Back to All Novels
நாவல்கள்மாயோனின் மதுரகானத்திலே...!!!
(5.0)

அத்தியாயம் - 24

January 29, 2026
சந்தோஷ் குணா
5.0(1 reviews)
9 min read
அத்தியாயம் - 24
Hero - Music Director, Heroine - Music student

அவள் குறித்த ஆழ்ந்த யோசனையோடே காரில் அவன் அமர, பின் கவின் தான் அவன் சிந்தையை கலைக்கும் விதமாக

“எப்படியோ அம்மா ஆசைப்பட்டமாதிரி ஆறு மாசத்துக்குள்ளயே உனக்கு கல்யாணம் ஆகிடுச்சி” என்று சந்தோஷ குரலில் சொல்ல, ரிஷப்போ எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் செய்திருந்தான்.

பின் ஏதோ நினைவுவந்தவனாய் கவின், “டார்லிங்” என்று அதிர்ச்சியோடு அவனை அழைக்க,

அவனோ, “சொல்லு” என்றான் சாலை மீது பார்வையை பதித்தபடியே.

“அம்மா-ன்னு சொன்னதுக்கப்புறம் தான் எனக்கு நியாபகமே வருது.. காலையிலேந்து அம்மா போன் பண்ணிட்டே இருக்காங்க.” என்றவாறே அவருக்கு அழைப்பதற்காக போனை கையில் எடுத்தவன், “அப்படியே உனக்கு கல்யாணம் ஆன விஷயத்தையும் அம்மாவுக்கு இன்ஃபார் பண்ணிடறேன்” என்று சொல்ல,

ரிஷப்போ ஒன்றை கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடி மறுக்கையால் அவன் கையிலிருந்த போனை பிடுங்கியிருந்தான்.

அவன் செயல் புரியாமல் “வொய் டார்லிங்” என்று கவின் கேட்டபோது,

அவனோ “நான் இதழோட அவங்க முன்னாடி போய் நின்னு இன்பஅதிர்ச்சி கொடுத்துக்கறேன்” என்றானே அவன் சர்வ சாதாரணமாக.

“எது.. இது இன்ப அதிர்ச்சியா..? என்று பதிலுக்கு கவின் கேட்ட தோணியில் ரிஷப் நந்தனுக்கோ சிரிப்பு வந்துவிட்டது.

“அவன் அவன் பொண்ணு வீட்டுக்கு தெரியாம.. இல்ல.. பையன் வீட்டுக்கு தெரியாமதான் கல்யாணம் பண்ணுவான்.. ஆனா இந்த உலகத்துலே நீ ஒரு ஆள்தான்டா பொண்ணுக்கே தெரியாம கல்யாணம் பண்ணியிருக்கறது..” என்று சொல்லி நன்றாக அவன் புறம் திரும்பி அமர்ந்தவன்,

“உண்மை-அ சொல்லு கண்ணு முழிச்சா கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டான்னுதன.. கண்ணுமுழிக்கறதுக்கு முன்னாடியே நீ தாலி-அ கட்டுன..?” என்று அவனை கணித்து ஆள்காட்டி விரல் நீட்டி கேட்ட கவினை பார்த்து, பதில் சொல்லாமல் கீழ் அதரங்களை கடித்தப்படி சிரித்தான் ரிஷப்.

அவன் சிரிப்பின் அர்த்தம் புரிந்தவனோ “அடப்பாவி… சந்துல சிந்து பாடுறவன பார்த்திருக்கேன்.. ஆனா கச்சேரியே பண்றவன இப்பத்தான் பார்க்கறேன்” என்று இரு கரத்தாலும் கவின் அவனை சுட்டிகாட்டி சொல்ல, அவனோ வெடித்து சிரித்துவிட்டான்.

அங்கிருந்து கிளம்பிய இருவருமே நேராக சைபர் கிரைம் அலுவலகத்திற்குதான் சென்றனர்.

ஐ.ஜி கூட அங்குதான் இருந்தார்.

இன்னும் சம்மந்தபட்டவர்களை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று சொன்னபோது ரிஷப் நந்தன் முகமே மாறிவிட்டது.

பின் அவன் தான் ஹேக்கர்ஸ்-களை வைத்து முயற்ச்சிகலாம் என்று சொன்னபோது அவர்களும் அதற்கான வேலைகளில் இறங்கினர்.

‘பொண்டாட்டி’ என்று சொன்னவன் இப்படி பொசுக்கென்று தாலி-யையும் கட்டியிருப்பான் என்று சற்றும் அவள் குடும்பத்தார் எதிர்ப்பார்க்கவில்லை.

அவனின் செயல் குறித்து அதிர்ச்சி அடைவதா.. இல்லை.. அவளுக்கு திருமணம் ஆனதை நினைத்து சந்தோஷப்படுவதா என்றே சண்முகத்திற்கும் இலக்கியாவிற்கும் புரியவில்லை.

இருந்தும் வேறு வழியின்றி அந்த திருமணத்தை ஏற்றுக்கொண்டனர். பெண்கள் இருவரின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு.

உண்ண வைக்கும் பொருட்டு ஆரண்யாவையும், ஹரணை அழைத்துகொண்டு தாரிகா அங்கு உள்ள கேண்டினுக்கு சென்றிருக்க,

அப்போதுதான் செவிலியர் அவள் கண்விழித்துவிட்டதாக சொல்ல, இலக்கியா மட்டும் உள்ளே சென்றாள் அவளை பார்க்க.

அறைகுறை மயக்கத்தில் மிக சோர்வாக இருந்தவளை பார்த்த மாத்திரத்திலேயே இலக்கியாவிற்கு கண்களை கரித்துகொண்டு வர, “ஏன் இதழினி இப்படி பண்ண..?” என்றாள் அழுகுரலில் இலக்கியா.

செவிலியர் மற்றும் இலக்கியாவின் உதவியோடு மெல்ல எழுந்து அமர்ந்தவளுக்கு, வயிறு மற்றும் தொண்டை பகுதியில் அப்படியொரு வலி.

அவளால் சுத்தமாக முடியவில்லை.

அவளின் முகக்குறிப்பை படித்த அந்த செவியரோ, அனுசரனையாக அவள் தோளை தொட்டு “ரொம்ப பெயின்-ஆ இருக்கா..?” என்று அன்பொழுக கேட்ட போது அவளால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை.

காரணம் காலையில் அவள் வாங்கிய திட்டு அப்படி. எங்கே கண்விழித்தாள் மீண்டும் திட்டிவிடுவார்களோ என்ற பயத்தால் தானே சுயம் திரும்பி வெகுநேரமாகியும் அவள் கண்களை திறக்கமால் இருந்தது.

அந்த அறைகுறை மயக்கத்திலும் குரல் வந்த திசை நோக்கி பார்த்தவளுக்கு செவிலியரும், அந்த இடமும் புதிதாகத்தான் இருந்தது.

“நான் எங்க இருக்கேன்.?” என்று விழிகளை சுழலவிட்டவாறே கேட்டவளுக்கு அந்த செவிலியர் மருத்துவமனையின் பெயரை சொல்ல,

பெயரை கேட்டவளுக்கோ மயக்கமெல்லாம் எங்கு சென்று ஓடி ஒளிந்ததென்றே தெரியவில்லை.

காரணம் அந்த மருத்துவமனை பற்றியும் அவளும் அறிந்திருந்தாள். அதையும் தாண்டி தொட்டதிற்கெல்லாம் பில் என்ற பெயரில் இலட்ச்ச கணக்கில் பணம் வசூலிப்பதையும் அவள் அறிந்துதான் வைத்திருந்தாள்.

தான் பிழைத்த அதிர்ச்சியை விட, அவர்கள் இருக்கும் நிலையில் இந்த ஹாஸ்பிட்டல் பில் கட்ட என்ன செய்யப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது இதழினிக்கு.

“ஐய்யோ சித்தி.. என்ன ஏன் காப்பாதுனீங்க…?  இங்க ஏன் கூட்டிட்டு வந்தீங்க..?” என்று சொல்லும் போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் உருள,

“ச்சு அழக்கூடாது இதழினி..” என்றவாறே அவள் கண்ணீரை துடைத்துவிட்டவள், “நீ ஏன் இதழினி இப்படி பண்ண..? எதுவா இருந்தாலும் என் கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம் இல்ல..?” என்று இலக்கியா குறைபட்டு கொண்டபோது,

இதழினிக்குமே அழுகை அடைத்தது செல்போனில் தான் பார்த்த செய்திகளை நினைத்து.

“எனக்கு வேற வழி தெரியல சித்தி.. என்னால நம்ம குடும்பத்துக்கு அவமானமும் அசிங்கமும் மட்டும்தான்..” என்று முகத்தை மூடிகொண்டு அவள் அழ, அவளை அப்படிப்பார்க்க இலக்கியாவிற்குமே சங்கடமாகத்தான் இருந்தது.

“இங்க பாரு இதழினி” என்று அவள் முகத்திலிருந்த கையை வலுக்கட்டாயமாக எடுத்துவிட்டவள்,

“யார் சொன்னா உன்னால நம்ம குடும்பத்துக்கு அவமானம் அசிங்கம்-னு.. அந்த தம்பிதான் எல்லாத்தையும் சரிபண்ணிட்டாரே..” என்றவள் சொன்னபோதுதான் இத்தனை பிரச்சனைக்கும் காரணமான அவனை நினைத்து அவளுக்கு கோவம் வந்தது.

அந்த கோவத்தோடே “யாரு அந்த பொறுக்கியா..?” என்று ஆத்திரம் அடைக்ககும் குரலில் கேட்ட போது,

“ச்சு மெதுவா பேசு” என்ற இலக்கியாவோ, அங்கு கேஸ்பைல் எழுதிகொண்டிருந்த செவிலியரை கண்களால் சுட்டிக்காட்டினாள்.

“அவனுக்குலாம் என்ன சித்தி மரியாதை வேண்டி கிடக்குது..” என்று குரலை தாழ்த்தியே கேட்டவள்,

“என்னோட இந்த நிலமைக்கு காரணமே அந்த பொறுக்கிதான்..” என்று ஆத்திரத்தோடு சொல்ல,

“ப்ச்.. மாப்பிளை-அ அப்படிலாம் மரியாதை குறைவா சொல்ல கூடாது” என்றாள் கண்டிப்பான குரலில் இலக்கியா.

அவள் அவ்வாறு கூறியதை கேட்டு “ஏதே.. மாப்பிளையா..?” என்பது போல் மேலும் அவளை அதிர்ந்து பார்த்த இதழினி,

“என்ன சித்தி சொல்றீங்க..?” என்று அதிர்ச்சியோடே வினவ,

“நீ செஞ்ச பூஜை உன்ன கைவிடல இதழினி.. எங்க இந்த பிரச்சனையால உங்க இரண்டு பேரையும் கரைசேர்க்க முடியாம போய்டுமோன்னு நாங்க ரொம்பவே பயந்துட்டோம். நாங்களா தேடி இருந்தா கூட உனக்கு இப்படியொரு வரன் கிடைச்சி இருக்காது. மாப்பிளை ரொம்ப நல்லவரு.. பிரச்சனை-ன்னு வந்ததும் யாரு எப்படி போனா எனக்கென்னனு ஓடி ஒளியாம கொஞ்சம் கூட யோசிக்காம உன கழுத்துல தாலிகட்டியிருக்கார்னா….” என்று இலக்கியா சொல்லிகொண்டிருக்கும் போதே, அதிர்ச்சியோடு கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை குனிந்து பார்த்தவள், அடுத்த கணமே அதிர்ச்சியில் மயங்கி சரிந்துவிட்டாள்.

சொன்னது போலவே கவின் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்திருக்க, ரிஷப்பும் அங்குதான் இருந்தான்.

அவர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல்,

“என் லைஃப் ஒன்னும் ஓப்பன் புக் இல்ல.. எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் ஷேர் பண்ணறதுக்கு.. நானும் உங்க எல்லார் போலவும் சாதரண மனுஷன் தான்.  எனக்கும் பிரைவேசி இருக்கு, எல்லாத்தையும் வெளிப்படையா உங்க கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது. என்ன கார்னர் பண்றதா நினைச்சி ஏன் சம்மந்தமே இல்லாம அந்த பொண்ணுங்கள இந்த பிரச்சனையில இழுத்து விட்டுறீங்க..?” என்று கேட்டவன்,

“எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் என்னால எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருக்க முடியாது. அண்ட் தென் ஃபைனலி ஒன் திங் உங்க ரிஷப் நந்தனுக்கு அவன் மனசுக்கு புடிச்ச பொண்ணோட கல்யாணம் ஆகிடுச்சி. ஆக்ச்சுவலி அந்த வீடியோ அண்ட் போட்டோஸ்-அ நெட்-ல போட்டவங்களுக்குதான் நான் தேங்க்ஸ் சொல்லணும். தட்ஸ் இட்” என்று பொட்டில் அறைந்தாற் போல் சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து நகர,

அவன் பேசுவதையெல்லாம் லைவ்-வில் பார்த்துகொண்டிருந்த சுதாகரன் தன் அலைபேசியை எடுத்து தன் மனைவி சுமதி-க்குதான் அழைத்தார்.

இரண்டு மூன்று அழைப்பிலேயே சுமதி எடுத்துவிட, “என்ன சுமதி ரிஷப் பிரஸ்கிட்ட என்னென்னவோ சொல்லிட்டு இருக்கான்.. நீ அவன் பிரஸ் மீட் பார்த்தியா..?” என்று கேட்டபோது

அவரோ “இல்லங்க இப்போதான் பேஷண்ட் பார்த்து முடிச்சேன்.. என்ன சொல்லியிருக்கான்..?” என்று கேட்டவாறே ரிமோட்டால் டீ.வி-யை ஆன் செய்தார்.

நியூஸ் சேனலில் அவன் பேட்டியே திரும்ப திரும்ப ஓடிக்கொண்டிருக்க, அதை பார்த்தவரோ,

“ஏங்க.. அவன் பிரச்சனை-அ சமாளிக்கறதுக்காக அப்படி சொல்லியிருப்பாங்க.. கல்யாணம் பண்ணியிருந்தா போட்டோஸ் போட்டு இருக்கமாட்டானா..?” என்றார் சுமதி.

“அவன் தான் ஏகத்துக்கும் பிரைவேசி-ன்னு  சொல்லிட்டானே.. அப்புறம் எப்படி போட்டோஸ் போடுவான்.. நேத்து வேற இரண்டு பொண்ணுங்க கூட பர்த்டே பார்ட்டி கொண்டாடுற மாதிரி வீடியோஸ் போட்டோஸ் வைரல் ஆச்சி… இன்னைக்கு என்னன்னா கல்யாணம் பண்ணிடன்னு சொல்றான்.. நீ அவனுக்கு போன் பண்ணி எதுவும் கேட்கலையா சுமதி..?” என்றார் மகன் மீதான அக்கறையில் சுதாகரன்.

“ஐய்யோ… ஏங்க இப்படி பயப்படுறீங்க..? நீங்களாம் எப்படிதான் போலீஸ்-ஆ இருந்தீங்களோ..?” என்று கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அவரை கலாய்த்த சுமதி,

“போட்டோ யாரும் கேட்டுட கூடாதுன்னுதான் அவன் முதல்லே பிரைவேசின்னு லாக் பண்ணியிருக்கான்.” என்றவர்,

“நம்ம பையன் இருக்கறது சினி ஃபீல்டு-லங்க.. சினி ஃபீல்டு-ல இதெல்லாம் ரொம்பவே சகஜம். ஏன் இதுக்கு முன்னாடி அவனபத்தி கிசுகிசு வந்ததே இல்லையா..? அது போலதான் இதுவும் இருக்கும். போலீஸ் வேலை-அ விட்டும் இன்னும் நீங்க உங்க போலிஸ் புத்தி-அ விடலையா..? எதுக்கெடுத்தாலும் சந்தேகம் தான். அதுக்காக பெத்த புள்ளை-அ கூடவா..?” என்ற சுமதியின் கேள்விக்கு,

“சந்தேகம்-லா இல்ல சுமதி.. ஆனா அந்த போட்டோ-ல ஒரு பொண்ணோட..” என்று மேற்கொண்டு சொல்லாமல் சுதாகரன் இழுக்க,

“அப்படி அந்த போட்டோஸ், வீடியோஸ்-ல என்ன இருக்கு. பர்த்டே செலிபிரேட் பண்ணியிருக்காங்க.. அவன் அந்த பொண்ணுக்கு ஹக் பண்ணி விஷ் பண்ணியிருக்கான். அவ்வளோதன..” என்று மகன் மீதிருக்கும் அபரிமிதமான நம்பிக்கை சொன்னவர்,

“காமலகாரன் கண்ணுக்கு எல்லாமே மஞ்சளா தெரியும்..” என்று வார்த்தையால் அவருக்கு குட்டு வைத்தவர்,

“இவ்வளோ பதறுற நீங்க அவனுக்கு போன் போட்டு கேட்க வேண்டியதுதானே..?” என்க,

“ஆமா.. என் போன்-அ அவன் எடுத்துட்டாலும்” என்று உள்ளுக்குள் சலித்து கொண்டவர், எதற்கும் ஒரு முறை அவனிடம் பேசு என்று சொல்லிவிட்டு போனை வைக்க,

சுமதியும் அவனுக்குதான் அழைத்தார். காலை முதலே எடுக்காதது போல் இப்போதும் அவர் அழைப்பை அவன் எடுக்காமல் போக.

அடுத்து கவினுக்கு அழைத்தார்.. அவனும் எடுக்கவில்லை.

“ஒருவேளை பிரஸ்மீட்-ல சொன்னமாதிரி அவன் நிஜமாலுமே கல்யாணம் பண்ணிட்டானோ..” என்று நினைக்கும் போதே சுமதி-க்கு பி.பி எகிர, உடனே பி.பி மாத்திரையை பிரித்து வாயில் போட்டுக்கொண்டார்.

“ச்சீ ச்சீ… என் புள்ள என் கிட்ட சொல்லாம எதுவும் செய்ய மாட்டான்.. தேவையில்லாம இந்த மனுசன்தான் அவரையும் குழப்பிட்டு என்னயும் குழப்பிவிட்டுட்டாரு. லாஸ்ட் டைம் அவன் கிட்ட பேசும் போது கூட மேரேஜ்-ல இன்ட்ரஸ்ட் இல்லன்னுதன சொன்னான். அப்புறம் எப்படி..?” என்று கேட்டு தன்னைத்தானே சமாதனப்படுத்தி கொண்டவர் அறியவில்லை அவனின் இன்னொரு முகத்தை பற்றி.

அவனின் பிரஸ்மீட்டை பார்த்த இதழினியின் குடும்பமோ சந்தோஷத்தில் பூரித்து போய் இருந்தது அவள் ஒருத்தியை தவிர,

இதில்  இப்படியொரு கணவன் கிடைக்க கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்று அவள் காதில்படும் படி சொல்லிய வண்ணம் இருக்க,

“இவங்களுக்கெல்லாம் என்ன பைத்தியமா..? கழுத்துல தாலி கட்டிட்டா மட்டும் அவன் நல்லவனா..?” என்று கத்தி கேட்க வேண்டும் போல் இருந்தது.

இருந்தும் இது குறித்து யாரிடமும் அவள் வாயை திறக்கவில்லை.

சொன்னால் மட்டும் அவர்கள் நம்பவா போகிறார்கள். அவன் தான் அனைத்தையும்  தனக்கு சாதகமாக மாற்றிவிட்டானே.. இதில் எங்கிருந்து அவளால் தன் மனதிலிருப்பதை கொட்டமுடியும்.

அத்தோடு மனதிலிருப்பதை கொட்டும் அளவிற்கு அவளுக்கு இப்போது மனதிலும் தைரியம் இல்லை… உடம்பிலும் தைரியம் இல்லை. அந்த அளவிற்கு அவள் மனமும் உடலும் இரணப்பட்டு போய் இருந்தது அவன் செயலால்.

ஏன் சம்மந்தபட்டவனே இப்போது நேரில் வந்தால் கூட அவளால் அவனிடம் சண்டையிட முடியுமா என்று தெரியவில்லை.

அவனும் அவள் உடல் மீதான அக்கறையில் அவள் முன்னால் சென்று நிற்காமல் அவள் உடல் நலன் குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொண்டவன், டிஸ்சார்ஜ் செய்யும் போதுதான் அவள் முன்னால் சென்று நின்றான்.

அப்போது கூட அவனிடம் அவள் எதுவும் கேட்கவில்லை. சந்தோஷத்தில் மூழ்கி போய் இருக்கும் குடும்பத்தார் முன்னிலையில் அவளால் என்ன கேட்க முடியும்..? அத்தோடு அவர்கள் சந்தோஷத்தை கெடுக்கவும் அவள் மனம் விரும்பவில்லை. அதனாலே முடிந்த மட்டும் அவள் அமைதி காத்தாள்.

அவளை தன் வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்றவன் சொன்னபோது அவள் தான் அதிர்ந்து போனாளே தவிர, மற்றவர்களுக்கோ சந்தோஷம்தான்.

அதுதானே அவர்களுக்கும் வேண்டும்.

இதில் இலக்கியா வேறு, “புது இடம்-ன்றதால முதல்ல கஷ்டமாதான் இருக்கும் இதழினி. அப்புறம் போக போக உனக்கே பழகிடும். மாப்பிளை வீட்ல உள்ளவங்களுக்குமே உங்க கல்யாணம் எதிர்பாராத ஒன்னுதான். அதனால அவங்க என்ன சொன்னாலும் நீ அனுசரிச்சி போ இதழினி” என்று கிடைக்கும் நேரமெல்லாம் அவள் காதை கடிக்க தவறவில்லை.

அனைவரிடமும் சொல்லிவிட்டு அவள் காரில் அமர, அவனும் அவள் பக்கத்து இருக்கையில்தான் அமர்ந்து கொண்டான்.

கவின் தான் காரை ஓட்டி கொண்டிருந்தான். வீடு சென்று சேரும் வரையுமே யாரும் யாருடனும் பேசவில்லை.

அவனின் பெற்றோரை எப்படி சமாளிப்பதென்று உள்ளுக்குள் கவின் பயந்த அளவிற்கு கூட ரிஷப் நந்தன் பயப்படவில்லை.

அன்று ஞாயிற்று கிழமை என்பதால் ரிஷப்-பின் பெற்றோர் இருவருமே வீட்டில்தான் இருந்தனர்.

காலையிலேயே சுமதியை தொடர்புகொண்டு தன் அறையை சுத்தம் செய்ய அவன் சொல்லியிருக்க, இனி அவன் தங்களுடன் தங்கபோவதை நினைத்து அவன் பெற்றோரின் மனம் சந்தோஷத்தில் பூரித்துதான் போயிருந்தது.

அந்த சந்தோஷத்தில் வேலையாட்களை கூட விடாமல் தானே அவன் அறையை சுத்தம் செய்திருந்தார் சுதாகரன்.

எப்போது வருவான் என்று ஆர்வத்தோடு இருவருமே அடிக்கடி வாசலை பார்த்தவண்ணமாகவே இருந்தனர்.

மதிய உணவு முடித்து இருவரும் ஹாலில் அமர்ந்திருக்கும் போதுதான், அவர்கள் காரும் வீட்டை அடைந்திருந்தது.

கார் ஹாரன் சத்தம் கேட்டு அவன் தான் வந்திருப்பான் என்ற ஆவலில் வாசலுக்கு வந்த சுமதிக்கு அதிர்ச்சிதான் ஒரு பெண்ணின் கரத்தை பற்றிகொண்டு மகன் நிற்பதை பார்த்ததும்.

வெகு வருடங்களுக்கு பிறகு வீட்டிற்கு வருபவன் எங்கே தன்னை பார்த்து அப்சட் ஆகிவிட்டால்… அதனாலே சுதாகரன் வாசலுக்கு செல்லவில்லை.

அவனை பார்ப்பதற்காக அவலோடு அமர்ந்திருந்தவர், இன்னும் இருவரும் உள்ளே வராமல் இருக்கவே, அவரும் “சுமதி..” என்று அழைத்தவாறே வாயிலுக்கு சென்றவருக்குமே அதிர்ச்சிதான்.

இருவராலுமே எதுவும் பேச முடியவில்லை. அந்த அளவிற்கு அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர் இருவரும் அவன் செயலால்.

அவள் கரத்தை பற்றியவாறே அவர்கள் அருகில் வந்து நின்றவன், அவர்களை சுட்டிகாட்டி, “இதழ் இவங்க உன் மாமனார் மாமியார்” என்றவன்,

அவர்களிடம் அவளை சுட்டிகாட்டி, “இவ உங்க மருமக” என்று இருவருக்கும் அவன் அறிமுகபடலம் செய்ய அவர்கள் இருவரையும் பார்த்த மாத்திரத்திலே இதழினிக்கு வயிற்றை பிசைந்தது.

“டேய்.. நான் உன் மேல எவ்வளோ நம்பிக்கை வச்சியிருந்தேன்.. ஏண்டா இப்படி பண்ண..?” என்று கேட்கும் போதே சுமதியின் குரல் உடைந்துவிட்டது.

அது அவனுக்கு புரிந்தாலும், “இப்ப என்ன பண்ணிட்டேன்..?” என்று திருப்பி அவரையே கேட்டவன்,

“நீங்கதன ம்மா சொன்னீங்க ஆறு மாசத்துக்குள்ள நான் கல்யாணம் பண்ணிக்கணும். இல்லன்னா கல்யாணம் ஆகறதே கஷ்டம்னு. அதான் பண்ணிக்கிட்டேன்” என்று அவர் வார்த்தையையே அவருக்கு திரும்பி கொடுத்தான் அவன்.

“சரிடா அதுக்காக யாரு என்னனு தெரியாம..” என்றவர் முடிக்கவில்லை,

அதற்குள், “பேர் இதழினி.. மியூசிக் கோர்ஸ் பண்ணிட்டு இருக்கா.. நேட்டிவ் சென்னைதான். ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு..” என்று அவளுக்கு அவன் நற்சான்றிதழ் கொடுக்க, தன் மகன்-ஆ இப்படியெல்லாம் பேசுகிறான் என்பது போல் அவனை அதிர்ந்து போய் பார்த்தார் சுமதி.

“டேய் அதுக்கா…” என்று ஆரம்பித்தவரை கை உயர்த்தி தடுத்தவன்,

“ம்மா.. இப்படி வெளியில நிக்க வச்சே என்கொயரி பண்ணிட்டு இருக்கப்போறீங்களா..?” என்று கேட்க, சுமதியோ இப்போது சஞ்சலத்தோடு சுதாகரனை பார்த்தாள்.

“ஏண்டி அன்னைக்கு நீ என்ன சொன்ன..?” என்று கேட்பது போல் சுதாகரன் பார்த்த பார்வையில் சுமதிக்கோ முகத்தில் அசடு வழிந்தது.

பின் சுதாகரன் தான் உள்ள கூப்பிடு என்பது போல் விழிகளாலே சுமதிக்கு பர்மிஷன் கொடுக்க,

“உள்ள வாங்க” என்றார் எங்கேயோ பார்த்தப்படி சுமதி.

அவர் சொல்லியும் அவளை அழைத்து கொண்டு உள்ளே சொல்லாமல் “ம்மா.. ஆலம்..” என்று கேட்டவனை நால்வருமே அதிர்ந்துதான் பார்த்தனர்.

தன்னை அதிர்ந்து பார்ப்பவர்களை “அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்” என்பது போல் பார்த்தவன், கவினை பார்த்து என்ன என்பது போல் புருவமத்தியை உயர்த்த, அவனோ நீ நடத்து என்பது போல் ஒற்றை புருவத்தை உயர்த்தினான்.

அவன் கேட்டபின்னும் சுமதி அதிர்ச்சி குறையாமல் அவனையே பார்த்திருக்க, “ம்மா.. ஆலம் எடுத்ததுக்கப்புறம் உங்க அதிர்ச்சி-அ கன்டினியூ பண்ணிக்கோங்களேன்..?” என்று கேட்டவனை இப்போது ஒரப்பார்வையால் முறைத்து பார்த்த சுமதி,

“டேய்.. நானே நீ எங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்ண கோவத்துல இருக்கேன். இதுல ஆலம் எடுத்தாதான் உள்ள வருவன்னு நீ பிடிவாதமா பிடிக்கற..” என்று சுமதி கேட்ட தோணியில் கவினுக்கு மட்டுமல்ல இதழினிக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

கீழ் அதரங்களை கடித்து சிரிப்பை அடக்கியவள், அது முடியாமல் போகவே தலையை தாழ்த்தி கொண்டாள்.

9 minreading time
1comments

Reader Reviews

(0.0)
(0 reviews)
0.0
Average Rating

Share Your Thoughts

Reader Comments (0)

No comments yet

Be the first to share your thoughts about this novel!

Santhoshguna Novels

A dedicated platform bringing you captivating stories, thrilling adventures, and emotional journeys through carefully crafted novels. Every story is a new world waiting to be explored.

35 novels published100% original contentRegular updates

More மாயோனின் மதுரகானத்திலே...!!! Stories

Discover similar captivating stories

View All in மாயோனின் மதுரகானத்திலே...!!!
அத்தியாயம் - 32
Blog
நாவல்…மாயோன…
Feb 03, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 32

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஐ.ஜி இருவரையும் சைபர் கிரைமிற்கு அழைத்திருக்க, இருவருமே காலையிலேயே அங்கு கிளம்பி சென்றிரு...

Read more →
அத்தியாயம் - 31
Blog
நாவல்…மாயோன…
Feb 01, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 31

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

ஸ்கூல் முடித்து வீட்டிற்கு சென்றவனின் கோலத்தை பார்த்த சுமதி எப்படி எப்படியெல்லாமோ அவனிடம்...

Read more →
அத்தியாயம் - 30
Blog
நாவல்…மாயோன…
Jan 31, 2026
சந்தோஷ் குணா

அத்தியாயம் - 30

Blog
மாயோனின் மதுரகானத்திலே...!!!

அதன் பின் வந்த  நாட்களில் அவளும் எதற்காகவும் அவன் முன் சென்று நிற்கவில்லை, அதேசமயம் ...

Read more →

Want More Stories Like This?

Subscribe to Santhoshguna Novels and get notified when new chapters and novels are published. Never miss another captivating story!

Join thousands of readers enjoying our novels