Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
0

அத்தியாயம் - 27

January 30, 2026
சந்தோஷ் குணா
0
9 min read
அத்தியாயம் - 27
Hero - Music Director, Heroine - Music student

பால்கனியில் நின்று அவன் புகைத்து கொண்டிருக்க, அருகில் சென்று அவன் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி புகைத்தவனோ, “சிஸ்டர் எங்க டார்லிங்..? அந்த ரூம்-லயா..?” என்க,  அவனின் கேள்விக்கு ஆமாம் என்பது போல் தலையை மட்டும் அசைத்தான் ரிஷப்.

“அப்புறம்… சிஸ்டர்-கிட்ட உன் லவ்-வ சொல்லிட்டியா..? முக்கியமா நீ கே இல்லன்னு கன்ஃபார்ம் பண்ணிட்டியா..?” என்று விழிகளில் ஆர்வத்தை தேக்கி கேட்டவனின் கையிலிருந்த சிகரெட்டை வாங்கி ஒரு பஃப் இழுத்து புகையை வெளியில் விட்டவன்,

“என்ன சொல்ல..? என்ன சொன்னாலும் கேக்கற மைண்ட்-ல அவ இல்ல கவின்..” என்று நிறுத்தியவன்,

“அவளுக்கு என்ன புடிக்கலடா… அவள பொறுத்த வரைக்கும் நான் தப்பானவன்.” என்றான் வலிகளை விழுங்கி கொண்டு.

அவனை இப்படி பார்க்க கவினுக்குமே கஷ்டமாகத்தான் இருந்தது.

ஆறுதலாக அவன் முதுகை வருடிவிட்டவன், அதன்பின்னே “அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா..? நீதான் டார்லிங் எல்லாத்தையும் எடுத்து சொல்லி சிஸ்டருக்கு புரிய வைக்கணும்..” என்று சொன்னபோது,

இருகையையும் தலைக்குமேல் உயர்த்தி கும்பிடு போட்டவன், “நான் அவளுக்கு புரியவைக்கவும் வேண்டாம். அவ என்ன புரிஞ்சிக்கவும் வேண்டாம். அவ நினைக்கறமாதிரி நான் தப்பானவனாவே இருந்துட்டு போறேன். அவ என்ன கே-வா நினைக்கிறாளா நினைச்சிட்டு போகட்டும். அவளா எப்போ என்ன புரிஞ்சிக்கிறாளோ அப்போது புரிஞ்சிக்கட்டும். நான் வெயிட் பண்றேன்.” என்றான் சற்று முன் நடந்த நிகழ்வை மனதில் வைத்து.

ஆம்.. அவன் தன்னை புரியவைக்க போய்தானே பேச்சி வேறு மாதிரியாக முடிந்திருந்தது. அதனாலே அவர்கள் விஷயத்தில் அவன் இப்படியொரு முடிவை கண்டிருந்தான்.

புரியவைப்பதை விட புரிந்துகொள்வதில்தானே காதலின் அழகு இருக்கிறது.

அதேசமயம் அவள் தன்னைவிட்டு விலகி செல்வதற்கான வாய்ப்பை தரப்போவதில்லை என்பதிலும் உறுதியாகவே இருந்தான் ரிஷப் நந்தன்.

அவன் முடிவாய் இப்படி சொல்லியிருக்க, மேற்கொண்டு இது குறித்து கேட்க கவினுக்கும் விரும்பவில்லை.

பின் ரிஷப் தான் “அம்மா என்ன சொன்னாங்க..?” என்று அவனிடம் கேட்டபோது,

“அவங்க ஓகே தான்…” என்று இழுத்த கவின் “என்ன..? உன் கல்யாணத்த பார்க்க முடியலன்னு ஃபீல் பண்ணாங்க” என்று நிறுத்திவிட்டு, “அப்பாவும் கூட” என்றான் அவன் முகத்தை பார்த்து.

“நான் கேட்ட கேள்விக்கு மட்டும் நீ பதில் சொன்னா போதும் கவின்” என்று பதிலுக்கு சுருக்கென்று சொன்னவனுக்கு ஒருபக்கம் தாயை நினைத்தும் வருத்தமாகத்தான் இருந்தது.

அந்த வருத்தத்தில் கூட சுதாகரனுக்கு அவன் இடம் கொடுக்கவில்லை.

நெறிப்பொட்டை தேய்த்துவிட்டவாறே எப்படி அனைத்தையும் சரிசெய்வதென்ற யோசனையோடே அவன் நின்றிருக்க, இருதலை கொல்லியாக தவித்துக்கொண்டிருக்கும் அவன் நிலையை பார்த்து கவினுக்குமே கஷ்டமாகித்தான் போனது.

“பாவம் என் டார்லிங் ரொம்ப கஷ்டப்படுது” என்று சொல்லி ஆறுதலாக கவின் அவனை அணைக்கவும், இதழினி அறைக்கதவை திறந்துகொண்டு அங்கு வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அவளை பார்த்த கவின் அணைப்பை விலக்காலமே அவளை பார்த்து புன்னகை செய்ய,

இருவரும் நின்ற கோலத்தை பார்த்தவளோ, சொல்ல வந்ததை கூட சொல்லாமல் அடுத்தகணமே அறைக்கதவை டொம்மென்று சாற்றிவிட்டு உள்ளே சென்றிருந்தாள்.

அவள் சென்ற பின்தான் கவினுக்கு அவர்கள் இருவரும் இருந்த நிலை புரிய, “சாரி டார்லிங்…” என்றவாறே அவசரமாக அவனை விட்டு விலகியவன்,

“நான் வேணும்னா சிஸ்டர்-ட்ட..” என்று நகர்ந்தவனின் கரத்தை பற்றி தடுத்த ரிஷப் நந்தனோ “நீ ஒரு ஆணியும் புடுங்கவேண்டாம்” என்றான் கடுப்படித்த குரலில்.

நிச்சயம் அவனுக்கும் தெரியும் அவள் இதை தவறாகதான் நினைத்திருப்பாள் என்று.

அறைக்குள் நுழைந்த இதழினியோ தலையை பிடித்துகொண்டு அப்படியே அமர்ந்துவிட்டாள்.

அவன் பற்றி எங்கிருந்து யோசிப்பதென்றே அவளுக்கு தெரியவில்லை. தாரிகா சொன்னது போல் அவன் தன்னை காதலிக்கிறான் என்றால் பின் கவின் உடன் அவன் ஏன் இத்தனை நெருக்கம்.

இதை பற்றி சம்மந்தபட்டவனிடமே கேட்பதற்காகத்தான் அவள் இப்போது வெளியில் வந்தது கூட.

ஒரு கே-வாக இருந்துகொண்டு அவனால் எப்படி ஒரு பெண்ணை காதலிக்க முடியும்..? ஒரு வேளை இதுவும் அவன் சொல்லும் பொய்களில் ஒன்றாக இருக்குமோ..?

அப்படியே பொய்யென்றால் அவன் ஏன் போனை சாக்காய் வைத்து தன்னை அடிக்கடி அவன் பிளாட்டிற்கு வரவழைத்தான்…?

தன் பிறந்தநாளுக்கு நேரில் வந்து அவன் வாழ்த்த என்ன அவசியம் இருக்கிறது..? என்றும் யோசித்தவளுக்கு சற்று முன் பார்த்த நிகழ்வும் சேர்த்து குழப்ப, தலையே வெடிப்பது போல இருந்தது.

அவன் தன்னை காதலிக்கிறானோ.. இல்லையோ.. அவனையும் அவளுக்கு பிடிக்கவில்லை.. அவன் காதலையும் அவளுக்கு பிடிக்க வில்லை. காரணம் அவளின் எதிர்பார்ப்புகள் முன் அவன் தான் பூஜ்ஜியமாக இருக்கிறானே.

அதுவும் சற்றுமுன் அவன் அளிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து சுத்தமாகவே அவனை வெறுத்திருந்தாள் இதழினி.

நடந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் அவளையும் மீறிக்கொண்டு அவள் உடல் நடுங்கின. கண்கள் கலங்கின.

அதேசமயம் எப்படியாவது இந்த வீட்டிலிருந்தும், அவனிடமிருந்தும் மொத்தமாக விலகி சென்று விட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தாள் இதழினி.

வீட்டிலிருந்தபடியே அவளுக்கான ஆடைகளை அவன் ஆர்டர் செய்திருக்க அதுவும் அரைமணிநேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்திருந்தது.

முதலில் அந்த ஆடைகளை அணியபோவதில்லை என்று பிடிவாதம் பிடித்தவள், பின் வேறு வழியின்றி அதிலிருந்த ஆடையை எடுத்து அணிந்தாள்.

அன்று முழுவதும் அவள் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. இரவு உணவை கூட அவன் தான் அவளுக்கு எடுத்து சென்றான்.

முதலில் வேண்டாம் என்று வீம்பு பிடித்தவள், பின் இலக்கியாவிற்கு போன் செய்துவிடுவேன் என்று அவன் மிரட்டிய பின் தான், பெயருக்கென்று இரண்டு வாய் உண்டாள்.

இரவு உணவை முடித்துவிட்டு சுமதியிடமும் கொஞ்ச நேரம் பேசியிருந்துவிட்டுதான் ரிஷப் அறைக்கு திரும்பியிருந்தான்.

நடந்த பிரச்சனையில் இரண்டு நாட்களாகவே சரியாக உறங்காததால் படுத்த உடனே ரிஷப் உறங்கிவிட்டான்.

அழுதழுது எப்போது அவள் உறங்கினாலோ காலையில் அவள் கண்விழிப்பதற்கே மணி ஏழாகியிருந்தது.

குளித்து முடித்தவளுக்கு அறைக்குள் அடைந்து கிடப்பதே ஒரு மாதிரியாக இருக்க, மெல்ல அறைக்கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.

வெளியில் வந்தவளின் பார்வையில் பட்டது என்னவோ படுக்கையில் மேலாடை இல்லாமல் மிக நெருக்கமாக ரிஷப்பும், கவினும் படுத்திருந்த காட்சி தான்.

பார்த்த கணமே “பெருமாளே” என்று முகம் சுளித்தவள், முகத்தையும் திருப்பிகொண்டு மீண்டும் அறைக்கே திரும்பியிருந்தாள்.

எப்போதும் கவின் தான் முதலில் கண்விழிப்பான். இன்று மாறாக ரிஷப் தான் கண்விழித்திருந்தான்.

கண்விழித்தவன் அப்போதுதான் கவின் தன் அருகில் உறங்கிகொண்டிருப்பதை கவனித்தான்.

“டேய்..” என்று அவன் தோளை தட்டி ரிஷப் எழுப்ப, கவினோ “குட் மார்னிங் டார்லிங்” என்றான் தூக்க கலக்கத்தில்.

பதிலுக்கு “மார்னிங் மார்னிங்” என்று சிரித்தபடி சொன்னவன், “நீ எப்போடா இங்க வந்த..?” என்க.

“டெய்லியும் உன்ன ஹக் பண்ணி தூங்கியே பழகிட்டனா.. நீ பக்கத்துல இல்லாம தூக்கமே வரல. அதான் நேத்து நைட்டே நான் இங்க வந்துட்டேன்” என்றவன் சிரித்துகொண்டே சொல்ல, ரிஷப்பும் அவன் சிரிப்பில் இணைந்து கொண்டான்.

அதன் பின் வந்த இரண்டு நாட்கள் கூட அவள் அறையிலேதான் இருந்தாள்.

அவனும் அவளிடம் எதுவும் பேசவில்லை.. அவளும் தான். ஏன் இருவரும் ஒருவர் ஒருவர் முகத்தை கூட பார்த்துகொள்ள வில்லை.

மருத்துவர் என்பதால் அவள் உடல் நலனை கருத்தில் கொண்டு சுமதிதான் அவளுக்கு ஏற்றார்போல் உணவை தயார் செய்து அவனிடம் கொடுத்தனுப்பினார்.

அந்த வீட்டில் அனைவருமே அவளை மகராணியாகதான் நடந்தினர். ஆனால் அவளுக்குதான் அங்கிருப்பது சிறைபோல இருக்க,

பின் அவள் தான், “நான் என் வீட்டு-க்கு போகணும்” என்று அவன் முன்னால் சென்று நின்றாள்.

மறுப்பேதும் தெரிவிக்காமல், அவனும் “சரி வா போகலாம்” என்றான் நானும் உன்னுடன் தான் வருவேன் என்பது போல்.

இவனோடு அங்கு செல்வதற்கு இங்கிருப்பதே மேல் என்று நினைத்தவள் பின் அந்த முடிவையும் கைவிட்டிருந்தாள்.

அவள் போனை அவளிடமே அவன் கொடுத்திருக்க அவளுக்குதான் யாருடனும் பேச விருப்பமில்லை.

அப்படியே பேசினால் அவள் வீட்டார் அவனையும், அவன் குடும்பத்தாரையும் ஆஹா.. ஓஹோ.. என்று புகழ்ந்து தள்ளுவார்கள். இல்லையேல் நீ அப்படிஇரு, இப்படி இரு என்று அவளுக்கு அட்வைஸ் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். அதனாலே அவர்களுடன் பேசவும் அவளுக்கு விருப்பமில்லாமல் போனது.

இரண்டுமுறை அவர்களாகவே அவளுக்கு அழைத்து பேசியதோடு சரி. அப்போது கூட அவள் விருப்பமில்லாமல்தான் பேசினாள்.

இதில் தாரிகா வேறு இரண்டு மூன்று முறை அவளை அழைத்திருந்தாள். அவள் இருந்த மனநிலைக்கு அவள் அழைப்பையும் இதழினி ஏற்கவில்லை.

எங்கே அறையை விட்டு வெளியில் சென்றால் அவன் வீட்டாருடம் பேச வேண்டுமே என்று பயத்தில் அறைக்குள்ளே இருந்துவிட்டாள்.

அதேசமயம் அவள் நிலையை புரிந்து கொண்டு அவர்களும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தால் முதலில் அறையை விட்டு வெளிவர தயங்கியவளுக்கு நாளாக நாளாக நான்கு சுவருக்குள் அடைந்து கிடப்பதே பெரிய அவஸ்தையாகத்தான் இருந்தது.

அதனாலே வேறு வழியில்லாமல் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று அவன் முன்னால் சென்று நின்ற போது. அதற்கும் அவன் மறுப்பு தெரிவிக்கவில்லை.

டைரக்டர் வர சொல்லியிருந்ததால் கவின் காலையிலேயே ஸ்டுடியோவிற்கு கிளம்பி சென்றிருக்க, அவளை கல்லூரியில் டிராப் செய்வதற்காக ரிஷப்-பும் கிளம்பி காத்திருக்க, அவளும் அப்போதுதான் கிளம்பி வெளியில் வந்தாள்.

உண்பதற்காக அவளையும் அழைத்து கொண்டு அவன் கீழே செல்ல, சுமதியோ சுதாகரனுக்கு உணவு பரிமாறி கொண்டிருந்தார்.

இருவரும் ஜோடியாக வந்ததை பார்த்த சுமதியின் கண்களோ சந்தோஷத்தில் கலங்கிதான் போயின.

உண்டு கொண்டிருந்த சுதாகரன் கூட அவர்களையேதான் பார்த்து கொண்டிருந்தார். ஆனால் அவளுக்குதான் அவர்கள் இருவரையும் பார்க்க ஒருமாதிரியாக இருக்க தலையை தாழ்த்தியபடியே வந்தாள்.

சேரை இழுத்துபோட்டு அவளை அமரவைத்தவன் அதன் பின்னே தனக்கான  இருக்கையில் அமர, ‘பார்த்தீங்களா…’ என்று விழிகளாலே சுதாகரனிடம் சுட்டிகாட்டினார் சுமதி.

அவளுக்கும் சேர்த்து அவனே தட்டையும் எடுத்து வைக்க, இருவருக்கும் சுமதிதான் பரிமாற ஆரம்பித்தார்.

இருவர் தட்டிலும் சுட சுட இட்லியை வைத்தவர், அவள் தட்டில் சிக்கன் கிரேவியை ஊற்ற போன தருணம், “ம்மா..” என்று அவரை தடுத்தவன்,

“சிக்கன்-ஆ..?” என்று கேட்டபோது, அவரோ “ஆமாம்டா உனக்கு பிடிச்ச சிக்கன் கிரேவிதான்” என்றார் சிரித்துகொண்டே சுமதி.

“இன்னைக்கு ஏகாதசி.. அவ  நான்வெஜ் சாப்பிடமாட்டா..” என்றவன் சொல்ல, அவன் கூறியதை கேட்டு, அவன் பெற்றோரை விட அவளுக்குதான் அதீத அதிர்ச்சி.

அதிலும் ‘ஏகாதசியை நான் எப்படி மறந்தேன்’ என்ற அதிர்ச்சியை விட  ‘அவன் எப்படி இதை நியாபகம் வைத்திருந்தான்..?’ என்ற பேரதிர்ச்சிதான் அவளுக்குள் அதிகம் இருந்தது.

கணவனை பார்த்து தொண்டையை சுமதி கனைக்க சுதாகரனும் அவரை பார்த்தார்.

‘புள்ளய பார்த்தாவது கத்துக்கோங்க’ என்று விழிகளாலேயே சுமதி சொல்வது சுதாகரனுக்கும் புரியவே செய்ய, அதன் பின் அவர் ஏன் தட்டிலிருந்து பார்வையை எடுக்கபோகிறார்.

“ஐய்யோ.. எனக்கு தெரியாதேடா.. சட்னியும் எதுவும் செய்யலையே..” என்று வருத்தம் தொணித்த குரலில் சொன்னவர், “ஒரு ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்றியாமா..?” என்று கேட்டபோது,

“ம்மா அதெல்லாம் வேண்டாம்.. காலேஜ்-க்கு லேட் ஆகுது” என்றவன் அங்கிருந்த இட்லி பொடியை எடுத்து அவளுக்கு வைத்ததோடு தனக்கும் வைத்துகொள்ள,

“டேய் அவதன ஏகாதசி-க்கு சாப்பிடமாட்டா..  நீ சாப்பிடலாம் இல்ல..” என்றார் வருத்தம் தொணித்த குரலில் சுமதி.

“ப்ச்… அவ சாப்பிடாம நான் மட்டும் எப்படி மாம்..” என்றவன் சொல்ல, அதன் பின் சுமதியும் அவனை வற்புறுத்தவில்லை.

யாருக்காகவும் இதுநாள் வரை தன் விருப்பதை விட்டுக்கொடுக்காதவன் அவளுக்காக விட்டுகொடுத்திருப்பதை நினைத்து  உள்ளுக்குள் பூரித்து போனது அந்த தாய் உள்ளம். அவரும் அவனை இப்படி பார்க்கத்தானே ஆசைப்பட்டார்.

“ம்மா.. அப்படியே இதழ் என்னென்னைக்குக்கு நான்வெஜ் சாப்பிடமாட்டான்னு செல்வி-அ கேட்டு வச்சிக்க சொல்லுங்க. என்ன புடிக்கும் என்ன புடிக்காதும்னு கூட” என்றவன் சொல்ல, அவரும் “சரிடா” என்க, அவளுக்குதான் அனைவர் முன்னிலையிலும் உணவு உண்ண சங்கடமாக இருந்தது.

இட்லியை வாயில் வைக்காமல் தட்டிலேயே அவள் கோலம் போட்டுகொண்டிருக்க,

அவளை கவனித்தவனோ, “நான் வேணும்னா ஊட்டிவிடட்டுமா இதழ்..?” என்று அத்தனை பேர் முன்னிலையிலும் கேட்டுவிட, அவளுக்குதான் ஒரு மாதிரியாக போனது.

“ம்ஹீம்…” என்று வேகவேகமாக தலையை ஆட்டியவளுக்கு, தட்டிலேயே முகத்தை புதைத்து கொள்ளலாம் போல் இருந்தது.

அவள் படும் அவஸ்தையை பார்த்து கண்கள் மின்ன சிரித்து கொண்டவன், “அப்போ சீக்கரம் சாப்பிடு. கால்ஜ்-க்கு போக வேண்டாமா..?” என்று கேட்க, அதன் பின்னே அவளும் வேக வேகமாக உண்ண ஆரம்பித்திருந்தாள்.

வந்தது முதல் அவள் பேசாமல் இருக்க, அவளை பேச வைக்கும் பொருட்டு தட்டில் தனக்கான உணவை வைத்துகொண்டு அமர்ந்த சுமதி “எம்மா இதழ்..” என்று அவளை அழைக்க, அவரின் திடீர் அழைப்பால் அவளுக்குதான் வாயிலிருந்த உணவால் புரையேறிவிட்டது.

பின் அவன் தான் அவள் தலையை தட்டிகொடுத்து தண்ணீரையும் கொடுத்து குடிக்கவைத்தவன்,

“ம்மா இதழினி” என்றான் எனக்கு மட்டும் தான் அவளை ‘இதழ்’ என்று அழைக்க உரிமை உள்ளது போல்.

அவன் சொல்லவருவது அவருக்கும் புரிய, “சரிடா இதழினி” என்று திருத்தி சொன்னவர், “உனக்கு நல்லா சமைக்க வருமாமா..?” என்று அவளைப்பார்த்து கேட்க,

“சூப்பரா ஃபில்ட்டர் காஃபி போடுவா..” என்றான் அவன் முந்திக்கொண்டு.

அவன் கூறியதை கேட்டு மற்ற இருவரும் சிரித்துவிட, அவனுக்கு புரியவில்லை இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று.

“டேய் அதுக்காக பசிக்கும் போதெல்லாம் ஃபில்டர் காஃபியே குடிச்சிட்டு இருக்க முடியுமா..?” என்று சிரித்து கொண்டே மகனை பார்த்து கேட்டவர்,

“சொல்லு இதழினி உனக்கு என்னலாம் சமைக்க வரும்..?” என்றார் இப்போது அவளை பார்த்து.

“எ… எனக்கு..” என்று பதற்றத்தில் அவள் தடுமாற,

“ம்மா.. சமைக்கதான் இங்க செல்வி இருக்கா இல்ல.. அப்புறம் எதுக்கு ம்மா தேவையில்லாத இந்த வைவா” என்று தாய் என்றும் பார்க்காமல் பொண்டாட்டிக்காக அவன் வரிந்து கட்டிகொண்டு வர, அதை பார்த்து அந்த தாயுள்ளம் கோவம் கொள்ளாமல் மகிழ்ச்சிதான் அடைந்தது.

அவளுக்காக அவன் வீட்டில் அவன் தானே பேசியாக வேண்டும்.

இன்று வேண்டுமானால் அவர்கள் வீட்டில் அனைத்திற்கும் வேலையாட்கள் இருந்திருக்கலாம் ஆனால் கல்யாணம் ஆன புதிதில் வேலையையும் பார்த்துகொண்டு வீட்டையும் கவனித்துகொள்ள சுமதி பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல.

அதுவும் மருத்துவ துறையில் இருப்பவர்கள் எப்போது எமெர்ஜ்னசி என்றாலும் கால நேரம் பார்க்காமல் ஓடித்தானே ஆக வேண்டும்.

அதிலும் சுமதி ஒரு மகப்பேறு மருத்துவர்.

அதனாலே சமையலுக்காவது வேலையாள் வைத்துகொள்ளலாம் என்று சுமதி சொன்ன போது சுதாகரனின் அம்மா அதாவது அவரின் மாமியார் அதற்கு ஒத்துகொள்ளவே இல்லை.

அந்நேரத்தில் சுதாகரனும் அவருக்காக அவர் தாயாரிடம் பேசவில்லை.

அதனால் அப்போதே சுமதி முடிவு செய்துவிட்டிருந்தார் அந்த நிலை தன் வீட்டிற்கு வரும் பெண்ணிற்கு வர கூடாது என்று.

அத்தோடு தன் மகன் தன் கணவன் போல் இருந்துவிட கூடாது என்று அனைத்தையும் அவனுக்கு சொல்லி கொடுத்துதான் வளர்த்தார். அந்த வளர்ப்பு வீண்போகவில்லை என்ற சந்தோஷம் தான் அவருக்கு.

இருந்தும் மேற்கொண்டு அவனை சீண்ட நினைத்தவர் மீண்டும் அவளை அழைத்து, அவள் பொற்றோர் குறித்து கேட்க,

“இதழ்-க்கு அம்மா அப்பா கிடையாது.. பாட்டிதான் வளர்த்தாங்க.. அவளுக்கு அப்புறம் சித்தி, சித்தப்பாதான் இதழ்-அ பாத்துகிறாங்க.. இதழ்-க்கு ஆரண்யா-ன்னு ஒரு சிஸ்டரும், ஹரண்-னு ஒரு தம்பியும் இருக்கான். ஆரண்யா பிளஸ் டூ… ஹரன் நயன்த் படிக்கிறான். ரொம்ப கியூட்-ஆ இருப்பான். அவ சித்தப்பா ஆக்டிங் டிரைவரா இருக்காரு.” என்று ஒரே மூச்சில் அவர் கேள்விக்கான பதிலை அவனே சொல்லி முடித்திருக்க, அவர்கள் மட்டும் அல்ல அவளும் விழிகள் விரித்து அவனைத்தான் ஆச்சரியமாய் பார்த்தாள் இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியுமென்று.

“டேய் நான் அவ கிட்டதானே கேட்டேன்..?” என்று சுமதி போலியான கோவத்தோடு கேட்டபோது,

அவனோ, “உங்களுக்கு பதில்தானே வேணும்மா.. அத யார் சொன்னா என்ன..?” என்று கேட்டு சாமர்த்தியமாக அவரையும் மடக்கினான் ரிஷப்.

அவனை அவர் ஓரப்பார்வையால் முறைத்தவண்ணமாகவே இருக்க, பின் அவன் தான் “ம்மா.. அவளே இப்பதன இங்க வந்திருக்கா.. கண்ண கட்டி காட்டுல விட்டமாதிரி இருக்கும். அவ ரிலாக்ஸ் ஆக கொஞ்சம் டைம் கொடுங்க ம்மா.. அவ நார்மல் ஆனதுக்கப்புறம் உங்க வைவா-வ கண்டினியூ பண்ணிக்கோங்க. சரியா..?” என்று கேட்டவாறே அவன் கை கழுவி விட்டு எழ, சுமதிக்கும் அவன் கூற்று சரியென்றுதான் பட்டது.

அதனாலே அவரும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

ஆனால் அவள் தான் இன்னுமே அதிர்ச்சி குறையாமல் அவனையே பார்த்திருந்தாள்.. இவனுக்கு எப்படி தன் குடும்ப விவரங்கள் எல்லாம் தெரியும் என்ற யோசனையோடே.

9 minreading time
0

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels