அவனின் கேள்வியால் கோவமுற்றவள், அந்த கோவத்தோடே தன் தோள் மீதிருந்த அவன் கையை தட்டிவிட்டு, “இங்க எதுக்காக வந்தீங்க..? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போய்டுங்க.. இல்லன்னா கத்தி ஊர கூட்டிடுவேன்” என்றாள் இப்போது அவனை மிரட்டும் தோணியில்.
உன் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சுபவன் இல்லை என்பது போல் அவனும் “ஓகே கத்தி ஊர கூட்டு, எல்லாரும் வரட்டும். நானும் அவங்க முன்னாடி மாஸ்க்-அயும், கேப்-அயும் கழட்டுறேன். அப்புறம் அவங்களே கன்ஃபார்ம் பண்ணிப்பாங்க இந்த கோவக்காரிதான் என் பொண்டாட்டி-ன்னு” என்று பதிலுக்கு அவனும் மிரட்டல் விடுப்பான் என்று சற்றும் அவள் எதிர்பார்க்கவில்லை.
வசமாக அவளை அவன் லாக் செய்திருக்க, அவளுக்குதான் அடுத்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“பெருமாளே.. ஏன் தான் என்ன இப்படி சோதிக்கிறீங்களோ..?” என்று மனதிற்குள் நொந்தபடி அவள் அவனை முறைக்க அவனோ,
“டீ… அதென்ன…?” என்று வேண்டுமென்றே இல்லாத ஒன்றை சுட்டிகாட்டி கேட்க, அவளும் அவன் சுட்டிகாட்டிய புறம் திரும்பினாள்.
திரும்பியவளின் கன்னத்தோடு தன் கன்னத்தை அவன் உரசியிருக்க, அவனின் இந்த செயலால் அவளுக்குதான் உடம்பெல்லாம் மின்சாரம் பாய்ந்த உணர்வு.
தீ சுட்டாற்போல் சட்டென்று முகத்தை விலக்கிகொண்டவளின் கண்கள், யாராவது தங்களை பார்க்கிறார்களா என்றுதான் முதலில் பார்த்தது.
நல்லவேளையாக யாரும் பார்க்கவில்லை. அதுவே அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
இருந்தும், “என்ன ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க..? இப்ப நான் என்ன தான் பண்ணனும்..?” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சன்னக்குரலில் கோவமாய் அவள் கேட்க,
“டீ… ஆக்சுவலி உன்ன கார் இருக்கற இடத்துக்கு கூட்டிட்டு போலாம்-னுதான் நான் இங்க வந்தேன்.. ஆனா..” என்று இழுத்தவன், “இந்த பஸ் டிராவல் கூட நல்லாதான் இருக்கும் போலவே..” என்று மர்மமாய் அவளை பார்த்து சிரித்தபடி அவன் சொல்ல,
அவளோ ஓரப்பார்வையால் அவனை பார்த்து, “புரியல..” என்றாள்.
இதுதான் சாக்கென்று “டீ” என்றவாறே மேலும் அவளை நெருங்கி அமர்ந்தவன், “.கார்-ல இந்தமாதிரி ஒட்டி உரசி.. தோள் மேல கைபோட்டு.. பிரேக் போடும் போதுலாம் நச்சின்னு இச்சி கொடுக்கமுடியாது இல்ல..” என்று கள்ள சிரிப்பை விழுங்கி கொண்டு ஹஸ்கி வாய்சில் சொல்ல,
‘எதே அடுத்து இச்-ஆ..?’ என்பது போல் அவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு நிச்சயம் அவன் செய்ய கூடியவன் தான் என்பதில் சிறிதளவும் ஆச்சரியம் இல்லைதான்.
அதனாலே “யப்பா.. சாமி.. வாங்க நாம கார்லே போலாம்” என்றாள் இரு கரம் கூப்பி.
“டீ.. நீதன பஸ்-ல போகணும்-னு ஆசைப்பட்ட… ஸோ நாம இதுலே போகலாம். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல” என்று கேஷ்வலாக சொன்னவனை, எதே என்பது போல் பார்த்தவள்,
“எதுக்கு முத்தம் கொடுக்கறதுக்கா..? இனி பஸ் இருக்கற பக்கமே நான் தலைவச்சி படுக்கபோறது இல்ல. வாங்க” என்றவள் அடுத்தகணமே பேருந்திலிருந்து இறங்கி இருக்க, மௌனமாய் சிரித்தப்படியே அவளை கார் இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான் ரிஷப்.
இப்படி தான் காதல் என்ற பெயரில் ஒவ்வொருநாளும் அவளை அவன் இம்சிக்க, அவள் தான் அவன் காதலால் நிம்மதியற்று போனாள்.
இதில் சுமதியும், சுதாகரனும் மருமகள் என்று அவளை தாங்க அவளுக்குதான் இதெல்லாம் எங்கு சென்று முடியுமோ என்றிருந்தது.
காரணம் இப்போதுவரையுமே அவளால் இந்த திருமணத்தை ஏற்றுகொள்ள முடியவில்லை. அதற்கு காரணம் கணவன் பற்றிய அவளின் எதிர்ப்பார்ப்பில் அவனிடம் ஒன்று கூட இல்லை. அத்தனைக்கும் மேல் அவன் ஒரு கே.
இதுதான் வாழ்க்கை என்று அவளால் அவனை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. அதேசமயம் அவளின் எதிர்பார்ப்புகள் அவளை ஏற்றுகொள்ள அனுமதிக்கவும் இல்லை.
இப்படி குழப்பத்திலேயே அவள் உழன்று கொண்டிருந்த நேரத்தில்தான் சுமதியின் செயலால் அவள் மேலும் அரண்டு போனாள்.
அன்று அவனுக்கு ஸ்டுடியோவில் வேலை இருப்பதால் அவர்கள் வீட்டு டிரைவர்தான் அவளை கல்லூரியிலிருந்து அழைத்து வந்திருந்தது.
வீட்டுக்கு வந்தவளை தன் அறைக்கு அழைத்து சென்ற சுமதி, அவளுக்கு பட்டு புடவை கட்டி, நகை நட்டு போட்டு அலங்கரிக்க, இதழினிக்கோ இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
“அத்த எதுக்கு இதெல்லாம்..?” என்று அவரிடமே அவள் தயங்கி கேட்டபோது, அவரோ “கல்யாணத்ததான் எங்களுக்கு சொல்லாம பண்ணிகிட்டீங்க.. அடுத்து என்ன ஏதுன்னு உங்களுக்கு நாங்கதன பார்த்து செய்யணும்.” என்றவர் அவள் மோவாயை பிடித்து,
“சாந்திமுகூர்த்தத்துக்கு இன்னைக்கு நாள் ரொம்ப நல்லாஇருக்காம் இதழினி. நம்ம ஜோசியரே போன் பண்ணி சொன்னாரு” என்று வெட்கம் கலந்த குரலில் சொல்ல, அவளுக்கோ அவரின் வார்த்தைகளால் அடிவயிற்றை கலக்கிவிட்டது.
பயத்தில் கை,கால்கள் கூட அவளுக்கு நடுங்க ஆரம்பித்து விட்டன. திருமணத்தையே ஏற்றுக்கொள்ள முடியாதவளால் எப்படி இப்படியொரு நிகழ்வை ஏற்றுகொள்ள முடியும்.
“ஐய்யோ அத்த..” என்று பற்களை கடித்துகொண்டவளுக்கு தன் நிலமையை எப்படி அவருக்கு விளக்குவதென்றே தெரியவில்லை.
இது குறித்து சம்மந்தபட்டவனிடம் கேட்கலாம் என்றாலோ, அவன் தான் இந்த விஷயத்தில் எப்போது என்று காத்து கிடக்கிறானே.
ஏற்கனவே உள்ளுக்குள் பயந்து போயிருப்பவளின் கையில் பால் சொம்பை கொடுத்த சுமதி, அவர்களின் அலங்கரிக்கபட்டிருந்த அறைக்கும் அழைத்து சென்றுவிட, இதழினிக்கோ உள்ளுக்குள் பயபந்துகள் உருள ஆரம்பித்திருந்தன.
என்ன செய்வதென்ற தவிப்போடு தலையை பிடித்துகொண்டு அமர்ந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் துளிர்த்தது.
சுமதி அழைத்ததின் பேரில் வீட்டிற்கு வந்தவனிடம், அவர் பட்டுவேஷ்டி கொடுத்து மாற்றிகொள்ள சொல்ல,
“இப்போ எதுக்கு இது..?” என்றான் அதை வாங்காமல்.
“இன்னைக்கு நாள் ரொம்ப நல்லா இருக்காம் டா.. அதனால சாந்திமுகூர்த்தத்த இன்னைக்கே வச்சிக்கலாம்-னு நம்ம ஜோசியர் சொன்னாரு” என்று மகிழ்ச்சி ததும்பும் குரலில் சொன்னவருக்கு ஒரு கணம் உடலே தூக்கிவாரி போட்டுவிட்டது, “ம்மா..” என்றவன் சுள்ளென்று எரிந்து விழுந்ததில்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவர் அவனையே பார்த்திருக்க,
நெற்றிபொட்டை நீவி விட்டபடி தன்னை சமன்படுத்தி கொண்டவன், அதன் பின்னே, “ம்மா.. அவ இன்னும் காலேஜ் கூட முடிக்கல ம்மா.. அப்புறம் ஏன் கல்யாணம் பண்ணன்னு கேட்காதீங்க. பண்ண வேண்டிய சூழ்நிலை அதனால பண்ணிட்டேன்.” என்றான் இப்போதைக்கு இது தேவை இல்லை என்பது போல்.
அவன் கூறியதை கேட்டு, சுமதியின் முகம் சுனங்க, “ம்மா..” என்றவாறே அவரின் முகத்தை கைகளில் ஏந்திகொண்டவனோ,
“சாரி ம்மா..” என்றான் சற்று முன் தான் கத்தியதற்கு மன்னிப்பு கேட்கும் விதமாக.
“போடா..” என்று பதிலுக்கு அவர் முறுக்கிகொள்ள,
“ம்மா… நீங்க என் கிட்ட ஒரு வார்த்தை இத பத்தி சொல்லியிருக்கலாம் இல்ல ம்மா..” என்றவன்,
“அவ ஏற்கனவே ரொம்ப பயந்து போயிருக்கா ம்மா.. அவ கொஞ்சம் நார்மல் ஆகட்டுமே” என்றான் அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை மறைத்து.
அவனையே சிலகணங்கள் பார்த்திருந்தவர், “சரிடா. உன் இஷ்டம்.” என்று சொல்ல, அதன் பின்னே, “இதழ் எங்க ம்மா..?” என்றான்.
அவள் மேலே இருப்பதாக அவர் சொல்ல, வேக எட்டுகளுடன் மாடிப்படி ஏறி சென்றவன் மெல்ல அவர்களின் அறைக்கதவை திறந்தான்.
திறந்த அறையிலிருந்து வந்த மல்லிகை வாசம் சற்று முன் அவன் இருந்த மனநிலையை அப்படியே மாற்றியிருந்தது.
அவன் வந்ததில் திடுக்குற்று அவள் எழுந்து நிற்க,
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அறையில் அழகு தேவதையாக நின்றிருந்தவளை பார்த்த கணமே அவன் கண்கள் அவளை இரசிக்க ஆரம்பித்துவிட்டிருந்தது.
வைத்த கண் எடுக்காமல் அவளையே பார்த்துகொண்டிருந்தவனின் பார்வையில் அப்போதுதான் பட்டது அவள் கண்களிலிருந்து வழிந்தோடிகொண்டிருந்த கண்ணீர்.
அவள் கண்ணீரை பார்த்த கணமே சட்டென்று அவள் மீதிருந்த பார்வையை விலக்கிகொண்டவன், “ம்மா…” என்று சத்தம்போட்டு சுமதியை அழைக்க, அவன் சத்தம் கேட்டு அவளும் விழிநீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளை பார்த்தவாறே “ரூம்-அ கிளீன் பண்ண ஆள் அனுப்புங்க” என்றவன் கத்தி சொல்ல, இதழினிக்கு அப்போதுதான் வயிற்றில் பாலை வார்த்தது போல் இருந்தது.
இருந்தும் வழிந்தோடிகொண்டிருந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துவிட்டபடியே அவள் நின்றிருக்க, பின் அவன் தான் அவள் அருகில் சென்று
“டீ.. நீ அழறதபார்த்தா உனக்கு சாந்திமுகூர்த்தம் வேணும் போல..?” என்று அவளை அவன் கலாய்க்க, அவன் வார்த்தைகளால் தன்னையும் மீறிக்கொண்டு சிரித்துவிட்டாள் இதழினி.
இல்லை என்பது போல் விழிகள் கலங்க சிரித்தபடியே அவள் தலையை அசைக்க,
அவள் சிரிப்பையே சில கணங்கள் பார்த்து இரசித்திருந்தவன்,
பின் “இப்படி சிரிச்சிக்கிட்டே இரு இதழ்.. என்ன தாண்டி உனக்கு எதுவும் நடக்க நான் அனுமதிக்க மாட்டேன்” என்று அருதியிட்டு சொன்னவன், அவள் தலையையும் வாஞ்சையாக வருடிக்கொடுத்துவிட்டு செல்ல, அவளுக்குதான் அவன் பேச்சும், செயலும், அக்கறை நிறைந்த பார்வையும் புதிதாக இருந்தது.
அந்த நிகழ்விற்கு பின் அதிகம் யோசித்தவளுக்கு இது ஒன்று தான் சரியென்று தோன்றியது.
அதனாலே விவாகரத்து பத்திரத்தோடு அவனிடம் கையெழுத்து கேட்டு அவள் நின்றபோது, அவனுமே கொஞ்சம் ஆடித்தான் போனான்.
எப்படியும் தன்னை ஏற்றுகொள்வாள் என்று காத்திருந்தவனுக்கு, இது பெருத்த அடிதான்.
இருந்தும் எதையும் வெளிக்காட்டிகொள்ளாமல் இலகுவாக “டீ…. கையெழுத்துதானே போட்டுடலாம்” என்றான் தன் அறையில் இருந்த பியானத்தை சுத்தம் செய்தவாறே.
அவனின் பதிலால் அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்க அது அவள் முகத்திலும் பிரதிபலிக்கவே செய்தது.
அவளை ஆழப்பார்த்தவாறே, “டீ..” என்றழைத்து தன்னை பார்க்க வைத்தவன், “நான் இந்த பத்திரத்துல சைன் பண்றதால உனக்கு என் கிட்ட இருந்து டிவோர்ஸ் கிடைக்கும்.. அந்த மாதிரி சைன் போடுறதால எனக்கு உன் கிட்ட இருந்து என்ன கிடைக்கும்..?” என்று கேட்டு அவன் ஒற்றை புருவத்தை உயர்த்த,
அவளோ, “என்ன வேணும்னு சொல்லுங்க.. கண்டிப்பா நான் செய்றேன்” என்றாள் குரலில் சற்றே குதூகலத்துடன்.
இடுப்பில் கைவைத்தப்படி அவளை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தவன், “டீ… என்ன வேணும்னாலும் செய்வியா..?” என்று அன்று அவள் கேட்டது போலவே கேட்டவன், “முத்தம் வேணும்” என்று கேட்டு தன் வலக்கன்னத்தை காட்ட, அவள்தான் அதிர்ந்துபோனாள்.
சற்றுமுன் அவள் முகத்தில் இருந்த சந்தோஷம் எல்லாம் எங்கு சென்று மறைந்ததென்றே தெரியவில்லை.
அவனின் வார்த்தையால் “ச்சீ..” என்று முகம் சுளித்தவளுக்கோ அவன் மீது பற்றிக்கொண்டுதான் வந்தது.
“உங்க கூட வாழ விருப்பம் இல்லன்னு இதுக்கு மேல தெளிவா எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல..” என்று ஆவேசமாக சொன்னவள்,
“நீங்க வேணும்னா என்ன விருப்பப்பட்டு கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா எனக்கு வரப்போறவர பத்தி எனக்கு-ன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு. ஆசைகள் இருக்கு. அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டிங்குது..” என்று ஆத்திரம் அடைக்க கேட்டவளின் குரல் இறுதி வார்த்தையில் உடைந்து போக அதை ரிஷப் நந்தனும் கவனிக்கவே செய்தான்.
அவள் சொல்வதும் உண்மைதானே. அவனுக்குள் இருக்கும் எதிர்பார்ப்புகள் போல் அவளுக்குள்ளும் எதிர்ப்பார்ப்புகள் இருப்பதொன்றும் தவறு இல்லையே.
அதனாலே, “சரி சொல்லு.. உன் எதிர்பார்ப்பு என்ன..?” என்றவன் நேரிடையாக அவளிடமே கேட்ட போது அவள் கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.
பின் ஒருவாறு தன்னை சமன் படுத்திகொண்டவள், “எனக்கு வரப்போறவரு ஸ்ரீ ராமசந்திரன் மாதிரி இருக்கணும்னு ஆசைப்பட்டேன்” என்று எங்கேயோ பார்த்தபடி அவள் சொல்ல,
“ஸ்ரீ ராமசந்திரனா..? அவன் யாரு..?” என்று தனக்குத்தானே கேட்டுகொண்டவன், அறியவில்லை அவள் சொன்ன ஸ்ரீ ராமசந்திரன் கடவுள் அவதாரம் என்று.
அத்தோடு அவனிடமே அவள் ஒரு ஆண்பெயரை சொல்ல, அதுவே ரிஷப் நந்தனுக்குள் எரிச்சலைதான் ஏற்படுத்தியிருந்தது.
அதனாலே, “டீ… அதென்ன ஸ்ரீ ராமசந்திரன் மாதிரி.. போய் அந்த ராமசந்திரனையே கூட்டிட்டுவா நானே அவன் கிட்ட பேசி உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறேன்” என்று சொன்னவனை அதிர்ந்து பார்த்தவளுக்கு, அவனின் வார்த்தைகளை கேட்டு சிரிப்பதா..? இல்லை இப்படி ஒருவனிடம் போய் மாட்டிகொண்டிருக்கும் தன் நிலமையை நினைத்து அழுவதா என்றே தெரியவில்லை.
கடவுள் நம்பிக்கையே இல்லாத ஒருவனிடம் போய் ஸ்ரீ ராமசந்திரன் என்று சொன்னால் பாவம் அவனும்தான் என்ன செய்வான்…? அவனை பொறுத்தமட்டில் அவள் ஏதோ ஒரு ஆடவனை குறிப்பிட்டு சொல்கிறாள் என்று நினைத்துதான் அப்படி சொன்னது கூட.
அவளுக்குள் இருக்கும் கோவத்திற்கு ஸ்ரீ ராமசந்திரன் யார் என்று விளக்கும் மனநிலையிலெல்லாம் அவள் இல்லை.
அதனாலே விவாகரத்து பத்திரத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தன் அறைக்கு சென்றவள், அவன் மீதான கோவத்தில் அறைக்கதவையும் டொம்மென்று சாற்றியிருக்க, அவனோ அந்த சத்ததிற்கு இமைகளை மூடி திறந்தான்.
அவனை தேடி கொண்டு வந்த கவினுக்கும் அந்த டொம்-மென்ற சத்தம் நன்றாக கேட்டிருந்தது.
அதனாலே “ஏன் சிஸ்டர் இவ்வளோ கோவமா போறாங்க..?” என்று கேட்டவாறே அவன் முன்னால் சென்று நின்றான் கவின்.
இருந்த கடுப்பிற்கு ஷாம்பியனை கிளாசில் ஊற்றி வந்து குடித்தவன், சிகரெட்டையும் பற்ற வைத்து இரண்டு பஃப் இழுத்துவிட்டு தான் சொல்ல காரணத்தை சொல்ல ஆரம்பித்தான்.
“என்னவோ ஒரு கப் காஃபி வேணும்-ன்ற மாதிரி டிவோர்ஸ் பேப்பர்-ல சைன் கேட்குறா..” என்றான் கடுப்படித்த குரலில் ரிஷப்.
“ஆக்சுவலி நான் இத கல்யாணம் ஆன ஒன் மந்த்-லே எதிர்பார்த்தேன். என்ன இருந்தாலும் சிஸ்டர் கொஞ்சம் ஸ்லோ-தான்” என்று சொன்னவனை எரிப்பது போல் அவன் பார்க்க,
அவன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை வாங்கி கொண்ட கவினோ, “சரி.. பதிலுக்கு நீ என்ன சொன்ன..?” என்றான் சிகரெட்டை புகைத்தவாறே.
“நான் என்னத்த சொல்ல..?” என்று வாய்க்குள்ளே முனகியவனுக்கு, அவள் விவாகரத்து கேட்டதை விட அவள் சொன்ன பெயர்தான் உள்ளுக்குள் அதீத எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது.
மீதமிருந்த ஷாம்பியனை ஒரே மூச்சில் குடித்துமுடித்தவன், “அவளுக்கு வரபோறவன் ஸ்ரீராமசந்தரன் மாதிரி இருக்கணுமாம்.” என்றான் முன்னுச்சியை கோதிவிட்டவாறே.
“அதுக்கு சார் என்ன சொன்னீங்க..?” என்று கேட்டவனுக்கு, அவளிடம் சொன்னதையே ரிஷப் சொல்ல, அவன் கூறியதை கேட்டு கவின் சத்தம் போட்டே சிரித்துவிட்டான்.
தன் நிலை புரியாமல் சிரிப்பவனை பார்த்து ரிஷப் நந்தனுக்கு இன்னும் எரிச்சல்தான். அந்த எரிச்சலோடே “ஏற்கனவே செம்ம காண்டு-ல இருக்கேன்.. இதுல நீ சிரிச்சி தேவையில்லாம என் கிட்ட வாங்கிகட்டிக்காதா..” என்றவனின் கோவம் கூட கவினுக்கு சிரிப்பைதான் வரவழைத்தது.
“டார்லிங்” என்றவாறே அவன் தோளில் கை போட்டவன், “உனக்கு கடவுள் நம்பிக்கைதான் இல்லன்னு பார்த்தா.. புராணங்கள்-ல கூட இவ்வளோ வீக்-ஆ இருப்பன்னு நினைக்கல..” என்றவனை புருவம் இடுக்கி பார்த்தான் ரிஷப்.
“நீ நினைக்கிறமாதிரி ஸ்ரீ ராமசந்திரன் யாரோ-லாம் இல்ல டார்லிங்.. நம்ம ஸ்டியோ காலண்டர்-ல கையில வில், அம்பு வச்சிகிட்டு இருப்பாரே. பக்கத்துலே லக்ஷமணன், சீதா.. அப்புறம் கீழ அனுமன்” என்றவன் சொல்லிக்கொண்டே போக,
அவனும் நினைவுவந்தவனாய், “யா.. யா...” என்று தலையை மேலும் கீழுமாய் அசைத்தவன்,
“அவர்கிட்ட என்ன ஸ்பெஷல்..?” என்றான் அவனிடமிருந்த சிகரெட்டை வாங்கி புகைத்தவாறே.
“அவர் கடவுள் அவதாரம் டார்லிங். ஒருவனுக்கு ஒருத்தி-ன்ற கான்செப்ட்-அ இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்துவர் அவர்தான்” என்றவன் விளக்கம் கொடுக்க,
“நானும் அப்படித்தனடா இருக்கேன்” என்றான் ரிஷப்-ம் அவசர அவசரமாக.
“யா.. அது எனக்கு தெரியும்.. ஆனா சிஸ்டர் உன்ன ஒருவனுக்கு ஒருவனா இல்ல பார்க்கிறாங்க” என்று சிரிப்பை விழுங்கி கொண்டு கவின் சொல்ல, ரிஷப் நந்தனின் இதழ்களிலுமே சிரிப்பு எட்டி பார்க்கத்தான் செய்தது.
இருந்தும்,”செருப்பு” என்றவன் சொல்ல, “சரி விடு” என்ற கவினோ, “முக்கியமா அவர் ஒரு டீ-டோட்டலர். நோ ஆல்கஹால்.. நோ ஸ்மோக்கிங்.” என்றவன்,
“ஆனா நமக்கு அது இரண்டும் இல்லாம பொழுதே ஓடாதே” என்றான் அவன் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை பார்த்து.
அவன் கூறியதை கேட்டு குனிந்து தன் கையில் புகைந்துகொண்டிருந்த சிகரெட்டை யோசனையோடு பார்த்தான் ரிஷப்.




