அவளுக்கு தெரிந்து அவளும் அவனிடம் எதுவும் சொல்லவில்லை. அவனும் கேட்டது இல்லை.
அத்தோடு அவள் வீட்டார் சொல்லியிருக்கவும் வாய்ப்புகள் இல்லை. காரணம் முதல்நாள் அவளை பார்க்க மருத்துவமனைக்கு வந்தவன், அடுத்து அவளை அழைத்து செல்லதான் வந்தான். அப்போது கூட அவன் யாரிடமும் பேசாமல் ஒதுங்கியே தான் நின்றான். அப்படியிருக்க இவனுக்கு எப்படி தெரியும்..? என்ற கேள்வி அவள் மண்டையை உடைத்து கொண்டிருந்தது.
தன்னை விழிகள் விரித்து பார்த்திருப்பவளையே பார்த்தவன், “காலேஜ்-க்கு டைம் ஆகலையா..?” என்று கேட்டு அவசரபடுத்த, அதன் பின் தான் அவளும் வேகவேகமாக உண்டு கையை கழுவிவிட்டு எழுந்தாள்.
எப்போதும் போல் சுமதியின் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு கார் சாவி-யை எடுத்து கொண்டு அவன் வெளியே செல்ல, சங்கடத்துடன் விழிகளாலேயே இருவரிடமும் விடைபெற்றுகொண்டு அவன் பின்னாலேயே சென்றாள் இதழினி.
ஆட்டோ பிடித்து போய்கொள்கிறேன் என்றவள் சொன்னபோது அவனோ மறுத்துவிட்டான்.
கார் கதவை திறந்து அவளை அமரவைத்தவன், அதன்பின்னே தனக்கான இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் செய்தான்.
ஓடிக்கொண்டிருந்த பாடலுக்கு ஹம்மிங் செய்தபடியே அவன் காரை ஓட்டிக்கொண்டிருக்க, அவள் தான் பத்து நாட்களுக்கு பின் கல்லூரி செல்வதை நினைத்து உள்ளுக்குள் கதிகலங்கி போயிருந்தாள்.
யார் யார் என்னென்ன கேள்வி கேட்பார்கள்.. அவர்கள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது.. என்று யோசிக்கும் போதே மறுபடியும் வீட்டிற்கே சென்றுவிடலாமா என்று கூட இருந்தது அவளுக்கு.
இதில் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறு வேறு அவளுக்குள் இன்னும் பீதியை ஏற்படுத்தி கொண்டிருந்தது.
நிச்சயம் யாரோடு திருமணம் நடந்தென்று கேட்பவர்களுக்கு அவளால் என்ன பதில் சொல்ல முடியும்..? இதுவே மனதிற்கு பிடித்த திருமணம் என்றால் கூட அவளால் சொல்லிவிட முடியும்..
கொஞ்சமும் பிடித்தமில்லாமல் நடந்த இந்த திருமணத்தை அவளாலேயே இன்னும் ஏற்றுகொள்ளவில்லை. இப்படி இருக்க எப்படி அவளால் கணவன் என்று அவனை சொல்ல முடியும்.
அதிகம் யோசித்தவளுக்கு இப்போதைக்கு திருமணத்தை மறைப்பது ஒன்றுதான் சரியென்று பட்டது.
ஒன்றிற்கு பத்துதடவைக்கு மேல் அந்த வீடியோ-வை பார்த்தவளுக்குமே அந்த வீடியோவில் அவள் முகம் அவ்வளவு தெளிவாக தெரியாதது போல் தான் இருந்தது.
அத்தோடு திருமணம் செய்துகொண்டதாக மட்டும் அறிவித்திருந்தவன், இதுநாள் வரை இவள் தான் தன் மனைவியென்று அவள் புகைப்படத்தையும் பகிரவில்லை.
அதனாலே அவள் இப்படியொரு முடிவை கண்டிருந்தாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் மனதை படித்தவன், “டென்ஷனா இருக்க போல..?” என்று அவளை பார்த்து கேட்டவன்,
“ரிலாக்ஸ் இதழ். நான் உன் பிரின்சி கிட்ட நேத்தே பேசிட்டேன்.. ஸோ நீ யாருக்கும் எந்த எக்ஸ்பிளைனேஷனும் கொடுக்க தேவையில்லை.” என்று பாடலுக்கேற்ப விரல்களால் ஸ்டியரிங்கில் தாளமிட்டபடியே சொல்ல,
“பிரின்சி கிட்ட என்ன சொன்னீங்க..? எல்லாத்தையும் சொல்லிட்டீங்களா..? கல்யாணத்த பத்தியும் சொல்லிட்டீங்களா.?” என்று அதிர்ந்து கேட்டவளை பார்த்து, ஆமாம் என்பது போல் கூலாக தலையை மட்டும் அசைத்தான் ரிஷப்.
அவன் பதிலால் எரிச்சலுற்றவள், “ப்ச்… உங்கள யாரு அவங்க கிட்ட எல்லாத்தையும் சொல்ல சொன்னது..?” என்று பதிலுக்கு கேட்டவள்,
“போச்சி.. பிரின்சி எல்லா ஸ்டாஃப்கிட்டயும் உளறிவைக்க போகுது. ஸ்டாஃப் ஸ்டூடண்ட்-கிட்ட சொல்ல போறாங்க. இனி பார்க்கற எல்லாரும் என்ன தான் கேள்வி கேட்டு தொலையா தொலைக்க போறாங்க.” என்றவள் கைகளை உதறிகொண்டு புலம்ப,
“ஏய்.. ஏய் புலம்பறத நிறுத்து” என்றவன், “பிரின்சி-கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்கேன்னுதான் சொன்னேன். அவங்கள எல்லார்கிட்டயும் எல்லாத்தையும் சொல்ல சொல்லல… யார் கேட்டாலும் உனக்கு உடம்பு-க்கு முடியல-ன்னு மட்டும் சொல்ல சொல்லியிருக்கேன். போதுமா..?” என்று அவளை பார்த்து கேட்டுவிட்டு திரும்பியவன்,
இப்போது சாலையை பார்த்தவாறே, “சீ இதழ்… நான் தாலி-அ வேணும்னா உன் விருப்பம் இல்லாம உன் கழுத்துல கட்டியிருக்கலாம். ஆனா உன் விருப்பத்தோட மட்டும் தான் நீ என் பொண்டாட்டி-ன்ற விவரத்த நான் வெளி உலகத்துக்கு சொல்லுவேன்.” என்றான் ஆணித்தனமாக.
ஆம் அவன் மட்டும் நினைத்திருந்தால் தனக்கு திருமணம் ஆனதை வெளிப்படையாக சொன்ன கையோடு அவள் புகைபடத்தையும் வெளியிட்டு இருக்கலாம் தான். ஆனால் அவன் அதை செய்யவில்லை. காரணம் அது அவள் அனுமதியோடு நடக்கவேண்டும் என்று அவன் நினைத்தான்.
அதனால் தான் இப்போது வரையுமே தன் மனைவியின் புகைப்படத்தை வெளி உலகத்திற்கு அவன் காட்டாமல் இருப்பது கூட.
பதிலுக்கு “அது இந்த ஜென்மத்துல நடக்காது” என்று முனுத்தவளின் வார்த்தைகள் அவன் காதிற்கும் நன்றாக விழவே செய்தது.
இருந்தும், “கம் அகைன்” என்றவன் சொல்ல,
“ஆமா.. என்னபத்தியும் என் வீட்-ல உள்ளவங்கள பத்தியும் உங்களுக்கு எப்படி தெரியும்..? ஆரண்யா சொன்னாளா..?” என்றவள் பேச்சை மாற்ற,
அவள் பேச்சை மாற்றுவது அவனுக்கும் புரியவே செய்தது. இருந்தும் இல்லை என்பது போல் தலையை அசைத்தவன்,
“ஏய் பொண்டாட்டி நான் தான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லியிருக்கேன் இல்ல. நான் உன்ன காதலிக்கறன்னு.. உன்ன காதலிச்சா.. உன் குடும்பத்தையும் காதலிக்கறதாதன அர்த்தம். ஸோ….” என்று இழுத்தவன், “ஐ நோ எவ்ரிதிங்“ என்று சொல்லிவிட்டு அவளை பார்த்து கண்ணடிக்க, அவளுக்கோ ஏண்டா கேட்டோம் என்ற நிலைதான்.
அதன் பின் மறந்தும் அவன் புறம் அவள் திரும்பவில்லை, வாயையும் திறக்க வில்லை.
கல்லூரிக்கு முன் காரை நிறுத்தாமல் சற்று முன்னமே அவள் காரை நிறுத்த சொல்ல அவனும் நிறுத்தினான்.
தன்னுடைய பேக் மற்றும் வயலினை எடுத்துகொண்டு அவள் கார் கதவை திறக்கபோன சமயம், “ஓய்.” என்று அவன் அவளை அழைத்திருக்க,
அவளோ என்ன என்பது போல எரிச்சலோடு திரும்பி அவனை பார்த்தாள்.
“என்கிட்ட கல்யாணம் ஆனத யாருக்கும் சொல்லகூடாதுன்னு சொல்லிட்டு… இப்போ நீ மட்டும் தாலி-அ மறைக்காமபோற..?” என்று கேட்டு அவன் புருவமத்தியை உயர்த்த,
அவளும் அப்போதுதான் தன் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலி-யை கவனித்தாள்.
“ஐய்யோ இத எப்படி நான் மறந்தேன்” என்று தனக்குதானே கேட்டு கொண்டவள், அவசராவசரமாக அதை எடுத்து ஆடைக்குள் விட்டாள்.
இருந்தும் அவள் கழுத்தின் பக்க வாட்டு பகுதியில் மஞ்சள் கயிறு தலையை காட்டி கொண்டிருந்தது.
எப்போதும் அவள் அணியும் காலர் வைத்த சல்வாராக இருந்தால் இப்போது மறைப்பதில் அவளுக்கு பிரச்சனையே இல்லை. அவன் வாங்கி தந்திருக்கும் ஆடைகள் எல்லாம் காலர் இல்லாதவைகள்.
கழுத்துபகுதியில் தெரிந்து கொண்டிருந்ததை உள்ளே தள்ளி மறைத்துபார்த்தாள். இருந்தும் மஞ்சள் கயிறு பல்லைகாட்டிக்கொண்டு தெரிய, பின் ஷாலோடு சேர்த்து பின் செய்வதென்று முடிவு செய்தாள்.
அதுவரையும் அவளையே பார்த்திருந்தவன், “இப்போ எதுக்கு நீ இவ்வளோ கஷ்டப்படுற..? கழட்டி என் கிட்ட கொடு நான் வச்சியிருக்கேன்” என்றதோடு அவள் முன் தன் கரத்தையும் அவன் நீட்டியிருக்க,
அவளோ அவசரமாக “இல்ல வேண்டாம்” என்று அவன் கரத்தை தட்டிவிட்டு விட்டு, மஞ்சள் கயிற்றை ஷாலோடு இணைத்து பின் போடும் முயற்சியில் இறங்கியிருந்தாள்.
அவள் பதிலால் அவன் இதழ்களில்தான் மெல்லிய புன்னகை அரும்பியது.
கல்லூரிக்கு நேரம் ஆகிறதே என்ற அவசரத்திலும் ஒருவித பதற்றத்திலும் வேக வேகமாக ஆடையில் ஊக்கின் கூரிய நுனியை நுழைந்துகொண்டிருந்தவளின் விரலில் சருக்கென்று அது குத்தியிருக்க, வலிதாங்க முடியாமல் “ஐய்யோ பெருமாளே” என்றவாறே அவள் கையை உதற, “ஏய்.. என்னாச்சி..?” என்றவாறே அவள் கரத்தை பற்றி இழுத்து பார்த்தான் ரிஷப்.
பின் குத்தியதில் அவள் ஆள்காட்டிவிரல் நுனியில் இரத்தம் கசிந்து கொண்டிருக்க, கொஞ்சமும் யோசிக்காமல் அவள் விரலை தன் வாய்க்குள் விட்டிருந்தான் இரத்ததை நிறுத்தும் பொருட்டு.
அவனின் திடீர் செயலால் அதிர்ந்தவளுக்கு அந்நேரத்திலும் அவன் செயல் உள்ளுக்குள் அருவெறுப்பை ஏற்படுத்தாமல் இல்லை.
முகத்தை அஷ்டகோணலாய் வைத்து கொண்டு வெடுக்கென்று கையை அவள் பின்னுக்கு இழுத்துகொள்ள, அவன் கண்களோ அவள் விரலில் இரத்தம் நின்றிருக்கிறதா என்றுதான் பார்த்தது.
“நீ இருக்கியே.. விரல்ல குத்திக்கிற அளவுக்கு அப்படி என்ன அவசரம்..” என்று கேட்டதோடு நில்லாமல், சட்டென்று அவளை நெருங்கி சென்றவன், தானே பின் போடவும் செய்ய, அவனை இத்தனை நெருக்கத்தில் பார்த்தவளுக்கோ ஒரு கணம் மூச்சே நின்றுவிட்டது.
மஞ்சள் கயிற்றை மறைக்கும் விதமாக ஆடையோடு சேர்த்து வெகு இயல்பாக அவன் பின் போட்டு கொண்டிருக்க, அவளுக்குதான் அவனின் அருகாமையும், அவனிடமிருந்த வந்த நறுமணமும் அவளுக்குள் என்னென்னவோ செய்தது.
இதில் அவனின் சூடான மூச்சி காற்று வேறு அவள் மேனியை தீண்டிக்கொண்டிருக்க, அவளுக்கோ மெய் சிலிர்த்துவிட்டது..
ஒருவழியாக பின் போட்டுவிட்டு நகர்ந்தவனின் பார்வையில் அப்போதுதான் பட்டது அவள் கையின் மேற்பகுதியில் குத்திட்டு நின்ற ரோமங்கள்.
அதை பார்த்து மௌனமாய் சிரித்து கொண்டவன், “இப்ப என்ன நடந்துச்சி-ன்னு எல்லாம் அட்டேன்ஷன்-ல நிக்குது.” என்று சிரித்துகொண்டே அதை சுட்டிகாட்டி கேட்டவன், குத்திட்டு நின்ற ரோமங்களை கொத்தாக பற்றி இழுக்கவும் செய்ய, அவளுக்கோ வலித்துவிட்டது.
“ஆ..வலிக்குது” என்றவாறே அவன் கையை தட்டிவிட்டவள், அந்த இடத்தை தடவிகொடுத்த படியே அவனை முறைக்க,
“எனக்கு ரொம்ப பிடிச்சியிருக்கு. வேக்ஸ்-லாம் பண்ண கொன்னுடுவேன்” என்று கண்ணடித்து சொன்னவனை பார்த்து அவள் அதிசயித்துதான் போனாள்.
இருக்காதா பின்ன எத்தனை முறை அவள் கையிலிருந்த ரோமத்தை சுட்டி காட்டி தாரிகா அவளை கேலி செய்திருப்பாள். ஏன் அவள் மட்டுமா இலக்கியா கூட மஞ்சள் தேய்த்து குளிக்கசொன்னாளே. எத்தனையோ பேர் இந்த விஷயத்தில் அவளை கேலி செய்ததும் உண்டு அதை போடு இதை போடு என்று அறிவுரை சொன்னதும் உண்டு.
அப்படியிருக்கையில் முதன் முதலாக ஒருவன் பிடித்திருகிறது என்று சொன்னதோடு, வேக்ஸ் செய்யகூடாது என்று எச்சரிக்கையும் கொடுத்திருக்க, அவன் வார்த்தைகளால் அவளையும் அறியாமல் அவள் முகம் நாணத்தால் சிவந்தது.
எங்கே தன் முகத்தை பார்த்துவிடுவானோ என்று அவசரஅவசரமாக காரிலிருந்து அவள் இறங்க,
“டீ..” என்று மீண்டும் அவளை அழைத்திருந்தான் ரிஷப் நந்தன்.
“என்னது டீ-யா..?” என்று முனுமுனுத்தவாறே, கோவமாய் அவனை பார்த்தவள், “என் பேரு இதழினி” என்றாள் தனக்கு அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்பது போல்.
“பேர்-அ விட டீ-க்குதானே உரிமை அதிகம்” என்று அதற்கும் அவன் கண் சிமிட்டி பதில் சொல்ல, அவளால்தான் மேற்கொண்டு அவனிடம் வாதம் செய்ய முடியவில்லை.
யாராவது தன்னை பார்க்கிறார்களா.. என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே, “இப்போ எதுக்கு கூப்டீங்க..?” என்றாள் அவள்.
“பை பை கிஸ், ஹக்-லாம் இல்லையா..?” என்றான் கண்களில் குறும்பு மின்ன.
அவனின் கேள்வியால் அவனை அவள் முறைக்க, அவனோ ”பிளைன் கிஸ் கூட ஓகே தான்” என்றான் மேலும் அவளை சீண்டும் விதமாக.
இதற்கு மேல் இங்கிருப்பது சரியன்று தோன்றவே, அவன் மீது காட்ட முடியாத கோவத்தில் கார் கதவை டொம்மென்று சாற்றிவிட்டு அவள் செல்ல, அவனோ வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்துகொண்டான்.
தாரிகா-விற்கும் அவன் போன் செய்து பேசியிருக்க, அவளும் இதழினியிடம் எதை பற்றியும் கேட்கவில்லை. அவள் மட்டுமல்ல அவளின் ஆசிரியைகள் கூட அவளிடம் எதுவும் கேட்கவில்லை. அதுவே அவளுக்கு சற்று மனநிம்மதியாக இருந்தது.
அவளின் பிரின்சி மட்டும் தன் அறைக்கு அழைத்து அவளுக்கு திருமணவாழ்த்து சொன்னபோது, பதிலுக்கு கஷ்டப்பட்டு புன்னகைத்தவள் பதிலுக்கு நன்றி கூட சொல்லவில்லை.
மதிய உணவு அவன் வீட்டிலிருந்தே அவளுக்கு வந்திருக்க, அவள் உண்டாளோ இல்லையோ தாரிகா நன்றாகவே வெளுத்து வாங்கினாள்.
இதில் அவ்வப்போது போன் செய்து அவளை அவன் விசாரித்த வண்ணம் இருக்க, இதழினிக்கோ பற்றிக்கொண்டுதான் வந்தது.
மாலையும் அவன் தான் அவளை அழைத்து சென்றான்.
இப்படியே நாட்கள் செல்ல, நாளுக்கு நாள் அவனின் செயலும் அவளிடம் எல்லை மீறிகொண்டேதான் சென்றன.
இதில் சுமதி தம்பதியினர் அவள் வீட்டினரை இங்கு அழைத்து வந்து விருந்து கொடுத்து உபசரிக்க, அவர்களும் அவனையும் அவளையும் அழைத்து சென்று விருந்து கொடுத்தனர்.
அவள் வீட்டினர் அவனை உள்ளங்கையில் வைத்து தாங்க அவளுக்குதான் அதையெல்லாம் பார்க்க வெறுப்பாக இருந்தது.
அத்தனைக்கும் மேல் ஹரண் ரிஷப்போடும், ஆரண்யா கவினோடும் நன்றாக ஒட்டிக்கொள்ள, முதலில் மூன்று நாட்கள் அங்கு தங்குவதாக சொன்னவள், அன்று மாலையே அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.
எப்போதும் போல் அன்றும் அவன் தான் அவளை கல்லூரிக்கு அழைத்து சென்று கொண்டிருக்க, இதழினிதான் அவனிடம் மெல்ல பேச்சி கொடுக்க ஆரம்பித்தாள்.
தன் போனில் இருந்த செய்தியை அவனிடம் காட்டியவள்
“கே-வா இருக்கறவங்களால அவ்வளோ சீக்கரம் எதிர் பாலினத்தவர காதலிக்க முடியாதாமே. அப்புறம் எப்படி.. நீங்க மட்டும் இப்படி..?” என்று அவனிடமே அவள் கேட்ட போது,
“நானாடி கே..?” என்பது போல் அவளை ஒரு முறை பார்த்தவன், பின் “ஏன் காதலிக்க முடியாது…?” என்று அவளையே திருப்பி கேட்டதோடு,
“டீ… அன்னைக்கு நீ என்ன சொன்ன..? சார் இதெல்லாம் இயற்கைக்கு புறம்பானது. இப்ப கூட ஒன்னும் இல்ல… ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வாழ்க்கை-அ சந்தோஷமா வாழுங்கன்னு சொன்ன இல்ல” என்று அன்று அவள் சொன்னதுபோலவே அவன் சொல்லிகாட்ட, அன்று அவனுக்கு அட்வைஸ் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது அவள் மனம் வருந்தியது.
“சொன்னேதான்.. அதுக்காக சொன்ன என் கழுத்திலே தாலி-அ கட்டுவீங்களா..? ஊர் உலகத்துல வேற பொண்ணே இல்லையா..?” என்று ஆதங்கத்தோடு அவனை பார்த்து கேட்டவள்,
பின் “நான் வேணும்னா உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணோ, இல்ல நல்ல பையனோ பார்த்து தர்றேன். தயவு பண்ணி என்ன விட்டுடுங்களேன்?” என்று கைகூப்பி கெஞ்சியவளை பார்த்து அவனுக்கு இப்போது கோவம் தான் வந்தது.
இருந்தும் ‘இருடி.. இதுக்கெல்லாம் சேர்த்து உனக்கு ஒரு நாள் இருக்கு’ என்று உள்ளுக்குள் அவளை காய்ந்துகொண்டவன்,
“நோ..நோ..நோ.. நீ இதுக்கப்புறம் ஒரு பொண்ண பார்த்து.. நான் அவ கூட பேசி… பழகி.. எனக்கும் கவினுக்கும் உள்ள ரிலேஷன் ஷிப்-அ எக்ஸ்பிளை பண்ணி, அக்சப்ட் பண்ண வச்சி கல்யாணம் பண்றதுக்குள்ள போதும் போதும்-னு ஆகிடும். அதனாலதான் என்ன பத்தி எல்லாமே தெரிஞ்ச உன்ன நான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டது” என்று கூலாக சொன்னவனை, அவள் முறைத்து பார்க்க
அவனோ, “டீ… நீ கவின்-அ அக்சப்ட் பண்ணிக்க மாட்டியா..?” என்றான் வேண்டுமென்றே அவளை வெறுப்பேத்தும் விதமாக.
அவனின் கேள்வியால் அவளுக்குதான் எங்கு சென்று முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை.
அவன் மீது வெளிப்படையாக காட்ட முடியாத கோவத்தில் கைகளை இறுக மூடி திறந்தவள், “ஏன் கவின் சார் என்ன அக்சப்ட் பண்ணிக்கிட்டாரா..?” என்றாள் அவனை கேள்வியாய் பார்த்து.
“யா ஷியூர். நீயும் அக்சப்ட் பண்ணிக்கோ.. நீ, நான், கவின்னு ஹாப்பியா வாழலாம்” என்று சந்தோஷகுரலில் சொன்னவன்,
“யாருக்கு கொடுத்து வைக்கும் இந்த மாதிரியான ஒரு லைஃப்-லாம்” என்று பெருமிதமாக சொன்னவனை கேவலாமாக ஒரு பார்வை பார்த்தவள்,
“கார்-அ கொஞ்சம் ஓரமா நிறுத்துறீங்களா..?” என்றாள்.
“ஏன் இதழ்..? என்னோட பதில்ல இம்பிரஸ் ஆகி என்ன கிஸ் பண்ண போறீயா..?” என்று கேட்டவாறே அவனும் காரை ஓரமாக நிறுத்த,
நிறுத்திய வேகத்திலேயே கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவள், “இம்பிரஸ் ஆகல.. இரிட்டேங்க்-ஆ இருக்கு” என்றவள், “நான் பஸ்லே போய்க்கறேன்” என்றதோடு கார் கதவையும் அடித்து சாற்றிவிட்டு செல்ல, அந்த ஜனரஞ்சமான சாலையில் செல்லும் அவளை தடுக்கும் வழிதெரியாது காரிலேயே அமர்ந்திருந்தான் ரிஷப் நந்தன்.
செல்லும் வழியிலேயே கை காட்டி பேருந்தில் ஏறிகொண்டவளுக்கு உள்ளுக்குள் அப்படியொரு சந்தோஷம். முதன் முறையாக அவனை ஏய்த்துவிட்டு வந்ததிருப்பதை நினைத்து.
அத்தோடு புகழின் உச்சத்தில் இருப்பவன் நிச்சயம் இந்த ஜனரஞ்சமான இடத்தில் தன்னை பின் தொடரமாட்டான் என்று நினைத்தவளுக்கு வெகு நாட்களுக்கு பிறகு சுதந்தர வானில் சிறகடித்து பறப்பது போல் இருந்தது.
“ச்சீ.. ச்சீ.. என்ன கேரக்டர் அவன்.. கே-வாவும் இருப்பானாம்.. அதே சமயம் பொண்டாட்டியும் வேணுமாம் இவனுக்கு. இதுல கொடுத்துவச்ச லைஃப்-னு பெருமிதம் வேற” என்று மனதிற்குள்ளே சொல்லிகொண்டவளுக்கு அவன் பேச்சை நினைத்து இப்போதும் உமட்டிகொண்டுதான் வந்தது.
வெகு நாட்களுக்கு பிறகு, இப்படி பேருந்தில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருப்பதே அவள் மனதிற்கு சற்று இதமாக இருந்ததோடு பிடித்தும் இருந்தது.
அவள் சென்ற பேருந்து வேறு பேருந்து நிலையத்தில் பத்து நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அவளையும் சேர்த்து ஏழு பேர்தான் அமர்ந்திருந்தனர்.
தன்னை மறந்து ஆசுவாசமாக அவள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தருணம் அது,
“டீ..” என்றவாறே அவள் தோள் மீது கைப்போட்டவாறு அவளை ஒட்டி அவன் அமர, அவனின் குரலாலும், ஸ்பரிசத்தாலும், நெருக்கத்தாலும் அவளுக்குதான் உடலே தூக்கி வாரிப்போட்டுவிட்டது.
நிச்சயம் தன்னை பின் தொடரமாட்டான் என்று நினைத்திருந்தவளுக்கு தன் பக்கத்தில் இப்படி உரசிகொண்டு அமர்ந்திருப்பவனை பார்த்து அதிர்ச்சிதான்.
தன்னை அதிர்ந்து பார்ப்பவளை பார்த்து “என்ன வர மாட்டன்னு நினைச்சியோ..?” என்றான் கண்களில் குறும்பு மின்ன ரிஷப்.
செல்லும் அவளை தடுக்கமுடியாமல் முதலில் திணறியவனுக்கு அப்போதுதான் சேஃப்டிக்காக எப்போதும் காரிலிருக்கும் மாஸ்க் மற்றும் கேப் நியாபகத்திற்கு வந்தது.
அதை எடுத்து அணிந்து கொண்டவன், காரையும் ஓரிடத்தில் நிறுத்திவிட்டுதான் அவள் இருக்கும் பேருந்தில் ஏறினான்.




