடித்தவாறே முன்னுச்சியை கோதிவிட்டவனுக்கு தெரியவில்லை அவள் மனதில் இருப்பதை எப்படி அறிந்துகொள்வதென்று.
இருகைகளையும் கோர்த்து தலைக்கு பின்னால் வைத்தபடி உச்சிவானுக்கு வந்திருந்த நிலவை பார்த்தப்படியே நின்றிருந்தவனுக்கு அவள் பதில் என்னவாக இருக்கும் என்ற சிந்தனைதான் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
அவன் நிலை அப்படி என்றால் அவளுக்குள்ளும் அதே சிந்தனைதான் ஓடிகொண்டிருந்தது.
அதனாலே.. அவன் உடன் வருகிறானா..? என்று கூட தெரியாமல் காரை நோக்கி சென்று கொண்டிருந்தது அவளின் கால்கள்.
அப்படி சென்று கொண்டிருந்தவளின் சிந்தையை கலைத்தது என்னவோ தூரத்திலிருந்த கேட்ட அந்த சைரன் சத்தம்.
சைரன் சத்தத்தை கேட்ட மாத்திரத்திலே ஓடிச்சென்று அவனுக்கு பின்னால் அவள் ஒளிந்துகொள்ள, அவள் செயல் அவனுக்கு விளங்கவே இல்லை.
அதனாலே “மீரா என்னாச்சிங்க..?” என்றான்.
“உன் காதுல என்ன ஈயத்தயா காச்சி ஊத்தியிருக்காங்க. அந்த சைரன் சவுண்ட் உன் காதுல விழலையா..?” என்றவள் கேட்டபோதுதான் அவனும் அந்த சத்தத்தை காதில் வாங்கியிருந்தான்.
“போச்சி போச்சி..” என்றவாறே பயத்தில் கைகளை உதறியவள், “நல்லா மாட்டுனேன். போலீஸ் மட்டும் என்ன இங்க பார்த்தாங்க முதல்ல என் அண்ணனுக்குதான் போன் பண்ணுவாங்க..” என்று பயந்துகொண்டே சொன்னவள்,
“இங்க இருந்து கிளம்பலாம்னு அப்பவே சொன்னேன் கேட்டியா நீ.. இப்பப்பாரு வசமா மாட்டிக்கிட்டேன். இனி ரூம்-அ விட்டு வெளியில வர கூட அலோ பண்ண மாட்டாங்க..” என்று பயத்தில் உளறியவளுக்கு, அந்த சத்தம் அருகில் கேட்க கேட்க இன்னும் பயம் தான்.
அந்த பயத்தின் வெளிப்பாடாய் “நந்து.. நந்து… ப்ளீஸ் நந்து… என்ன எப்டியாவது காப்பாத்து நந்து.. பிளீஸ்” என்றவாறே இருகைகளாளும் அவன் முதுகுப்புற சட்டையை கெட்டியாக பற்றிகொள்ள, மீராநந்தனோ இப்போது சத்தம் போட்டே சிரித்துவிட்டான்.
இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் சம்மந்தமே இல்லாமல் சிரிப்பவனை பார்த்து அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
அந்த எரிச்சலின் வெளிப்பாடாய் “இப்போ எதுக்கு சிரிக்கிற..?” என்று கேட்டவள் பயத்தில் அவன் ஆடையை மேலும் இறுக்கமாகவே பற்றியிருந்தாள்.
“ஏங்க மீரா…” என்றவாறே தனக்கு பின்னால் ஒளிந்திருந்தவளை வலுக்கட்டாயமாக இழுத்து தன் முன்னால் நிறுத்தியவன்,
“ஏங்க அது ஆம்புலன்ஸ் சவுண்ட்ங்க.” என்றவன் சிரித்துகொண்டே சொல்லவும், அந்த ஆம்புலன்ஸ் அவர்களை கடந்து செல்லவும் சரியாக இருக்க, பாவம் பிரதிக்ஷாவிற்குதான் அவமானமாகிவிட்டது.
“ஐய்யோ..” என்று முனகியவாறே அவனை பார்க்க முடியாமல் முகத்தையும் சட்டென்று திருப்பிகொண்டாள்.
“ஏற்கனவே ரொம்ப பேசுவான்.. இப்போ இன்னும் கலாய்க்கப்போறான். உனக்கு ஆம்புலஸ் சவுண்ட்-க்கும் போலீஸ் சைரண் சவுண்ட்க்கும் கூடவா வித்தியாசம் தெரியல” என்று தன்னையே நிந்தித்துகொண்டவளுக்கு அவன் புறம் திரும்பவே தர்மசங்கடமாகத்தான் இருந்தது.
இருந்தும், “ஆ…… தூரத்துலேந்து கேட்டதால எனக்கு சவுண்ட் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிடுச்சி” என்றவள் சமாளிக்க,
“ஆ.. நம்பிட்டேங்க” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் இருபுறமும் தலையை ஆட்டி சொன்னவனால் ஏண்டா அப்படி சொன்னோம் என்றாகிவிட்டது அவளுக்கு.
அவனை பார்க்க முடியாமல் தலையை தாழ்த்திய படியே அவள் இருக்க, பின் அவன் தான் “கியூட்-ஆ இருந்துச்சிங்க” என்றான்.
“என்ன..கியூட்-ஆ இருந்துச்சி…?” என்று அவன் வார்த்தையை கொண்டே அவள் கேள்வியெழுப்ப,
“நந்து… நந்து… பிளீஸ் நந்து…” என்று அவள் போலவே அவன் சொல்லிக்காட்டிய போது அவளுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.
இருந்தும் சிரிப்பை விழுங்கிகொண்டே “போயா..” என்று அவனை பார்க்காமலேயே சொன்னவள், ஓட்டமும் நடையுமாக சென்று காரில் ஏறிக்கொண்டாள்.
சற்றுமுன் நடந்த நிகழ்வை நினைத்து சிரித்தபடியே அவள் காரை ஸ்டார்ட் செய்ய அவனும் தன்னுடைய டூவீலரில் அவளை பின் தொடர்ந்தான்.
அவன் பின் தொடர்வதை ரியர்வியூ மிரர் வழியாக பார்த்தவளின் இதழ்கள் காரணமே இல்லாமல் மீண்டும் புன்னகை புரிந்தன.
என்னவோ தெரியவில்லை அவனுடன் இருக்கும் போதெல்லாம் மனசு லேசாகி போனது போன்ற உணர்வுதான் அவளுக்கு.
அதனால் தானே இன்று கூட அவனுக்காக அவள் வெளியில் வந்தது.
எப்போதும் போல் வீட்டின் பின் புறம் காரை நிறுத்திவிட்டு அவள் இறங்க, அவனும் தன்னுடைய டூ-வீலரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு அவள் அருகில் வந்து நின்றான்.
“போகலையா..?” என்றவளின் கேள்விக்கு,
“போகணுமா..?” என்றவளின் எதிர் கேள்வியால் அவள் தான் கொஞ்சம் தடுமாறி போனாள்.
அத்தோடு அவன் கேள்வியால் அவளையும் மீறிக்கொண்டு அவள் முகம் மலர அதை அவனுக்கு காட்டாமல் சட்டென்று தலையை திருப்பிக்கொண்டவளுக்கு வார்த்தைக்கு பஞ்சமாகி போனதொரு உணர்வுதான்.
இதில் “மீரா.. நாளைக்கு நைட் நானே உங்கள பிக்-அப் பண்ணிக்கவா..?” என்றவனின் அடுத்த கேள்வியால் அவள் இதயம் இரட்டிப்பு வேகத்தில் துடிக்க ஆரம்பித்திருந்தது.
மூச்சிவிட கூட அவளுக்கு சிரமமாக இருக்க, இதில் எங்கிருந்து அவன் கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியும்.
இருந்தும் அவன் கேள்வியால் தனக்குள் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றங்களை வெளிகாட்டிகொள்ளாமல் “நீ ஏன் என்ன பிக்-அப் பண்ணனும்..?” என்றாள் அவனை கேள்வியாய் பார்த்து.
“ஏன்னா…” என்று இழுத்தவாறே இரு கரங்களையும் அவன் பேண்ட் பாக்கெட்டில் விட, அது இன்னும் அவனை கம்பீரமாகவே காட்டியது.
எப்போதும் கேஷ்வல் உடையில் இருப்பவன் இன்று ஃபார்மல் உடையில் வந்திருப்பதை அவளும் இப்போது தான் கவனித்திருந்தாள்.
டார்க் புளூ நிறத்தில் பேண்ட்டும், அதற்கு ஏற்றார்போல் லைட் நிறத்தில் ஷர்ட் அணிந்து இன்னிங் செய்திருந்தவன் ஸ்லீவ்-ஐயும் மடித்து விட்டிருக்க அது இன்னும் அவனுக்கு அழகாகத்தான் இருந்தது.
அவனிடமிருந்து பார்வையை விலக்க முடியாமல் அவள் விழிகள் தவித்துக்கொண்டிருக்க,
அவனோ அவர்களுக்கு சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த டிரைவரை சுட்டிகாட்டி, “பாவம்.. நாம வர்ற வரைக்கும் பனியிலயும், கொசுகடியிலயும் ரொம்ப கஷ்டப்படுவாறு” என்று தேடி பிடித்து அவன் ஒரு காரணத்தை சொல்ல,
அவனை பார்த்தவாறே “ரொம்ப அக்கறைத்தான்” என்று நிறுத்தியவள், “டிரைவர் மேல” என்று முடிக்க, அவன் இதழ்களிலும் இப்போது குறுநகைதான்.
பின் ஏதோ நினைவு வந்தவளாய், “ஆமா.. நான் நாளைக்கு வருவன்னு சொல்லவே இல்லையே..?” என்றாள் சிரிப்பை விழுங்கியபடியே இதற்கும் அவன் என்ன பதில் சொல்வான் என்ற ஆர்வத்தில்.
ஆனால் அவனோ கொஞ்சமும் யோசிக்காமல் “ஏங்க… நீங்க இன்னைக்கு வருவன்னு கூட தான் சொல்ல..” என்றவனின் சாமர்த்திய பதிலால் அவள் இதழ்களில் மட்டுமல்ல அவன் இதழ்களிலும் இப்போது புன்னகைதான்.
சிலகணங்கள் இருவருமே மௌனமாய் சிரித்து கொண்டனர்.
பின் டிரைவரிடம் கார் சாவியை கொடுத்த கையோடு, நாளை வர வேண்டாம் என்றும் சொல்லி அனுப்பினாள்.
கார் சென்று மறையும் வரை காத்திருந்தவள், இப்போ அவனைப்பார்த்து “கிளம்பு” என்றாள் விழிகளை உருட்டி.
அவனோ “லேடிஸ் ஃப்ஸ்ட்” என்றான் வெண்பற்கள் தெரிய அழகாக சிரித்துகொண்டே.
அவனை பேசியா வெல்ல முடியும் என்று நினைத்தவள், விழிகளாலேயே அவனிடம் விடைபெற்றுவிட்டு கிளம்ப, அவள் வீட்டிற்குள் சென்ற பின் தான் அவனும் பைக்கை எடுத்துகொடுத்து அங்கிருந்து கிளம்பினான்.




