அவள் என்ன செய்தபோதும் ரிமோட் வேலை செய்யாமல் போகவே, வந்த கோவத்திற்கு ரிமோட்-ஐ தூக்கி சோபாவில் எறிந்தவள், டி.வியின் அருகில் சென்றாள் அதை ஆஃப் செய்யும் பொருட்டு.
“அக்கா.. பிளீஸ்.. இப்போதான் புரோகிராம் ஆரம்பிச்சியிருக்கு.. பிளீஸ்…” என்ற ஆரண்யாவின் கெஞ்சல் எதையும் காதில் வாங்காமல் டி.வி சுவிட்ச்-ஐ ஆஃப் செய்ய சென்றவளின் கரம் அப்படியே நின்றன.
“நீ… கவிதைகளா… கனவுகளா… கயல்விழியே…
நான் நிகழ்வதுவா… கடந்ததுவா… பதில்மொழியே…” என்று ரிஷப் நந்தன் பாடிக்கொண்டிருக்கும் பாடலை கேட்டு.
தமிழ் திரையுலகில் அவனுக்கென்று ஒரு அங்கீகாரம் கிடைக்க காரணம் என்றால் அது இந்த பாடல்தான்.
அதனாலே கான்செட்ர் ஆக இருந்தாலும் சரி இசை வெளியீட்டு விழாவாக இருந்தாலும் சரி முதலில் அவன் இந்த பாடலை பாடிதான் விழாவை தொடங்குவான்.
அப்படித்தான் இன்றும் அவன் இந்த பாடலை பாடியது கூட.
இந்த பாடல் அவனுக்கு மட்டுமல்ல.. இதுநாள்வரை அவன் இரசிகர்களாலும் கொண்டாடப்பட்டுகொண்டிருக்கும் பாடலும் கூட.
ஏன் இதழினி கூட கல்லூரிகளுக்கு இடையேயான இசை போட்டியில் வயலினில் இந்த பாடலை இசைத்துதானே முதல் பரிசை வென்றாள்.
அதனால் அவள் மனதிற்கும் இந்த பாடல் மிகநெருக்கம் என்றே சொல்லலாம்.
அந்த பாடலும்.. பாடல் வரிகளும், அதன் பின்னிசையும்.. அனைத்தையும் தாண்டி அவன் குரலில் இருக்க கூடிய வசீகரம் அதுதான் அனைவரின் மனதையும் அவன்பால் கட்டிபோட்டிருந்தது.
இதுதான் சமயம் என்று ஆரண்யாவும் இதழினியின் கரத்தை பற்றி அழைத்துவந்து தன் அருகில் அமரவைக்க, இது எதுவே தெரியாமல் அந்த பாடலில் முழுவதுமாக தன்னை தொலைத்திருந்தாள் இதழினி.
“உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா”
என்றவன் முடித்த கணம், அங்கு குழுமியிருந்த அவன் இரசிகர் இரசிகைகளோ கோரசாக
“முகம்காட்டுநீமுழுவெண்பனி
ஓடாதேநீஏன்எல்லையே..
இதழோரமாய்சிறுபுன்னகைநீ
காட்டடிஎன்முல்லையே”
என்றுசெல்போன் டார்ச்சை உயர்த்தி அசைத்தபடி பாட ரிஷப் நந்ததனின் முகத்திலோ அத்தனை பிரகாசம்.
அவனும் புன்னகைத்தவாறே தன் செல்போன் டார்ச்சை ஆன் செய்து அசைக்க, இதழினியின் இதழ்கள் கூட தன்னை மறந்து பாடல்வரிகளைதான் முனுமுனுத்து கொண்டிருந்தது.
சற்றுமுன்வரை பாரமாக இருந்த அவள் மனம் இப்போது மெல்ல மெல்ல லேசாகுவது போன்ற உணர்வு.
அவனால் இரணப்பட்டிருந்த அவள் மனத்திற்குஅவன் இசைதான் அருமருந்தாகி போயின.
முழுபாடலையும் அவன் பாடிமுடித்தபின் நிகழ்ச்சி தொகுப்பாளினி பேசிகொண்டிருக்கும் போதுதான் இலக்கியா சொன்ன மளிகை ஜாமான்களை வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான் ஹரண்.
“அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாங்களா..?” என்று கேட்டவாறே அவசரஅவசரமாக உள்ளே நுழைந்தவன் வாங்கிவந்த மளிகை பொருட்களை அப்படியே வைத்துவிட்டு, அவனும் சோஃபாவில்அமர்ந்து கொண்டான்.
“ஹே ஆரணி… ரிஷப்-சார்-அ காட்டிட்டாங்களா..? எத்தனை சாங் பாடுனாரு..?” என்றவன் கேட்டுகொண்டிருக்கும் போதே, ரிஷப் நந்தனின் முகம் டி.வி-யில் தெரிய,
“தாதா…” என்று சந்தோஷத்தில் அவன் கத்தியதோடு, விசிலடிக்கவும் செய்ய இதழினியும் ஆரண்யாவும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டனர்.
“நீ வேணும்னா பாரு ஆரணி… இந்த தடவையும் என் தலைதான் மாஸ். உன் ஆளு கவின் எப்பவும் போல ஓரம்தான்” என்றான் அவளை சீண்டும் விதமாக.
“டேய் தம்பி… அடக்கி வாசிடா…. கவின் இல்லன்னா உன் தலையே இல்ல.. கவின் சாரோட கிட்டார் டியூன்-னாலதான் உன் தாதா-வோட பொழப்போ ஓடிக்கிட்டு இருக்கு.” என்று ஆரண்யாவும் பதிலடிகொடுக்க தவறவில்லை.
அவள் பதிலை கேட்டு “ஹே குட் ஜோக் ஆரண்யா..” என்றவன் நக்கலாய் சிரித்துகொண்டே கைதட்டவும் செய்ய, ஆரண்யாவின் முகம் தான் மாறி போனது.
அதேநேரம் படத்தின் முதல் பாடலை ரிஷப் நந்தனே பாட ஆரம்பித்திருக்க, அவன் குரலில் இருந்த இனிமை மீண்டும் இதழினியை மட்டுமல்ல அனைவரையும் இரசிக்கவே வைத்தது.
கண்களை மூடி ஆழ்மனதிலிருந்து பாடலை இரசித்துகொண்டிருந்தவளின் காலும் கைவிரலும் இசைக்கேற்றார்போல் தாளம் போடவும் செய்தது.
உண்மையை சொல்ல போனால் அவன் குரலில் இருக்கும் இனிமைக்கு பின்னிசைகளே தேவை இல்லை என்பதுதான் அவளின் நிலைபாடு.
அந்த அளவிற்கு அவன் குரலில் ஒரு வித வசீகரம். அடுத்தவர் மனதை தன் பால் இழுக்கும் ஒரு வித போதை அவன் குரலில் இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
கேட்ட மாத்திரத்திலே அவன் பாடிய பாடல் மனதில் பசைபோட்டு ஒட்டிக்கொள்ள, நிச்சயம் இந்த பாடல் சூப்பர் ஹிட் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாமல் போனது.
பாடி முடித்தவனுக்கு அவன் விசிறிகள் விசில் அடித்து கரவோஷம் எழுப்பி தங்கள் பிடித்தத்தை வெளிபடுத்த,
ஹரணோ “பார்த்தியா.. பார்த்தியா… “ என்று ஆரண்யாவை சீண்டினான்.
பதிலுக்கு “போடா..” என்றவள் சொன்னபோதும் அவன் விடாமல் அவளை வம்பிழுத்த வண்ணம் இருக்க,
“அக்கா.. அவன் வேணும்னே வம்பு இழுக்குறான்..” என்று பிரச்சனையை இதழினியிடம் கொண்டு சென்றாள் ஆரண்யா.
“இப்ப இரண்டுபேரும் அமைதியா இருக்க போறீங்களா..? இல்ல நான் டி.வி-அ ஆஃப் பண்ணடுமா..?” என்று இதழினி கேட்ட தோணியில்இருவருமே வாயை மூடிக்கொண்டனர்.
அடுத்து படத்திற்கான தீம் மியூசிக்கை கவின் தன் கிட்டாரில் இசைக்க, அதை பார்த்த பின் தான் ஆரண்யாவின் முகத்திலும் ஒருவித தெளிவு பிறந்தது.
மென்மையான மற்றும் அழுத்தமான தீம் மியூசிக்கை வைத்தே நிச்சயம் படத்தின் கரு அழுத்தமான காதல் கதையாகதான் இருக்கும் என்று அனைவராலும் ஓரளவு யூகிக்க முடிந்தது.
அடுத்தடுத்த பாடல்கள் பாடப்பட்ட பின் இறுதியாகதான் கவினும், ரிஷப்நந்தனும் ஒன்றாக மேடை ஏறி இருந்தனர் இறுதி பாடலை பாடுவதற்காக.
அவர்கள் இருவரையும் ஒன்றாக மேடையில் பார்த்த அவர்களின் விசிறிகள் விசிலடித்து கரவோஷம் எழுப்ப,
“அக்கா.. இந்த டிரெடிஷ்னல் லுக்-ல இரண்டு பேருமே செம்மையா இருக்காங்க இல்ல.” என்று கண்கள் மின்ன சொன்ன ஆரண்யா,
“ஆக்ச்சுவலி.. இவங்க இரண்டு பேரையும் எல்லாரும் டிவின் பிரதர்ஸ்னு தான் சொல்வாங்க.. ஏன்னா எங்க போனாலும் இரண்டு பேரும் ஒன்னாதான் போவாங்க. காஸ்டியூம்.. ஹேர் ஸ்டைல் எல்லாமே சேம்-ஆதான் இருக்கும்..” என்றவளின் பார்வை அவர்கள் இருவர் மீதே நிலைத்திருக்க,
தொகுப்பாளினி கேட்கும் கேள்விகளுக்கு வெண்பற்கள் தெரிய அழகாய் சிரித்தபடி பதில் சொல்லிகொண்டிருந்த அவர்கள் இருவரையும், அப்போதுதான் இதழினி ஆழ்ந்து பார்த்தாள்.
ஆரண்யா சொன்னது போல் இருவருமே கருநீல நிறத்தில் ஷர்ட்டும், வெண்பட்டு வேஷ்டியும் அணிந்திருக்க, இருவருக்குமே அந்த உடை வெகு பொறுத்தமாகத்தான் இருந்தது.
ஹேர் ஸ்டைல் முதல் மடித்துவிடப்பட்ட ஸ்லீவ்,டிரிம் பியர்டு, கழுத்தில் பளபளத்து கொண்டிருந்த தங்க ஜெயின், கையில் போட்டிருந்த தங்க காப்பு, ஏன் ஷீ முதற்கொண்டு இருவரும் ஒன்று போல் அணிந்திருந்ததோடு, அவர்கள் இருவரின் தோற்றமும் ஒன்று போல் இருக்க இதழினிக்குமே சந்தேகம்தான் இவர்கள் இருவரும் டிவின்ஸோஎன்று.
அந்த சந்தேகத்தை தீர்த்து கொள்ளும் விதமாக, “இவங்க இரண்டு பேரும் டிவின்ஸ்-ஆ..?” என்றவள் கேட்டு முடித்ததுதான் தாமதம்.
“இல்ல-க்கா” என்றவாறே அவள் அருகில் வந்து அமர்ந்த ஹரண், கையில் கிட்டார் வைத்திருந்தவனை சுட்டிகாட்டி, “இவர்தான் கவின்.. கவினுக்கு ஆறு வயசு இருக்கும்போதே அவங்க அம்மா அப்பா ஒரு கார் விபத்துல இறந்துட்டாங்க. கவின்-அ வளர்த்தது எல்லாமே அவங்க தாத்தாதான்.. ஆனா அவரும் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாரு.” என்று சோகமான குரலில் முடித்தவனின் கண்கள் மீண்டும் பளிச்சிட்டதுஅவனின் தாதா ரிஷப் நந்தனை பார்த்து.
“அப்புறம் அவர் தான்” என்று குதூகல குரலுடன் கையில் மைக்கில் வைத்திருந்தவனை காட்டி,
“எங்க தலை. மியூசிக் தாதா..” என்று பெருமிதத்தோடு சொன்னவன்,
“தாதா-வோட அம்மா டாக்டர், அப்பா இன்ஸ்பெக்டர்-ஆ இருந்தாரு. ஆனா.. வாலண்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிட்டு இப்போ பிஸ்னஸ் பண்ணிட்டு இருக்காரு.. வீட்டுக்கு ஒரே பையன். ஆனா தாதா அதிகமா இருக்கறது என்னவோ கவின் கூடதான்.கவின்-னா தாதாக்கு ரொம்ப இஷ்டம். கவினும் தாதா-வும் ஒரே ஸ்கூல்-லதான் படிச்சாங்க. ஒன்னாதான் மியூசிக் ஃபீல்டுகும் வந்தாங்க. ஆரம்பத்துல யூடியூப்-ல ஆல்பம் சாங் பண்ணிட்டு இருந்தாங்க. அது பயங்கர ஹிட் கொடுத்ததால சினி ஃபீல்டுகுள்ள வந்தாங்க. இப்பகூட நீலாங்கரை-ல ஒரு அப்பார்ட்மெண்ட்-லதான் இரண்டுபேரும் ஒன்னா தங்கியிருக்காங்க.” என்று அவர்கள் இருவரின்ஜாதகத்தையும் ஹரண் புட்டு புட்டு வைக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரியும் என்பதுபோல் பெண்கள் இருவரும் அவனை ஆச்சரியமாய் பார்த்தனர்.
அவர்கள் இருவரின் முகத்தோற்றததை வைத்தே, அவர்கள் மனதிலிருப்பதை படித்த ஹரண், “தாதா-வ ரொம்ப பிடிக்கும்-க்கா அதான்…” என்றவன் சமாளிக்க,
“அப்படியா..?” என்று கேட்ட இதழினி, “சரி சொல்லு இரண்டாம் பானிபட் போர் எப்போ..? யார் யாருக்கும் நடுவுல நடந்துன்னு..?” என்று மார்பின் குறுக்கே கைகளை கட்டிகொண்டு கேட்க,
“மாட்டுனியா..” என்று அவனை பார்த்து சிரித்தாள் ஆரண்யா.
பதில் தெரியாமல் பெண்கள் இருவரையும் பார்த்து திருதிருவென விழித்தவன், “அக்கா. அது.. அது..” என்று இழுக்க,
அவன் காதை பிடித்து திருகியவாறே “ஏண்டா படிக்கற பாடத்து-லேந்து கேள்வி கேட்டா முழி முழி-ன்னு முழிக்கிற.. ஆனா அவன் ஹிஸ்ட்ரி-அ புட்டு புட்டு வைக்கிறியா..? என்க,
“ஐய்யோ.. அக்கா வலிக்குது வலிக்குது..” என்று வலி பொருக்க முடியாமல் கத்தினான் ஹரண்.
“இன்னொரு காதையும் புடிச்சி திருகு-க்கா” என்று ஆரண்யாவும் தன் பங்கிற்கு அவளை ஏற்றிவிட.
“ஐய்யோ அக்கா.. வேணாம்” என்று வலுகட்டாயமாக அவள் பிடியிலிருந்து தன் காதை விடுவித்துகொண்டவன். காதை தடவியவாறே சோஃபாவில் ஒரு ஓரமாய் அமர்ந்துகொள்ள, அவன் நிலையை பார்த்து பெண்கள் இருவருக்கும் சிரிப்புதான் வந்தது.
மௌனமாய் அவனை பார்த்து சிரித்துகொண்டிருக்கும் போதுதான் கவினின் கிட்டார் இசையில் ரிஷப் நந்தன் பாட ஆரம்பித்திருந்தான்.
அவனின் கிட்டார் இசையா..? இல்லை ரிஷப் நந்தனின் குரலா..? இதில் எதை இரசிப்பதென்றே இதழினிக்கு தெரியவில்லை. காரணம் அந்தஅளவிற்கு இருவருமே இசையால் மிரட்டி கொண்டிருந்தனர்.
அதில் போட்டி இல்லை. அவன் இரசிகர்கள் போல் அவர்களுக்குள் நீயா..? நானா..? என்ற பொறாமையும் இல்லை..
பாடலுக்கு என்ன தேவையோ அதை இருவரும் இணைந்து கொடுத்து கொண்டிருந்தனர்.
இருகைகளையும் கோர்த்து அதில் மோவாயை பதித்தபடி பாடலை இரசித்துகொண்டிருந்தவளின் கண்கள் படிந்திருந்தது என்னவோ ரிஷப் நந்தனின் மீதுதான்.
மியூசிக்கை விட ரிஷப் நந்தனின் காந்தம் போன்றகுரல்அவளையும் மீறிக்கொண்டு அவளுக்குள் என்னென்னவோ செய்ய, அதன் விளைவால் தான் அவள் கண்கள் இப்போது ரிஷப் நந்தனையே பார்த்திருப்பது கூட.
முன்னுச்சியை கோதிவிட்டபடி குதூகலம் நிறைந்த குரலில் துள்ளல் இசைக்கு ஏற்றார்போல் ஆடியபடி அவன் பாடிகொண்டிருக்க, அவன் விசிறிகளோ செல்போன் டார்ச்சை உயர்த்தி பிடித்து அசைத்தபடி இரசித்துகொண்டிருந்தனர்.
மடித்துவிடப்பட்டிருந்த ஸ்லீவ் கூட அவனுக்கு கெத்தாகத்தான் இருந்தது.
இதில்அவிழ்ந்திருந்த இரண்டு ஷர்ட் பட்டன்களின் ஊடே அவ்வப்போது தலைகாட்டிய அவன் திண்ணிய மார்பு அவன் இரசிகைகளின் கண்களுக்கு விருந்தாகி போயின.
அந்த திண்ணிய மார்பின் மேல் அவனின் ஆடலுக்கேற்ப துள்ளிகுதித்து மின்னய தங்க சங்கிலி கூட .அவனுக்கு அதி பொருத்தமாகவே இருந்தது.
இதில் “லவ் யூ ரிஷப்… வில் யூ மேரி மீ… கிஸ் ஃபார் யூ” என்ற வாசகங்களை தூக்கிபிடித்த படி பல பெண்கள் இருக்க,
அதையெல்லாம் பார்த்த இதழினிக்கு “ஏன் இந்த பொண்ணுங்க இவ்வளோ பைத்தியமா இருக்காங்க..” என்றுதான் தோன்றியது
இதில் இறுதியாக தன் இரசிகர் இரசிகைகளை பார்த்து இருகைகளாலும் அவன் பறக்கும் முத்தம் கொடுக்க, அந்த காட்சியை பார்த்தவளுக்கு அவன் என்னவோ அவளுக்குதான் அந்த முத்தத்தை கொடுத்தது போல் திக்-கென்ற உணர்வோடு மூச்சி முட்டுவது போல் இருக்க, அதற்கு மேல்அங்கிருக்க பிடிக்காமல் எழுந்து சென்றுவிட்டாள் இதழினி.
வெளியில் வந்து அமர்ந்தவளுக்கு இன்னமுமே அந்த திக்-கென்ற உணர்வும், கை கால்களிலிருந்த நடுக்கமும் குறைந்த பாடில்லை.
தன்னை சமன்படுத்தும் விதமாக கண்களை மூடியவளின் முன் ரிஷப்நந்தனின் சிரித்த முகமும் அவன் முத்தம் கொடுத்த காட்சியும் விரிந்து நிற்க சட்டென்று கண்களை திறந்துகொண்டாள் இதழினி.
அவளுக்கே தெரியவில்லை அவளுக்குள் என்ன நடக்கிறது என்று.
முகத்தில் சில்லென்ற தண்ணீரை அடித்துபார்த்தாள். தோட்டத்தில் காலாரா நடந்தும் பார்த்தாள்.
ஏன் அவளுக்கு பிடித்தமான வயலினை கூட இசைத்து பார்த்துவிட்டாள்.
ஏனோ இன்று அவள் மனம் இசையோடு ஒன்றி போக மறுத்ததோடு, திரும்ப திரும்ப அவனை பற்றியே அசைப்போட்டுகொண்டிருந்தது.
“என்னாச்சி இதழினி உனக்கு..?” என்று தன்னைத்தானே கேட்டு கொண்டவளுக்கு எங்கே தானும் மற்ற பெண்களைப் போல் அவனை இரசிக்க ஆரம்பித்துவிட்டோமோ..? என்ற பயமும் உள்ளுக்குள் எழத்தான் செய்தது.
“பாட்ட கேட்டதோடு இருந்திருக்கணும். ஆடியோ லாஞ்ச் பார்த்திருக்க கூடாது” என்று இப்போது பிதற்றியது அவள் மனம்.
எப்படி தன்னை சரி செய்வதென்று தெரியாமல் தோட்டத்தை அவள் அளந்துகொண்டிருக்கும் போதுதான்
“அக்கா… தாரிகா அக்கா லைன்-ல” என்றவாறே செல்போனை இதழினியின் கைகளில் கொடுத்து விட்டு சென்றாள் ஆரண்யா.
‘தாரிகாவா..? அதுவும் இந்த நேரத்துலயா..?’ என்ற யோசனையோடே, போனை காதில் வைத்து “சொல்லு தாரிகா” என்றவளுக்கு அதிர்ச்சிதான் அவள் கூறிய செய்தியை கேட்டு.
வருடகணக்கில் படுத்த படுக்கையாக இருந்த தாரிகாவின் பாட்டி-க்கு மாலை முதல் திடீரென்று உடல் நிலை மோசமாகி போனதால், கல்லூரி விஷயமாக நாளை ரிஷப் நந்தனை பார்க்கும் பொறுப்பை இதழினியின் கைகளில் ஒப்படைத்திருந்தாள் தாரிகா.
“ஐய்யயோ… தாரிகா.. சத்தியமா என்னால முடியாது.. நான் போகமாட்டேன்.. நீ வேற யாரயாவது போக சொல்” என்றாள் இதழினியும் சற்று பதற்றத்துடனே.
“ஏய் புரிஞ்சிகோடி.. கிழவி-க்கு மூச்சி வாங்குறத பார்த்தா நைட்-குள்ள முடிஞ்சிடும் போல. சொந்தகாரங்களாம் வந்துட்டு இருக்காங்கடி. இந்தநேரத்துல வீட்ல என்ன விடமாட்டாங்க இதழினி. எனக்கு நீ போனாதான் கரெக்ட்-ஆ இருக்கும்னு தோணுது. நான் பிரின்சி கிட்ட கூட பேசிட்டேண்டி. பிளீஸ் எனக்காக” என்றவள் கெஞ்சு கொண்டிருக்கும் போதே,
“ஏய் தாரிகா… தாரிகா எங்கடி போய் தொலைஞ்ச” என்று அவள் தாயார் வேறு சத்தம் போட,
“நாளைக்கு காலையில பத்து மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். மறக்காம காலேஜ் ஐ.டி கார்ட் எடுத்துட்டு போ. அட்ரஸ் அண்ட் அப்பாயிண்மென்ட்-அ நான் உனக்கு வாட்ஸ்-அப் பண்றேன்” என்று அவசரஅவசரமாக சொன்னவள் அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்திருக்க, இதழினிக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
சொன்னது போலவே அவன் இருக்கும் விலாசத்தையும் அப்பாயிண்மென்ட் கடித்ததையும் தாரிகா வாட்ஸ்-அப்பில் அனுப்பியிருக்க,
“ஐய்யோ.. பெருமாளே.. நான் எப்படி போய் அவன் பார்க்கறது. என்னால முடியாது” என்று சிணுங்கியவாறே அடுத்து தாரிகாவிற்கு தான் அழைத்தாள்.
ஆனால் தாரிகா அவள் அழைப்பை ஏற்காமல் போகவே அடுத்து என்ன செய்வதென்றே இதழினிக்கு தெரியவில்லை.
சற்றுமுன் டி.வி-யில் அவனை பார்த்த நிகழ்வே உள்ளுக்குள் அவளை இம்சித்து கொண்டிருக்க, இதில் எங்கிருந்து அவளால் அவனை நேரில் சந்திக்க முடியும்.
இதில் எந்த ஆண்களிடமும் பேசி பழக்கமில்லாதவளால் எப்படி தனி ஒரு ஆளாக அவனை எதிர்கொண்டு, கல்லூரி ஆண்டு விழாவிற்கு டேட் வாங்கமுடியும்.
அனைத்தையும் நினைக்க நினைக்க பயத்தில் அவள் வயிற்றுகுள் கடமுட கடமுன சத்தம் கேட்க, வயிற்றை பிடித்தபடியே அவசர அவசரமாக பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டாள் இதழினி.
இரண்டு மூன்று முறை அவள் பாத்ரூமிற்குள் சென்று வருவதை கவனித்த ஆரண்யா அவள் நிலை புரியாமல் “என்ன-க்கா மசால் வடை பலமா வேலை செய்யுது போல” என்று நக்கலாய் கேட்டுவிட்டு சிரிக்க, இதழினியோ தன் விதியை நொந்தவாறே மீண்டும் வயிற்றை பிடித்தபடி பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.
பயத்தில் ஐந்தாறு முறை பாத்ரூம் சென்றதில் அவளுக்கு உடல் சோர்ந்து போக, பின் இலக்கியாதான் பக்கத்தில் உள்ள மெடிக்கலுக்கு அவளை அழைத்து சென்று வந்தாள்.
மாத்திரைக்காவும் இலக்கியாவின் வற்புறுத்தலுக்காகவும் மட்டும் இரண்டு வாய் உண்டுவிட்டு, படுக்கையில் விழுந்துவிட்டாள்.
படுக்கையில் விழுந்தவளுக்கு உடல் சோர்வில் கூட தூக்கம் வந்த பாடில்லை.
கண்களை மூடினாலே அந்த ரிஷப் நந்தனின் முகமும், நாளை அவனை பார்க்க போவது மட்டுமே நினைவிற்கு வர இதில் எங்கிருந்து அவளால் உறங்க முடியும்.
தன்னால் முடியாது என்று சொல்வதற்காக மீண்டும் ஒரு முறை தாரிகாவிற்கு போன் செய்து பார்த்தாள்.
ஆனால் இம்முறை அவள் எண் சுவிட்-ஆஃப் என்று வர, இதழினிக்கோ நாளைய நிகழ்வை நினைத்து கண்கள் கலங்கிவிட்டது.
எப்போதும் உறங்கும் நேரத்தை தாண்டி இதழினி படுக்கையில் உழன்றுகொண்டிருக்க படித்துமுடித்துவிட்டு படுப்பதற்காக வந்த ஆரண்யா “என்னக்கா இன்னும் தூங்கலையா..?” என்று கேட்டவாறே எப்போதும் போல் நான்கு மணிக்கு அலராம் வைத்தாள்.
அவளை எரிச்சலோடு பார்த்த இதழினி, “அலாரம் வச்சா மட்டும் போதாது எழுந்திரிக்கணும்” என்றதோடு ஆரண்யா வைத்த அலாரத்தை ஆஃப் செய்ய,
“சரி அப்போ.. நீயே எழுப்பி விடு” என்று சொல்லிவிட்டு ஆரண்யா அவளை அணைத்தவாறு உறங்கி போக, பாவம் இதழினிக்குதான் அவளின் உறக்கம் எந்த திசையில் இருக்கிறது என்றே தெரியவில்லை.
பயத்தில் உறங்காமல் விழித்தபடியே வெகுநேரம் படுத்திருந்தவள் எப்போது தன்னை மறந்து உறங்கினாளோ.. காலையில் அவள் கண்விழித்தது ஆரண்யாவின் “அக்கா… அக்கா..” என்ற அழைப்பால்தான்.
“அதுக்குள்ள மணி நாலாகிடுச்சா..?” என்று கேட்டவளை பார்த்து ஆரண்யாவிற்கு சிரிப்புதான் வந்தது.
அவளின் மென்சிரிப்பை கவனித்த இதழினி, “இப்போ எதுக்குடி சிரிக்குற..?” என்று கேட்டவாறே போர்வையை விலக்கிவிட்டு எழ,
“நாலா.. மணி எட்டாகுது-க்கா” என்று ஆரண்யா சொன்ன பதிலில் ஆடித்தான் போனாள் இதழினி.
விழிகள் விரிய அதிர்ச்சியுடன் ஆரண்யாவை பார்த்தவள், “நிஜமாலுமே மணி எட்டாடி” என்க,
“நான் ஸ்கூல் டிரஸ்-ல இருக்கற பார்த்தும் உனக்கு சந்தேகமா-க்கா” என்றவளை அதிர்ச்சியோடு மேலிருந்து கீழாக பார்த்தவள், அடுத்து அடித்து பிடித்துகொண்டு வாசலுக்குதான் விரைந்தாள்.
இலக்கியாவால் மாடத்தின் முன் கோலம் போட்டபட்டு விளக்கு ஏற்றப்பட்டிருக்க, அதை பார்த்த இதழினியின் கண்களோ சட்டென்று கலங்கி விட்டன.
ஆரண்யா வைத்த அலாரத்தை நிறுத்தி வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது அவள் மனம் நொந்துகொண்டது.
எத்தனையோ நெருக்கடிகளில் கூட இடைவிடாது அவள் செய்து வந்த பூஜை இன்று முதன் முறையாக தடைபட்டு போய் இருக்க, என்ன ஆகுமோஎன்ற பயமும் பதட்டமும்தான் அவளுக்குள் அதிகம் இருந்தது.
“என்ன எழுப்பியிருக்கலாமே சித்தி” என்று இலக்கியாவிடம் அவள் குறைபட்டு கொண்டபோது,
“உடம்புக்கு முடியாம தூங்குற உன்ன எப்படி இதழினி எழுப்புவேன்…? அதனாலதான் காலை-ல வந்த பசங்கள கூட நான் வீட்டுக்கு அனுப்பிட்டேன்” என்று இலக்கியா சொன்ன போதுதான் இதழினிக்கு டியூஷன் நியாபகமே வந்தது.
“ப்ச்.. அதுவும் போச்சா..?” என்று சோர்ந்தவாறே அமர்ந்தவளிடம் அவளின் சிணுங்கிகொண்டிருந்த செல்போனை கொண்டு வந்து ஆரண்யா கொடுக்க, தாரிகாவின் அழைப்பை ஏற்று பேசியவளுக்கு அப்போதுதான் ரிஷப் நந்தனின் நினைவு வந்தது.
“டேய்..உன்னாலதாண்டா இன்னைக்கு என் பூஜை போச்சி.. டியூஷன் போச்சி.. என் நாளே தலைகீழாபோச்சி” என்று என்னதான் அவனை அவள் மனதிற்குள்திட்டிகொண்டாலும், இன்னொருபுறம் விருப்பமே இல்லாமல் அவனை பார்க்க கிளம்ப ஆரம்பித்திருந்தாள் இதழினி.
அவன் இருக்கும் இடத்திற்கு செல்ல குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும் என்பதால்அடித்துபிடித்து கொண்டு கிளம்பியவள் உணவை கூட உண்ணாமல் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
பேருந்தில் ஏறி அமர்ந்தபின்னும் அவளுக்குள் இருந்த படப்படப்பு கூடியதே தவிர குறைந்த பாடில்லை.
வழிநெடுங்கிலும் அவனை எப்படி எதிர்கொள்வது..? எப்படி ஆரம்பிப்பது..? என்ன பேசுவது..? என்ற யோசனைதான் அவளுக்கு.
அவளின் யோசனையிலேயே அவள் இறங்கவேண்டிய இடமும் வந்து சேர, வானுயர்ந்து நின்ற அந்த அப்பார்ட்மெண்டை பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்கி கொண்டாள்.
அப்பார்ட்மெண்ட் வாசலை அடைந்தவளுக்கு இப்படியே திரும்பி சென்று விடலாமா என்று கூட தோன்றியது.
பின் கல்லூரிக்காக தன்னை திடப்படுத்திகொண்டு உள்ளே சென்றவள், செல்போனில் தாரிகா அனுப்பியிருந்த அப்பாயின்மென்டை வாட்ச்மேனிடம் காட்டிவிட்டு தயங்கியபடியே உள்ளே சென்றாள்.
லிஃப்ட் உள்ளே சென்று அவன் இருக்கும் தளமான எண் இருபதை அழுத்தியவளின் கரம் நடுங்க, இன்னொரு கையால் நடுங்கிய கரத்தை இறுக்கமாக பற்றிகொண்டாள்.
லிஃப்ட் மேலே செல்ல செல்ல அவள் இதயமும் அதிவேகத்தில் துடித்தது.
இன்னுமே அவளுக்கு தெரியவில்லை அவனை எப்படி எதிர்கொண்டு பேசுவெதென்று.
கைகளை பிசைந்தவாறே அவள் நின்றிருக்க, அவன் இருக்கும் தளமும் வந்து சேர்ந்தது.
அவனிடம் தன்னை அறிமுகபடுத்தும் விதமாக காலேஜ் ஐ.டி கார்டை பைக்குள் துழாவியவளுக்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது அவசரத்தில் ஐ.டி கார்டை எடுக்க மறந்ததை.
“பெருமாளே நீங்கதான் என்ன காப்பாத்தணும்” என்று வாய்க்குள் முனுமுனுத்தவாறே அவன் பிளாட் முன் நின்றிருந்தவளுக்கு பயத்தில் நா உலர்ந்து போன உணர்வுதான்.




